• Home
  • About
  • Articles
  • Books
    • Kanavukalaith Thedi
    • Peyarili
    • Testimonies of Silent Pain
    • Reviews
  • Blog
    • Aval Oru Thodar Kathai
    • Bharathi Kannamma
    • Short Stories
    • Others
  • 48HFP
  • Guest Talks

Gowri Ananthan

Writer | Social Entrepreneur | Ambassador of Peace | Counsellor | Psychotherapist | Traveler | FreeThinker

facebook google twitter instagram linkedin
"ஒரு Documentary செய்வதற்கு எட்டு மாசம் எடுக்குமா?" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் "ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா? " என்று வியந்து இன்னொரு நண்பரிடம் நானும் கூடக் கேட்டிருந்தேன்.

ஆவணப் படம் எடுப்பதென்பது கிட்டத்தட்ட அவர்களது பயணத்தை அவர்கள் கூடவே நாமும் பயணிப்பது போன்றது. சாதாரணமாக ஒரு விளம்பரம் / குறும்படம் செய்வது போலல்லாமல் இது அவர்கள் கூடவே பயணித்து அவர்களின் வலிகளை சாதனைகளை மிகைப்படுத்தாமல் அதேசமயம் சுவாரசியம் குறையாமலும் கொடுக்கவேண்டும். மிகவும் சிரமமான ஒரு வேலை.


சில நிகழ்வுகள் நேரடியாக இருக்கும், ரீ-டேக் போகமுடியாது. ஒருமுறை சரிவர எடுக்கத் தவறினால் தவறினது தான். உதாரணத்துக்கு ஹோர்டிங் ஆரம்பகட்ட வேலைகள். நாமும் ஹோர்டிங்க்ஸ் போடுகிறோம் என்றுவிட்டு வெறுமனே ஒரு shotஇல் இதனைக் காட்டிவிட முடியும். ஆனால் அதன் ஆரம்பகட்ட வேலைகள் தொடக்கம் அதனை மாட்டுவது வரை இரவு பகலாக நின்று அவர்களின் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம். சிலருக்கு இது அர்த்தமில்லாத ஒன்றாகத் தோன்றலாம். எனக்கும் கூட  இதற்க்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று முதலில் தோன்றியது.

அப்போது ஒருநாள் அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் இடத்துக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சேறிலும் சகதியிலும் நின்று தொடர்ந்து மூன்று நாட்களாக இரவுபகல் பாராது வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் சென்ற சமயம் வேலை ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இருந்தும் அன்றிரவும் அவர்களில் ஒருவர் தங்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர். எதற்காக என்று கேட்டபோது "இல்லாட்டி இரவோடிரவா எவனாச்சும் வந்து அறுத்துட்டு ஓடிடுவான்." என்று பதில் வந்தபோது சற்றே அதிர்ந்துபோனேன். "எதனால் இப்படிச் செய்கிறார்கள்?" என்று கேட்டதற்கு, "வம்புக்குத் தான். போனமுறையும் இப்படித்தான் இரண்டு ஹோர்டிங்ஐ அறுத்துட்டுப் போய்ட்டாங்கள். அதுக்குப் பிறகு கனகாலத்துக்கப்புறம் இப்பதான் போடுறம். அதாலதான் வேலை முடியும் வரையாவது ஒராள் காவல் இருகிறது நல்லது." என்றார்.

எதிர்க்காற்று வேறு பலமாக அடித்து அவர்களின் பலத்தை சோதித்தது. ஒரு ஹோர்டிங் போடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்பது அப்போதுதான் புரிந்தது. இயற்கையின் சீற்றத்துக்கு ஈடுகொடுத்து சாதனை படைக்க முடிந்த மனிதனால் சக மனிதர்களின் மன வக்கிரங்களுக்கு முன் எதுவும் செய்யமுடியாத நிலை.

உழைப்பின் வலியறியாத வாலிப வயதுகளில் விளையாடிக்கொண்டிருக்கும் நம்மவர்களின் கவனத்தை ஆக்கபூர்வமான விடையங்களில் திருப்பவேண்டியதன் அவசியத்தையும் அதன் அவசரத்தையும் உணர்த்திய இன்னுமொரு சந்தர்ப்பம் இது.





பிற்குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்படமானது DAN TV யிலும் DD TV யிலும் மேதினத்தன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.



Share
Tweet
Pin
Share
No comments

"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதையை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை.

இதுதான் நம்ம முடிக்கதை.

சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை.

முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது.

அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து கடைசியில் அம்மாவிடம் அபயம் புகும்போது பட்டை தீட்டிய கிளுவை பல திசையிலும் பறக்கும். போர் தொடங்கு முன்னமே ஊரக் கூட்டி ஒப்பாரி வைத்துவிட்டதனால் இப்போ ஏனெண்டு கேட்க நாதியிருக்காது. அழுகையழுகையாய் வரும், ஆனா அழப் பிடிக்காது. அப்பிடியே அழத் தொடங்கினா அந்த ஆண்டவனே வந்தாலும் நிப்பாட்ட முடியாது.

சீயாக்காயும் வெந்தயமும் கொதிக்க வைத்து, சூடு பார்த்து தலையிலை தேய்த்து, தோய வாத்து தலை துவட்டி, ஓடிக்கலோன் போட்டு பவுடர் பூசி, தணல் போட்டு சாம்பிராணி காட்டி, சட்டை உடுத்திவிடும் வரைக்கும் உம்மெண்டு இருந்தா பிடிச்ச பிள்ளையார் தோத்திடுவார். பிறகென்ன முட்டைச் சொதியும் இடியப்பமும் எண்டு ராஜோபசாரம் நடக்கும். சமயத்தில் இதெல்லாம் இந்த முடிக்கா இல்லை நமக்கா எண்டொரு சந்தேகமும் வரும்.

ஒருநாள் சைக்கிளில் பாடசாலை போகையில் "ஆறடிக் கூந்தலாம். ஆனா உள்ளே இருப்பது ஈரும் பேனாம்." எண்டு சிலதுகள் பாட, இதை சாட்டியே கத்தரிக்கலாம் எண்டால் அப்பா இந்த முறை பயங்கர உஷார். அம்மா எதோ ஒரு ஷாம்பூ வாங்கி தந்து "இதைப் போட்டு ஊறவைச்சு குளிச்சா பேன் போயிடுமாம்" எண்டு சொல்ல அதைப் போட்டு ஊறவைச்சு ஊறவைச்சு பேன் போனதோ இல்லையோ முடி கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகத்தொடங்கியது. முதலில் கவலையாக இருந்தாலும் இதைச் சாட்டியே வெட்டிவிடலாமே எண்டொரு கள்ளப்பிளான் உள்ளே உருவாகிவிட்டிருந்ததால் முடி கொட்டுவதைப்பற்றி அப்போது அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை. கடைசியில் நாம ஆசைப்பட்டது போலவே எலிவால் ரேஞ்சுக்கு பின்னல் வந்ததும் / சாமத்தியவீடு முடிந்ததும், இடைவரையான கூந்தலை அரைவாசியாக வெட்டுவதற்கு சம்மதம் தந்தார்.

அப்பாவுக்கு என்னதான் கூந்தல் மேல ஆசையிருந்தாலும் படிப்புக்கு முன்னாடி வெறும் முடியால் ஒண்டும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், அடுத்த வருடமே இரவிலை சரியா வேர்க்குது படிக்க கஷ்டமாய் இருக்கெண்டு தோள்வரை ஆக்கியாச்சு.

உயர்தரம் படித்துக்கொண்டிருந்த சமயம், கெமிஸ்ட்ரி படிப்பித்த எங்கடை தில்லைசாரிடம் அடிக்கடி ஒரு பெடியன் "ஏன் சார் உங்களுக்கு தலையில முடியில்லை" என்று அடிக்கடி கிளாஸ்ல வம்புக்கிளுப்பான். அதுக்கு அவர் சொல்லுவார், "அறிவாளிகளுக்கு உள்ளை நிறைய இருக்கும். அதால வெளிய கொட்டிடும்" எண்டு. அவனும் விடமாட்டான்.
"அப்போ எங்களுக்கெல்லாம் இருக்குதே".
"டேய்! உனக்கு உள்ளை பூரா களிமண் தான். அதான் வெளிய நல்லா வளருது."
"போங்க சார் உங்களுக்கு என்ர முடிமேல பொறாமைல சொல்லுறீங்க."
இப்படியாக நீண்டு கடைசியில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சொல்லாமலே தப்பித்துவிடுவான்.

இப்படியாக ஒருவாறு தட்டுத் தடுமாறி கம்பஸ் போனா அங்க அப்பா போய் அனந்தன் வந்தாச்சு. ஆனாலும் பின்னாளில் தன் முடியை தக்க வைப்பதிலேயே அதிக அக்கறை எடுக்கவேண்டி இருந்ததால் அந்த தடையுத்தரவும் அதிக நாள் நீடிக்கவில்லை.

பிறகு வயித்தில் பிள்ளை இருக்கும்போது தலைமுடிவெட்டக்கூடாது எண்டு யாரோ சொல்லி மீண்டும் வளர்த்து, பிள்ளை பிறந்ததும்  மீதியிருந்த ஓரிரு முடியை முப்பது டாலர் கொடுத்து வெட்டியபோது கூட தோன்றவில்லை திரும்பவும் வளர்க்கவேண்டும் என்று.

இவ்வாறு படிப்படியாக மேலே மேலே போன முடி கொஞ்சம் நீளமாயிருந்திருக்கலாமோ என்று வருத்தப்பட்டது ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான். அதுகூட முடிக்குத்தான் முடி என்றால் அந்த முடியே நமக்கு வேண்டாம் என்று விட்டாச்சு. ஆனானப்பட்ட முடியே வேணாம் என்டவனுக்கு பிறகென்ன கவலை இருக்க முடியும், இல்லையா?

*ஹிப்பி : பெண் பிள்ளைகள் தோளுக்கு மேல முடி வெட்டியிருந்தால் ஹிப்பித் தலை என்று சொல்லுவது நம்மூர் வழக்கம்.

நிற்க, 'பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா? இல்லையா.' என்ற பாண்டிய மன்னனின் சங்ககால ஆராய்ச்சி முதல், 'அடர்காட்டில் தானே தொலைந்தேனே உந்தன் கூந்தல் இருட்டிலே' என்று இன்றைய கணணி யுகத்திலும் கூட இந்த ஆம்பிளைகளுக்கு முடிமேலுள்ள இந்த தீராத காதல்  எதனால் என்பது தான் இன்னும் புரியாத புதிராகவேயுள்ளது.



Share
Tweet
Pin
Share
3 comments

பிறந்தநாள் அதுவுமா விடிய காத்தால எழும்பி குளிச்சு கோவிலுக்கு போய் அவள் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு பிரசாதமும் கையுமா வீடு வந்து, ஆறாவது முறையாக மங்களம்/அர்ச்சனை பாடி துயிலெழுப்பும் அம்மாவின் குரல் இப்போது எட்டாவது கட்டையை தொட்டிருக்கும். எழும்ப சற்றும் மனமேயில்லாமல் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து நடுவானில் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கும்போது தோன்றும் ஏண்டா பிறந்தோம் எண்டு.. சூரியனும் அதுபாட்டுக்கு சிரித்துவிட்டு அவள் பல் துலக்கி குளிச்சு ரெடி ஆகுமுன்னமே அந்திவானில் ஓடிப்போய் ஒழித்துவிடும். பிறகென்ன அப்பிடியே போய் திரும்பவும் அவள் பாட்டுக்கு தனது வேலையப் பார்க்கப் போய் மறுபடியும் அடுத்தநாள் காலை/மதியம் மங்களம் பாடி எழுந்திருக்கும் போது சில சமயம் தோன்றும் அட கடவுள் எவ்ளோ பாவம் என்று..

அதாகப் பட்டது என்னவெனில் வாழ்க்கையில் ஒரு லட்ச்சியமும் இல்லாமல் கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் இதுதான். என்ன ஒன்று அவர்களுக்கு வேலை.. அவளுக்கு தூக்கம். 

1995 ஏப்ரல் 10. பிறந்தநாளுக்கு ஒருவாரத்துக்கு முன்னமே என்றுமில்லாத ஒன்றாய் அமர்க்களப் படுத்த தொடங்கியிருந்த அவளைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது அம்மாவுக்கு. ரெண்டு நாளைக்கு முன்னமே கேக் ஆர்டர் கொடுத்துவிட்டிருந்தாள். அன்றைய திகதிக்கு கேக் செய்யும் அந்த அக்காவிடம் அவ்வளவு complicated ஆன pattern போடச்சொன்ன முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். சட்டை கூட ரத்தக் கலரில்.. அவள் selection தான். அன்று மதியம் "என்ன இந்தமுறை சொல்லிச் செய்யிரமா?" என்று தயங்கித் தயங்கி கேட்ட அம்மாவை வினோதமாய்ப் பார்த்து இல்லையென்று தலையாட்டி விட்டு ஓடிவிட்டாள். அன்றும் வழமைபோல் அப்பா ஹாப்பி பர்த்டே பாட, அம்மா நெருப்பெட்டி எடுத்துத் தர, போடோக்ராபர் படமெடுக்க, கத்தியை எடுத்து வெட்டும் போது நினைத்துக் கொண்டாள் 'இனி வயலினை வாழ்நாளில் தொடுவதில்லை' என்று. 

2001 ஏப்ரல் 10. அவர்களே நினைத்திருக்கவில்லை, சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன ஒரே பிள்ளை இவ்வளவு சீக்கிரத்தில் மீளக் கிடைக்குமென்று. புறப்படும் அவசரத்திலும் அவளின் பிறந்தநாளுக்காக வாங்கி வைத்திருந்த உடையை மறக்காமல் எடுத்து வந்திருந்தார் அவளது அம்மா. கன்னங் கரேல் என்று.. அவள் selection தான்.  உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த அவர்களால் பேசவே முடியவில்லை. சுற்றி நின்றவர்கள் / நேற்றுவரை யாரென்றே அறிந்திராதவர்கள் ஹாப்பி பர்த்டே பாட, போடோக்ராபர் படம் எடுக்க, lighter ஆல் மெழுகுதிரியைக் கொளுத்தியபோது நினைத்துக்கொண்டாள் 'எல்லாவற்ரையுமே எரித்து விட வேண்டும்' என்று.

கடந்த முப்பத்துரெண்டு வருடங்களில் எத்தனை சபதங்கள்.. எத்தனை எரிப்புகள்.. மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து, வளர்ந்து வளர்ந்து, சாகும் ஆசைகளை அடைந்து துறந்து, வாழ்ந்து எரித்து.. கேசரியோ கேக்கோ ஒன்றை வெட்டி, படத்திர்க்காய் புன்னகைக்கும் அந்தநாட்களில் இன்றைக்கும் அவளுக்கு தோன்றாமலில்லை 'ஏன் பிறந்தோம்' என்று.

அவள் ஒரு தொடர்கதை நாட் குறிப்பேட்டிலிருந்து, சில பக்கங்கள்.



Share
Tweet
Pin
Share
No comments

பல நாட்களின் பின்பு Mr Romeo படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாடல்ஐ தற்ச்செயலாய் கேட்க நேர்ந்தபோது தோன்றியது,

"தங்க மீன்கள் தண்ணீரைக் காதலிக்குமா?"

மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒரு சிறிய / அர்த்தமில்லாத கேள்விதான். ஆனால் இதுவே "நான்யார்?" என்ற தேடல் போலவே.. தங்க மீன்கள் என்றால் என்ன? அவை தங்கத்தாலான மீன்களா / தங்கமான குணமுள்ள மீன்களா? என்று நீண்டுகொண்டு போகக்கூடியது போலத் தோன்றியது.  முதலாவது வகை என்றால் விடை ஓரளவு எளிது. அதுவே ரெண்டாவது என்றால்.. உடனே தோன்றுவது மீன்கள் என்றால் அவை எத்தனை..? அவற்றுக்கிடையேயான உறவு என்ன? என்பதுதான். இப்படியான இன்னோரன்ன கேள்விகள் எழும் போதே ஆரம்ப கேள்வியை / அந்த மீனுக்கு  அடிப்படையானது ஆதாரமானது தண்ணீர் தான் என்பதையே மறந்து விடுகிறோம் இல்லையா? அதாவது இன்னோர் மீனைத் தேடும் / தங்கியிருக்கும் / கவரும் முயற்ச்சியில் தான் உயிர் வாழ்வதே தண்ணீரால் தான் என்பதை அதுவும் வெகு இலகுவிலே மறந்துவிடுகிறது.

சரி சரி.. இந்த தத்துவ ஆராய்ச்சியில் இங்கே முக்கியமாய் சொல்ல வந்ததை மறந்திட்டன் பாருங்கோ. அதான் நம்ம "தங்க மீன்கள்" படக்குழு "உங்களுக்குள்ளை இருக்கிற புகைப்படக் கலைஞரை தட்டி எழுப்புவதற்காக" ஒரு போட்டி வைக்குதாம். அதிலை பங்கு பற்ற விரும்புபவர்கள் thangameenkalcontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம்.



நிற்க, நம்மள்ட தானே வீட்லையே ரெண்டு தங்க மீன்கள் இருக்கே ஏன் அனுப்பக் கூடாது எண்டு ஒருதடவை தோணிச்சுது. ஆனா அடுத்த கணமே நாமெல்லாம் யாரு கும்பகர்ண பரம்பரைஎல்லே? நீங்க எப்பிடி எப்பிடித் தட்டினாலும் நாங்க எழும்ப மாட்டம்.. அப்பிடியே எழும்பினாலும் நம்ம தங்கமீன்களைப் பிடிச்சு வைச்சு படமெடுக்கிரதுக்குள்ளை அப்பப்பா.. வேணாம் சாமி!  

நாங்க அப்பவே இப்படி..


அதால தயவு செய்து படலைக்காரரோ இல்லை கமராவை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாத சயந்தன் மற்றும் அவர் தோழர்களை பங்குபெறும் வண்ணம் அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. (ஏதொ நாமதான் நடத்திரப்போல.. ஏன் முடியாது? இருங்க.. இருங்க.. நாங்களும் வந்திட்டிருக்கிரம். நம்ம பிரபல எழுத்தாளர் மண்டையக் காய வைச்சு கதை பண்ணிட்டிருக்கிறார்.)


பிற்குறிப்பு : சரி ஒரு மாறுதலுக்காக பர்த்டே வேற வருதா அதால அம்மா கூட இருக்கிராப்பால ஏதாச்சும் ஒரு நல்ல படம் மாட்டுமா எண்டு கிண்டிப் பாத்தா.. எல்லாத்திலையுமே விளக்கெண்னை குடிச்ச எதொவாட்டம் மூஞ்சிய வைச்சிட்டிருக்குது நம்ம தங்கமீனு..

My Mom Still Thinks She's 29.



Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...

Blog Archive

  • ►  2017 (5)
    • ►  நவம்பர் (5)
  • ►  2016 (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
  • ►  2015 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2014 (8)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2013 (27)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ▼  ஏப்ரல் (4)
      • உழைப்பாளிகள் தினம்
      • தலை முடி
      • பிறந்த நாள்
      • தங்க மீன்கள்
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2012 (43)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (11)
  • ►  2011 (43)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (10)
© 2013 Gowri Ananthan. Blogger இயக்குவது.

Popular Posts

  • கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு
  • கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
  • தலை முடி
FOLLOW ME @INSTAGRAM

Created with by BeautyTemplates