• Home
  • About
  • Articles
  • Books
    • Kanavukalaith Thedi
    • Peyarili
    • Testimonies of Silent Pain
    • Reviews
  • Blog
    • Aval Oru Thodar Kathai
    • Bharathi Kannamma
    • Short Stories
    • Others
  • 48HFP
  • Guest Talks

Gowri Ananthan

Writer | Social Entrepreneur | Ambassador of Peace | Counsellor | Psychotherapist | Traveler | FreeThinker

facebook google twitter instagram linkedin

நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக 'நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்' ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வினை ஆர்ப்பாட்டம் என்பதை விட கவனயீர்ப்பு அல்லது நினைவுகூரல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.


நேற்றைய தினம்.. நேரம் ஒரு மூன்று மணியிருக்கும் அப்போது தான் எனது கல்லூரியின் பழைய டைரக்டர் செல்லவிருக்கும் ஒரு நிகழ்வு சம்பந்தமாக FBயில் அறிகிறேன். அவர் ஒரு சிங்களவர் எனினும், தமிழர் நலனில் அதிக அக்கறையுள்ளவர். அரசியல் நிலைகள் என்பதினைத் தவிர்த்துப் பார்த்தால் 'ரோசி சேனநாயக' அவர்கள் என்னால் என்றுமே வியந்து பார்க்கப்படும் ஒருவர். அவரது ஆளுமை தன்னம்பிக்கை திடசங்கர்ல்பம் ஒவ்வோர் பெண்களுக்குமே இருந்துவிட்டால் நிச்சயமாக நாம் அரசியலில் முப்பது வீதமென்ன ஐம்பது வீத பிரதிநிதிதுவத்தினை கூட பெற்றுவிட முடியும் என்பது திண்ணம்.

நிற்க, இந்நிகழ்வு சம்பந்தமாக மேலதிக விபரங்களை தமிழ்வின் மூலம் அறிந்து கொண்டதன் பின்னர் புறப்படலாம் என்று முடிவெடுத்து வெளிக்கிடும்போது அம்மா வந்து கேட்டார் எங்கே போகிறேன் என்று. வழமையாய் வீட்டில் யாரும் அப்படி கேட்பதில்லை. ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் அப்பா நிச்சயமாக விடமாட்டார். அதனால் சற்றே தடுமாற்றதுடன், மீட்டிங் ஒண்டு இருக்கு போய்ட்டு வந்திடுறன், கொஞ்சம் லேட் ஆகும் என்றேன். அம்மா மெல்ல அறைக்குள் வந்து மெதுவான குரலில் "சுதந்திர சதுக்கத்தில வித்தியாவுக்காண்டி எதோ நிகழ்வு நடக்குதாமே போகேல்லையோ..?" எண்டு கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

உங்களுக்கு எப்படி..? கேட்கவே தேவையில்லை எனக்கு முன்பு தினமும் ipadல் செய்தி வாசிப்பது அவா தான். ஜெயலலிதாவின் வழக்கு முதல்கொண்டு வித்தியாவின் கொலைவரை அத்தனை செய்திகளும் அவவுக்கு அத்துப்படி. மௌனமாக தலையாட்டினேன். "நானும் வாறன்." மேலும் அதிர்ந்தேன். இதுநாள் வரையில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திர்க்குமே அவர்கள் சென்றதில்லை. இன்று என்ன புதிதாய்..? கேட்கவில்லை. "அப்போ ஜனனி?". "அவளையும் கூட்டிக்கொண்டு போகலாம்.." சத்தியமாக நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறேனா என்றொருதரம் குழப்பமாகிவிட்டது. என்னை நானே கிள்ளிப் பார்க்கும் முன்பே அவரே தொடர்ந்து "ஆனா அப்பாவுக்கு தெரிய வேண்டாம். விடமாட்டார்." என்றார். அப்போதுதான் இது கனவில்லை என்று தெளிந்தேன். 

சரியென்று எல்லோருமாய் புறப்பட்டு நண்பியோருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து புறப்படுகையில் ஜனனி கீழே விழுந்து கால் நோகிறது என்றது. தவிர மழையிலும் நன்றாக நனைந்து விட்டதனால் நான் அவர்களை திரும்பி வீட்டுக்கு போகும்படி சொன்னேன். அதற்க்கு அம்மா குளிர் மேலும் ஏறாமல் இருக்க கடையில வேற சொக்ஸ் வாங்கி போட்டிட்டு போகலாம் என்றார். என்னைப் போல் தான் எனது தாயாரும் ஒன்றினை செய்வதென்று முடிவெடுத்துவிட்டால் மாற்றுவது கடினம். ஆனால் இத்தனை வருடங்களில் அவர் என்னிடம் இத்தனை தூரம் அடம்பிடித்ததில்லை. ஒருவழியாக அவர்களை சமரசம் பண்ணி வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் பஸ் ஏறும்போதே மனம் வெறுமையாகிவிட்டது. 

நிகழ்வில் கலந்து கொண்டுகொண்டிருக்கும்போது கூட மனம் இந்த சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்தது. இது நாள்வரை எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அவை எதற்குமே செல்ல வேண்டும் என்று தோன்றாத போது எதற்காய் இதற்க்கு மட்டும்..? காரணம் வித்தியாவா..? அந்த கொடூர கொலையா..? அல்லது ஆழுமை மிக்க அரசியல்வாதியொருவர் முன்னின்று நிகழ்த்துவதாலா..? அல்லது அவர்களே முன்னின்று நடத்தும் போது நாம் செல்லாமலிருப்பது நியாயமில்லை என்று கருதியதாலா..? அல்லது கடைசியில் சிலர் சொல்லுவது போல் "நோகாமல்(?) எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்பதனாலா..?"

நேற்றைய நிகழ்வின் பின்னர் FBயில் நான் பகிர்ந்து கொண்ட எனது கீழுள்ள பதிவினைப் பார்த்தால் எதுவென்று உங்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இல்லாவிடின் இதே நிகழ்வுக்கு எனது நண்பியொருவர் நாலேவயதான தனது பையனை கூட கூட்டிவந்திருந்தார். (அவரை அங்கு தான் தற்ச்செயலாக சந்திக்க நேர்ந்தது.) அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு நிச்சயமாக எம் அனைவரையும் விட அதிக தெளிவு இருக்கலாம்.
They didn't know her until few days ago.. 
But they came for her..
They didn't know what's written on those posters..
But they hold them for us.. 
Hot wax drops burnt their hands.. 
But they didn't let the wind blow out their lights.. 
They did it silently.. And sent out their message loudly..


They didn't know her until few days ago.. But they came for her.. They didn't know what's written on those...
Posted by Gowri Ananthan on Sunday, 24 May 2015













Share
Tweet
Pin
Share
2 comments

"அப்போ இனிமே பேசிறதில்லை எண்டு முடிவு பண்ணீட்டிங்க அப்படித்தானே?" அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவள் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று முன்புதான் போன் பண்ணியபோது ஏதோ நண்பனின் திருமணத்தில் இருப்பதாய் சொல்லியிருந்தான். இரவிரவாய் மணிக்கணக்கில் இருந்து சட் பண்ணிய நாட்கள் வெறும் கனவுபோல வந்து போனது. அவன் எதற்காய் அவளிடமிருந்து விலகிட நினைக்கிறான் என்று புரியவில்லை. என்னதான் அவர்கள் "No Emotions.. No Relationship.." என்று சொல்லிக்கொண்டாலுமே அவள் தன்னைக் காதலிப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அன்பில்லாமல் உடம்பை மட்டும் கொடுப்பதற்கு அவள் தெருவோர விபச்சாரியா என்ன..?
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஒருமணி நேரம் கடந்திருக்கும். அவன் ஆன்லைனுக்கு வந்துவிட்டான். மனம் துள்ளியது. ஆனால் அடுத்த கணமே அவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற பயம் சிறிதே தொற்றிக்கொண்டது. முன்புபோல் இல்லாவிடினும் அப்பப்போ பேசிச்செல்லும் சில வார்த்தைகளைக் கூட நிறுத்திவிடுவானோ என்று பயமாக இருந்தது. 'பேசாவிட்டால் போகட்டும் ஆனால் இன்று ஒரு முடிவு தெரிந்தே ஆகவேண்டும். பதிலே தெரியாமல் தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு, பதிலை அறிந்துவிட்டு ஒரேயடியாய் சாவது மேல்... சே இதுக்கெல்லாம் போய் சாவார்களா என்ன..? காதலாவது மண்ணாங்கட்டியாவது.. இந்த உலகத்தில இவன் மட்டும் தான் ஆ..?' மேற்கொண்டு எதையும் நினைக்க முடியவில்லை மூளையே ஸ்தம்பித்து விட்டதுபோல் இருந்தது.
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா?  
"அப்பிடி இல்லையப்ப்ப்ப்பா...." திரையின் பாதிவரை நீட்டி முழக்கி விரிந்தது அவனது பதில். என்னதான் கோபமாக இருந்தாலுமே அவனது ஒவ்வோர் வார்த்தைகளையும் அவள் ரசித்திருக்கிறாள். இன்றும் அப்படித்தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமலே..
"அப்போ என்னவாம்..?"
பப்பியொன்று மெல்ல எட்டிப்பார்த்து தலையை சரித்து அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டது.
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா 
"என்ன ரியாக்சன் இது?" இப்படித்தான் அடிக்கடி அவள் ஏதாவது முக்கியமாய் பேசிட்டிருக்கும்போது பதில் வராது. பப்பிதான் ஒவ்வொரு ரியாக்சனில வந்து போகும். எரிச்சலாய் வந்தது. "நீங்க மட்டும் இப்ப எண்ட கையில கிடைச்சீங்க கொன்னுருவன்"
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா?
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா ..!!
"ஹிஹிஹி.. அவ்ளோ கோபமா?"
"கோபம் இல்லை. கொலைவெறி.."
"நோ மா.. அது தப்பு.. காம் டவுன் காம் டவுன்.."

அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. சே.. யார் எப்படிப் போனால் அவளுக்கென்ன? இதற்க்கு மேல் அவன் எதுவும் பிடிகொடுத்துப் பேசுவான் போல் தெரியவில்லை. அவனைப் பொருத்தவரை உடலைத் தொட்டதில் வேண்டுமென்றால் அவள் முதலாய் இருக்கலாம் ஆனால் மனதைத் தொட முடியவில்லையே..? மனதில் அன்பில்லாது உடலை மட்டும் தொட்டின்புற இந்த ஆண்களால் மட்டும் எப்படி முடிகிறது? ஆனால் தன் தோள்மீது சாய்ந்தவளை, இலாவகமாக சுற்றி அணைத்த அவனது கைகளின் இறுக்கம், விரல்களின் நெருக்கம் காதலை சொல்லியதே? அதுகூட பொய்தானா? நினைக்க நினைக்க தலை சுற்றியது. 
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் எந்தன் காதல் வாட ..
உனது ஆளுமையை ரசிக்கிறேன் என்றவன் தான் இன்று குடும்பத்தில் ஆண்களுக்கு பெண் அடங்கியிருத்தல் அழகு என்கிறான். மார்டன் உடையில் வரச் சொல்லியவன் இன்று, குடும்ப குத்துவிளக்குகளே அழகு என்கிறான். எதனால் இந்த திடீர் மாற்றம்? ஒரே நாளில் ஒருவனின் குணம் ரசனை எல்லாமே இப்படி தலை கீழாய் மாறிவிடுமா என்ன? இல்லையெனின் அவள் வெறுக்க வேண்டும் என்பதற்காய் இப்படியெல்லாம் நாடகமாடுகிறானா..? அவனது ஆளுமைக்குள் அவள் என்றோ அடங்கிவிட்டாள் என்பது கூட அவன் அறியாததா..? இல்லாவிட்டால்.. வேறேதும்..? கண்ணாடி முன்னின்று ஒருமுறை கீழிருந்து மேலாய் பார்த்தாள். கண்களைச் சுற்றிய கருவளையம் இப்போ சற்றே ஆழமாகத் தெரிந்தது.
சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
மீண்டும் சென்று போனில் அவனுடனான இதுவரை கால உரையாடல்களை மீண்டுமொருதரம் எடுத்துப் பார்க்கிறாள். எவ்வளவு இனிமையான தருணங்கள் அவை. கவலைகளே இல்லாத, ஜாலியான உரையாடல்கள். சின்ன சின்ன குறும்புகள், சிரிப்புகள், நாணல்கள்..
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
இறுதியில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. சென்றது. அதன் பின் அவன் பேச்சினை வெகுவாகக் குறைத்துக்கொண்டான். திடீரென்று ஒரு நாள் அவனிடமிருந்து எந்த பதிலுமே இல்லை. ஒரு நாள்.. இரண்டு நாள்.. மூன்று நாள்.. ஒருவேளை அந்த 'ஒருநாள்' மட்டும் அவர்கள் வாழ்வில் வந்திருக்காவிட்டால் அவையெல்லாம் அப்படியே இருந்திருக்குமோ? அவனும் கூட முன்பு போல சகஜமாகவே உரையாடியிருப்பானோ? அவளுக்கு கூட அவன் மேல் இத்தனை இணைப்பு/ஈர்ப்பு ஏற்பட்டிருக்காதோ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..?
"அப்போ இனிமே பேசிறதில்லை எண்டு முடிவு பண்ணீட்டிங்க அப்படித்தானே?" அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவள் போனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 





Share
Tweet
Pin
Share
No comments

உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம். 

இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு மங்கள நாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவதாக பத்தாவது முறையாக முடிவெடுத்திருந்தனர். ஆனாலும் முந்தைய ஒன்பது முடிவுகளின் பின்னர் போல் இல்லாமல் இம்முறை கம்பஸ் முடிந்து விட்ட காரணத்தினால் இனிமேல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அரிது என்பதனால் சற்று அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் அவளுக்கு என்ன தோன்றியதோ திடீரென்று கேட்டாள். அவனின் வாழ்க்கையின் கனவு/லட்சியம் என்னன்னு.. இதற்க்கு முன்பும் பல தடவை கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஒவ்வோர் முறையும் ஒவ்வோர் பதிலை சொல்லியிருக்கிறான். ஆனால் எந்தப் பதிலும் அவளுக்கு திருப்பதி தரவில்லை. அதாவது அவனது ஆழ்மனது ஆசையாக அவளுக்குப் படவில்லை. ஏதோ வாழ்க்கையை சுமூகமாய் ஒட்டி கரை சேர்ப்பதற்குத் தேவையான வரையறைக்குள் மட்டுப்பட்டிருந்தது. இம்முறை அவள் இரண்டாவது, மூன்றாவது முறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்காமல் அசிரத்தையாக ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் திடீரென அவளிடம் திரும்பி, "நீ என்ன செய்வதாய் முடிவெடுத்திருக்கிறாய்?" என்றான். அவள் அமைதியாக, "தெரியல.. மேல படிக்கணும். யூ கே போகலாம் எண்டு ஐடியா. ஆனா படிச்சு முடிச்சிட்டு என்ன செய்யப் போறன் எண்டு தெரியல." இருவரும் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை.

சிறுது நேரத்தில் அவன் விடை பெறுவதாய் கூறவே அவளும் பஸ் ஹால்ட் வரை சென்றாள். பஸ்சில் ஏறச் சென்றவன் சற்றே தாமதித்து திரும்பி அவள் பக்கம் வந்தான். "எண்ட லட்சியம் என்னனு கேட்டாய் தானே..?" அவள் திகைப்புடன் அவனையே கண்வெட்டாமல் பார்த்தாள். "ஒரு பெரிய நெட்வொர்க் ஆர்கிடெக்ட் ஆக வரவேணும். உலகத்திலையே விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்குள்ள எண்ட பேரும் இருக்க வேணும்." அவளுக்கு எதுவும் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. மெதுவான குரலிலை அவள் சொன்னாள்.. "எண்ட கனவு எதெண்டு கேட்டாய் தானே..?" இப்போது அவன் புரியாமல் பார்த்தான். "உன்னை அந்த இடத்தில பார்க்க வேணும். அதுதான்.."

சே.. ரொம்பவே செண்டிமெண்டா போய்ட்டுதோ.. சரி. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு மேல படியுங்க. வாழ்க்கைன்னா எத்தினையோ இடர்கள் வரத்தான் செய்யும். பல சமயம் எமக்கான பாதை எதென்று புரியாத குழப்பங்கள் உண்டாகும். ஆனால் அதையெல்லாம் தாண்டி எம்மை எமது வழியில் இட்டுச் செல்பவை தான் எமது கனவுகளும் இலட்சியங்களும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது இலட்சியத்தினை நேசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதற்க்கான பயணம் சுவாரசியமாக இருக்கும். அதிலும் துணைக்கு கூடவே இன்னொருவர் வருகிறார் என்றால் அந்தப் பயண அனுபவம் இன்னும் சுவாரசியமே.. ஆனாலும் அனந்தனின் துரதிர்ஷ்டம் நான் துணையாக வந்ததை விட தொந்தரவாக வந்ததுதான் அதிகம். இருந்தும் ஆரம்பத்தில் CCNA இலேயே இரண்டு தரம் பெயிலான போது அனந்தனின் நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டிருந்த சமயம், எனக்கு மட்டும் நம்பிக்கை போகவில்லை. உன்னால் முடியும் என்றேன். மூன்றாவது முறையில் பாஸ். அதுக்கப்புறம் பிடிச்ச ஓட்டம் தான். இந்தப் பத்து வருசத்தில நாலாவது CCIE யும் எடுத்தாச்சு. எனக்குத் தெரிஞ்சு ரெண்டே ரெண்டு இலங்கையர் தான் இந்த நிலைல இருக்கினம். ஒன்று காரியப்பர் (இப்போ penta ccie), மற்றையது அனந்தன்.



பொதுவாகவே இந்த எக்ஸாம் எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும் என்பதனால் நான் இங்கு விலாவாரியாக எழுத தேவையில்லை. தெரியாதவர்கள் இங்கே சொடுக்கி பார்க்கலாம். என்னதான் நீங்க ஒருவருஷம் முழுவதும் முக்கி முக்கி படிச்சாலும் அந்த கடைசி ஓரிரு மாதங்கள் மிக மிக முக்கியம். அதனால் தான் நாம ஜனனியுடன் அடிக்கடி இலங்கைக்கு காசியாத்திரை போகவேண்டியிருப்பது. சரி இப்படியெல்லாம் படிச்சு அப்பிடி என்னத்த தான் கண்டீங்கன்னு கேட்டா.. சம்பளம், அந்தஸ்து எல்லாத்தையும் தாண்டி.. உங்க கனவுகளை அடையும்போது ஒரு மனதிருப்தி வருமே.. அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது. அதன் பின்னர் உங்கள் முன் இமாலய பிரச்சினையே வந்தாலும் எல்லாமே தூசுபோல் தெரியும்.. ஆனால் கூடவே தன்னடக்கமும் இருந்தால் யாரிடமும் மிண்ட வேண்டிய தேவையிருக்காது. தவிர, எல்லா சந்தர்ப்பங்களும் எமக்கே சாதகமாக அமையும்.

உதாரணத்துக்கு ஒரு சுவாரசியமான சம்பவத்தினை மட்டும் கூறி முடிக்கலாம் எண்டு இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் ஆசிய பிராந்திய நெட்வொர்க் புரோபிசனல்ஸ்க்கு நடந்த கான்பிரன்ஸ்க்கு அனந்தனும் அவரின் பழைய முதலாளியும் போயிருந்த சமயம் இலங்கையில் தலை சிறந்த ஒரு கம்பனியில் இருந்தும் சிலர் வந்திருந்தனர். அவர்கள் சற்றே மேம்போக்காக அளவளாவிகொண்டிருந்த சமயம் அனந்தனின் முதலாளி வந்திருக்கிறார். அப்போது அனந்தன் அவருடன் கதைத்த பின்னர் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இவர் தனது பழைய முதலாளி என்று சொல்லி அறிமுகப்படுத்த, "முதலாளியா? இப்படி சகஜமா கதைக்கிறீங்களே?" என்று கேட்டிருக்கின்றனர். அதற்க்கு அனந்தன் "இங்கு அப்படித்தான்" என்று சொல்லி முடிக்கவில்லை. அனந்தனின் முதலாளி "நான் என்னப்பா பெரியாள்.. இவருதான் மூண்டு ccie எடுத்திட்டு இப்ப நாலாவதுக்கு படிச்சிட்டு இருக்கிறார். நாம இனிமேதான் ரெண்டாவதே." என்டாரே பாக்கலாம். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தினால் விரிந்தன. அப்புறம் என்ன? கான்பிரன்ஸ் ஒரு பக்கம் போய்ட்டிருக்க இவங்க இங்கால ccie க்கு படிப்பதெப்படின்னு குப்பி எடுத்திட்டிருந்தாங்க.

நிற்க, நாளைக்கு (21) தான் எக்ஸாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அனந்தன் சாட்ல வர "என்ன நாளைக்கு எக்சாமுக்கு தயாரா?" என வினவுகிறேன்.




யாருக்கு நம்பிக்கை இருக்குதோ இல்லையோ எனக்கு நம்பிக்கை இருக்கிறது, தான் கனவு கண்ட இடத்தினை வெகு விரைவிலே அடைவான் என்று..

அதெல்லாம் சரி இவ்ளோ சொல்றியே, அப்போ கூடவே இருந்து உதவுறது தானே..? இப்படி அம்போ எண்டு விட்டிடு வந்து.. இப்ப என்ன பெரிய இவளாட்டம் பேச வந்திட்டே எண்டு நீங்க கேக்கிறது புரியுது. அதாகப்பட்டது என்னவென்றால் அவனது கனவுக்கான பாதையை அவன் அறிந்து விட்டான். ஆனால் எனக்கும் ஒரு கனவிருக்கிறது.. "உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம்." 


முன்னைய பதிவுகள்..
யோ. அனந்தன்: பாகம் ஒன்று
யோ. அனந்தன்: பாகம் இரண்டு
யோ. அனந்தன்: பாகம் மூன்று
தொடர்புடைய பதிவுகள்





Share
Tweet
Pin
Share
No comments
மகளிர் தினமாம் இன்று.
வாழ்த்துக்கள் சொல்கின்றனர்..
ஆமா எதுக்கு..?

பெண்ணியம் பேசும் பெண்களுடனும் சரி
அடக்குமுறை பேசும் ஆண்களுடனும் சரி
அதிகம் பேசுவதில்லை நான்

எனவே அவர்கள் இதனை
படிக்காதீர் தயவுசெய்து


ஒருமுறை மிகவும் பொறுப்பான வேலையில் இருந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து "அழகான பெண்களிடம் அறிவு குறைவாக இருக்குமாமே உண்மையா?" அப்பிடின்னு கேட்டார். அவர் வயதில் என்னை விட மிகவும் பெரியவர். ஆனால் மிகவும் சாதாரண வேலையிலிருந்தார். அவரின் வயதிற்கு மதிப்புக் கொடுத்து நான் எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து "நீங்க ரொம்பவே அழகாக இருக்கிறீங்க" என்றார். அன்று வந்த கோபத்தில் அவரை துவைத்து எடுத்துவிட்டேன். பிறகு யோசித்தேன், ஒரு பெண்ணின் அறிவை எடைபோடத் தெரியாத அல்லது பொறாமைப்படுகின்ற மற்றும் புற அழகைப் பார்த்து மட்டுமே மயங்குகின்ற ஒரு முட்டாளிடம் போய் இத்தனை நேரம் மினக்கட்டோமே என்று..

இவ்வாறு இத்தனை வருடங்களில் பல சம்பவங்களை சொல்லலாம். அதற்காய் நான் ஒரு பெரிய மாமேதை, அறிவாளி அப்பிடின்லாம் சொல்லவரலை. ஆனால் என்னுடன் பேசுபவர்கள், முக்கியமாக ஆண்கள், புற அழகு என்ற விடயத்தை தாண்டி, அறிவார்ந்த விடையங்களை விவாதிக்கையில் அந்த ஆனந்தமே தனிதான். அது என்னையும் அறிவாளி என்று ஏற்றுக்கொண்டதனால் ஏற்பட்டதல்ல. ஏனெனில் பலசமயம் விவாதங்களில் வெளிப்படும் ஒருவரின் அறிவினைவிட முட்டாள்தனங்களே அதிக சுவாரசியத்தினை கொடுக்கும். நடுநிசி வேளையில் கண்களுக்கெட்டாத தொலைவிலிருக்கும் நட்சத்திரங்கள் பற்றிய கற்பனைகள், விவாதங்களின் முடிவில் அர்த்தமற்றுப்போகும் / வேறோர் அர்த்தத்தினை வெளிப்படுத்தும் தத்துவங்கள், பந்தங்கள் அற்ற உறவுகள் / உறவுகள் அற்ற பந்தங்கள்  என்று நான் காதலிக்கும் விடயங்களை உன்னாலும் காதலிக்க முடிந்தால் அல்லது அதைப்பற்றி பேசமுடிந்தால், உடல் சார்ந்த மனோ வக்கிரங்கங்களிருந்து மீண்டு வர முடிந்தால் நீயும் என் காதலனே..!

சமுதாயத்தில் ஒரு ஆணுக்கான சுதந்திரம் எதுவோ, அது பெண்ணுக்கும் உள்ளது என்பது எனது உறுதியான நிலைப்பாடு. ஒரு பாரதியால் ஒரு கண்ணம்மாவை காதலிக்க முடிந்த போது, ஒரு கண்ணம்மாவால் பாரதியை காதலிக்க முடியாதா என்ன? இதுகாலவரை பெண்களுக்கு போடப்பட்ட வரைமுறைகளில் பெரும்பாலானவை அவர்களை ஆண்களிடமிருந்து பாதுகாக்கவே ஆகும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஆண்களின் மனோ வக்கிரங்களை பெண்களைவிட அவர்களுக்கே அதிகம் தெரியும். அதனால் தான் தன்னைப்போல் ஒருவனிடம் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்று வெகு கவனமாக இருந்தனர் இன்றும் சிலர் இருக்கின்றனர். இதனை இன்று ஜோதிக்கு எதிராய் பேசுபவர்கள் பலரின் பேச்சில் காணலாம்.

அடுத்து அவ்வாறான ஒரு சூழ்நிலை (தன்னைப்போல் ஒருவனால்) ஏற்பட்டுவிடின் அது தனக்கே மிகுந்த அவமானம் என ஆண் கருதினான். இத்தகைய மனோபாவம் அதிகமாகி, கடைசியில் பெண்ணடிமைத்தனத்துக்கு வித்திட்டது மட்டுமல்லாது ஒருகட்டத்தில் பெண்களே தம்மைக் காத்துக்கொள்ள இத்தகைய வரைமுறைகள் வேண்டியதே என நம்பத்தொடங்கி விட்டிருந்தனர். மேலும் வருசத்துக்கு ஒன்று என்று வரிசையாய் ஐந்தாறை கொடுத்துக்கொண்டிருந்தால் பாவம் அவர்களுக்கு வேறு சிந்தனைகளுக்கு எங்கே நேரமிருக்கிறது? அனா போன்ற அப்பாவிகளுக்கு, அவர்களை சப்மிசிவ்களாக மாற்றத்துடிக்கும் கிறிஸ்டியன் போன்றவர்களே கிடைக்கின்றனர். அவர்களும் அவன் என்றாவது மாறுவான் தன் காதலை புரிந்து கொள்ளுவான் என்று காத்திருக்கிறார்கள் அல்லது அவன் செய்வது சரிதான் என நம்பத்தொடங்கி விடுகின்றனர்.

எனது படிக்கும் காலங்களில் நான் பார்த்து வியந்த இந்துஜா போன்ற பெண்கள் கூட இன்று தாம் உண்டு தமது குடும்பம் உண்டு என்று இருந்து விடவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேரின் கணவன்மார் அவர்களின் தியாகத்தினை புரிந்து கொண்டிருக்கின்றனர்? தமது மனைவியின் ரசனைகள் iPhone 6+ ஐயும் தாண்டி இருக்கு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் தமது பள்ளி வயதில் கண்ட கனவுகள் இன்னும் கனவுகளாகவே இருக்கின்றன என்பது புரியும்?

ஆகவே இங்கு பெண்ணடிமைத்தனம் என்பது பெண்கள் தாமாக ஏற்றுக்கொள்ளும் வரை தான்.. இதை அறிவதற்கு படித்து பட்டமெல்லாம் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. சிலநேரம் மெத்தப்படித்தவர்கள் கூட குடும்பம் என்று வருகையில் மடைத்தனமாக நடந்துகொள்வதுண்டு. (கவிஞர் தாமரையை சொல்லவில்லை). சுயத்தினை அழிக்கும் எதனையும் எதிர்க்கும் உள்ளுணர்வு எம் அனைவர்க்கும் இயற்கையாகவே உண்டு.. அதை கேட்கிறோமா இல்லையா என்பதில் தான் எமது சுதந்திரமும் அடிமைத்தனமும் அடங்கியிருக்கு..









Share
Tweet
Pin
Share
No comments

பதினெட்டடி ஆழக்கிணறு
பளிங்கு போன்ற நீர்
பாதிக்கும் மேல் நிறைந்திருக்கும்
அமிர்தம் இதுவோ என வியப்பர்
யார் கண்பட்டதோ..?

அன்றொரு நாள்
தாகம் என்று வந்தவர்க்கு
குடத்தில் நீர் கொடுத்தால்
நம்ப மறுத்து
செவ்விளனி நீரென்று
வாதிடுகையில்
கூட்டிச் சென்று
துலா பிடித்து நீரள்ளி
குடிக்கக் கொடுத்தோம்

அதிசயித்தவர்
காரணம் கேட்கையில்
செல்லும் வழியில் எங்காவது
நன்னீர்க் கிணறு இருப்பின்
இரவோடு இரவாய்
தூக்கிவந்துவிடுவோம் என்று
நக்கலாய் சொன்னதை
நம்பிச் சென்றவர் எம்மைப் பின்
'கிணறு காவிகள்'
ஆக்கி விட்டார்..

அவர் இன்று வந்திருந்தால்
பூரித்துப் போயிருப்பார்
மத்திய கிழக்கிலிருந்து
தூக்கிவந்துவிட்டதாய்..



Event Page: https://www.facebook.com/events/756672027744407
Click here for the Full news on this issue 


நம் ஊர்.. நம் கிணறு.. ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினைக்காக ஒன்றையும் செய்ய முடியவில்லை.. இது சம்பந்தமா ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தினை பல மாதங்களின் முன்பு முன்வைத்தேன். இருந்தும் சில பல அரசியல் காரணங்களால் கைகூடவில்லை. ஊடகங்கள் பல இருட்டடிப்புச் செய்த போதிலும் இன்று பல இளையோர்களின் முயற்ச்சியினால் இது வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது. எமது உரிமையை காக்க நாம் தான் நேரடியாக களத்தில் இறங்கவேண்டும் என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள். வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றிகள்.








Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...

Blog Archive

  • ►  2017 (5)
    • ►  நவம்பர் (5)
  • ►  2016 (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
  • ▼  2015 (5)
    • ▼  மே (3)
      • மௌனங்கள் கலைகின்றன
      • எல்லாமே பொய் என்று சொல்வாயா?
      • Y.Ananthan (Quad CCIE #28365)
    • ►  மார்ச் (1)
      • மகளிர் தினம்
    • ►  பிப்ரவரி (1)
      • எண்ணெய் காவிகள்
  • ►  2014 (8)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2013 (27)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2012 (43)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (11)
  • ►  2011 (43)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (10)
© 2013 Gowri Ananthan. Blogger இயக்குவது.

Popular Posts

  • கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு
  • கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
  • தலை முடி
FOLLOW ME @INSTAGRAM

Created with by BeautyTemplates