மீண்டும் விதையாய் ...

by - 11/27/2013 06:13:00 பிற்பகல்

மனிதர்களைத் தொலைத்துவிட்டு
மரங்களை நடுகின்றோம்
அவைதான் எத்தனை
அடிகளையும் தாங்குமே

பூக்கும் பருவத்தில்
முகர்ந்து பார்ப்பர்
காய்ந்த மாடு கம்பில் விழுவது போல்
உரசியும் பார்ப்பர்
உணர்ச்சிகள் மீறினால்
புணர்ந்துவிட்டு
புயல் தான் வந்து சிதைத்ததென்று
கூசாது பொய்யுரைப்பர்

கனிதரும் வயதில்
கைதொட விடாவிடின்
பசுமைப் புரட்சிச் சட்டத்தின் கீழ்
கைது செய்வர்
புழுக்கள் உள்நுழையும்
பூச்சிகள் சுற்றி மொய்க்கும்
அணில் கூட வந்து கடித்துப் பார்க்கும்
உன் அழுகை யாருக்கும் கேட்காது

காய்த்த மரம்தான் கல்லடிபடும்
காய்த்து உன்குற்றம் என்று
ஐநாவைக் கூட ஏமாற்றுவர்

கமேரூன் வந்து பார்ப்பார்
கௌரவம் என நீ நினைப்பாய்
கல்லைத் தேடி இவர்கள்
கண்கள் செல்லும்

மீண்டும் விதையாய் விழுவாய் இந்த மண்ணில்
யார் கரங்களில் கதறி அழுவதற்கோ?
You May Also Like

1 comments