பொய்மையும் வாய்மையிடத்து...

by - 12/01/2011 11:48:00 முற்பகல்


கதையில் கற்பனை சேர்த்தால் இன்னும் நன்றாகவிருக்கும் என்பது பலரது வாதம். வாதம் என்பதைவிட ஆதங்கம் என்றே சொல்லலாம். நான் கூட கேட்டிருந்தேன் தான். ஆனால் அவள் தான் வேண்டாமென்றாள். நடந்ததை சொல்வதிலிருந்த வலியைவிட, அதில் நான் செய்யப்போகும் கலப்படத்தைத்தான் அவளால் தாங்க முடியவில்லை. ஏனென்றேன், சொன்னாள். அதை உங்களுக்கு சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும். ஆனால் உரை நடையில் எப்படி சொல்வது என்று தெரியாததால் அங்கங்கை பிரிச்சுப் போட்டு கவிதை நடையில் (? சொல்ல அனுமதி கொடுத்ததை மட்டும்) சொல்லியிருக்கிறேன். கற்றறிந்த புலவர்காள் மன்னிக்கவும். 


ஏன் இந்தப்பாட்டு..
எனக் கேட்டு 
முன் மண்டியிட்டு 
முகம் பார்திருந்தவனை  

கண்கொண்டு பார்க்கவியலாது 
தலை தாழ்ந்தாள்
அவ்வளவு பிடிக்குமா?
தெரிந்துமென்ன கேள்வி 

பதினைந்து வயசாயிற்றா?
பொய் சொன்னாள் மனதறிந்து 
பொய்மையும் வாய்மையிடத்து 
புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்

எத்தனை நிமிடங்கள் சென்றதறியாள்
போகவேண்டும் 
நானும் கூட வருகிறேன் 
முறுவலித்தான் 

அவளை விடுடா 
இப்பதான் பன்னிரண்டு வயசு 
அதுவரை உரிமையுடன் பற்றியிருந்தகரம் 
சட்டென்று விலகியது 

கண்களில் கனல் தெறிக்க
பொய் சொன்னியா? 
கண்களில் நீர் முட்டியது
தவித்தாள்; வாயுலர  

இல்லை.. வாறவருசம் 
பதின்மூன்று முடிந்து பதினாலு..  
குற்றவுணர்வு குடைந்தெடுத்தது 
இருவரையுமே.. 

திரும்பி முகம் பார்க்காமலே
மூன்றுவருடங்களின் பின் வருகிறேன் 
அன்று சொல் என்றவனுக்காய் 
காத்திருக்கிறாள் மூவாறு வருடங்களாய்  

You May Also Like

0 comments