• Home
  • About
  • Articles
  • Books
    • Kanavukalaith Thedi
    • Peyarili
    • Testimonies of Silent Pain
    • Reviews
  • Blog
    • Aval Oru Thodar Kathai
    • Bharathi Kannamma
    • Short Stories
    • Others
  • 48HFP
  • Guest Talks

Gowri Ananthan

Writer | Social Entrepreneur | Ambassador of Peace | Counsellor | Psychotherapist | Traveler | FreeThinker

facebook google twitter instagram linkedin
நேற்று முழுக்க முகப்புத்தகத்தில பன்னாடை.. பன்னாடை அப்பிடின்னு திட்டிடிருக்கிரன்களே? பன்னாடை அப்பிடின்னா என்ன?

இது பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும். அருகிலுள்ள படத்தினைக் காண்க. அரிதட்டு போலவே இதுவும் கழிவுகளை வடிகட்ட பயன்படக்கூடிய மிகவும் உபயோகமான ஒரு பொருளாகும். என்ன ஒன்று நல்லதை விட்டுவிட்டு கழிவுகளை வடிகட்டி வெளியே வைத்திருப்பதனால், அதன் பயன்பாடுகளை மறந்த நமது நன்றி கெட்ட சமூகம் அதனை முட்டாள் என்கிறது. 

சரி இதெல்லாம் இப்ப எதுக்கு எண்டு கேட்டீங்கன்னா முதல்ல கீழே தரப்பட்டிருக்கும் எனது நேற்றைய பதிவை படிங்க. 
நாங்க தலைவர்ட பர்த்டேய கேக் வெட்டி கொண்டாட இருக்கோம். என்ன சொல்றீங்க?
அது போன கிழமையே முடிஞ்சுதே?
இல்லை பன்னிரெண்டாம் திகதி லிங்கா ரிலீஸ் அன்னிக்கே தியேட்டர்ல கொண்டாட arrange பண்ணியிருக்கிறாங்க..
ஒ அப்பிடியா.. 
தலைவர் என்பதன் அர்த்தம் எவ்வாறு அடுத்த தலைமுறையிடமிருந்து எப்படி படிப்படியாக அகற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதனை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது எமது தலைமுறை. அதற்காக அவர்களை கேவலமாகப் பேசுவதினால் உங்களின் மனவக்கிரங்களுக்கு / இயலாமைக்கு ஒருவேளை ஆறுதல் தேடிக்கொள்ளலாம். ஆனால் அவற்றினால் எந்தப் பலனுமில்லை. நேற்று ஒரு பதிவினை பார்த்தேன். "எமது போராடும் உரிமையை பறித்துவிட்டு மக்களுக்கு நீ கொடுத்தது என்ன? முள்ளிவாய்க்கால் துயரங்களைத் தானே?" என்று EPRLF தடைசெய்யப்பட்ட தினத்தினை நினைவுகூருகிரார்கள். இதற்க்கு விருப்பம் தெரிவித்தவர்களும் பகிர்ந்தவர்களும் அதிகமே தவிர எதிராக எந்த கருத்தினையும் யாரும் கூறியதாக தெரியவில்லை. பல பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர்களுக்கு, அபலைகளாக்கியவர்களுக்குத் துணைபோனவர்களை எம்மால் சற்றும் கூச்சமே இல்லாமல் தூக்கிப் பிடிக்க முடியும்போது, தனக்குப் பிடித்த ஒரு நடிகனின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் வாழ தம்முயிரை தந்த மாவீரர்களின் நினைவுனாளைக்கூட நாலு கதவையும் சாத்திவிட்டு அறைக்குள்ளிருந்து சுட்டிவிளக்கில் விழிநீர் சிந்த நினைவுகூரும் நிலையில் அவர்கள் கனவுகண்ட தேசமிருக்க, வெளிநாட்டில் யார் கொண்டாடுவது என்று கோஸ்டிச் சண்டை. வெறும் பதினைந்து கிலோ கேக்குக்கும் ஒரு பக்கெட் பாலுக்கும் நீலிக்கண்ணீர் விடுபவர்கள் தினசரி அடிக்கும் தண்ணிக்கு செலவு செய்யும் காசை மிச்சப்படுத்தி அடுத்த தலைமுறையின் கல்விக்கு உதவலாமே? அப்படி உதவுபவர்களுக்கு தலைவணங்குகிறேன். இது அவர்களுக்கான பதிவல்ல. ஏனெனில் அடுத்தவர்களுக்கு உதவும் மனதுள்ளவர்கள், பிறர் தவறு செய்தால் எவ்வாறு திருத்தலாம் என்று நினைப்பார்களே ஒழிய இவ்வாறு கீழ்த்தரமாக ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டார்கள்.  
மில்லியன் கணக்கில் செலவுசெய்து ஹெலிகோப்டோரிலும், கப்பலிலும், நேவி ஹோட்டலிலும் என்று நம்மவர் சற்றும் கூச்சமேயில்லாமல் விழாக்கள் கொண்டாடுகையில் வெறும் பத்தாயிரம் கூட முடிந்திராத இந்த ஒரு சாதாரண நிகழ்வினை தமது சுயலாபங்களுக்காக திரித்து வெளியிட்டு சமூக சீர்திருத்தவாதிகள் என்று பெயரெடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களின் மானசீக தலைவரின் பிறந்தநாளை அடுத்த வருடம் இதே இடத்தில் வைத்து நினைவுகூரும் துணிவு உங்களில் யாருக்காவது இருக்கிறதா? இருந்தால் வாருங்கள். அதுவரை நீங்கள் / நாங்கள் உயிரோடு இருந்தால்.. அதன் பிறகு மேற்கொண்டு பேசலாம்.

இந்தப் பதிவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்ப்புக்கும் ஆதரவுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரை திட்டுவது என்பது இலகுவான விடயம். ஆனால் தூக்கிவிடுவது என்பது மிகவும் சிரமம். ஏனெனில் தூக்கிவிடுவதற்க்கு நீங்கள் மேலே இருக்கவேண்டும். நிலவைப் பார்த்து நாயால் குலைக்கத்தான் முடியும். சூரியனால் தான் ஒளியை கொடுக்க முடியும்.

அப்படி ஒளிகொடுக்கும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கருதினால் வாருங்கள். நாம் ஒன்றிணைவோம். தமிழன் இன்றுவரை தலைநிமிர தடைவிதிக்கும் வசைகள் வேண்டாம். தலைநிமிர உதவிய ஆயுதங்களும் வேண்டாம். அன்பினால் அறிவினால் மாற்றத்தை உண்டாக்க உதவுவோம். 

தகவல் தொழிநுட்பதுறை மாணவர்களுக்கு Yarl IT Hub போன்று ஒவ்வோர் துறைக்கும் அது சார்ந்த வல்லுனர்கள் கொண்டு ஒவ்வோர் அமைப்பினை உருவாக்கி  அதன் மூலமாக அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவோம். கல்வி மறுக்கப்பட்டு வாழ்தலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டபோது வேறுவழியின்றி ஆயுதம் தூக்கினர் அன்று. இன்றும் அதே நிலைதான். ஆனால் அவர்கள் திரும்பவும் ஆயுதம் தூக்கிவிடக்கூடாது என்பதற்காய் திட்டமிடப்பட்டு பல்வேறு வழிகளில் திசைதிருப்பி விடப்படுகின்றனர். உங்களுக்கு உண்மையிலேயே அவர்கள் மீது அன்பிருந்தால்.. கரிசனை இருந்தால்.. மாற்று வழியை முன்வையுங்கள். சம்பந்தப் பட்டவர்களிடம் மற்றும் தகுதியானவர்களிடம் உங்களின் கருத்தினை / திட்டத்தினை கொண்டுசேர்க்கும் பொறுப்பினை நீங்கள் விரும்பினால் நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுங்கள். ஏற்கனவே இத்தகைய செயல்திட்டங்கள் இருப்பின் அவற்றையும் தெரியப்படுத்துங்கள். ஒற்றுமையே பலம். தமிழனின் ஒரே பலவீனமும் அதுவே. புரிந்து இனியாவது ஒன்று சேர்வோம். 

வழியில் தவறு நேரலாம். பன்னாடைகள் என திட்டப்படலாம். இல்லை அதைவிடவும் மோசமாகவும் திட்டப்படலாம். அவற்றையெல்லாம் கடந்து செல்லும் துணிவுள்ளவர்களை இருகரம்கூப்பி வரவேற்கிறோம். ஏற்கனவே தமது ஆர்வத்தினை தெரிவித்தவர்களுக்கு மிக்க நன்றி. மிக விரைவில்  தங்களின் எண்ணத்தினை செயல்வடிவமாக்க்கூடிய பொறிமுறையுடன் தொடர்பு கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: இது எவ்வித பணரீதியான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியாக மட்டுமே செய்யப்படுவதனால் நீங்கள் ஏதாவது பணம் கொடுக்க விரும்பினால் அதற்குரிய சரியான திட்டத்துடன் அணுகுங்கள். அத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்க்கான வரவு செலவு கணக்கு உங்களுக்கு சமர்ப்பிக்கப்படும். தாங்கள் ஒரு திட்டத்தினை முன்வைக்கும் போது, யார் விரும்பியோ விரும்பாமலோ நாம் இங்கே அரசாங்கத்தினை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி.. நாம் நாம் என்று சொல்கிறேனே அந்த நாம் யார் எண்டு கேட்டீங்கன்னா... இந்த திட்டத்துக்கு கைகொடுக்கப் போகும் நீங்க எல்லாருமே தான். வெளிநாட்டு அறிவுஜீவிகளுக்கும் உள்நாட்டு ஆர்வலர்க்கும் அல்லது உள்நாட்டு அறிவுஜீவிகளுக்கும் வெளிநாட்டு ஆர்வலர்களையும் இணைக்கும் பாலமாக எமது பிரதான குழு இயங்கும். பெறப்படும் அல்லது தயாரிக்கப்படும் திட்டங்களைப் பொறுத்து அந்தந்த துறைக்குரிய உபகுழுக்கள் உருவாக்கப்படும். பிரதான குழு வெறும் பாலமாகவும் கண்காணிப்பாளர்களாகவும் மட்டுமே செயல்படும். உபகுழுக்களே தத்தம் துறைக்குரிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தும். இது சம்பந்தமான மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது இணைய விரும்புபவர்கள் uthayamsl@googlegroups.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி.




Share
Tweet
Pin
Share
No comments

ஏனோ இதுவரை இங்கே நம்மைப்பற்றிய பயோ டேட்டா (நேரடியாக) எழுதவேண்டிய தேவை வரவில்லை. அப்படி வந்த சமயத்தில் 'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul) அப்பிடின்னு ஒற்றை வரியில் அமைதியா சொல்லிட்டுப்போற பக்குவம் / தெளிவு வந்திடிச்சு. இருந்தும் இந்த மாற்றம் வருவதற்குள் பல வருடங்களல்ல, பல பிறவிகள் சென்றிருந்தன.

அதெப்பிடின்னு சின்னதா, அறுதியும் இறுதியுமா.. ஒரு trailer போட்டோம்ன்னா..

பல பிறவிகளின் சாரமாக.. இந்தப் பிறவியில், பதினைந்து வயதுவரை, சைவத் திருமுறைகள், ஆண்டாள் பாயிரங்கள், நாயன்மார் சரிதைகள், சைவ சித்தாந்தங்கள் என்று பக்தி மார்க்கத்தில் கடவுளைக் காதலித்த காலம் முதல் அத்வைதம், துவைதம், சென் தத்துவங்கள், ஓஷோவின் பார்வைகள் என்று பலவற்றை இருபத்தியைந்து வயதுவரை தத்துவார்த்த ரீதியிலும், எண்ண அலைகள், அல்பா, பீட்டா, டெல்டா, தீற்ரா, பிரைன்வேவ்ஸ் என காது கிழிய ஹெட்போனை மாட்டிட்டு முப்பது வயதுவரை விஞ்ஞான/பௌதீக ரீதியிலும் எதையோ கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து செய்து களைத்து போதும்டா சாமி, கடல்லையே இல்லையாம்.. எனும்போது தான் அந்த அதிசயம் நடந்தது.

இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, உலகின் இன்று பலரைப் போலவே கடவுள் பற்றிய பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த காலமது. என்னதான் கடவுளைப்பற்றிய தேடல்கள் இருந்தாலும் மனிதனின் இயற்கையான உணர்வுகளை (சந்நியாசிகள் போல்) அடக்கவேண்டும் என்பதினை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அப்படியே அடக்க முடிந்தாலும் அது சம்பந்தமான எண்ணங்கள் வருவதைத் தடுக்க முடியாது என்றே நினைத்திருந்தேன். ஆகவே ஓஷோ (ரஜனீஷாக) இருந்தபோது சொன்னதுபோல், எமது உணர்ச்சிகளை, ஆசைகளை (பார்வையாளனாக இருந்து?) முழுவதுமாக அனுபவித்து முடிக்கும் வரை  மனம் ஒரு நிலைப்படாதென்ற மிக மிகத் தவறான கொள்கை இருந்தது. அப்போது தான் தியான வகுப்பெடுத்து சிலகாலங்களிலேயே இறை சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சிநேகிதி ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சொன்னது, "நீ உன் வழியில் போ.. நான் என் வழியில் போகிறேன். ஆனால் கடைசியில் யார் சரியான இடத்திற்கு முதலில் போய் சேர்கிறோம் என்று பார்ப்போம்."

காலங்கள் கடந்தன. பல ஞானிகள் காலம் காலமாக, படித்துப் படித்துக் கூறியது போலவே எமது உணர்வுகளும் ஆசைகளும், நாமாக உணர்ந்து மனதை எமது  கட்டுக்குள் வைத்திருந்தாலேயொழிய தாமாக என்றும் தணியப்போவதில்லை / தணிந்தாலும் மீண்டும் விழித்தெழும், என்று புரிந்து கொள்ள இப்பிறவியில் மட்டும் முப்பது வருடங்கள் எடுத்திருக்கிறது. ஞானத்தைத் தெரிந்து, புரிந்து, உணர்ந்து கொள்ள மேலும்  மூன்று வருடங்கள்.  ஆனால் அதனுள் முற்றாய் அமிழ்ந்துவிடும் துணிச்சல் வந்தது, மோகத்தை முற்றாக எண்ணங்களிலிருந்தும் கூட அகற்றிவிட முடிந்த  சில மாதங்களின்  பின்னரே..

உணவில் கட்டுப்பாட்டைக் கையாள்கையில் தான், எண்ணங்கள் எவ்வளவு மாசுற்றிருக்கின்றன என்பது புரிந்தது. எண்ணங்களில் கட்டுப்பாட்டைக் கையாள்கையில் தான், இன்னும் எத்தனை பழைய மாற்றப்படவேண்டிய சமஸ்காரங்கள் இருக்கின்றன என்பது புரியத் தொடங்குகின்றது.

இதெல்லாம் இப்ப எதற்க்குச் சொல்கிறேன் என்றால் அது கூட ஒரு பழைய சமஸ்காரம் தான். அதாகப்பட்டது.. சில வருடங்களின் முன்னால் ஒரு சகோதரி, "சிங்கப்பூர்ல மொடலாக இருந்த பொண்ணு.. இப்ப இங்க  வந்து கம்பெனி நடத்துது." அப்பிட்டின்னு சொல்லியிருந்தாங்க. அப்போ என்னதான் ஞானத்தை அறிந்திருந்தாலுமே, ஈகோ அப்பிடின்னு ஒரு சமாச்சாரம் கொஞ்சம் தலையெடுத்து வருத்தமாயிடுத்து. அப்புறம் நினைச்சேன்.. அதுவும் உண்மைதானே? பிறகென்ன? என்று. டெமோ, சிஸ்டம் அட்மின்,  வெப் மாஸ்டர், நெட்வொர்க் மேனேஜர், ப்ராஜெக்ட் மேனேஜர் அப்பிட்டின்னு என்னவெல்லாமோ பௌதீக உலகில் குப்பைகொட்டி கடைசியில், ஊரில போய் ஏதாச்சும் உருப்படியாப் பண்ணுவம் எண்டு, சொந்த கம்பனி வைக்கலாம்ன்னா அவங்களுக்குத் தெரிந்தது புற அழகு மட்டும் தான், அப்பிடின்னு கோபமா வேறை வந்தது. நடுவில ஒருத்தர், தான் போட்ட பிச்சையில தான் எல்லாமே எண்டு, கம்பெனில இருந்த ஒவ்வொருத்தருக்கும் இரவிரவா கால் போட்டு புலம்புவது மட்டுமல்லாமல் இணையத்தில் கூட அவ்வப்போது வந்து புலம்பித் தள்ளுவார். அப்படியே  தாசீ, ..சின்னு காதுகொடுத்துக் கேட்கமுடியாத பலவார்த்தைகள் வெகு சரளமாக வந்து விழும்.. அவரது அறியாமையைக் கூட மன்னிக்க முடிந்தது.

பதின்ம வயதுகளில் ஒரு சமயம் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில், கண்காட்சி நடத்திக்கொண்டிருந்த சகோதரிகளின் பேச்சை கேட்கவிடாமல் இழுத்துச் சென்ற அம்மாவை நிறுத்தி, இன்னும் ஒரு சில நிமிடம் உன்னிப்பாகக் கேட்டிருந்திக்கலாம். வரவிருந்த சம்பவங்களைத் தடுக்க முடியாது போயிருப்பினும், துன்பத்தை தவிர்க்கும் ஞானமாவது கிடைத்திருக்கும். ஆக, பலர் பல பிறவிகளாய் அனுபவிக்கவேண்டிய/முடிக்கவேண்டிய (கர்மா/துன்பம்) அனைத்தையும்  இங்கே இந்தப் பிறவியிலேயே அனைவருடனும் முடித்தாயிற்று என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.

லௌகீக தந்தை கூட, முன்னர் சில சமயம் கேட்பார், உனக்குத்தான் இன்னும் நிறைய வயசிருக்கே அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கே.. இதெல்லாம் இப்ப தேவையா எண்டு.. அப்ப புரியல.. இப்ப புரியுது.. பலரோட நிறைய கர்மா செட்டில் பண்ண (அனுபவிக்க..!) வேண்டியிருந்திருக்குக்கு... :)

பிற்குறிப்பு: இன்றிலிருந்து (http://bkgowri.blogspot.com) என்ற தளத்தில் ஆத்மீகம் சார்ந்த விடையங்களை எழுத இருப்பதால், அனேகமாக இது தான் ரசிகையாய் எழுதும் கடைசிப் பதிவு என நினைக்கிறேன்.

நினைவு தெரிந்த நாள் முதல், உண்மையான ஆத்மீகத் தேடல் இருந்தும் சரியான புரிதல் இல்லாமல், வழியறியாமல் தடுமாறிய, தடம் மாறிய என்னைப்போல் ஒரு சிலருக்காவது உதவும் என்ற ஒரு சிறிய நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது.

If You have been searching for a love that never lets you down, a truth that is unshakeable and a beauty that goes beyond the superficial, You have indeed been searching for GOD - perhaps without even being aware of it.


ஓம் சாந்தி!







Share
Tweet
Pin
Share
No comments

"டேய்.. இங்க எழும்பி வாடா.."
"என்ன சார்..?"
சடார் படார் எண்டு கை, கால், தோள், தலை எண்டு கண்மண் தெரியாமல் அடிவிழுகிறது.
"இவருக்கு.. இப்ப.. ஏன்.. அடிவிழுது.. எண்டால்..." பூசையை நிப்பாட்டாது.. "நீ என்ன பெரிய ரௌடியாடா..? "
"இல்லை சார்.. நீங்க தான் அப்பிடி சொல்லுறியள்."
"என்னையே எதிர்த்து கதைக்கிறியா..?" குருவானவரின் பூசை இப்போது அதி தீவிரமடைகிறது..
"நீ இப்ப என்ன செய்யிறாய் எண்டால் உண்ட அப்பாவையும் அம்மாவையும் சைக்கிள் ரிக்சாவில பின்னால ஏத்திக்கொண்டு 'சுன்னாகத்திலையே நான் தான் பெரிய ரவுடி' எண்டு கத்திக்கொண்டு போ.. " அடி இன்னும் நிற்கவில்லை இருந்தும், அந்த இக்கட்டான சூழலிலும் மிகவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு
"நீங்க பெரிய ரவுடி எண்டு சொல்றத்துக்கு ஏன் சார் என்ர அம்மா அப்பாவை ஏத்திக்கொண்டு போகணும்?"
ஒரு கணம் திகைத்த குருவானவர், உடனே சுதாகரித்துக்கொண்டு நாலாவது சாம பூசையை தொடங்குமுன் நம்மாள் எஸ்கேப்.

இது நடந்தது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரி, ஆண்டு ஆறு வகுப்பறையில்..

ஆண்டு ஐந்து புலமைப் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்துவிட்டோம் / யாழ் இந்துக்கல்லூரியில் இடம் பிடித்துவிட்டோம் என்ற மமதையில் செல்பவர்களுக்கு / இந்தப் பிறவியிலேயே திருத்தமுடியாத தறுதலைகள் என்று பெரெடுத்தவர்களுக்கு அன்று சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான், அம்பி என்கிற அம்பிகைபாகன் சார். அவரது அடிகளும் பேச்சுக்களும் மிகவும் பிரசித்தமானவை. உதாரணத்துக்கு "செப்பமான அடியும் 0 மார்க்சும்", "ரிப்போர்ட் மற்றும் அந்த நீலப் படிவம்" என்று எதுகை மேனையுடன் பேசுவது மட்டுமல்லாது அதற்க்கேற்றவாறு தாளம் போடுவதுபோல் அவரது கையசைந்து முன்னால் நின்றிருப்பவரின் கை, கால், தோள், தலை எண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பட படவென்று நல்ல அடி விழும்.

இவ்வாறாக அன்று அவரிடம் படித்தவர்கள் / அடிவாங்கியவர்கள் ஒருசிலர் தொடங்கிய குழுதான் இந்த 'அம்பி குரூப்'. பார்க்கத்தான் இவர்கள் அம்பி மாதிரி ஆனா பண்ணிய அழிச்சாட்டியங்கள் எல்லாமே அந்நியன் தான். இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த குரூப் வளர்ந்தது போலவே அவர்களது குழப்படிகளும் கட்டுக்கடங்காமல் போனது. (தலை முடி தான் சரியா வளரலை)

'Ambi' Group

உதாரணத்துக்கு சில..

"டேய் அனந்தன். நான் இண்டைக்கு சொல்லுறன் நல்லா கேட்டுக் கொள். இந்த வகுப்பில இண்டைக்கு இருக்கிற எல்லாரும் கம்பஸ் என்ட்டர் பண்ணி போனாலும் நீ மட்டும் கடைசி வரைக்கும் என்ட்டர் பண்ணாமல் கட்டுறத்துக்கு பொம்பிளையும் கிடைக்காமல் தெருத்தெருவா அலைய போறாய். வேணுமெண்டா இருந்து பார்." அப்பிடின்னு சபித்த ஒரு ஆசிரியரை வழியில் மடக்கி "சார்.. இப்ப நான் கொழும்பு கம்பஸ்ல செகண்ட் இயர் படிக்கிறன்." என்று சொன்னதை கேட்டாரோ இல்லையோ பக்கத்தில் முகம் வெளிறியபடி நின்றிருந்த என்னை திரும்பி ஒருதரம் மேலும் கீழும் பார்த்தார்.

இன்னொரு ஆசிரியர் தினமும் வகுப்புக்கு வந்ததும் முதல் வேலையாய் "அனந்தன். எழும்பும். கொப்பியை எடும். இங்கை வாரும். வெளிய போம்." என்று சொல்லிவிட்டு தான் பாடத்தையே ஆரம்பிப்பார். நம்மாளும் லேசுப்பட்டவரில்லையே.. சில நாட்களிலேயே ஆசிரியர் வந்ததும் அவருக்கு வேலை வைக்காமல், தனக்குத் தானே "அனந்தன். எழும்பும். கொப்பியை எடும்.  வெளிய போம்." என்று சொல்லிவிட்டு மரியாதையாய் கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்.

இன்னொரு ஆசிரியர் சொன்னது, "அனந்தன் நீர் ஒருத்தன் பண்ணுற தலையிடியால நான் ஒவ்வொருநாளும் நாலு பனடோல் சாப்பிட வேண்டி இருக்கு".

இப்படியாக, இவர் ஒருவர் மேல் அத்தனை ஆசிரியரும் சொல்லிவைத்தால் போல் கோபப்பட அப்படி என்ன காரணம் இருக்க முடியும். 'ஒன்றா இரண்டா இவன் பண்ணியது..? சிவனின் திருவிளையாடல் போல சொல்ல தொடங்கினால் விடிய விடிய நாள் கணக்கில் சொல்லிக்கொண்டே இருக்கலாம்' என இவரது நெருங்கிய நண்பர்கள் / அம்பி குரூப் அங்கத்தவர்கள் சொல்லுவார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றில் இரண்டை மட்டும் இங்கே தருகிறேன்.

1. புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள ஒரு ஆசிரியரின் வகுப்பில் ஒருநாள் அவர் குடித்து முடித்த மிகுதிக் கட்டைகளை கண்டுபிடித்து அவருக்குத் தெரியாமல் பொறுக்கியெடுத்துக்கொண்டுவந்து அவரது மேசையிலேயே அடுக்கிவைத்துவிட்டு, அவர் வந்ததும் "பாருங்க சார் பாருங்க.. யாரோ ஒரு பொறுக்கிப்பயல்.. எங்கட ஸ்கூல் வளாகத்துக்குள்ள சிகரட் பிடிக்கிறான். இவங்களையெல்லாம் ஸ்கூல் உள்ளயே விடக்கூடாது." அப்பிட்டின்னு ரொம்ப அப்பாவியாய் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணியது.

2. பிரபல பெண்கள் கல்லூரியின் கண்காட்சிக்கு திருவாளர் அனந்தன் வகுப்புத் தலைவனாக இருந்த உயர்தர வகுப்பை மட்டும் அனுமதிக்காததால் எல்லோரையும் கூட்டிக்கொண்டு கள்ளமாய் சாதாரண உடையில் அந்த மகளிர் கல்லூரியினுள் மதிலேறிக் குதித்து நுழைந்தது மட்டுமல்லாது   கூடப்படிக்கும் மாணவியின் தலை முடி என நினைத்து அந்தப் பாடசாலை அதிபரின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுத்தது. தவறுணர்ந்து கோபத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்த அவரிடம் ஒருவாறு மன்னிப்புக் கேட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் கனல் கக்கும் விழிகளுடன் அருகில் நின்றிருந்தது இவர்களது கல்லூரி அதிபர்.

நிற்க, இந்த 'அம்பி குரூப்' அங்கத்தவர்கள் அனைவரும் இன்று தத்தமது துறையில் பேர் சொல்லும் வகையில் தான் இருக்கிறார்கள். இலங்கையில் பிரபல சங்கீத வித்துவான் ஆரூரன், MIT இல் ஒரு பிரபல புள்ளியாக வளர்ந்திருக்கும் பிரசன்னா, வைத்திய நிபுணர் பிரம்மா, சிங்கப்பூரில் நெட்வொர்க் specialist அனந்தன், கட்டடத் துறையில் நைனா எனப்படும் ஜெயந்தன், வடிவமைப்பு துறையில் ஐங்கரன், கணணி துறையில் மயூரன் மற்றும் உலகளவில் இன்னும் பலர்..

எட்டு வருடங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் தம்பதி சமேதரராக திருவாளர் அனந்தன் அமர்ந்திருக்கிறார். அட்சதை போட ஒவ்வொருவராக வருகின்றனர். எனக்குத் தெரியாதவர்களை அனந்தனும், அனந்தனுக்குத் தெரியாதவர்களை நானுமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  முகத்தில் சிறு புன்முறுவலுடன் அடுத்து வருபவர் எனது நெருங்கிய நண்பியின் தந்தை. நான் வாய் திறக்குமுன், சடாரென்று "சார் என்னை தெரியுதா..?" என்ற அனந்தனை நான் கிலியுடன் பார்க்க, வந்தவரோ அதே புன்முறுவல் மாறாத முகத்துடன் தெரியும் என்பதுபோல் தலையை ஆட்டி பின் எம்மை ஆசீர்வதித்துச் சென்றார். அவர் வேறுயாருமல்ல.. இவர்களது குரூப் உருவாக காரணகர்த்தாவான சட்சாத் அதே அம்பிகைபாகன் சார் தான்.
 
அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவர்கள் இப்படித்தான் என்று. ஏனெனில் அவர்களும் ஒரு காலத்தில் இவர்களைப் போல் (?) மாணவர்களாக இருந்தவர்கள் தானே..

முன்னைய பதிவுகள்..
யோ. அனந்தன்: பாகம் ஒன்று
யோ. அனந்தன்: பாகம் இரண்டு

பி.கு: இவை அனைத்தும் கல்லூரி குறும்புகள் மட்டுமே. பிரத்தியேக வகுப்புக்களில் நடைபெற்றவை தனி. அவற்றில் பல (பெண்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்) என்னிடமிருந்து மறைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்.





Share
Tweet
Pin
Share
No comments

கடந்த காலங்களின் நினைவுகளை 
அழித்துவிட்டதாய்
அவை தந்த ரணங்களை
ஆற்றிவிட்டதாய் 
ஆறுதல்கொள்ளும் ஒவ்வொருமுறையும் 

ஏதோவோர் புகைப்படம்.. 
நினைவுகளை கிளறி விடலாம் 
ரணங்களை மீண்டும் கிண்டிப் பார்க்கலாம் 
ஏன் எதற்கு என்று அறியாத வலிகள் 
ஏதோவோர் குற்றவுணர்வு 

பாடசாலை விட்டுவரும் நேரங்களில்
மிதிவண்டியில் லாவகமாக
காவல்துறைக்குப் போக்குக்காட்டி 
அருகருகே வரும் சில நிமிடங்களில் 
பலவற்றை பேசியிருக்கிறோம் 
எதுவும் நினைவிலில்லை 
ஒன்றைத் தவிர..

போவது பற்றி விவாதிக்கையில் 
உன் விருப்பம் உரைக்காமலே 
நீ போய்விட்டாய்  
நினைத்ததை முடிக்காமல் 
நான் மட்டும்
உயிருடன் இருக்கிறேன்
நம் புகைப்படத்தைப் பார்த்தபடி 
அழக்கூடத் தெம்பில்லாமல்..






Share
Tweet
Pin
Share
No comments
எரியுற நெருப்பில எண்ணைய வாக்கிராப்போல இது தேவையா என்று ஒருக்கா தோணிச்சு. ஆனால் தற்போது இலங்கையின் பலபாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மிதவாத சிங்கள பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து ஏன் இன்னும் பலர் மௌனமாகவோ அல்லது அடக்கி வாசிக்கிறார்கள் என்றோ பலருக்கு தோன்றாமலில்லை. இன்னும் சிலரோ அதற்க்கும் மேலே போய், புட்டும் தேங்காய்ப்பூவும் போல இருக்கும் எமதருமை சகோதரர்களுக்கு  இது நல்லா வேணும் என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். எனது இந்தப் பதிவு கூட மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும், ஆனால் ஏதோ என்னால் முடிந்தவரை இரு தரப்பு மனோபாவங்களையும் எனக்குத் தெரிந்தளவில் சிறிதே அலச முயன்றிருக்கிறேன். கரணம் தப்பினால் மரணம் தான். சமீபத்தில் கூட ஒரு பிரபல பதிவர் இவ்வாறு முயன்று பல அவதூறுகளை வாங்கிக் கட்டியிருந்தார். அவரது நிறுவனமும் சம்பந்தமேயில்லாம தூற்றப்பட்டது. இருந்தும் விதி யாரை விட்டது..? பார்க்கலாம்.

மே 2009 நடுப்பகுதி. இறுதிக்கட்டப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். இணையப் போராளிகள் தீவிரமாக முகப்புத்தகத்தில் போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் நானும் என்பங்குக்கு *NESOR அறிக்கையை எனது சுவரில் பகிர அங்கு நடந்த ரத்தக் களரி கீழே தரப்பட்டிருக்கிறது. தற்போது தான் கவனித்தேன் அந்த சகா தனது பின்னூட்டங்களை பிழை உணர்ந்தோ என்னமோ தற்போது அகற்றியிருக்கிறார் / என்னை பிளாக் பண்ணியிருக்கிறார். ஆனாலும் எனது ஜிமெயில் இல் தேடியபோது கிடைத்து. ஆனால் இன்னொரு ரத்தக் களரியை பார்க்க விரும்பாததால் இங்கே அவரது பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

(* NESOR அறிக்கை என்பது 2009 வரையான தமிழர் மீதான வன்முறை / படுகொலைகள் தொர்டர்பான விபரமும் அவை எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான ஓர் (முழுமையற்ற) ஆவணப்படுத்தல் அறிக்கை. )

H+++m U+++f commented on your status:

"NESHOR (Nice catchy name) Another Bogus Front Org like the TRO, BTF, BTA, WTM, THR, White Pigeon etc. etc. All for Collecting money for Arms & Comfy lives for the Megalomaniac Murderer Prabakaran & Selfish Tamil Diaspora (Economic Refugees - Just like U), thriving on the suffering of the Innocent Tamil Civilians held as human shields by the LTTE TERRORIST!

Just Look at it's F...ing logo, it has an Utopian PEelam Map... doesn't that tell a lot about the authenticity... impartiality... of it's reports ....LOL! Created to Siphon money, procure weapons & spread False Propaganda!"

Kajentheran Balasundaram Hello h+++m, waht happen in vavuniya camp?Did u see chanel4 vedio?If u tell they are pro LTTE media u are fool.wait and see man
12 May 2009 at 19:19 · Like

H+++m U+++f commented on your status:
"Dear Kajan..... I don't know about you, but I ain't stupid to believe orchestrated False Propaganda and LTTE Paid "Journalist" Maggots!

Any one with a Brain knows how much the LTTE spends on their carefully planed False Propaganda Dissemination Campaign and How the Media Circus jump into the Feeding Frenzy! There is ample proof of how the LTTE sympathisers have infiltrated the Media, NGOs & "Humanitarian" Business Conglomerates!"


இடையில் இன்னும் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் வந்து இரத்தக் களரி அதிகமாவதை உணர்ந்து குறுக்கிட்ட நான் அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.


Gowri Ananthan Hi H+++m, 
I'm not against to anyone.. even to Sinhalese.. I know Muslims also have the same pain as Tamils.. its just a way of expressing our pain.

I totally agree with what Theepan said, "From my recollection of incidents that took place in my lifetime and stories that happened as we grew up, the document seems to have recorded the incidents.." if you just go through the article, then you will definitely realize it is prepared not with the intention of harming others, but to document what has happened to us. 

we do not have rights to express our pain, even if we try, then immediately labeled as LTTE. so please keep LTTE aside, and please think of our people who are suffering just for no reason. we need your help.. they need your help.. its time for everyone to think about humanitarian.. 

BTW up to my knowledge, Singapore does not give any refugee Visa until now.. 
13 May 2009 at 10:17 · Like


தவறு செய்தது ஒரு சிலர் தானே அதற்கு பொதுப்படையாக முழு சமூகத்தையும் குறை சொல்ல வேண்டுமா என்று பலர் கேட்கலாம். அதே போல் தான் சிங்களவர்களும் சொல்கிறார்கள். ஒரு சில சிங்களவர்கள் தானே தாக்குகிறார்கள் என்று. அதனால் தாக்குதல் என்பதுவும் இழப்பு என்பதுவும் இல்லாமலாகிவிடுமா? அவர்கள் ஆயுதம் கொண்டு தாக்குகின்றனர் எனில் மீதிப்பேர் மௌனமாக இருந்து அதை ஆமோதிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே எதிர்க்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்களும் மறுநாளே காணாமல் போகின்றனர் அல்லது காணாமல் போகச் செய்யப்படுகின்றனர். 

சரி. இதை இப்ப இங்க சொல்லவேண்டிய அவசியம் என்ன? பழிக்குப் பழியா?
ஏற்கனவே சீழ் வடிஞ்சிட்டிருக்கிற புண்ணில ஏன் மேலும் மேலும் கிண்ட வேண்டும்?

முதலாவதாக இதை இங்க சொல்ல வேண்டிய அவசியம் வந்ததன் காரணம், அன்று தமிழர்கள் அடிவாங்கியபோது, அது சரியே என்று அரசாங்கத்தின் பக்கம் நின்று (பாராளுமன்றத்தில் சுமந்திரன் பேசும் ஒவ்வொருமுறையும் சம்பந்தமேயில்லாமல் அடிக்கடி குறுக்கிட்டு தனது விசுவாசத்தைக் காட்டும் ஒரு அமைச்சர் போல) அவர்கள் கேட்காமலேயே வாதாடியவர்கள் தான் இன்று தமக்கு ஒன்றென்றவுடன் எதுவுமே செய்யமுடியாத சூழலில் இருக்கிறார்கள். அன்று எமக்காகக் குரல் கொடுங்கள் என்று நாம் ஒவ்வொருவரும், ஒவ்வரிடமும் கெஞ்சி அழுததுபோல் எனக்குத்தெரிந்து எவரும் இதுவரை யாரிடமும் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் அன்று தொண்ணூறுகளில் கூட.. என்னைப் பொருத்தவரை அவர்கள் நம்புவது முதலாவது கடவுளை.. அடுத்தது தன்னை.. தம்மை.. 

இது இப்படியிருக்க இன்றுவரை யாராவது வந்து எமக்குத் தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று வாசலையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் போய் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம், கொதித்தெழுகிறோம் அல்லது யார் முதலில் அரவணைப்பது என்று நமக்குள் அடிபட்டுக் கொள்கிறோம். வேடிக்கையாகவில்லை..? (ஆணியே புடுங்க வேண்டாம்)

அப்போ கவலை தெரிவிப்பது மற்றும் அதனைப் பகிர்வது தவறாகுமா? இல்லை. ஆனால் அப்படிச் செய்துவிட்டதால் நீங்கள் மகாத்துமா ஆகிவிட்டதாய் நினைத்து மற்றவர்களை வசை பாடாதீர்கள். அவர்கள் ஒட்டுமொத்த தலைமையும் மௌனமாக இருந்து ஆமோதிக்கும் போது, ஜெனீவா தீர்மானத்தை வைத்து பகடையாடும்போது நீங்கள் யாரை வைத்து யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? முதலில் சரியான தலைமைத்துவத்தை உருவாக்கட்டும். அதற்க்கு ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள். அவர்களை கேள்வி கேளுங்கள். சரியோ பிழையோ ஒரு ஜனநாயக(?) நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் நிலையே மக்களினதும் நிலையாகும்.

சீழ் கட்டிய புண்ணுக்கு வைத்தியம் பார்ப்பதக்கு அதை கிண்டித்தான் ஆகவேண்டும். 



Share
Tweet
Pin
Share
No comments

"உங்கடை மகள் என்ன.. யாரோ ஒரு ....யப் பெடியனைக் காதலிக்குதாமே?" கேட்டதிலிருந்து அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அக்காவின் மகளின் காதல் (கலப்புத்) திருமணத்துக்குப் போகாதிருந்த காரணம் இன்று கண்முன்பு பூதாகரமாகி நிற்கிறது. இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை.

"என்னப்பா இது சரிவருமே? உன்னட்டை ஏதும் இதப் பற்றி சொல்லியிருக்கிறாளே?"
"எனக்கு ஒண்டும் தெரியாது. ஏதோ அவளின்டை பழைய சிநேகிதியிண்டை ஒன்றுவிட்ட அண்ணனோ மச்சான்காரனோ எண்டு சொன்னவள். வேறையொண்டும் சொல்லேலை. நீங்களே அவளோடை கதையுங்கோ.."
இரவிரவா செல்லடிச்சா கூட எழும்பாதவளுக்கு யாரும் ரகசியம் கதைத்தால் மட்டும் தூக்கம் கலைந்துவிடும். அப்படி எழுந்தவள் கதை தன்னைப் பற்றித் தான் என்றுணர்ந்ததும் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கினாள்.

"யார் அந்த ...... ஊர்ப் பெட்டை தானே? அவை ...யர் எண்டு நீ தானே சொன்னது.."
"எண்டுதான் நினைக்கிறன். நீங்களே அவளோடை கதையுங்கோ.."
அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இத்தனை வருடங்களில் எத்தனை காதல்களை / காதல் என நம்பப் பட்டவைகளை ஓரிரு வார்த்தைகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் முன்பு இன்று சாதீயம் வகையாய் மாட்டிக்கொண்டுவிட்டது. இனி அவள் என்ன சொன்னாலும் அது வெறும் செவிடன் காதிலூதிய சங்கு தான். நெஞ்சை எதுவோ பலமாகப் பிடித்து அழுத்துவது போலிருந்தது. மூச்சு விடமுடியவில்லை. கண்களை இருட்டிக் கொண்டு வருகையில், அவளின் தோள்கள் பலமாக உலுப்பப் பட்டன.

"உன்னோடை கொஞ்சம் கதைக்க வேணும்.. எழும்பு.." இரவுமுழுக்க தூக்கமில்லாமலோ அல்லது கோபத்தினாலோ சிவந்து போயிருந்த அவரது விழிகள் அவளைப் பயமுறுத்தின. தொண்டைவழி சிரமப்பட்டு விழுங்கிய நீர் கண்களினோரம் கசிய எத்தனிக்கையில் அதனை மறைக்க மறுபக்கம் திரும்பி படுத்தவாறே எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயல்பான குரலில்.. "ம்ம்.. சொல்லுங்கோ.."

"ஆஸ்திரேலியா பிஎச்டி மாப்பிளை ஒண்டு வரன் கேட்டு வந்திருக்கு. என்ன சொல்ல.." அவளுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். கண்ணீர் தலையணையை நனைத்தது.
"உனக்கு சம்மதம் தானே..? இல்லாட்டி யாரையாச்சும் நினைச்சு வச்சிருக்கிறியே?"
அவளிடமிருந்து பதிலேதுமில்லை. அவள் என்ன சொன்னாலுமே இது காதலேயில்லை என்று நிரூபிக்கும் வகையில் அவர் ஒரு பதில் வைத்திருப்பார்.

அதுவும் அவர் சொல்லும் விதம் இருக்கிறதே.. அவளை என்றைக்குமே குற்றம் சொல்ல மாட்டார். அவள் ஒரு தேவதை போலும் அவளை அடைய அவர்களுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லை என்பது போலும் தான் பேச்சைத் தொடங்குவார். அவளுக்குக் கோபம் கோபமாக வரும். எந்தப் பெண்ணுக்கும் அவள் காதலிப்பவன் தான் உலகமகா நாயகன். அப்படியிருக்க அவரது முதலாவது அம்பே அதனைத் தகப்பதர்க்கான அத்தனை காரணங்களையும் கொண்டிருக்கும்.

அடுத்து திடீரென்று அவர்களை மிகவும் உயர்த்திப் பேசுவார். பின்பு இருவரையும் சமதளத்தில் வைத்து மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்தவர் போல் "அவனுக்கு நீ தேவையே ஒழிய, நீ தான் அவனது உலகமென்றில்லை." என்பார். அவர் சொல்வதும் ஒருவகையில் உண்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களிடம் அவளைக் கவர்ந்ததே அவர்களது ஆளுமைதானே..? அந்த ஆளுமை நிச்சயமாக ஒருநாளும் எதற்காகவும் தன்னை அழித்துக்கொள்ளாது. அது அவளது காதலால் அழியுமென்றால் அவள் காதலித்ததும் அழிகிறதே.. அப்போது அவள் காதலும் அழிந்து விடுமா??

இப்போது அவள் முழுவதுமாய் குழம்பிப் போயிருப்பாள். அவரது குற்றச் சாட்டுகளுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே "நாங்கள் உயிர்வாழ்வதே உனக்காகத்தானே" என்று பெற்றோரின் பாசம் என்ற கடைசி அம்பை எடுத்து விடுவார். அவள் காதலித்த யாரும் அவ்வாறு சொன்னதில்லை. அப்படி சொன்னவர்கள் யாரையும் அவள் காதலித்ததுமில்லை. அத்தகைய காதலில் அவளுக்கு நம்பிக்கையிருந்ததுமில்லை. ஆனால் ஒவ்வோர் காதல் முடிவிலும் தற்கொலை வரை போயிருக்கிறாள். அது அவளின் மன அழுத்தத்தின் உச்சக்கட்டம்.

"விரும்புறது தப்பெண்டு சொல்லேலை. ஆனா எங்களுக்கு சரிப்பட்டு வருமா எண்டும் பாக்கோணும் பிள்ளை.." அவரது அழுத்தமான குரல் அவளை மீண்டும்  இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. அவர் எதிர்பார்க்கும் தகுதி எதுவெண்டு இதுநாள் வரையில் அவளுக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. முன்பு வயதைக் காரணம் காட்டியிருந்தார்.  இப்போது சாதி? 

"சாதியைப் பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் நான் ஏன் சொல்லிறன் எண்டால்.. ஒவ்வொரு சாதிக்கும் எண்டு சிலசில பண்புகள் இருக்கு. அவை மற்ற சாதிகளிண்டை பண்புகள் பழக்க வழக்கங்களோட ஒத்துப் போகாது. அதால கடைசி வரைக்கும் சந்தோசமில்லாமல் தான் இருக்கவேண்டி வரும்." அவளுக்குத் தலை சுற்றியது. ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நீங்க இப்ப என்ன சொல்ல வாறீங்கள்..?"

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் "நான் வேணுமெண்டால் அவை எப்பிடி எண்டு அவையிண்ட வீட்டை போய் கதைச்சுப் பாக்கிறன்.. " அவரது மாமூலான பதில் தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இப்போது அவள் சம்மதித்துவிட்டிருந்தாள். அது அவளின் மன உளைச்சலின் உச்சமா அல்லது அப்பிடி என்னதான் செய்துவிடப் போகிறார் என்ற ஒரு அசட்டுத் தைரியமா என்று தெரியாது... ஆனால் அதிசயமாக அந்த சம்பந்தம் கூடி வந்தது. 

கல்யாணமாகி சிறிது காலத்திலேயே அந்தக் காதலும் முடிவுக்கு வந்தது.. ஒவ்வொரு காதலின் முடிவிலும் அவள் தற்கொலை வரை போயிருக்கிறாள். அது அவளது மன அழுத்தத்தின் உச்சக்கட்டம். 




Share
Tweet
Pin
Share
No comments

எனது தமிழ் இனி.. பதிவுக்கு பலர் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தாலும் சில  காரசாரமான பதில்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. பொதுவாகவே தனிப்பட்ட பாராட்டுதல்களை இங்கே தனித்தனியே போட்டு நன்றி சொல்வது எனது வழக்கமல்ல. அதனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவாகவே நன்றியைக் கூறிக்கொண்டு, மற்றைய கருத்துக்களுக்குச் செல்வோம்.

முதலாவது கருத்து :

கட்டுரையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் ஜெயமோகன் மீது எதிர்வினைகள். ஜெயமோகன் தமிழை அழிக்கும் நோக்குடனோ சிதைக்கும் நோக்குடனோ எதையும் கூறவில்லை. அவர் சொன்னது இதுதான் “ஒரே எழுத்துருவாக ஆக்கினால் அடுத்த தலைமுறை அதை எளிதில் வாசிக்கும்” என்று மட்டும்தான். ஆங்கில எழுத்துருவில் தமிழை வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்றோ, இப்போதே நூல்களை அப்படி வெளியிடமுடியும் என்றோ அவர் சொல்லவில்லை.
ஜெயமோகன் அவருக்கு கிடைத்த எதிர்வினைக்கு சொன்ன விளக்கம் ஒரு பகுதி
//“என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தமிழ்ச்செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். குமுதம் என்ற இதழை ஒரு கல்லூரி வகுப்பறையில் ஒருவர் கூட கேள்விப்பட்டதேயில்லை என்று அறிந்த அதிர்ச்சியை நான் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்களனைவருமே தமிழ்பேசக்கூடியவர்கள்
இதுதான் நம்மைச்சூழ்ந்துள்ள உண்மையான யதார்த்தம். இதை காணாமல் தவிர்ப்பதில் பொருளில்லை. இது ஒரு தேசியப்பொதுப்போக்கு. இந்தியா முழுக்க இதேநிலைதான் உள்ளது. இதற்கு எதிராகச் சட்டம்போடுவதோ பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக ஆனா ஆவன்னா கற்றுத்தருவதோ பயனற்றது. அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பத்துவருடம்முன்னரே செயல்படுத்திப்பார்த்து தோற்றிருப்பார்கள். அதுவே இன்று தமிழகப் பெருநகர்களில் நடக்கிறது. நாளை தமிழகம் முழுக்க இதுவே நிலைமையாக இருக்கும்
ஐம்பதாண்டுக்காலம் கழித்து ஒருவேளை தமிழ் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே வாசித்து-எழுதும் ஒரு மொழியாக நீடிக்கும். பேச்சு மொழி என்றுமிருக்கும். அதில் இலக்கியங்களை வாசிக்க ஆளிருக்கமாட்டார்ள். இன்று பல செவ்வியல் மொழிகளுக்கு இருக்கக்கூடியதுபோன்ற ஆர்வம்கொண்ட மிகச்சிறிய வட்டத்தினர் மட்டுமே தமிழை தீவிரமாக வாசிப்பார்கள். இதுதான் நான் உண்மையிலேயே வருமென அஞ்சக்கூடிய சூழல்.
இதற்கு எதிராகச் செய்யக்கூடுவது என்று தோன்றக்கூடிய ஒரு வழி நான் சொல்வது.சாத்தியமான பல வழிகளில் ஒன்று. நாளைய தொழில்நுட்பம் எதைச் சாதிக்குமென எனக்குத் தெரியாது. ஆனால் உலகமெங்கும் பலமொழிகளுக்கு அடிப்படையான பொது எழுத்துரு ஆங்கிலமாக மாற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். அந்த எழுத்துருவை வேறெந்த எழுத்துருவிலும் மாற்றிவாசிக்க தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கும். தமிழை பிராமியிலோ வட்டெழுத்திலோகூட வாசிக்கமுடியும். ஆகவே எப்படியும் கற்றுக்கொண்டே ஆகபோகிற ஆங்கில எழுத்துருக்கள் வழியாகவே தமிழை வாசிக்க- எழுதக் கற்றுக்கொள்வது சுலபமான வழியாக இருக்கும்.
ஒருவேளை இது வெறும் ஊகமாக இருக்கலாம். மிகையான அச்சமாக இருக்கலாம். இந்த மாற்று வழி நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது என்பது மட்டுமே என் கேள்வி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அத்திசைநோக்கிச் செல்கிறோம்
வழக்கம்போல தொண்ணூறுசதவீதம்பேருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. வரவிருக்கும் உடனடி எதிர்வினை என்பது ‘அப்டீன்னா நீ எதுக்கு தமிழிலே எழுதறே? அப்டியே இங்கிலீஷ் எழுத்துக்களிலே எழுதவேண்டியதுதானே? நீ எழுத ஆரம்பிச்சுப்பாரு…’.
நண்பர்களே, நான் இப்போது ஆங்கில எழுத்துருக்களில் எழுதுவதைப்பற்றிச் சொல்லவில்லை. இப்போதுள்ள வாசகர்கள் ஆங்கில எழுத்துரு வழியாக எளிதாக வாசிப்பார்கள் என்றும் சொல்லவில்ல ... ஆங்கில எழுத்துருக்கள் வழியாக தமிழ் இளமையிலேயே பள்ளிகளில் பயிலப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் தமிழ் வாசிக்க எளிதாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.”// 
ஜெயமோகன் வணிக இலக்கியம் அற்ற முழுமையான இலக்கிய எழுத்தாளர். அவருடைய தீவிர வாசகனான எனக்கு அவரின் எழுத்தின் யாதார்தமும் உண்மையும் புறிகின்றது. அவர் எந்த தாயையும் கொல்லவில்லை, வணிகஇலக்கியத்தை நோக்கி தமிழ் வாசகர்கள் சென்று கொன்டிருக்க அதில் இருந்து மாறுபட்டு நல்ல தமிழ் இலக்கிய எழுத்துகளை படைத்தது ஆரோக்கியமான வாசர்களை உருவாக்கி தமில் தாயை வளர்த்தவர் ஜெயமோகன்.

----

இதற்க்கு பதில் சொல்வதற்கு முன்பு இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு சிறிய சம்பவத்தினை நினைவுகூருவது நலம் என்று கருதுகிறேன்.

இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்லும் ஒரு குழந்தை நாலரை வயதில் திடீரென்று போக மறுத்து அடம் பிடிக்கின்றது. காரணம் கேட்டால்,
"டீச்சர் பேசினவா.."
"ஏன்? நீங்கள் ஏதும் குழப்படி செய்தனீங்களே?"
"இல்லை"
"அப்ப எதுக்கு பேசுறா?"
"எனக்கு சைனீஸ் எழுத வருதில்லை.."

ஒருகணம் திடுக்கிட்டேன். நாலு வயது குழந்தையிலிருந்தே சைனீஸ் சரியாக எழுதப் பழக்க அவர்கள் படும்பாடு ஆச்சரியமாக இருந்தது. நாம் மட்டும் தமிழை சொல்லிக்கொடுக்க எமது குழந்தைகள் வளரட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறோம். ஆனால் எமது ஊரில் அப்படியல்ல. அனந்தனின் அக்காவின் மகள் நாலுவயதிலேயே திருக்குறள் முதலாம் அதிகாரம் மனப் பாடம். தமிழ் எழுத்துகளும் அத்துப்படி.

ஒரு குழந்தை ஒரு மொழியை மட்டும் தான் சரியாகப் புரிந்து படிக்க முடியும் என்பது மிகவும் தவறான கருத்து. அதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்று (நன்றி: திலகன்) இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது எமது தவறு. எமக்கு நேரமில்லை என்று சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில் நேற்று ஜனனி பாடசாலையில் தானே வரைந்து எழுதி கொண்டு வந்த படம் தான் மேலுள்ளது. இங்கு எமது வீட்டில் யாருக்கும் சைனீஸ்  தெரியாது. அதற்காக ஜனனி இருதினங்களுக்கு முன்பு பாடசாலை போக மறுத்தபோது நீ ஆங்கிலம் மட்டும் நன்றாகப் படித்தால் போதும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் சைனீசும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவள் மனதில் விதைத்தேன். அது மட்டும் தான் நான் செய்தது.

அடுத்ததாக, மொழி என்பது வெறுமனே பேச்சுமொழி மட்டுமல்ல. வேறு சில மொழிகள் அப்படியிருக்கலாம். ஆனால் தமிழின் உயிர்நாதமே அதன் எழுத்துக்கள் தான். அதனையே கொன்றுவிட்டு தமிழை வளர்க்கிறோம் என்று சொல்வது முட்டாள்தனமில்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்? அதைவிடுத்து தமிழை ஆரம்ப கல்வியில் கட்டாய பாடமாக்கலாமே?சொல்லிக்கொடுப்பதற்கு எத்தனையோ ஆசிரியர்கள் தாகத்துடன் காத்திருக்கிறார்கள்.




  
இரண்டாவது கருத்து :

இதுவும் எனது முதல் பதிவுக்கு வந்த கருத்துத் தான். இதற்கும் எனது பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் முதலாவது கருத்துக்கு இதனை வைத்து பதில் சொல்லலாம் என்பதால் இங்கு போடுகிறேன். இதில் இரண்டாவது கருத்தைப் பார்த்தீர்களானால் பொய்மைகளை எழுத்திலா / ஈழத்திலா என்று தெரியவில்லை. அடுத்ததென்ன ஆன்மீகமா? அப்படியாயின் ஆன்மீகத்திற்கும் எனது முதல் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?



இப்படி தமிழை ஆங்கிலத்தில் எழுதப் போனால் பல மயக்கங்கள் உருவாகும். அவற்றைத் தவிர்க்க ஆங்கிலத்தை தமிழுக்கு ஏற்றால் போல் குற்றுகள் வைத்தோ கோடுகள் வைத்தோ சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும். குறைந்த பட்சம் இன்னென எழுத்துகளுக்கு இன்னென ஆங்கில எழுத்துகளின் கூட்டமைப்பை உபயோகிக்க வேண்டும் என்றாவது மனப்பாடம் செய்யவேண்டும். இத்தனை சிரமப்பட்டு வேற்று மொழியொன்றை தமிழுக்கு ஏற்றவாறு செதுக்குவதற்கு பேசாமல் தமிழ் எழுத்துருக்களைப் படித்துவிட்டுப் போய்விடலாமே? 

கடைசியாக உங்களுக்காக ஒரு விஷப் பரீட்சையில் இறங்குகிறேன். கீழிருப்பதை வாசித்துத்துப் பொருள்கொண்டு பாருங்கள் அப்போது புரியும். (அனந்தன் நேற்றைய தினம் வாசிக்கத் தொடங்கிய  ஒரு தொடரிலிருந்து எடுத்தது. பதிவை எழுதிவிட்டு அனந்தனை தொடர்புகொண்டு கேட்டேன். "பதிவு நன்று. ஆனால் அதென்ன கடைசியில் என்னமோ ஆங்கிலத்தில் கிறுக்கியிருக்கு?" என்றார்.)  
kaasiyil varanaa nathiyum assi nathiyum kalakkum iru thuraikalukku naduve amainthirukkum padiththuraiyil anthiyil ezhuthirikal konda vilakkin mun amarnthu sootharkal kinaiyum yaazhum meeddip paadinar. ethire kaasimannan peemathevanin moondru ilavarasikalum amarnthu athaik keddukkondirunthanar. sennira aadaiyum sevvariyodiya periya vizhikalum kondaval ambai. neelanira aadaiyanintha minnum kariyaniraththil irunthaval ambikai. vennira aadaiyanintha melliya udal kondaval ambaalikai. mukkunangalum kaasimannanidam moondru makalkalaakap piranthirukkindrana endranar nimiththikarkal.

ஜெயமோகனை நான் எதிர்க்கவில்லை. அவரது முட்டாள்தனமான சில கருத்துகளை தான். வேறாராவது இதனைச் சொல்லியிருந்தால் வெறுமனே கடந்து போயிருக்கலாம். அதில் உண்மை கூட இருக்கலாம். ஆனால் தமிழை வளர்க்க நினைக்கும் ஒருவர் இப்படியான கருத்துகளை உதிர்ப்பது வரவேற்கத் தக்கதல்ல. 





Share
Tweet
Pin
Share
No comments


சில தினங்களுக்கு முன்னர் நண்பியொருவர் ஜனனி தமிழில் சரளமாக (நம்மளை மாதிரி தத்தக்க பித்தக்க தான்..) உரையாடுவதைப் பார்த்துவிட்டு அவர்களின் மகள் தமிழில் கதைக்கிறாளில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். அவர்களுக்கு நாம் தமிழில் கதைத்தால் விளங்கும். ஆனால் பதில் ஆங்கிலத்தில் தான் வரும். இன்றைய தமிழ் குழந்தைகளின் நிலை இதுதான்.


"இதற்க்கெல்லாம் போய் எதற்க்காய்க் கவலைப்பட வேண்டும்? வளர வளர சரியாயிடும்" என்று பாட்டி சொன்னார். "இல்லை. இப்ப இருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறகு எப்பவுமே  தமிழில் கதைக்க முயற்ச்சிக்க மாட்டாள்" என்றார் தந்தை.


இவையெல்லாமே ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் நாம் எப்படி தமிழில் கதைக்கத் தொடங்கினோம்? எமது பெற்றோர் எந்த மொழியில் நம்முடன் கதைத்தார்களோ அதையே நாமும் பழகிக்கொண்டோம். யாரும் இதுதான் உனது தாய் மொழி, அதில் தான் பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்று எமக்கு மூன்று நான்கு வயதில் சொல்லித்தந்திருப்பார்களா என்றால் இல்லை. அப்போது ஆங்கிலத்தில் அடிப்படைக்கல்வி இல்லை என்பது ஒரு வாதம். ஆங்கிலத்தில் அடிப்படைக்கல்வி இல்லை, ஆனால் ஒவ்வோர் வீட்டிலும் தமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க அப்பாமார் பட்டபாடுகள் அதைவிட அதிகம். சில (உயர் அந்தஸ்து?) பாடசாலைகளில் தமிழில் கதைத்தால் தண்டனை என்று கூட இருந்தது. இன்று இவையெல்லாம் இல்லை. மாறாக பிள்ளைகளை தமிழ் கதைக்க வைக்க பாடுபடவேண்டி இருக்கிறது. இந்த நிலையில் ஜனனியால் / வெளிநாட்டில் இருக்கும் ஒரு குழந்தையால் எப்படி தமிழில் கதைக்க வைக்க முடியும்?

1. தாய் மொழி : முதலாவதாக, நமது தாய்மொழி என்ற எனது புரிதல் என்பது பல இலக்கிய இலக்கண வரைமுறைகளைத் தாண்டி, அது எனது தாயின் மொழி, அவரது தாயின் மொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் கதைத்துவந்த மொழி. அவர்களுடன் நானும் அந்த மொழியிலேயே கதைக்கிறேன் என்பது பெருமை தருகிறது. அதேபோல் ஜனனியை உணரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். தாய் என்றாலே தமிழ் வரவேண்டும். இதுதான் முதல் படி.

2. உரையாடல் : எனக்கும் தமிழ் தெரியும். உனக்கும் தமிழ் தெரியும். பிறகெதுக்கு வேற்று மொழியை கடன் வாங்கவேண்டும்? சில நாடுகளில் வெளியில் போகும் போது தமிழில் கதைக்க வெட்க்கப் படுவார்கள். ஆனால் சிங்கப்பூரில் தமிழ் உரையாடல்களை அதிக இடங்களில் காணலாம். இருந்தும் நம்மவர் சிலர் தமிழில் கதைத்தால் நாகரீகமில்லை / மற்றவர்களின் கவனம் தேவையில்லாமல் தம்பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்கின்றனர். ஆனால் நாம் வெளியில் போகும் போதும் தமிழில் தான் ஜனனியுடன் கதைப்பது. புரியாதவர்கள் விசித்திரமாகப் பார்ப்பார்கள். அதனால் என்ன அவர்கள் சைனீஸ், மலாயில் கதைப்பது நமக்குப் புரிகிறதா என்ன? ஆனால் இதுவரை நாம் தமிழில் கதைப்பதைப் பார்த்துவிட்டு யாரும் முறைத்ததோ (இலங்கையில் கூட முன்புதான் முறைப்பார்கள். இப்போது புன்னகைக்கிறார்கள் / புன்னகைக்க முயற்ச்சிக்கிறார்கள்.) அல்லது இழிவாக பார்த்ததோ இல்லை. மாறாக தாமும் தமக்குத் தெரிந்த தமிழில் ஜனனியுடன் கதைக்க முயற்ச்சிக்கிறார்கள். இதைவிடப் பெருமையையா ஆங்கிலத்தில் கதைப்பது தந்துவிடப் போகிறது?

3. கதை சொல்லல் : பாட்டி வடைசுட்ட கதையை பத்துவிதமா சொல்லலாம் என்று எனக்கு கம்பஸ் போய்த்தான் தெரிஞ்சுது. ஆனா ஜனனி 'சோபியா தி பர்ஸ்ட்' இனை பத்துவிதமா சொல்லும். நாம பங்குக்கு எதையாவது சொல்லவேணுமில்லை? இந்த சமயத்திலைதான் சாண்டில்யனும் கல்கியும் கைகொடுப்பினம். சோபியா சிவகாமியாகவும், குந்தவையாகவும் மாறும். நரசிம்மவர்மனும், வந்தியத்தேவனும் வருவார்கள். ஒருதடவை இப்படித்தான் அரண்மனைக்கு வந்தியத்தேவன் வருகிறான். யாருமேயில்லை. தூரத்தில் கொலுசொலி கேட்கிறது. சிறிது நேரத்தில் ஓர் இனிய கம்பீரமான குரல் ஒன்று "யாரங்கே?" என்கிறது. கொலுசொலி மெதுவாக மெதுவாக அண்மிக்கிறது. வந்தியத்தேவன் பதில் சொல்லிமுன்... "கொலுசெண்டால் என்னம்மா?" இது ஜனனி. "இருங்கோ வாறன்." இப்போது ஜனனியின் கைகளில் இரு கொலுசு. போட்டுவிட்டதும், "இப்ப பிரின்சஸ் ஜனனி தான் வாறா..". நாம ஒரு கதை சொல்ல அவர்கள் மனதில் இன்னொரு கதை உருவாகிறது. அரண்மனை என்று சொன்னால் எமது மனதில் ஆதித்த கரிகாலனின் பொன்மாளிகை வந்தால், அவர்களது மனதில் ஆங்கிலக் கோட்டைகள் தான் வந்து தொலைக்கின்றன. "இளவரசியாரே.." வந்தியத்தேவன் சொல்லி முடிக்கவில்லை. "இளவரசி எண்டால் என்ன..?". "அதாம்மா பிரின்சஸ்". என்னதான் பேபி, டார்லிங் என்று ஆங்கிலத்தில் கொஞ்சினாலும் தமிழில் செல்லம், குட்டி என்று கொஞ்சுவது போல் வருமா என்ன?

4. ஒளிப்பதிவு செய்தல் : என்னதான் பெரியவர்கள் அழகாக கதை சொன்னாலுமே குழந்தைகள் மழலைத் தமிழில் சொல்வது போல் வராது. அவர்கள் தமிழில் கதைப்பதை / கதை சொல்வதை ஒளிப்பதிவு செய்து அவர்களுக்குப் போட்டுக்காட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தலாம். இந்த வகையில் கானரூபனின் கதை ஒளி போன்ற ஒரு முயற்ச்சியை ஏன் ஒவ்வோர் வீட்டிலும் ஆரம்பிக்க கூடாது? குறிப்பாக புலம்பெயர் நாடுகளில்..

இப்படி இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கு. 'இனி எம் பிள்ளைகளுடன் தமிழில் தான் கதைப்போம்' என்று புத்தாண்டு (எந்தப் புத்தாண்டு எண்டு கேக்கப்படாது!) சபதம் கூட எடுக்கலாம். ஆனால் அநேக சபதங்கள் போலவே இதனையும் சாகடித்துவிடாதீர்கள்.  முதலில் நாம் நாமாக இருந்தால் எல்லாம் நலமாக முடியும். அதற்காய் ஆங்கிலம் பேசுவது தவறென்று கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் "ஜனனி ஆங்கிலம், சைனீஸ், தமிழ் என்று மூன்று மொழியையும் ஒரே நேரத்தில் படிப்பதால் எதனையும் முழுமையாக தெரிந்து பேசுவதில் தடை ஏற்படலாம்." என்று அவளின் அப்பப்பாவே கவலைப் பட்டார். என்னைப் பொறுத்தவரை அவள் எத்தனை மொழி படித்தாலும் பேசினாலும் தாய்+மொழி தமிழ் தான். அது அவள் தாயின் மொழி. தாய் மேல் அன்பும் மரியாதையும் இருக்கும் வரைக்கும் தாய் மொழிமேலும் அதே நேசம் இருக்கும்.

சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர்கூட தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதினால் அதிகமானோரிடம் (தனது புத்தகம்) சென்று சேரும் என்று திருவாய் மலர்ந்தருளியிருந்தார்.

என்னுடன் முன்பு வேலை செய்த சில சென்னைத்தமிழ் நண்பிளுக்கு தமிழ் தெரியும். ஆனால் வாசிக்கத் தெரியாது. கனடாவில் சமீபத்தில் வெளிவரும் சில நினைவுமலர் புத்தகங்களில் தேவாரங்களை ஆங்கில எழுத்துருவில் வெளியிடுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு எழுத்தாளருக்கு தாம் எழுதும் மொழியை வளர்க்கும் நோக்கம் இருக்கவேண்டுமே ஒழிய அதன் எழுத்துருவையே சிதைத்துவிடும் எண்ணம் எப்படி உருவானது என்றுதான் தெரியவில்லை.

அவரது கதைகளை பெரிதளவில் ரசித்துப் படிக்காவிடினும், ஒரு எழுத்தாளர் என்ற மரியாதை ஜெயமோகன் மீது இதுவரை இருந்தது. தவிர யாரையுமே நான் மிக மோசமாகத் திட்டுவதுதில்லை. அதனால் குறைந்த பட்சம் 'வடிகட்டிய முட்டாள்' என்று கூடத் திட்டமுடியவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

நீங்கள் சாகடிப்பது மொழியையல்ல. பெற்ற தாயை..

பிற்குறிப்பு: இது யாருக்கும் அறிவுரை கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. எதுவோ நம்மளால முடிஞ்சது..

இரண்டாம் பக்கம்: தமிழ் இனி 2
Share
Tweet
Pin
Share
4 comments
Newer Posts
Older Posts

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...

Blog Archive

  • ►  2017 (5)
    • ►  நவம்பர் (5)
  • ►  2016 (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
  • ►  2015 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2014 (8)
    • ▼  டிசம்பர் (1)
      • பன்னாடைகள்
    • ►  அக்டோபர் (1)
      • 'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul)
    • ►  செப்டம்பர் (1)
      • யோ. அனந்தன் : பாகம் மூன்று : அம்பி குரூப்
    • ►  ஜூலை (1)
      • குற்றவுணர்வு
    • ►  ஜூன் (1)
      • புட்டும் தேங்காய்ப்பூவும்
    • ►  ஜனவரி (3)
      • காதலின் தற்கொலைகள்
      • தமிழ் இனி.. 2
      • தமிழ் இனி..
  • ►  2013 (27)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2012 (43)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (11)
  • ►  2011 (43)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (10)
© 2013 Gowri Ananthan. Blogger இயக்குவது.

Popular Posts

  • கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு
  • கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
  • இரண்டாமவரே முதன்மை பெறுவர்
FOLLOW ME @INSTAGRAM

Created with by BeautyTemplates