தலை முடி
"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதை யை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை. இதுதான் நம்ம முடிக்கதை. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது. அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து ...