புதன், நவம்பர் 27, 2013

மீண்டும் விதையாய் ...

மனிதர்களைத் தொலைத்துவிட்டு
மரங்களை நடுகின்றோம்
அவைதான் எத்தனை
அடிகளையும் தாங்குமே

பூக்கும் பருவத்தில்
முகர்ந்து பார்ப்பர்
காய்ந்த மாடு கம்பில் விழுவது போல்
உரசியும் பார்ப்பர்
உணர்ச்சிகள் மீறினால்
புணர்ந்துவிட்டு
புயல் தான் வந்து சிதைத்ததென்று
கூசாது பொய்யுரைப்பர்

கனிதரும் வயதில்
கைதொட விடாவிடின்
பசுமைப் புரட்சிச் சட்டத்தின் கீழ்
கைது செய்வர்
புழுக்கள் உள்நுழையும்
பூச்சிகள் சுற்றி மொய்க்கும்
அணில் கூட வந்து கடித்துப் பார்க்கும்
உன் அழுகை யாருக்கும் கேட்காது

காய்த்த மரம்தான் கல்லடிபடும்
காய்த்து உன்குற்றம் என்று
ஐநாவைக் கூட ஏமாற்றுவர்

கமேரூன் வந்து பார்ப்பார்
கௌரவம் என நீ நினைப்பாய்
கல்லைத் தேடி இவர்கள்
கண்கள் செல்லும்

மீண்டும் விதையாய் விழுவாய் இந்த மண்ணில்
யார் கரங்களில் கதறி அழுவதற்கோ?
புதன், நவம்பர் 20, 2013

உயிரற்ற ஜீவன்கள்

அக்டோபர் 1990ல் ஒரு நாள். விடுமுறையில் வந்த அப்பா, அப்போது நான்காவது படித்துக்கொண்டிருந்த அவளையும், அம்மாவையும் ஏற்றிக்கொண்டு ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் மடுவுக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் மூவர் இருப்பதற்கே இடமில்லை, அதற்குள் பின்னல் ஒரு மூட்டை வேறு. அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு. அதனால் வாகனங்களின் எஞ்சினில் என்னமோ தில்லுமுல்லு பண்ணி மணெண்ணெயில் ஓடப் பண்ணியிருந்தார்கள். ஸ்டார்ட் பண்ணுவதற்கு மட்டும் சிறிது பெட்ரோல் விட்டால் போதும். முதலில் கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் போகப் போக சரியாயிடும் என்று அவர் சொன்னதை நம்பி அவர்களும் புறப்பட்டு விட்டனர். வழியில் இரண்டொரு தடவை நின்றபோதே வேண்டாம் திரும்பி போவம் என்று சொன்னாள். யார் கேட்டார்கள்?

விடியக் காலமை வெளிக்கிட்டால் பின்னேரதிற்கு முன்பு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் மதியம் தாண்டிய போதே காடுகள் தெரியத் தொடங்கிவிட்டன. மடுவை அண்மித்துவிட்டோம் என்று சந்தோசப்படுகையில் தான் அந்த முற்றிலும் எதிர்பார்த்த சம்பவம் நடந்தே விட்டது. எத்தனை காடுமேடெல்லாம் தட்டுத் தடுமாறி அப்பாவுடன் கூடவே திரிந்த அந்த உயிரற்ட ஜீவன், தனது ஓட்டத்தை கடைசியில் முழுவதுமாக நிறுத்திக்கொண்டது. அப்பாவும் தனக்குத் தெரிந்த வித்தையெல்லாம்  செய்து பார்த்தார், ஆனால் அதுவோ சற்றும் நகர மறுத்தது.

சுற்றிவர ஆளரவமற்ற காடு. அவளுக்குப் பிடித்த இடம்தான். அதன் அழகை ரசித்துக்கொண்டே பேசாமல் நடந்தே போயிடலாமே என்று தோன்றியது. "அப்பா, காடெண்டால் நிறைய மானெல்லாம் இருக்குமாமே? எனக்கு மான்களோட விளையாட ஆசையாயிருக்குப்பா" என்றொரு தடவை சொன்னபோது "அங்கை நிறைய யானை, புலி எல்லாம் இருக்கும். அதால சும்மா இங்கை போல சொல்லாமல்கொள்ளாமல் உண்டை பாட்டுக்கு தனிய சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடக்கூடாது என்ன?" என்று தீர்மானமாகச் சொல்லியிருந்தார்.

கூப்பிடு தூரத்தில் அம்மா அப்பாவிடம்,
"என்னப்பா, இன்னும் கன தூரம் போகவேணுமே?"
"இப்பதானே பூநகரி தாண்டினது. இன்னும் அரைவாசித் தூரம் போக வேணும்."
"அப்ப.. காடு வந்திட்டுதே?"
"இனி வழி முழுக்க காடுதான்"

குதூகலத்துடன் நடந்தே சென்றுவிடத் தயாரானவள் 'இன்னும் அரைவாசித் தூரமா?' என்றபடி திகைப்புடன் நின்றுவிட்டாள். திடீரென்று இருட்டி விட்டதைப் போலிருந்தது. மழை வரப்போகிறதோ என்று மேலே பார்த்தால் அதற்க்கான சாத்தியக் கூறுகள் தெரியவில்லை. சற்றுமுன்பு இதமாய் வருடிச் சென்ற காற்று இப்போது சில்லென்று குளிர்வதுபோல இருந்தது. தூரத்தில் சில மரங்கள் முறியும் சத்தம் கேட்டது. அவளுக்கு இப்போது காட்டைப் பார்த்த சந்தோசம் போய் பயம் பிடித்துக்கொண்டது.

"அப்பா அப்பா. மழை வரப்போகுது போல இருக்கு. அங்கை மரம் முறிஞ்சு சத்தம் கேக்குது. யானை வருது போல. கெதியா ஸ்டார்ட் பண்ணுங்கோ." ஓடிவந்து பயத்தில் நாக்குளற எதையோ உளறினாள்.

அவர் அண்ணாந்து மேலே பார்த்துவிட்டு, பின்னர் சுற்றுமுற்றும் பார்த்தார். "இங்கை ஒண்டுமில்லை. நீ பயப்படாதை." என்றுவிட்டு டாங்கை ஒருதடவை திறந்து இடம் வலமாக ஆட்டிப்பார்த்துவிட்டு மூடியபடி கிக்கரை நாலைந்து  தடவை விடாமல்  உதைத்த விதம் அவரும் பதட்டமாயிருக்கிறார் என்று தோன்றியது. ஆனால் அவர்களின் பயம், பதட்டம் எதனையுமே உணராதவாறு அத்தனை உதைகளையும் தாங்கிக்கொண்டு அந்த மோட்டார் சைக்கிள் வெறுமனே நின்றுகொண்டிருந்தது.

நிமிடங்கள் ஒவ்வொன்றும் நரகமாய்க் கழிந்தன. வழமைக்கு மாறாக நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. காட்டில் சீக்கிரமாய் இருட்டிவிடும் என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் மூன்று மணிக்குள்ளாகவா? அம்மா சற்றுத் தொலைவில் இருந்த முடக்கில் சென்று யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா இன்னும் அந்த உயிரற்ற ஜீவனை உதைத்துக் கொண்டிருந்தார். அவள் இருவரையும் பார்த்துவிட்டு பேசாமல் தாயை நோக்கி நடக்கத் தொடங்குகையில் அவர் அவளை நோக்கி கையசைப்பது தெரிந்தது. ஓடிச் சென்று பார்த்தால் தூரத்தில் ஒரே புழுதி மண்டலம்.

"அப்பா இங்கை யானை கூட்டமா வருகுது. ஓடியாங்கோ." அவளது அலறலைக் கேட்டு அப்பா ஓடிவந்து பார்த்தார். தூரத்தில் இப்போது புள்ளியாய் எதுவோ அசைகிறது. மெதுவாய் தான் என்றாலும் நிச்சயமாக யானை போல் தெரியாததால் ஓரளவு அமைதியானாள். சற்று நேரத்துக்கெல்லாம் அது ஒரு லாரி என்று தெரிகிறது. சந்தோசத்தில் துள்ளிக் குதித்து கைகளை அவர்களை நோக்கி அங்குமிங்குமாக அசைக்கிறாள். கிட்டே வர வர அதன் மேலே சில மனிதர்கள் உடகார்ந்து இருப்பது தெரிகிறது. அவர்கள் நன்றாக நெருங்கிவிட்டனர். லாரி இப்போது சற்று வேகத்தைக் குறைக்கிறது. நிற்கப் போகிறது என்று எண்ணிய கணத்தில், முடக்கில் திருப்பி சடுதியாக வேகத்தைக் கூட்டியதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். கடைசியாக இருந்த ஒரே நம்பிக்கையும் அற்றுப் போகையில், சற்றுத் தூரம் சென்ற அந்த லாரி சடுதியாக பிரேக் போட்டு நிற்கிறது. மூவரும் ஓட்டமும் நடையுமாக அதனருகே சென்றபோது, முன்னாலிருந்து ஒருவர் இறங்கி வருகிறார்.

"அது உங்கடை மோட்டார் சைக்கிளா?" எரிச்சலுடன் கேட்கிறார்.
"ஓமோம். இடையிலை நிண்டிடுது. அதுதான்.. யாராச்சும் வாரங்களா எண்டு பாத்திட்டு இருக்கிறம்."
"அதுக்கு இப்பிடி நடு ரோட்டிலை போட்டிட்டு நின்டா மற்ற வாகனங்கள் எப்பிடி போறது?" எட்டிப் பார்த்தால் அந்த உயிரற்ற ஜீவன் இப்போது நடுவீதியில் குப்புற விழுந்து கிடந்தது.
"இல்லை.. அது ஸ்டார்ட் ஆகுதில்லை. மனுசி பிள்ளையோட தனிய காட்டிலை கன  நேரமாக நிக்கிறம். ஒருத்தரும் வார மாதிரித் தெரியேல்லை. நீங்க புத்தளமா போறியள்? இவையளை வழியிலை மடுவிலை இறக்கி விடுறீங்களா?" அப்பா இப்படிக் கெஞ்சி முதல் தடவையாகப் பார்க்கிறாள். தவிர அவர்கள் யார்? எங்கே போகிறார்கள் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது? வியப்பாக இருந்தது.

இப்போது மேலேஇருந்து சிலர் இறங்கி வந்தனர். உள்ளேயிருந்து சில தலைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. யாரினது முகத்திலும் சந்தோசம் கடுகளவும் இல்லை. 'கடு கடு' என்றிருந்தது. அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டு அவரது கையைப் பிடித்து இழுத்தாள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான சமிக்ஞை. அவரோ அதைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் "மனுசியையும் பிள்ளையையும் மட்டுமாவது கூட்டிக்கொண்டு போங்கோ." இன்னும் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவளுக்கு  வெறுப்பாக இருந்தது.

நீண்ட யோசனை, கலந்தாலோசனைகளின் பின்பு ஒருவாறாக அவர்கள் அந்த உயிரற்ற ஜீவன் உட்பட அனைவரையும் ஏற்றிச் செல்ல ஒத்துக்கொண்டனர். மோட்டார் சைக்கிளை ஏற்ற பாதி மூடியிருந்த பின் கதவைத் திறந்தபோது தான், அதனுள் ஏற்கனவே பெண்கள் குழந்தைகள் என்று ஒரு பதினைந்து இருபது பேர்  மூட்டை முடிச்சுடன் அடைந்து கிடப்பது தெரிந்தது. வேண்டாத விருந்தாளிகள் நுழைந்துவிட்டதுபோல அவர்களது பார்வை சுட்டெரித்தது. ஆண்கள் எல்லோரும் மேலே ஏறிக்கொள்ள மீண்டும் அந்த லாரி மெதுவாகப் புறப்பட்டது.

யாரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதுவரை அவளைப் பார்த்த யாருமே "என்ன பேரும்மா?" அல்லது "இப்ப என்ன படிக்கிறே?" என்று கேட்க்காமல் போனதில்லை. ஆனால் அவர்கள் அனைவருமே இறுகிப்போயிருந்தனர்.  என்ன மனிதர்கள்? இதற்க்கு காடும் யானையும் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

பேசாமல் இறங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் லாரி தானாகவே நின்றது. அப்பா வந்தார். எதுவும் பேசவில்லை. மோட்டார் சைக்கிள் இறக்கப்பட்டது. அவளும் அம்மாவும் எதுவும் பேசாமல் இறங்கிக் கொண்டனர். லாரி புறப்பட்டுவிட்டது.

"ஏன் அப்பா இவை இப்பிடி இருக்கினம்? கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.." எரிச்சலுடன் கேட்டாள்.
"அவைண்ட நிலை அப்பிடி." கூறியவர் மேலே எதுவும் சொல்லவில்லை. நிதானமாய் விபரிக்கும் சூழ்நிலையிலும் அவர் இருக்கவில்லை. மற்றைய தருணங்களில் எனின் அந்தப் பதிலுடன் விட மாட்டாள். துருவித் துருவி கேட்டு முழுவதையுமே அறிந்திருப்பாள். ஆனால் இப்போது, அவர்கள் மீதும் நியாயம் இருக்கு என்று சமாதானமாகி விடுவமோ என்று பயந்தாள்.

அந்த சமயத்தில் அவளுக்கு முதலில் வந்தது கோபமா அல்லது அழுகையா என்று தெரியவில்லை. ஆனால் அவளது கன்னத்தை நனைத்தது நிச்சயமாக கண்ணீர்த் துளிகள் இல்லை. ஈ. காக்கா கூட வராத அந்த வழியில் அந்த லாரியை அனுப்பியது கடவுள் தான் என்று நம்பியிருந்தவளுக்கு கோபம் இப்போது அவர் மேல் திரும்பியது. ஆனால் தமது வீடு வாசல்களை விட்டு வலுக்கட்டாயமாகத் துரத்தப்பட்டு சொந்தபந்தங்களுடன் புத்தளத்தை நோக்கி அதில் போய்க்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்னும் அல்லாவை நம்பிக் கொண்டுதானிருந்தனர்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதை மட்டுமே வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக தமிழர்களை இன்றும் பழிவாங்கும் இந்தியா போல, புலிகளை வென்றுவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ராஜபக்சவை கண்மூடித்தனமாக இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் பல சிங்களவர்கள் போல, அவளும் மேற்கொண்டு அவர்களைப் பற்றி எதையும் கேட்டறியவில்லை. அறிந்துகொள்ளவும் விரும்பவில்லை.


செவ்வாய், நவம்பர் 05, 2013

தபாலகங்கள்


அன்புள்ள நண்பி நிஷாவுக்கு,
நலம். நலமறிய ஆவல். உனது கடிதம் நேற்றுத்தான் கிடைத்தது. வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி. நீ எமது பாடசாலையில் கேம்ஸ் கேப்டன் ஆக தெரிவாகியிருப்பதாக சொல்லியிருந்தாய். சந்தோசம். எமது பாடசாலை நாட்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக வகுப்பறைக்கு போகாமல் இருப்பதற்காகவே சேர்ந்துகொள்ளும் விளையாட்டுப் பயிற்ச்சிகள்..

ஒருமுறை நீ, நான், தாமரா மூவரும் விளையாட்டுப் பயிற்சி இருக்கெண்டு நினைத்து நிற உடுப்பில் போய், இல்லையென்று அறிந்ததும் களவாக சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடும் சமயம் அதிபரிடம் மாட்டினோம். அவர் தீர விசாரித்த பின்னர் மன்னித்து வகுப்புக்குப் போகச்சொன்னர். ஆனால் அதன் பின்னர் புதிதாய் வந்திருந்த வகுப்பாசிரியை அனைவரின் முன்னாலும் வைத்து திட்டித் தீர்த்தார். தவிர அன்று தான் நாம் அவவின் வகுப்பு என்றே தெரியும் என்று கூறினார். (எமக்கு மட்டும் என்னவாம்?) தாமரா வழமைபோல சிரித்துக்கொண்டிருந்தாள். தொட்டாச்சிணுங்கி நானோ கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருக்க, நீ எல்லோருக்குமாய்ச் சேர்த்து அழுது தீர்த்தாய். ஞாபகமிருக்கிறதா?

...............

இவ்வாறாக மலரும் நினைவுகளை மீட்டும், தற்போதைய நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஒரு அத்தியாவசிய ஊடகமாக கடிதங்களும் அவற்றைக் கொண்டு சேர்க்கும் தபால்துறையும் அன்று இருந்தது.

பெரும்பாலான தபாலகங்கள் முதலில் தொலைதூர தந்தி சேவையை மையமாக வைத்தே இயங்கின. இத்தகைய தபாலகங்களில் இருக்கும் தபாலதிபர் இருபத்திநாலு மணி நேரமும் கடமையிலிருக்க வேண்டும். கிடைக்கும் தகவலை உடனே உரியவரிடம் சேர்க்கவேண்டும். இவை அனேகமாக மரணச் செய்திகளாகவே இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் எந்த வீட்டிற்காவது தந்தி வந்திருக்கிறது என்று அறிந்தால் அந்த வீட்டின் முன்பு ஊரே கூடிவிடும், துக்கம் விசாரிப்பதற்கு.

போர்க்காலத்தில் யாழின் அநேக கட்டடங்களைப் போலவே பல தபாலகங்களும் அழிவுக்குள்ளானது. அவ்வாறாக முற்றாக அழிவுக்குள்ளான பின்னரும் மீண்டெழுந்து 2013ம் ஆண்டின் உலக அஞ்சல் தினவிழாவில் தரம் ஒன்று காரியாலத்திற்கான தெரிவில் முதலாமிடத்தைப் பெற்ற சுண்டிக்குளி தபாலகத்தின் ஒரு சிறிய வரலாற்றுப் பதிவு தான் இது.

ஈமெயில், இன்டர்நெட் என்று தூரங்கள் குறுகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இத்தகைய தபாலகங்களின் தேவை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. என்னதான் இவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பல புதிய சேவைகளை இணைத்துக் கொண்டாலுமே நம்மில் எத்தனைபேர் இவற்றைப் பாவிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். சென்ற மாதம் ஒரு பதினைந்து ரூபா முத்திரை வாங்கவேண்டிய தேவை. அந்த அரசாங்க அலுவலகத்தில் இருந்த எவருக்கும் அண்மித்த தபாலகம் இருக்கும் இடம் தெரியவில்லை. சரி வெளியே வந்து ஓட்டோ ஓட்டுனரிடம் கேட்டால் அவருக்கும் கூடத் தெரிந்திருக்கவில்லை. வேறுவழியில்லாமல் பஸ் பிடித்துப் போய் வெள்ளவத்தை தபாலகத்தில் வாங்கிவந்தது.

  

புதன், அக்டோபர் 30, 2013

ஏய் பொண்ணு!தமிழ்ப் படங்களில் கட்டபஞ்சாயத்து காட்சிகளில் வரும் பண்ணையார்கள் போன்ற உருவத்தில் இரண்டுபேர். முழுவதுமாய் நரைத்த தலையுடனும், வெள்ளை வேட்டி சட்டையிலுமாக  சற்றுத் தொலைவில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர்.

"ஏய் பொண்ணு, இங்கை வா"

நர்சரியின் முன்பு நான்கு வயது குழந்தை ஒன்று, சற்றே தூரத்தில் நின்றிருந்த மற்றைய குழந்தையை அழைத்துக் கொண்டிருந்தது. மற்றையது பாதி புரிந்தும் புரியாமலும் தாயை பரிதாபமாகப் பார்த்தது.

+++++++++++++++

அது சற்று முன்புதான் மரணச்சடங்கு நடந்துமுடிந்த வீடு. ஆண்கள் பலரும் சுடலைக்குப் போயிருந்தனர். வயதுபோன சிலர் மட்டும் வெளியே இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பெண்கள் வீடு கழுவுவதிலும் வந்தவர்களுக்கு டீ குடுப்பதிலும் மும்முரமாயிருந்தனர்.

"ஏய் அக்கா இஞ்சை வா.."

சற்றே வளர்ந்த குழந்தையொன்று கிணத்தடியில் நின்ற தனது அக்காவை அழைத்துக்கொண்டிருந்தது.

"கோபி, இங்கை வா." முழு நீள காற்சட்டையும் வெள்ளை ஷர்டின் மேலே பெல்ட் அணிந்தபடி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தவர் அந்தக் குழந்தையை அழைத்தார்.

"என்ன மாமி?" விளையாட்டின் சுவாரசியம் மாறாமல்.. ஓடி வந்ததினால் சற்றே மூச்சு வாங்கியபடி.

"யாரையும் 'ஏய்' போட்டுக் கூப்பிடக்கூடாது. சரியா?"

"ஏன் மாமி? அம்மா அப்பிடித்தானே கூப்பிடுறவா?" என்றது அந்த வாயாடிக் குழந்தை.

"அது முந்தி வேலையாட்களை கூப்பிடுறவை. பிறகு அதுவே பழகிட்டுது. இப்ப எங்கடை இடத்திலை எல்லாரும் சமம். அதால யாரையுமே அப்பிடி இழிவுபடுத்துவதுபோல கூப்பிடக் கூடாது. விளங்குதே?" சற்றே கண்டிப்பான குரலில் கூறிவிட்டு மீண்டும் முற்றம் கூட்டப் போய்விட்டார் அந்தப் போராளி அக்கா.

+++++++++++++++

"'ஏய்' எண்டா என்னம்மா?" அப்பாவித்தனமாய் தாயைப் பார்த்துக் கேட்டது அந்தக் குழந்தை.

"அதும்மா முந்தி.. " நாலு வயதுக் குழந்தைக்கு பரம்பரை மிடுக்கு, சாதித் திமிர் என்பவற்றை எப்படி சொல்லி விளங்கப் படுத்துவதென்று புரியாமல் விழித்த அந்தத் தாய், சுதாகரித்துக்கொண்டு "அது மரியாதை இல்லாத சொல். இனிமே அப்பிடிக் கூப்பிடக் கூடாது எண்டு சொல்லுங்கோ" என்று ஒருவாறு, சங்கடத்துடன் கூறி முடித்தாள்.

நெறிப்படுத்தியவர்கள் இன்று உயிருடன் இல்லை. தாம் இருப்போம் என நினைத்து நெறிப்படுத்தவுமில்லை.


திங்கள், அக்டோபர் 21, 2013

மரக் கொட்டகை

பச்சைப் பசேலென்ற நீர்வெளி. அதன் நடுவே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய கொட்டகை. அதனை கரையுடன் இணைக்கும் பாலத்தின் முடிவில் தேவநம்பியதீசன் காலத்து புத்தர்கள் அல்லது அவர்கள் உருவை ஒத்தவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.

இப்போதெல்லாம் புத்தரை எங்கே வைப்பது என்றொரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அதனால் விகாரைகளை விட அநேக பார்களில் தான் காணக்கிடைக்கிறார். அங்கெல்லாம் முன்பு பெரிய தொப்பையுடனும் மொட்டந் தலையுடனும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபடி ஓர் உருவம் இருக்கும். சுற்றிவர நிறைய தங்க நாணயங்கள் இறைந்து கிடக்கும். சிலர் குபேரன் என்பர்.  ஆனால் பொதுவாக அழைக்கப்படுவது 'சிரிக்கும் புத்தர்'  என்று தான். அப்படி அழைக்கும்போதெல்லாம் புத்தரே நேரில் வந்து 'என்னை வைச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலியே' என்று வடிவேலு பாணியில் கேட்ப்பதுபோலிருக்கும். அதனால் தானோ என்னமோ இப்ப சாந்தமான முகத்துடன் கண்களை பாதி மூடியபடி புன்முறுவலுடன் அமர்ந்திருக்கும் புத்தரையே வைத்துவிட்டார்கள். இல்லாவிட்டால் ஒருவேளை வருபவர்கள் எல்லோருமே குபேரனைப் போலிருப்பதால் ஒரு மாறுதலுக்கு கம்பீரமாக கட்டுமஸ்தான உடலோடும் தலையில் சற்றே முடியோடும் இவராவது இருக்கட்டுமே என்று நினைத்தார்களோ தெரியாது.

அந்தப் படத்தை மீண்டுமொருமுறை பார்த்தாள். பசேலென்ற நீர்வெளியின் முன்பு வெளிர்நீல உடையில் தலையை விரித்துப் போட்டபடி ஓர் அழகிய பெண். அழகி என்று சொல்லமுடியாது; ஆனாலும் கறுப்புக் கண்ணாடி அணிந்து, கைகளில் போடவேண்டிய சில்வர் வளையல்களை காதில் மாட்டியபடி வலதுபக்க தெத்திப்பல் தெரிய சிரிக்கையில் சற்றக்குறைய அழகாயிருப்பது போலதான் தெரிந்தது. தவிர உதட்டின் நிறத்திலேயே பூசப்பட்ட உதட்டுச் சாயமும், முகத்தில் போடப்பட்டதே தெரியாதபடி பரவியிருந்த முகப்பூச்சும் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தன. எல்லாவற்றையும் விட மலர்ந்த முகம் பெண்களுக்கு அழகு என்று சொல்லுவார்கள். அது தீபாவுக்கு இருந்தது. அதுதான் அந்த வெளிர்நீல அழகியின் பெயர்.

படத்தை சற்றே zoomout செய்து பார்த்தால் அவள் யார்மீதோ சாய்ந்து நிற்பது தெரியும். பின்னால் சில அழகிய புத்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னால் அவளுக்கு மிக அருகில் முட்டுக் கொடுத்தவாறு, சிவப்பு நிற ரீ-ஷர்ட்ல் இருந்த இரண்டு பொத்தான்களையுமே கழட்டி விட்டு, கருப்புநிற பிரேம் போட்ட கண்ணாடியில்.. அது அவனே தான்.

கண்ணாடி முழுவதும் பரந்திருந்த அந்தக் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். அவை ஒளியிழந்து களைத்துப் போயிருந்தன. முன்பொருகாலத்தில் பார்த்த கணத்திலேயே இன்னுமோர் சமாந்தர உலகுக்கு பயணிக்க வைத்த கருந்துளைகளல்ல அவை. தேதி குறிக்கப்பட்டபின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளியின் கண்களைப் போல இருந்தது; திருமணத் தேதி குறிக்கப்பட்ட அந்த மணமகனின் கண்கள்.

தலையில் மீதமிருந்த ஓரிரு முடிகளைத்தன்னும் தக்கவைக்க எந்த முயற்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. தலைப்பாகை இருக்கும் தைரியத்தினாலிருக்கலாம். அகல விரிந்த கரிய உதடுகளின் நடுவே தெரிந்த எட்டுப் பல்லுகள் அவன் சிரிக்க முயற்ச்சிக்கிறான் என்பதை உறுதிப்படுத்தின. உதடுகளைச் சுற்றி முளைவிட்டிருந்த சற்றேறக்குறைய அடர்ந்த முடிகள் பிரெஞ்சுத் தாடிக்கான முயற்சியாய் இருக்கலாம். இருவரினதும் நெருக்கம் இருவீட்டாரின் சம்மதமாயிருக்கலாம். ஒருவேளை திருமணம் முடிந்து விட்டதோ என்னமோ. கீழே போடப்பட்ட பின்னூட்டங்களை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பலர் அவர்களது ஜோடிப்பொருத்தத்தை வியந்தும், பாராட்டியும், வாழ்த்தியும் இருந்தார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டோர் அவளினதும் நண்பிகள் தான். அவளது மிக நெருங்கிய நண்பியும் கூட. முன்பென்றால் அவளால் நம்ப முடியாமலிருந்திருக்கும். ஒரு பாட்டமாவது அழுது தீர்த்திருப்பாள். இப்போது மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

'எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. இப்ப இதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை.' என்றவனின் கழுத்தில் புதிதாய் இரண்டு பவுணில் மின்னிய சங்கிலி முகத்தின் களையை மழுங்கடித்து விட்டிருந்தது. சென்று கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள். அன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்த முக்கால் பவுன் சங்கிலி இப்போதில்லை. அதுவும் பின்னொருநாள் இரண்டு பவுணில் மின்னிய பின்னரே இன்று இல்லாது போயிருக்கிறது. ஆனால் அது இருக்கும் வரை இருந்த எதையோ பறிகொடுக்கப் போவது போன்ற பதட்டம் இன்றில்லை. எதிலும் பற்றிருக்கும் வரைதான் அது பற்றிய பயமும் கவலையும். அதிலும் பெறுமதி கூடக் கூட இழப்பு பற்றிய பயமும் அதிகரிக்கும். அதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றவர் மீது பிரயோகிக்கப்பட இறுதியில் அதீத வெறுப்பையே சம்பாதித்துக் கொடுக்கிறது.

சரியாக வைட் பாலன்ஸ் செய்யப்படாத வானம் சற்றே வெண்ணிறமாக பரவி நிற்க நீர்நிலை மட்டும் பச்சை நிறத்தில் தெரிவது அதிகப்படியான கியூ / சச்சுரேசன் காரணமாக இருக்குமோ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அப்படியாயிருக்க முடியாது என்று அவர்கள் முகம் சொல்லியது. 100ல் போகையில் நவலோகா மருத்துவமனைக்கு முன்னிருக்கும் இந்த இடத்தை பலதடவை பார்த்திருக்கிறாள். ஒவ்வோர் முறையும் கடந்து செல்கையில், ஆமர்வீதியில் அரைமணி நேரம் தரித்து நிற்கும் 155 பஸ், இந்தவழியால் வரக்கூடாதா என்று நினைத்திருக்கிறாள். ஆனால் ஒருமுறைதன்னும் இறங்கிச்சென்று பார்க்கவோ படமெடுக்கவோ நினைத்ததில்லை. அப்போதெல்லாம் அதற்க்கு முன்பிருந்த காவலரண் காரணமாயிருக்கலாம்.

அப்படி அவள் என்ன செய்துவிட்டாள். அவனை காதலிப்பதாக சொன்னாள். எதற்க்காக அப்படிச் சொன்னாள் என்று இதுவரையுமே அவளுக்குத் தெரியாது. ஏனெனில் காதல் / திருமணம் என்பவற்றின் மீது நம்பிக்கை அவளுக்கு என்றுமே இருந்ததில்லை.  அது அவள் மனதார வெறுக்கும் ஒரு நிகழ்வு. அப்படியிருக்க எதற்காய் காதலித்தாள்.. அல்லது தானும் காதலிப்பதாய் நம்பினாள்? தனக்காய் யாருமில்லை என்று அவள் நம்பியிருந்த வேளையில் அவளுக்காய் பேசினான், அவளுடன் பேசினான், அவளுடன் மட்டுமே பேசினான். 

அவன் கூறிய காரணங்கள் எதுவுமே ஏற்கும் படியாகவில்லை. அவள் எதையுமே நம்ப மறுத்தாள். அவன் எவ்வளவு தூரம் தன்னை விரும்புகிறான் என்பதை நம்பினாளோ அதையளவு அவன் விரும்பவில்லை என்பதையும் நம்பினாள். இது மனப்பிரழ்ச்சியா அல்லது பலவிதமான தத்துவங்களைப் படித்ததால் வந்த தெளிவான குழப்பங்களா என்று தெரியாது. ஆனால் அவன் இதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தான். அதனால் தான் பிறகொருசமயம் சாவகாசமாக உரையாடிய சந்தர்ப்பமொன்றில் 'என் மீதான உனது உணர்வுகள் குழப்பமானவை.' என்று மிகவும் தெளிவாக முகத்திலடித்தற்போல் சொல்லியிருந்தான். அதைக் கேட்டு அவளுக்குக் கோபம் வரவில்லை. இத்தனை தூரம் தன்னைப் புரிந்து வைத்திருக்கிறானே என்று சந்தோசப்பட்டாள்.

அன்று தோன்றியது, பேசாமல் நண்பர்களாகவே இருந்திருக்கலாமோ என்று. ஆனால் அவளைப் பொருத்தவரை நட்பு என்பது உடலைத் தாண்டி இருக்கவேண்டும். எந்த ஒரு ஆண்மகனும் தன்னை ரசிக்கிறான் என்று தெரிந்த பிறகு ஒருபெண்ணால் அவனுடன் மீண்டும் சகஜமாகப் பழக முடியாது. அவளுக்கு பிடித்திருந்தால் வெட்கப்படுவாள் அல்லது அதை மறைக்க ஜோதிகா போல 'ஏன் என்ர இடுப்பைப் பார்த்தாய்?' என்று சண்டைபிடிப்பாள். அதுவே பிடிக்காதவிடத்து அருவருப்பாய் உணர்வாள். இரண்டு சந்தர்ப்பத்திலும் வெறும் நட்பு மட்டும் தான் என்பவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

அவளுக்குப் பிடித்த இடத்தில் அவளுக்குப் பிடித்திருந்த நபர்கள். படம் அழகாக இருந்தது. லைக் போடலாமென்றால் அவன் பிளாக் பண்ணியிருப்பது தெரிந்தது. புத்தர்களை வெளியே காவலிருத்தி அந்த மரக்கொட்டகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது.  தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை. 


ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

நூற்றிலொரு வார்த்தை


எல்லோரும் எதிரபார்த்த ஒன்றே எனினும் கடைசிநிமிட படபடப்பு/பரபரப்புகளின் மத்தியில் சற்றே சலனம் கொள்ள வைத்த தேர்தல் இது. இறுதி முடிவு பற்றி நான் சொல்வதை விட எமது நண்பர்கள்/நண்பர்களின் வட்டம் சொல்லிய/பகிர்ந்த கருத்துகளிலிருந்து ஒரு சில இன்றைய உங்கள் பார்வைக்கு..மலர்ந்தது தமிழர் அரசு


Aswin Sutharsan shared Castro Rahul's photo.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்..

என்னது தமிழீம் கிடைச்சிற்றா??


 • வடமாகாணசபை தேர்தலில் இம்முறை அனைத்து தமிழ் மக்களும் காட்டியிருக்கும் வாக்களிக்கும் ஆர்வம் பாராடத்தக்களவு வாக்களிப்பு வீதம் என இவ்வளவுக்கு ஒரு பெருவெற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது...யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் என அனைத்து மக்களின் பங்கும் உண்மையில் பாராட்டத்தக்கது.....

  தாங்களே 20 வருடங்களுக்கு முன்னர் காணிகளை அபகரித்தது விட்டு 20 வருடங்கள் கழித்து அவற்றை தாம் தான் மீட்டுக் கொடுப்பது போல காடியவர்களுக்கும், தாமே அழித்தவற்றை மீண்டும் கட்டி எழுப்புகிறோம், அபிவிருத்தி என்ற பெயரில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், இவற்ற்றை எல்லாம் தான் தான்கேட்டு பெற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லியே அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நெத்தியடி தான் இது...

  இப்படி ஒரு வாக்களிப்பு வீதமும் ஆர்வமும் 2010 பாராளுமன்ற தேர்தலில் காட்டப்படிருக்கவில்லை...3 வருடங்களின் பின் காட்டப்படிருப்பதானது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும், இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையுமே காட்டி நிற்கிறது...


 • வரிக்கு வரி விடுதலைப்புலிகளை சொன்னதால் மட்டும் தான் அராஜக அடக்குமுறைகளின் உச்சக்கட்டத்திலும் மக்கள் தைரியமாக ஓட்டுப்போட வந்தார்கள்.. கூட்டமைப்புக்கு புள்ளடி குத்தினார்கள்.

  எத்தனை குழப்பங்கள் செய்தும்.. எந்த குழப்பமும் இல்லாத சனம்.

  உண்மையாகவே ஒரு தமிழீழ பிரஜையாக (தமிழன் என்று சொல்லி இதில் தமிழகத்தவர்களையும் இணைப்பதில் துளியும் உடன்பாடில்லை.. அவர்களால் இப்படி உரிமைக்காக ஓட்டுப்போட முடியாது. இலவசங்களுக்கு ஓட்டுப்போடுபவர்களுக்கு உரிமையின் அருமை எப்படித்தெரியும்) உணர்வதில் அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது. 

  சர்வஜன வாக்கெடுப்பை நடத்தட்டும்... இத்தனை ஆயுதங்களுடன் சிங்கள இராணுவத்தை உலாவ விடட்டும்... "புலிகள் புலிகள்" என்று முணுமுணுத்தபடி அச்சம் தீர்த்து உரிமை வெறிபிடித்து தமிழீழ அரசை சனம் அமைக்கும்.

  நாங்கள் சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகத தமிழீழ மக்கள். எங்களை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்.

  தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.ஹஹா என்ன ஒரு உன்னதமான காலைப்பொழுது..!!
சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் தான்...சிங்கத்துக்கு ஓங்கி அடிச்சிருக்கோம் பாருங்க ஆயிரம் டன் வெயிட்ல...!!!

சும்மா அடியில்ல..நாய் பேய் அடி...!!மரண அடி..!!!இதுக்கு பெயர் பெரும்பான்மை இல்லையோய்..ஒரு சில புல்லுருவிகள்,நாணல்களை தவிர்த்து எப்போதுமே நாம தான்லே கிங்கு..!!

நம்ம வேலைய நாம கரெக்ட்டா பண்ணியாச்சு...எனியாச்சும் நீங்க உருப்படியா ஏதும் பண்ணுங்கடா கூட்டமைப்பு நொண்ணைங்களா..!!!


தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது நாம் யாவரும் அறிந்ததே ..ஆனால் தீவகம்,ஊர்காவற்துறை, தொகுதிகளில் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுப்பி அதன் கோட்டையை தகர்த்த பா.கஜதீபன் அண்ணா மாற்றமுடியாத வரலாற்று மாற்றத்தை மாற்றிக்காட்டியிருக்கிறார் ...


பெருமகிழ்ச்சி, பெருமை, நன்றி, நம்பிக்கை +ஒற்றுமை 
#தேர்தல் #கடமை #எதிர்காலம் #பதில் 
ஒற்றுமையே உறுதியானதும் இறுதியுமானதுமான பலம்வந்தால் அலையாய் வருவோம்!!
வீழ்ந்தால் விதையாய் விழ்வோம்!!
மீண்டும் மீண்டும் எழுவோம்!!

காயமுற்ற மனதொன்றை ஆற்றுப்படுத்துவதென்பது குண்டும் குழியுமான தெரு ஒன்றைத் தார் இட்டு நிரப்பிச் செப்பனிடுவது போன்றதல்ல.

ஆறிய காயங்கள் சில உண்டு..
ஆறாத காயங்கள் பல உண்டு...

Like ·  ·  · 2 hours ago · 

புதன், செப்டம்பர் 04, 2013

Ruhbins Building Constructors Documentary

இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என்றாலே நாத்திகர்கள் தாம் என்று அடையாள படுத்திவரும் நிலையில் கோவில்கள் கட்டுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லது பகுத்தறிவில்லாதவர்கள் என்றொரு கருத்து ஆழமாகப் பதிந்து / பதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தளவுக்கு இவை உதவுகின்றனவோ இல்லையோ எமது  கலாச்சாரத்தின் விழுமியங்களாயிருந்து அதனைப் பேணிப் பாதுகாத்து வரும் இடங்களாயிருக்கின்றன என்பது உண்மை.
அல்வை முத்துமாரியம்மன் கோவில்

'தமிழ்நாடு' என்று பெயரிலேயே தமிழை வைத்திருக்கும் ஒரு நாட்டில் (மாநிலத்தில்) சென்னை முதல் கன்னியாகுமரிவரை கிட்டத்தட்ட இருபதுநாள் பயணம் மேட்கொண்டிருந்தபோது கூட  "நான் தமிழன்டா" என்று நினைத்து பெருமைப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகுசிலவே. மதுரை, சிதம்பரம், மலைக்கோவில், ஸ்ரீரங்கம், திருவெண்ணாமலை, தஞ்சாவூர், கேரள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம்,  திருப்பதி போன்ற முப்பதிற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் பெரியகோவிலையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்கையில் சற்றே மலைப்பாகவிருந்தது. ஆனால் இத்தகைய பல அரிய கலைபொக்கிசங்களை அவற்றின் மதிப்புணராது கையாள்வதைப் பார்க்கையில் இதற்க்கு எமது நாடு எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது.

Methodist Girls High School, PP.
இங்கெல்லாம் பள்ளிக்கூடம் கட்ட உதவுகிறார்களோ இல்லையோ யாராவது கோவில் கட்டப் போகிறோம் / திருத்தப் போகிறோம் என்று கேட்டால் மட்டும் வாரியள்ளிக் கொடுப்பது நமது பண்பாடு(?). அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது சிலரின் வியாபார தந்திரம்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் கோவிலை மனசாந்தி தருமிடம், புதிய நகை, புடவை டிசைன்களை அணிந்து / அறிந்துகொள்ளும் இடம், பொழுது போக்குமிடம், கலாசார விழுமியம், கலாசார சீர்கேடு நடக்குமிடம் (சென்றமுறை நல்லூர் திருவிழாவுக்கு போடப்பட்ட பக்திப் படங்கள் இம்முறை நிறுத்தப்பட்டதற்கு கூறப்பட்ட காரணம் தான் இது), பணம் கொழிக்கும் இடம், சுற்றுலா தலம் என்று இப்படிப் பல விதமாக பாவித்துக் கொண்டாலுமே அவற்றிற்கும், அவற்றின் உள்ளே வீற்றிருக்கும் மூல மூர்த்திகளுக்கும் உள்ள மரியாதை தமிழ் நாட்டைவிட யாழ் மண்ணில் மிக மிக அதிகம் தான்.

Chithamparapillai Block
இப்பேர்ப்பட்ட யாழ் மண்ணில் அழகிய கலையம்சங்கள் நிறைந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாலான கோவில்களை, கட்டடங்களை நிர்மானித்த Ruhbins Building Constructors இற்கு ஒரு ஐந்து நிமிட ஆவணப் படம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் அவர்கள் நிர்மாணித்த கட்டடங்களை மட்டுமல்லாது யாழ் நகரத்தின் சிறப்புமிக்க சில கட்டடங்களையும் கொண்டுவர நினைத்தோம். ஆனால் அவற்றின் படங்களை நேரடியாக உபயோகித்தால் அவற்றைக் கட்டியதும் இவர்கள் தான் என்றதொரு தவறான கருத்தும் வர வாய்ப்பிருக்கிறது. எனவே தான் அவற்றை வரைந்து எடுத்து அனிமேஷன் மூலம் காட்டியிருக்கிறோம். இவற்றை அழகாக வரைந்து கொடுத்த ஜனனி அக்கா முதல் அவற்றை ஒழுங்கமைத்து அனிமேஷன் கொடுத்த நமது அனிமேட்டர் துசிகரன், இந்தியாவில் கடுமையான படிப்பின் நடுவிலும் எமக்காக நேரமொதுக்கி இசையமைத்துக் கொடுத்த சுகன்யன் வரை அனைவரின் உழைப்புமே மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.


இதுகாலவரையில் ஆங்கில டப்பிங்ற்கு பெரும்பாலும் கணணி மென்பொருள் மூலமான குரலையே உபயோகப்படுத்தியிருந்தோம். இதற்க்கு எப்படியாவது ரியல் வாய்ஸ் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று முதலிலேயே சுகன்யன் தீர்மானம் பண்ணியிருந்ததனால் அவரது நண்பர் Chris யாழ் வந்திருந்த நேரம் அவரைக் கொண்டு முழு டப்பிங்கும் செய்து முடித்தோம்.
Chris ஐப் பற்றிச் சொல்வதானால் அவர் ஒரு மிக இனிமையான நண்பர், பலே நடனம் தெரிந்தவர், பாடகர். அவர் இங்கிருந்த காலப்பகுதியில் தான் அவரது பிறந்தநாளும் வந்தது. அதனை எமது வழமையான முறைப்படி* செய்து ஒருவழி பண்ணிவிட்டோம். அவர் கண்கள் கலங்கி நன்றி கூறியபோது தான் தெரிந்தது, இப்படி அவரது பிறந்தநாளைக் கொண்டாடி பலவருடங்கலாகிவிட்டன என்று. சிறு வயதில் ஒருமுறை தாயுடன் கொண்டாடியதாய் ஞாபகம், அதற்குப் பின்பு இம்முறைதான் என்றார். ஹிமாலயமலை நோக்கிய அவரது பயணத்தில் ஹிமாலயா கிரியேசன்ஸ் இலும் சிறிது காலம் தரித்துச் சென்றதில் எமக்கும் மகிழ்ச்சியே.

"Chris is not only a friend but also he is within the frame of Himalaya Creations. The attitude of him is beyond our imagination. We as the Himalaya Creations Pvt. Ltd will always remember you."

பிற்குறிப்பு: அது என்ன எமது முறைப்படியான பிறந்தநாள் என்று பார்க்க ஆர்வமானவர்கள் கீழேயுள்ள காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நிற்க, எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு கலாட்டா நிச்சயம்.
சனி, ஆகஸ்ட் 24, 2013

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)


ஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக  பட்ட பாடுகளையும்  நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே  குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும்.


ஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான்? அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலைப் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை?சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு நாள் சிங்கப்பூரில் ஓர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனனியை அண்மித்த வயதில் ஓர் குழந்தை இருக்குமிடம் என்றே சொல்ல முடியாத வண்ணம் அந்த வீடு அழகாகவும், சுத்தமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. உள்ளே சென்ற போது ஹாலில் ஏற்கனவே நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் ஏனைய மூவரின் பழைய, தற்போதைய பாஸ்.

நாம் உள்ளே சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் பாடம் ஆரம்பமாகியது. முதலில் கற்பிக்கத் தொடங்கியது நம்ம விபின் (3xCCIE #23955) சார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் (என்னையும்) விட வயதில் குறைந்தவர் விபின். எவருமே தன்னைவிட குறைந்த வயதுள்ள ஒருவரிடம் படிப்பதற்கு என்றுமே தயங்குவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. யாரும் நீ பெரிது நான் பெரிது என்று பாகுபாடு பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் விபினுக்கு முதலாவது CCIE எடுப்பதற்கு படிப்பித்தவர் கூட இப்போ இரண்டாவது எடுப்பதற்கு விபினிடம் படிக்கத் தயாராகவிருந்தார். விபின் மற்றும் அனந்தனின் பழைய பாஸும் இதில் உள்ளடக்கம்.

இப்போது அறையில் மொத்தமாய் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் கதைத்த மொழி பல சமயம் எனக்குப் புரியவில்லை. பாதி மலையாளம், மீதி தமிழ் கொஞ்சம் ஆங்கிலம் என்று ஒரு கலவையாயிருன்தது. அவரவர் தமக்கு சௌகரியமான மொழியில் பேசிக்கொண்டனர். அனைவருக்கும் அனைத்தும் புரிந்தது. (என்னைத் தவிர..)

சில உறவுகள் எங்கிருந்து வருகின்றன எதற்காய் தொடர்கின்றன என்பது பல சமயம் தெரிவதில்லை. அப்படித்தான் இவர்களும். மொழி வேறு தேசம் வேறு கலாச்சாரம் வேறு.. எனின் அவர்களை இணைத்தது எது?

நட்பு.. என்று வெறுமனே ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடலாம் தான். ஆனால் அவர்களிடம் இருந்தது அதையும் தாண்டி.. சாதிக்க வேண்டும் என்ற வெறியும் கூட. ஏழு பேர் கொண்ட இவர்களின் குழுவில் விபினுக்கும் அனந்தனுக்கும் இது மூன்றாவது CCIE. பாலன், விவேக், சனோஜ் ஆகியோருக்கு இரண்டாவது CCIE. கமா மற்றும் சந்தோஷ்க்கு முதலாவது. ஒவ்வொருவரும் தான் சித்தியடைந்தவுடன் மட்டும் நின்றுவிடாது மொத்தமாய் அவர்கள் குழுவில் சேர்ந்து படித்த ஏழுபேரும் பாஸ் பண்ணி முடிக்கும் வரைக்கும் அனைவருமே தாமே எக்ஸாம் செய்யப்போவதுபோல் பாடுபட்டனர். இத்தகைய ஒற்றுமை, டெடிகேசனை நிச்சயமாய் நான் வேறெங்குமே இதுவரை காணவில்லை.

அடுத்து, என்னதான் சாதனைகள் புரிந்தாலும் அதை வரவேற்கும் / கௌரவப்படுத்தும் குணம் நம்மவர்க்கு ரொம்பவே அரிது. அது பொறாமையினாலா அல்லது அறியாமையினாலா என்பது தெரியவில்லை. பலர் பொறாமையினால் தான் என்று சொல்லுவார்கள். ஆனால் அதில் எனக்கு பெரிதும் உடன்பாடில்லை. ஏனெனில் இப்படித்தான் ஓர் அதி தீவிர பொறாமையாளர் என்று கருதப்பட்டவர் ஒருவர் FBல அனந்தனுக்கு எல்லாரும் wish பண்ணுறதைப் பாத்திட்டு உடனை call போட்டு "அதென்ன அவ்ளோ பெரிய எக்ஸாமே?" எண்டு கேட்டவராம். இப்ப சொல்லுங்க அவரது, பொறாமையா? அறியாமையா? அல்லது அறியாமையில் வந்த பொறாமையா..?. யார் கண்டது ஒருவேளை வருசத்துக்கொரு பிள்ளை எண்டு நாம இறக்கிட்டிருக்க இவனென்னடாவெண்டால் வருசத்துக்கொரு CCIE எண்டு இறக்கிக் கொண்டிருக்கிறான் எண்ட கடுப்பாகூட இருக்கலாம். 

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

இம்முறை அனந்தனின் யாழ் விஜயத்தின் போது யாழ் பல்கலைக்கழக கணனிப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு "Inspirational Talk" கொடுக்கமுடியுமா என்று விரிவுரையாளர் சர்வேஸ் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க அங்கும் ஒரு விஜயம் செய்தாயிற்று. முதல் நாள் ஜனனிக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடந்ததினால் இந்த அறுவையை.. மன்னிக்கவும் உரையை கேட்கும் பாக்கியம் நமக்கு கிட்டவில்லை.

(ஒரு சின்ன திருத்தம்.. Dual இல்லை Tripple CCIE)

அன்றிரவே சர்வேஸ் போனில் "நன்றாயிருந்தது. ஆனாலும் ஒரு குறை" எனவும் கொஞ்சம் 'பக்' என்றாயிற்று. "அதொண்டுமில்லை. அனந்தனுக்கு ஒரு டீ கூட வேண்டிக்கொடுக்க முடியவில்லை. அதான் குறை நினைக்க வேண்டாம். எண்டு சொல்லுங்கோ" என்றார். சரி வந்ததுதான் வந்தது.. ஊரில ஒரு ரெண்டு பரப்பு காணி வாங்கி போடுவம் எண்டால், உள்ளூர் வெளியூர் எண்டு ஆளாளுக்கு (வேலை மினக்கெட்டு போன்பண்ணி) கிலி காட்டின்டு இருக்கிறாங்க. கடைசில செட்டை(set) தான் போட்டு இப்பிடி பாடிட்டு இருக்கிறதோ தெரியேல்லை..!


எதுவோ.. நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. நடப்பதும் நன்றாகவே நடக்கிறது. அதுபோல் நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும். ஆளை விடுங்கப்பா சாமி..!


பிற்குறிப்பு: அனந்தனின் பிறந்தநாள் September 28th. வடமாகாணசபை தேர்தல் September 21st. நாளைய தேதி August 25th. ஒண்ணுக்கொன்னு சம்பந்தமிருக்கா இல்லையா எண்டு தெரியலை. ஆனா அனந்தண்டை பிறந்தநாளுக்கு எழுதுவம் எண்டு நினைத்தது. எதுக்கும் இருக்கட்டும் என்று சற்று முன்னாடியே வெளியிடப்படுகிறது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதென்னா திருப்பி சரியான திகதியில் பகிர்ந்துக்கிறேன். சாரி போர் தி கான்பியுசன்..
புதன், ஜூலை 24, 2013

"a journey through a century" Documentary Film


"சிங்கம் சிங்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தரம் டிவியில அலறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலை, ஒரு ஆவணப் படத்துக்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணியது இவங்களாத்தான் இருக்கும்.

குறுந்தட்டு வெளியீட்டிற்கு இந்திய சினிமா ஆடியோ ரிலீஸ் போலவே ஐந்தடி உயரத்தில் கவர் மாதிரியுரு செய்திருந்தனர். 


Trailer பற்றி சொல்லவே தேவையில்லை. வழமைபோல் Music இல் சுகன்யன் பிரித்து மேய்ந்திருக்கிறார்.


இந்த ஆவணப் படமானது வடக்கின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான Himalaya Creations (Pvt) Ltd இனால் மிகவும் குறுகியகாலப்பகுதியில் உருவாக்கப் பட்டுள்ளது.

இதற்க்கான இசையினை Thunderknight Music இனுடைய டைரக்டர் S sukanyan அமைத்துள்ளதோடு, யாழில் முதன் முறையாகபிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் College Hymn இற்கான Mastering இனை ஹாலிவுட்டின் பிரபல "Universal Mastering Studio" செய்திருக்கிறது. 

உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள திறமையான வல்லுனர்களையும், தரமான நிறுவனங்களையும் ஈடு படுத்தியதநூடாக Himalaya Creations (Pvt) Ltd மிகத்தரமான படைப்பினை வழங்கியிருக்கிறது.


The Old Girls' Association of Chundikuli Girls College proudly presents this documentary on its journey of a century in a nutshell, commencing from 1913. They reflect with great thanksgiving, the part their Alma Mater has played in their lives to give them a wholesome education to reach the heights they have reached in all spheres of life. 

This documentary also takes us into the historical journey of the school from 1896 to date along with the school's achievements in the academic, sphere, sports, myriad clubs and societies and much more......!This documentary film has been produced, within a short period of time, by the Himalaya Creations (Pvt) Ltd, the leading film production house in the North of Sri Lanka.

The Music has been composed by S.Sukanyan, Director of Thunderknight Music. 

"Universal Mastering Studio", a well famed hollywood music studio, has done the mastering works for the college hymn, which has been recorded in a grand scale.

Himalaya Creations (Pvt) Ltd created this remarkable product by involving skilled technicians and classy studios, both locally and internationally.


முக்கிய குறிப்பு : பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட DVD covers மற்றும் DVDs மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே இருப்பதனால் வாங்க விரும்புவோர்கள் "a journey through a century Documentary Film" எனக் குறிப்பிட்டு cgcogajaf@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும். 


சனி, ஜூன் 15, 2013

கணக்கு வாத்தியார்


"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?"
"ஒன்றுமில்லை சார்"
"காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?"
...........
"எனக்கிப்ப காரணம் தெரியோணும். அதுவரைக்கும் கிளாஸ் நடக்காது."
...........
"நான் இத்தினை தரம் கேக்கிறன். ஒரு மாஸ்டர் எண்டு மரியாதையில்லாமல்.. எழும்பும் எழும்பும்.. எழும்பி வெளிய போய் நில்லும்." அவர் இப்போது கோபத்தின் உச்சியிலிருந்தார்.
...........
"இந்தப் பிள்ளை வெளிய போகாமல் நான் கிளாஸ் எடுக்க மாட்டன்."

அதுவரை பேசாதிருந்தவள், கொப்பியை அடித்து மூடிவிட்டு எழுந்தாள். முன்னிருந்த நண்பியை மீண்டுமொருமுறை பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே தலையைக் குனிந்தபடி கொப்பியில் இல்லாத ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்தனர்.

கோபத்தில் இரத்தம் கொதித்தது. கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், நிற்காமல் வேகமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். 

வகுப்பின் முதல் நாள் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன.

உயர் தரத்தில் என்ன படிப்பது என்று வீட்டில் அம்மாவும் அப்பாவும் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க அவள் மட்டும் கணிதம் தான் படிப்பது என்று எப்பவோ முடிவெடுத்திருந்தாள். இரத்தம் என்றாலே மயக்கம் போட்டு விழும் அவளுக்கும் விஞ்ஞானத்துக்கும் வெகு தூரம். தவிர, புரியாத பெயர்களை வெறுமனே சப்பித் துப்ப முடியாது, அது மட்டுமன்றி விஞ்ஞானம் என்று சொன்னாலே ஹோச்பிடல் மணம் வந்து மனதுக்குள் என்னமோ செய்வதை தடுக்க முடிவதில்லை. 

ஒருவாறாக அவர்களின் மருத்துவக் கனவுகளை சிரமப்பட்டுக் கலைத்துவிட்டு கணிதம் படிப்பதற்கென்று சென்ற முதலாவது நாளே நண்பியின் கொப்பியில் வண்ண வண்ண எழுத்துக்களால் நிரம்பியிருந்த முதல் நாளைய திரிகோண கணித பாடம் பிடித்துப் போய்விட்டிருந்தது. சமன்பாடுகளுடன் அவள் வெகு லாவகமாய் விளையாடும் வேகத்தை பலமுறை பாராட்டியவர் தான் இன்று 'எழுந்து வெளியே போ' என்று கர்ச்சித்திருந்தார். நினைக்கையில் அழுகையாய் வந்தது.

வாகனச் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் வீட்டை அண்மித்துவிட்டது தெரிந்தது. ஒருகணம் தயங்கினாள். ஏன் இண்டைக்கு கெதியா வந்திட்டாய் என்று அம்மா கேட்டால் என்ன சொல்வது? இனி கிளாஸ் போகவே போவதில்லை என்று சொன்னால் என்ன செய்வார்? எதற்காய் இந்தப் படிப்பு மண்ணாங்கட்டி எல்லாம்? வெறுப்பாய் வந்தது.

சில மாதங்களின் பின் ஒருநாள். 

"வடிவாப் பாத்திட்டனப்பா.. டூ பி சி தான். வேணுமெண்டால் நீங்களே போய்ப் பாருங்க." நம்ப முடியாமல் மூன்றாவது தரமும் கேட்டவர் மேல் கோபம் கோபமாய் வந்தது. தயக்கத்துடன் சென்று பார்த்துவிட்டு திரும்பிய அவரின் கண்கள் கலங்கியிருந்தனவா என்ன? அவள் கவனியாததுபோல் இறங்கி தெருவில் நடந்தாள்.

'3A எடுக்கக் கூடிய பிள்ளை என்று சொன்னாராமே.. இந்த ரிசல்ட்ஐ கேள்விப்பட்டால் எங்க கொண்டுபோய் மூஞ்சிய வைப்பார்?' மனதுக்குள் கறுவிக் கொண்டாள். 'அவருக்கென்ன கஜன், அபிராமி எண்டு எத்தினை கெட்டிக்காரர் இருக்கினம். தோல்வியின் அடையாளமாய் எதுக்கு என்னைப் பற்றியெல்லாம் கணக்கில் வைத்திருக்கப் போகிறார்?' தேவையில்லாமல் கோபம் யார் யார்மீதோ வந்தது.

"இந்த resultsக்கு இன்ஜினியரிங் கிடைக்குமா?" அந்த இறுக்கமான சூழலைக் கலைத்துக்கொண்டு தந்தை அப்பாவித்தனமாய் கேட்டது அவளின்  கோபத்தை இன்னும் அதிகப் படுத்தியது. முறைத்தாள்.

"சரி பிள்ளை. நீ எதுக்கும் கவலைப் படாதை என்ன? இது முதல் தரம் தானே? இடையிலை வேறை படிப்பை குழப்பிட்டாய். அடுத்த முறை வடிவாப் படிச்சு பாஸ் பண்ணிடலாம்." வலுக்கட்டாயமாய் வரவழைத்த புன்னகையுடன் அவர் கேட்டபோது கோபத்தின் உச்சிகே போய்விட்டாள். 
"எதுக்கு? இதுவே எடுக்க மாட்டன் எண்டு தானே சொன்னனான். நீங்க இவ்வளவு கஷ்டப்படுத்தினதால தான் எடுத்தது. இது தான் முதலும் கடைசியும். இனிமே நீங்க என்னதான் தலை கீழா நிண்டாலும் படிக்கவும் மாட்டன். எக்ஸாம் எடுக்கவும் மாட்டன். சரியே?" பொரிந்து தள்ளிவிட்டு அவரின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் முன்னால் வந்து நின்ற பஸ்சில் நம்பர் பார்க்காமலேயே ஏறிவிட்டாள்.

பன்னிரு வருடங்களின் பின்னர் ஒரு நாள்.

"அப்பா.. அப்பா ஒருக்கா நில்லுங்கோ.. இதிலை போறது எங்கடை சார் மாதிரியே இருக்கு." அந்த எழுபது வயதிலும் சற்றும் தளராது மோட்டார் வண்டியை அனாயசியமாய் திருப்பி "எந்த சார்? எங்கை?" என்றார்.

"எனக்கு சரியாத் தெரியேல்லை. ஆனா அவராத்தான் இருக்கோணும்." என்றபடி முன்னே உடைந்துபோன ஓர் சைக்கிளில் ஒருகையில் கொப்பியுடனும் மறு கையால் காற்றில் குறுக்கும் நெடுக்குமாக எதுவோ கோடு கீறியபடியும் சென்று கொண்டிருந்தவரைக் காட்டினாள்.

அரை மனதுடன் மெதுவாய் வண்டியை ஓட்டியபடி, "இப்ப கட்டாயம் கதைக்க வேணுமே?"
"ம்ம்.."

"சார் என்னைத் தெரியுதா?"
"இல்லை. சரியா தெரியேல்லை." என்றபடி சைக்கிளை சிரமப்பட்டு நிறுத்தினார்.

"நித்தியா சார். 2000 பட்ச்..  எப்ப Jaffna வந்தனீங்க? இப்ப இங்கயே படிப்பிக்கிறீங்க?"
"இல்லை.  மூண்டு மாதம் இங்கை சென் ஜோன்ஸ்ல படிப்பிக்க வந்தனான். நீர் என்ன செய்ரீர்? "    
"இங்கை ஒரு கம்பெனி தொடங்கியிருக்கிறன் சார். உங்கடை ஸ்கூல்க்கு கூட ஒரு ப்ராஜெக்ட் செய்ராதா..." மேலே தொடர முடியவில்லை. மனது கனத்தது.

சிறிது நேரத்தின் பின்..
"சரி நான் வாறன்." அவர் சிரித்தவாறே கிளம்பினார்..  
அவள் வெறுமனே தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறியவள், எதேற்ச்சையாய் திரும்பிப் பார்த்த போது அவர் வெகுதூரத்தில் தன்பாட்டிற்கு கைகளால் மறுபடியும் கோடுகள் வரைந்த வண்ணம் போய்க்கொண்டிருந்தார். சிரித்துக்கொண்டே..


Recent Posts

Labels

விமர்சனம் அனுபவம் Himalaya Creations ஈழம் "அவள்" ஒரு தொடர் கதை கவிதைகள் Jaffna இசை பாரதி கண்ணம்மா Himalaya சிறுகதை Ananthan சிங்கப்பூர் YIT yarl IT Hub JK உங்கள் பார்வைக்கு இளையராஜா campus harikanan printers கொலைவெறி NEP Ramavarma Steve Jobs bk srilanka இயற்கை கவிதை ஜெயமோகன் தேவதாசி யோகநாதன் அனந்தன் 2013 7ஆம் அறிவு Birthday CCIE Chundikkuli Girls College Dhanush Osho Singapore calendar harikanan kamal maayan calendar nishaharan sridevi suganyan thusikaran vijay அறிமுகம் அவள் ஒரு தொடர் கதை காலம் ஜனனி தமிழ் இனி தில்லானா நட்பு நிலவு நீ தானே என் பொன்வசந்தம் புகைப்படம் யுகபாரதி 2012 48HFP 48HFP Jaffna 50 shades of grey AE Manoharan AR Rahman Anu Art of Dying Australia Avon BMICH Barathiyar Blind Love Changing Seasons Chicago David Cameron Deepawali Film HDB Happy New year Homebrew Computer Club India’s Daughter JD JPL Jaffna University Jeyachandran Kaayam Karate Kaun Banega Crorepati Kung Fu Leena Manimekalai MGR Mariah Carey Mayan Mr. Harith Kariapper Naan Varuven National Geographic Nov 27 OGA PT Rajesh vaithiya Rajini Ricky Martin Rosy Senanayake Saraswathi Ranganthan Shaolin Spanish Eyes St. Johns College Sudha raguram The Big Bang Trailer Uduvil Girls college Vigil for Sivayoganathan Vidhiya Vigil for Vidhiya Zen are you in it bk gowri chundikkuli cup of life hsenid incredible india jam just a minute kumki songs lift logo love makeup march 8 meditation moorthy digital color lab moorthy guest house network panchangam poet thamarai pokkiri post office ragunaathaiyar samantha silicon valley simbu sitharth song soorya soul step up stretching room effect swan system thirisha thuppakki veena virtusa vishwaroopam wanted why this kolaiveri women's day wso2 yarl zulustyle அக்க்ஷய திருதியை அங்கவர்ணனை அம்பி குரூப் அற்புதத்தில் அற்புதம் இறுதிப்போர் இலங்கை முஸ்லிம் எம்.ஜி.ஆர் எஸ். ராமகிருஷ்ணன் ஏசுநாதர் கடிதம் கலிங்கத்துப்பரணி சகோதரத்துவம் சிவகுமார் சிவபுராணம் சீமான் சுவாதித்திருநாள் செங்கடல் ஜெயச்சந்திரன் தங்க மீன்கள் தனுஷ் தமிழ் தலை முடி திரிசங்கு சொர்க்கம் திருவாசகம் தீபாவளி நத்தார் நந்தகுமார் நந்திக்கடல் நல்லூர் நாக. இளங்கோவன் பண்டிகை பழைய மாணவர் சங்கம் பாரதி பிடித்தபத்து புன்னகை மன்னன் புரட்சித் தலைவர் மாணிக்கவாசகர் முள்ளிவாய்க்கால் மே 2009 மேதினம் வெண்முரசு வைரமுத்து
 
Copyright © ரசிகை. Design By New Blogger Templates
Support IE 7, On Sales, Best Design