திங்கள், நவம்பர் 28, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஆசிரியர் பின்னூட்டம்


அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!

பல இன்னல்கள் மத்தியிலும் இத் தொடரை முழுமையடையச்செய்த  உங்கள் மகத்தான ஆதரவுக்கு நன்றி.

இவை அனைத்தும் சற்றே வித்தியாசமான நடையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்ட பலர்,  யாரோ ஒருவரின் தினக்குறிப்பேட்டைப் படிப்பதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். சிலர் தமது வாழ்க்கையிலும் கூட இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பதாகவும்  தெரிவித்திருந்தனர். உண்மைதான். இவை அனைத்துமே பலவருடங்களுக்கு முன்புநடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே. இவை யாருக்கோ எதனாலோ நடந்திருக்கலாம். ஆனால் சற்று ஊன்றிக் கவனித்தோமானால் பல விடயங்கள் திரும்ப திரும்ப நடந்திருப்பது புரியும்.

உதாரணத்துக்கு தடுப்புமுகாம் சம்பவம் இன்றும் கூட நடந்துகொண்டிருப்பது. ஆனால் அதன் தீவிரம், கொடூரம் அன்றை விட இன்று பலமடங்கு அதிகம். முதல் தரமே விழித்திருந்தால் இரண்டாவதுமுறை நடப்பதைத் தவிர்த்திருக்கலாம் தான். ஆனால் அதுவே பூதாகரமாகி பின் வேறொரு உருவில் வந்தால்..? இப்படி பல குழப்பங்கள், தவிப்புகள், நிராசைகள், ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு தனிமனித வாழ்க்கைப் பாதையை என்னால் முடிந்தவரை சமூக அக்கறையுடன் சேர்த்து படம் பிடித்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன். இது எனது கன்னி முயற்சியல்ல. ஆனால் கடைசி முயற்ச்சியாய் இருக்கலாம்.

சகோதரர்களே, நமது வாழ்க்கைப் பாதையில் ஆயிரம் வலிகள், துயரங்கள் தான் இருக்கட்டுமே.. ஒருதுளி கண்ணீர் நிலத்தை நனைக்குமுன் அந்த மாவீரர்களின் கனவுகளை, தியாகத்தை சற்றே யோசித்துப் பாருங்கள். எமது வலிகள், ஏக்கங்கள் எல்லாம் அற்பமாய் துச்சமாய் காணாமலே போய்விடும்.

"அவர்கள்" நீதியின் முன் ஏழை, பணக்காரன் பார்த்ததில்லை. தியாகத்தில் படித்தவன், படிக்காதவன் பேதமிருக்கவில்லை. எந்த மதத்தையும் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. ஆனால் ஒவ்வோர் மனதிலும் கடவுள்களாய் குடிபுகுந்துவிட்டனர். அவர்கள் தாம் எமது வழிகாட்டிகள், நம் தலைமுறை காத்த தெய்வங்கள் என்று சொல்லிக்கொடுப்போம், இனிவரும் தலைமுறைக்கு!

இன்று நம்மில் பலர், நாம் எங்கு தவறினோம், எதில் தவறிழைத்தோம் என்பதில் தான் முழுக் கவனமும் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு குறைகளை அலசுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை  நிறைகளாய் மாற்றித் தான் காட்டுவோமே?

இந்தத் தொடர் ஒரு சிலரின் வாழ்க்கைப் பாதையில் அல்லது அவர்களது சமுதாய கண்ணோட்டத்தில் ஒரு சிறு மாற்றத்தையேனும் தந்திருந்தால் அல்லது சற்றே நின்று யோசிக்க வைத்திருந்தால் அதுவே போதும். மற்றபடி யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அறிவுரை சொல்வதற்காகவோ எழுதப்படவில்லை. அதற்கான தகுதியும் என்னிடம் இல்லை. 

"ஒற்றுமையே பலம்!"

என்றும் அன்புடன்,
கௌரி அனந்தன்.

"NOT JUST HISTORY, HER STORY REPEATS ITSELF TOO."

ஞாயிறு, நவம்பர் 27, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : சிவப்பு மஞ்சள்

பாகம் ஐந்து : சிவப்பு மஞ்சள்


வீதியின் இருமருங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. வாத்தியங்கள் முழங்க மரியாதை அணிவகுப்புடன் உருவப் பதாதைகள் முன்னே ஏந்திச் செல்லப்படுகின்றன. தளபதிகள் புடைசூழ, வீதிகளெங்கும் மக்கள் மௌனமாய் கண்ணீர் சிந்த போராட்ட வரலாற்றில் பல பரிணாமங்களை எட்ட வைத்த ஒரு மாபெரும் தளபதி, ராஜமரியாதையுடன் கொண்டு செல்லப்படுகிறான்.

பாதநி ஸகா, ரிஸாநி பா... பின்னணியில் சோககீதம் இசைக்கிறது.

பொன்னியின் செல்வனுக்கு ஒரு வந்தியத்தேவனாய், தனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து போராட்ட வெற்றிக்கு வலுச்சேர்த்த தளபதிக்கு, தனது இறுதி வணக்கத்தைச் செலுத்தினார் தலைவர். போராளிகளும் சக தளபதிகளும் சிரம் தாழ்த்தி தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர். அவர்கள் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு மாபெரும் இழப்பை சந்தித்திருந்தனர்.

முக்கிய தளபதிகள் ஒவ்வொருவராய் வந்து இறுதி வணக்கம் செலுத்தி உரையாற்றினர்.

"இவர் போராட்டத்துக்கு ஆற்றிய பங்கு உலகத்தினால் வெளிப்படையாக விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. காரணம் அவர் தலைவரின் எண்ணத்தில் உருவாகும் நவீன தொழிநுட்ப, ராணுவ சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் மிக முக்கிய பணியை செய்துகொண்டிருந்தார். அதனால் இவரது செயல்பாடுகள் எப்போதும் ரகசியமாகவே வைக்கப்பட்டன."

"விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது, தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார். போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன." - நன்றி இணையம்.

பொருளாதாரத்தடை தீவிரப் படுத்தியிருந்த காலத்திலேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு சொந்தமாக பல புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கியிருந்தார். ஆட்லறி படைக்கலங்களின் எறிவீச்சின் துல்லியத்தை அதிகரிப்பதற்க்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியின் மாற்றியமைப்புமுதல், எந்தக் கண்ணிவெடியாலுமே தகர்க்கப் படமுடியாது என்று உலகெல்லாம் நினைத்திருந்த பவள்கவச வாகனத்தை செயலிழக்கச் செய்த சொந்தத் தயாரிப்பான  கவச எதிர்ப்புக் கண்ணிகள் வரை,  தமிழனின் புத்திசாலித்தனத்தை உலகுக்குத் தெரியப்படுத்தினார்.

தரையில் மட்டுமல்லாது இவரது கண்டுபிடிப்புக்கள், உத்திகள் கடலிலும் பல வெற்றிகளைத் தேடித் தந்திருந்தன. "ஒவ்வொரு வெற்றிபெற்ற மாபெரும் தாக்குதலின் பின்னாலும் இவரின் பங்களிப்பு மறைமுகமாய் ஆனால் பாரியளவில் இருந்தது" கடற்படைத் தளபதி கருத்துரைத்தார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில், யாழ் நூலக எரிப்பு, கருப்பு ஜூலை போன்ற பல திட்டமிடப்பட்ட தொடர் இனவொடுக்குமுறை நிகழ்வுகள் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பின்னாளில் பல ராணுவ வெற்றிகளுக்கு காரணமாகவிருந்து, இயக்கத்தின் படைய அறிவியல் துறை உருவாவதற்கு அச்சாணியாக இருந்த இவரைக் கௌரவிக்கும் நோக்கில்,  இவரது பெயரிலே புலிகளின் "படைய அறிவியல் இராணுவ தொழிநுட்ப ஆய்வு நிறுவனம்" பின்னர்  உருவாக்கப்பட்டது.
"ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ் வரிசையில் இவரது வாழ்வும் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது."

"இவர் சாவை எய்தவில்லை, அதன் மூலம் மகிமையை எய்தினார்." என்பது முற்றிலும் உண்மையே.


Ref : SKgryEo553I


௨௦௧௧ கார்த்திகை ௨௭. இது அவரது பத்தாவது மாவீரர்தினம்.

தீலீபன் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை வீட்டில் சண்டைபிடித்துப்போய் பார்த்தவளுக்கு அவரின் இறுதி ஊர்வலத்தின் காணொளியைப் போட்டுப் பார்க்கும் தைரியம் கூட இத்தனை வருடத்தில் இப்போதுதான் வந்திருந்தது. இருபதுவருடமாய் சுதந்திரக்காற்றை சுவாசிக்கத்துடித்த ஒரு மாவீரன், மாலை மரியாதைகளுடன் பெட்டியில் இறுகப்பூட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறான். அவரது கனவுகள் அவருடன்  இருந்தவர்களிடம் விதைத்துச் செல்லப்படுகிறது.


அன்றுபோல் தான் இன்றும்; அவள் அழமாட்டாள். ஆனால் சொல்லவேண்டும். எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிடவேண்டும். அன்று போலவே இன்றுமவன் மௌனமாய் முறுவலிப்பான். கோபப்படுவான். அவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் கட்டிஎழுப்பிய அந்தக்  கனவுதேசத்தை எம்மால் காப்பாற்றமுடியாமல் போனதுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் கனவுகண்ட தலைமுறையை எம்மால் உருவாக்க இயலாமல் போனதுக்காய் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கோழைகளாய் ஓடி ஓடி ஒளிந்து, கடைசியில் உயிர்ப்பிச்சைகேட்டு உலக வல்லரசுகளிடமெல்லாம் கையேந்தியதைச் சொல்லவேண்டும்... ஒருவிதவையின் கண்ணீருக்கு, ஒருதேசமே பலியிடப்பட்டதை சொல்லவேண்டும்.. இன்னும் எத்தனையோ..

இல்லை.. வேண்டாம்... அவனுக்கு எதுவுமே தெரிய வேண்டாம்.

ஆயிரமாயிரம் மாவீரர்களின் நடுவில் அவனும் நிம்மதியாய், தன் கனவுகளுடனே உறங்கட்டும். ஒருதேசம் சிந்திய ரத்தத்துக்கு, இந்த உலகமே பதில்சொல்லும் நாள்வரும்.. அதுவரை அவர்களை யாரும் எழுப்பாதீர்கள்! 

அவர்கள் கனவுகண்ட சுதந்திரதேசம் அவர்களின் சொந்த மக்களாலே சின்னாபின்னப் படுவதை அவர்கள் பார்க்கவேண்டாம்!

தேநீர்க்கோப்பைகள் எல்லாம் மதுக்கிண்ணங்களானதை அவர்கள் அறியவேண்டாம்!

இத்தனை வருடங்களாய் அவர்கள் கட்டிக்காத்த ஒழுக்கம் இன்று காற்றில் பறப்பது தெரிய வேண்டாம்!

அன்று அவர்கள் உயிர் கொடுத்துக் காத்த தலைமுறை, இன்று காதலுக்காய், பணத்துக்காய், வன்மைத்துக்காய் கொலை, வெட்டு, குத்து, உயிரோடுஎரித்தல் என்று அழிந்து போவதைப்பார்த்து அவர்கள் வருந்த வேண்டாம்! 

இத்தனையையும் தடுக்கமுடியாமல் ஏதிலிகளாய், அவர்களது தியாகங்களை நெருப்பில் போட்டு அவர்கள் கனவுகளை அழித்து அவர்கள் உதிரத்தில் ஏன் தீயேற்றுகின்றீர்கள்? உங்களுக்காய் உங்கள் நிம்மதிக்காய் உங்கள் சுயநலத்திற்காய் அவர்கள் இதுவரை இழந்தது போதும். இனியேனும் அவர்களை நிம்மதியாய் தூங்கவிடுங்கள். 

யாரும் மறந்தும் கூட அழுதுவிடாதீர்கள்.. அவர்களுக்கு கண்ணீர் பிடிக்காது!


***** 


இன்று நம் தாய்நாட்டிலே, அவளது கருவறுப்பதுபோல் அவர்கள் கல்லறைகளிலிருந்து வலுக்கட்டாயமாக எழுப்பப்படுகிறார்கள் நமது சகோதரர்களால். அவர்கள் நிச்சயம் வருவார்கள்.. மீண்டும் வந்து பிறப்பார்கள்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க.. சிவப்பு மஞ்சள் வண்ணங்களின் நடுவே...அத்தகைய காலத்தினால் அழியாத மாவீரர்களுக்கு, இத்தொடர் சமர்ப்பணம்!!!

நன்றி .
வணக்கம்.

*****

வெள்ளி, நவம்பர் 25, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : அக்கினிக் குஞ்சு

பாகம் நான்கு : அக்கினிக் குஞ்சு 

தாண்டிக்குளம் முன்னரங்குநிலை.

"இன்னும் எவ்வளவு நேரம் இந்தக் கொதிக்கிற வெய்யிலுக்கை நிக்கிறது? எப்ப கூப்பிடுவாங்களப்பா?"
"இவ்வளவு சனம் முன்னால நிக்கிறதைப் பாத்தா இண்டைக்கும் போகேலாது போலத்தான் கிடக்கு" என்றவரை முறைத்துப் பார்த்தாள். இவர் எப்பவுமே இப்படித்தான். அபசகுணமா ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்.

ரெண்டுநாளா ஒரே சண்டை. "எனக்கு இங்கை நிறைய வேலையிருக்கு. உங்களோடை கொழும்புக்கெல்லாம் வர ஏலாது. அங்கை  கொண்டுவந்து அனுப்பி விட்டுட்டு திரும்பி வந்திடுவன் சரியே?" எண்டு சொல்லித்தான் இதுவரையுமே வந்திருந்தார். பின்னர் "வயதுக்கட்டுப்பாடானவை வெளியாலை இருந்து யாரும் கூப்பிடாமல் போறது கஷ்டம்" என்று யாரோ சொல்லவும் "சரி அப்ப திரும்பலாம் தானே?" என்று மூட்டை கட்டியவருடன் சண்டை பிடித்து, அடம்பிடித்து அம்மாவை நேற்றுத்தான் முதல்லை வெளியே அனுப்பிவைத்திருந்தாள். அவா அண்ணாட்டை சொல்லி இண்டைக்கு எப்பிடியும் வெளியாலை எடுத்திடுவா. ஆர்வமாய் ஒலிபெருக்கியில் சொல்லப்படும் பெயர்களை உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.

இதுவரை அவள் நேசித்த, சுவாசித்த அந்தமண்ணைப் பிரிவதில் அவளுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. போய்விடவேண்டும். இந்த யுத்த பூமியிலிருந்து, அவள் கனவுகளை சிதைத்த தேசத்திலிருந்து.. அதன் மரண ஓலம் கேட்காத தூரத்துக்கு ஓடிவிட வேண்டும்.. யாரெப்படிப் போனால் அவளுக்கென்ன? இவர்களைப் போய் போராடச்சொல்லி யார் அழுதது?

"கண்ணனுக்கு கலியாணமாயிட்டுதாமே? தெரியுமே உனக்கு?"
"அப்பிடியே.. நல்ல விசையம் தானே?"
"மனுசி உள்ளை தானாம். அவன்டை கனவேலை எல்லாம் கூடஇருந்து செய்து குடுத்திருக்குதாம்."
"எப்பிடியாள்?"
"ஆள் எப்பிடி எண்டு தெரியாது. அவனுக்குப் பிடிச்சிருந்தால் சரிதானே. ஏதோ இப்பவாச்சும் கலியாணம்  எண்டு ஒண்டு கட்டவேணுமெண்டு நினைச்சானே அதுவே நல்லது. அதுகள் சந்தோசமாய் இருக்கட்டும்."
"ஏதாச்சும் விசேசம் இருக்காமே?"
"நான் நினைக்கேல்லை. அதுவும் போராட்டம், லட்சியம், கனவு எண்டுதான் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்குதாம். இவங்கள் எல்லாம் செத்து, பிறகு யாருக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போறாங்கள் எண்டுதான் தெரியேல்லை."
மீண்டுமொருமுறை மனதில் பதித்துக்கொண்டாள், மறப்பதற்காகவே.

"இப்பவும் இறங்கி நிக்கிறதோ இல்லாட்டி..? "
"அதெல்லாம் உவங்கள் சொல்ல மாட்டாங்கள் தானே? ஊரிலை எத்தினைபேர் ஆமி கலைச்சிட்டுப் போனதுக்கு, வேலிபாஞ்சு ஓடிஒளிச்சதையே பெருசா பீத்திக்கிட்டிருக்குதுகள். இவன் என்னடாவெண்டால் என்னமோ கனக்கவெல்லாம் செஞ்சிருகிறான் எண்டு சொல்லுதுகள். ஆனால் அதைப்பற்றி கேட்டா  வாயே திறக்கமாட்டன் எண்ணுறான்."
"சரிதானே. வேறை யாரேனுமறிஞ்சால் அவன்டை உயிருக்கும் தானே ஆபத்து. பிறகேன் கேக்கிறீங்கள். இப்படி எப்பவாச்சும் ஒருக்கா வாறதும் உங்களுக்கு பிடிக்கேல்லையே."
வாழ்க்கையில் பல நிகழ்வுகள் மாறி மாறி வரும். ஆனால் சில நிகழ்வுகள் தாண்டிப் போகும்வரை புரிவதில்லை, அவைதான் இறுதியானவை என்று.

அவனது தந்தையின் ஈமைச்சடங்கு. எல்லோரும் சுற்றிவரநிண்டு அழுது கொண்டிருந்தார்கள். அவள் மட்டும் வாசலைப் போய்ப்பார்ப்பதும் உள்ளே வந்து பார்ப்பதுமாயிருந்தாள். கொள்ளிவைக்க எப்படியும் வருவான். ஆனால் கதைக்க முடியுமா? முந்திஎண்டாலும் பரவாயில்லை துணைக்கு ஒருவன்தான் கூடவேயிருப்பான். இப்பவேண்டால் கருப்புபூனைகள் மாதிரி நாலைஞ்சுபேர் சுத்தி நிப்பாங்களாம். அவள் ஏதாவது ஏடாகூடமாக செய்யப்போய் அதுவே அவனுக்குப்பின் தீராத பழியாகி விடக்கூடாது.

"இங்கை நிண்டு இன்னும் என்ன ஏமலாந்திக்கொண்டு நிக்கிறே. நான் கூப்பிடுறது காதிலை விளேல்லையே? பிரேதம் எடுத்தாச்சு வீட்டை போய் தோஞ்சிட்டு பிறகு வருவம் வா." அவளை இழுக்காத குறையாக கூட்டிப் போனார் அம்மா. வழியெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனாள், வாகனம் ஏதும் வருகுதா எண்டு.

"நீயென்ன உடனை போயிட்டாய். கண்ணன் நேர மாயானத்துக்குப் போனவன்.. உன்னை கேட்டவன்"
"ஓ.. அப்பிடியே? ரெண்டு நாளா குளிக்கேல்லை தானே. அதுதான் பிரேதம் எடுத்தாச்சுத்தானே எண்டு வந்திட்டன்." என்ற அம்மாவை அன்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.


"அப்பா. அவங்கள் என்னைக் கூப்பிடிட்டான்கள்.." சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவளின் முகத்தில் புதிய உலகைப் பார்க்கப்போவதற்கான மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

"வடிவாக் கேட்டனியே? உண்டை பேர்தானே?" என்ற அப்பாவின்மேல் இப்போது கோபம் வரவில்லை.

"ஓமப்பா. அவங்கள் உங்கடை பேரைத்தான் இப்படிக் குதறிச் சொன்னவங்கள். இங்கைஎல்லாம் அப்பாட பேரை தானாமே சொல்லிக் கூப்பிடுவாங்கள்? எண்டை ஆண்டு நாலு டீச்சர் கூட என்னை அப்பிடித்தான் கூப்பிடுவா.." என்று கண்களில் புதுக்கனவுகள் மின்னலடிக்க சொன்னவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தார்.

"உங்களுக்கு நம்பிக்கையில்லைஎண்டால் நீங்களே போய்க் கேளுங்கோ.." என்றவள் தானும் பின்னாலேயே போனாள். அதில் நின்றவனிடம் போய் அவர் ஏதோ சிங்களத்தில் கேட்கவும் அவன் திரும்பி அவளை ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, பின்னர் லிஸ்டையும் பார்த்துவிட்டு ஏதோ சொன்னான். இருவரும் அவளுக்குப் புரியாத பாஷையில் ஏதோ கதைத்தனர்.

"சரி உன்னைத்தானாம். நான் கூட வரேல்லாதாம். உன்னைப்பிறகு கேம்ப்ல வந்து பாக்கட்டாம். விட எத்தினைநாள் ஆகுமெண்டு இப்ப சொல்லமுடியாதாம்." என்றபடி தயங்கினவருக்கு வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'இப்படிக் கேம்ப்ல, எத்தின்னாளிலை விடுவான் எண்டுகூடத் தெரியாமல்   இருந்து கஷ்டப்பட்டு அந்தப் புதியவுலகுக்குப் போகத்தான் வேணுமா?' ஒருகணம் தயங்கியவளுக்கு, "நீ பயப்பிடாமப் போ.. சித்தப்பாட்டைச் சொல்லி கெதியா வெளிய எடுத்திடுவம் சரியே?" என்று தைரியம் சொன்னவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.  'இதுவரைக்கும் வந்தாச்சு. அம்மா வேறை, நான்  வந்துசேர்ந்திடுவன் எண்ட நம்பிக்கையிலை தான்  போயிருகிரா. சரி. போய்த்தான் பாப்பமே' என்று முடிவெடுத்தாள்.

காமினி வித்தியாலையத்தை தற்காலிக தடுப்புமுகாமாக்கியிருந்தனர். அங்கு அவளையும் சேர்த்து  வயதுக்கட்டுப்பாடான ஒரு முந்நூறுபேர் ஆண்பெண் வித்தியாசமின்றி ஆட்டுமந்தைகள் போல ரெண்டு சிறிய கட்டடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். சுற்றிவர முள்ளுக்கம்பிவேலி.  அதியுயர் ராணுவ, போலீஸ்  பாதுகாப்பு. நிராயுதபாநிகளிடமிருந்து தம்மைகாக்க.

அவள் வயசுக்குவந்ததைவிட வேறெந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை, அதிலிருந்த பலரைப் போலவே.
"இதுக்கு பேசாமல் அங்கயே இருந்திருந்தால், மானத்தோடையாச்சும் செத்திருக்கலாம்."
"மக்களை மீட்டெடுக்கிறம் எண்டு பொய்சொல்லி வரவைச்சு, இப்படித்தான் காம்பிலை போட்டு கொடுமைப்படுத்து அரசாங்கம். இதை உள்ளுக்க நிக்கிற எங்கடை சனத்துக்கு சொன்னாலும் விளங்காது. என்ன செய்யிறது?"
"நீங்க முந்தியும் வந்திருக்கிறீங்களே?"
"ஓம். அப்ப மூண்டு மாசம்மெல்லாம் அடைச்சு வைச்சிருந்திருக்கிறான்கள். கிழமைக்கு ஒருக்கா முகமூடியைக் கொண்டுவந்து காட்டுவாங்கள். அவன் தலையாட்டினா அப்பிடியே போய்ச் சேர வேண்டியதுதான். அப்பிடி கனபேர் காணாமலே போயிருக்கினம்."

மறுநாள் விடிந்தது. எல்லோரையும் உணவுக்கு வரிசையில் நிக்கச் சொன்னார்கள். அவள் போகவில்லை. சாப்பாட்டிற்காய் யாரிடமும் சென்று கையேந்தி நிற்பது அவளுக்குப் பிடிக்கவில்லை, அதுவும் பட்டினிபோட்டவர்களிடமே. ஒருநேரம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் செத்துப் போய்விடமாட்டினம் என்று தோன்றியது.
"உந்தப் பாணையும் அவியாத பருப்பையும் தின்னுறத்துக்கு, பேசாமல் உண்ணாவிரதமே இருக்கலாம்" முணுமுணுத்தவனின் பானைத்தட்டிவிட்டு அவனையும் துவைத்தெடுத்தனர். எங்கேயோவிருந்து ஓடிவந்த நாய் கீழேவிழுந்த அவனது பாணைத் தூக்கிக்கொண்டு ஓடி மறைந்தது.

வெயில் ஏறஏற அவளுக்கும் பசி வயிற்றைக்கிள்ளத் தொடங்கியது. நல்லகாலமாய் மதியம் அவளது அம்மா வீட்டிலிருந்து சோறு கட்டிக்கொண்டு வந்திருந்தார். அவவுடன் கதைத்துவிட்டு பின்னர் எல்லாவித பரிசோதனைகளும் முடிந்து அந்தப் பார்சல் அவளின் கைக்குவரவே பொழுது சாய்ந்துவிட்டிருந்தது. அதை அவசர அவசரமாய்ப் பிரித்துத்தின்று அன்றைய உண்ணாவிரத்தை ஒருவாறு வெற்றிகரமாய் முடித்துக்கொண்டாள்.
"இந்த (தள்ளாத) வயதிலும் ஈழ மக்களுக்காய் உண்ணாவிரதமிருக்கும் எங்கள் கலைஞருக்கு எங்கள் தமிழினமே கடமைப்பட்டிருக்கிறது." மைக்கில் ஒருத்தன் தொண்டைகிழியக் கத்திக்கொண்டிருந்தான். ஒரு ரெண்டு மணிநேரம் கழிஞ்சிருக்கும்.  மதிய வெயில் எல்லோரையும் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்தவர் கலைஞரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். "மத்திய அரசு எங்கள் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி ஈழத்தில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்திவைக்க சம்மதித்ததால், எங்கள் மாண்புமிகு தலைவர், தமிழினத்தின் விடிவெள்ளி.. இத்துடன் தனது உண்ணாவிரத்தை முடிக்கிறார்.."  
"இவனையெல்லாம் பட்டிநிகிடக்கச் சொல்லி யார் அழுதது? மயங்கி விழுந்திட்டானாம். தூக்கிக்கொண்டு போறாங்கள். நேற்றுப் பாணாச்சும் கிடைச்சுது. இண்டைக்கு அதுவும் கிடைக்குமோ தெரியேல்லை." அந்தக் குரலில் வெறுப்பு, விரக்தி, ஏக்கம், தவிப்பு எல்லாமே இருந்தது.

ஆனால் யார்சொல்லியோ தெரியாது; திடீரெண்டு ரெண்டு பெரியமனுசங்கள் வந்து முகாமிலை ஆண்கள் வேறாகவும்  பெண்கள் வேறாகவும் தங்குவதுக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள்.

இன்று ஏழாவது நாள். அவன் சொன்னவாறே 'தலையாட்டி' வந்தது. ரெண்டுமுறை அந்த வானுக்குமுனால் வரிசையில் போய்வர விட்டார்கள். பின் ஒவ்வொருவராய் வரச்சொல்லி, அதன் முன்னின்று முழுப் பெயரைச் சொல்லிவிட்டு முகத்தை நல்லா நிமிந்து காட்டச் சொன்னார்கள். சுற்றிவர வெள்ளைத்துணியால்மூடி கண்கள்மட்டுமே தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்தாள்.  அதன் கண்களை நேருக்குநேர் பார்க்க அவளுக்கு எந்தவித அச்சமும் இருக்கவில்லை. எதற்கும் துணிந்துதானே வந்திருக்கிறாள். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத மிரட்சி அதன் கண்களில் தெரிந்தது.

"நித்தியா.. அனந்த.. கவுத?" யாரிடமிருந்தும் பதிலில்லை. சிங்களத்தில் ஏதோ திட்டினார்கள். அவள் பேசாமல் எழுந்து சென்றாள். வெள்ளைவானில் ஏற்றினார்கள். உள்ளே இன்னமும் மூன்றுபேர் இருந்தனர். அவளைத்தவிர எல்லோருமே ஆண்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எல்லோர் முகங்களிலும் ஒருவித அச்சம் பரவியிருந்தது. அவள்மட்டும் அமைதியாயிருந்தாள்.

"பகின்ன.. பகின்ன.. ஒக்கம பகின்ன.."

எல்லோர் கையிலும் ஒவ்வோர் பலகை குடுத்து பெயர், வயது மற்றும் தொடர்எண்குறித்து முன்னால் பக்கவாட்டில் என்று படமெடுத்தார்கள். பிறகு குழுஎண் குறித்து சேர்த்துவைத்து படமெடுத்தனர். என்ன நடக்குதெண்டு யாருக்குமே புரியவில்லை. அவளை மட்டும் தனியே கூட்டிச் சென்றார் ஒருவர்.

ஏன் வந்தாய்? எதற்க்குவந்தாய்? யாரிடம் வந்தாய்? எங்கு போகிறாய்? என்பதாய் பல கேள்விகள். எதற்கும் அவளிடம் உருப்படியான பதிலில்லை. ஆனால் மொழிபெயர்த்தவன் அவளுக்காய் ஏதேதோ சேர்த்துச் சொன்னான். அரைமணிநேர கடும் விசாரணையின் பின் உள்ளே காத்திருக்கச்சொல்லியவன், அவசரமாக வந்து அவள் கையில் ஏதோ ஒருதுண்டைச் செருகி "இந்தா இதைக்கொண்டே வெளியால குடுத்திஎண்டால் பாஸ் தருவாங்கள்.." என்றவனை இடைமறித்து, "மற்றவை எல்லாம் எங்கை? இன்னும் விசாரணை முடியேல்லையே?" ஆதங்கத்துடன் கேட்டாள். "உனக்கு உருப்படியாப் போச்சேர ஆசையில்லையே? கெதியா வெளிக்கிடு. இங்கை நிக்கிற ஒவ்வொரு நிமிசமும் என்ன நடக்குமெண்டு யாருக்கும் தெரியாது." அவன் குரலில் பதட்டமிருந்தது.

"என்னை விடுங்கோ. எனக்கு ஒண்டும் தெரியாது. நான் அம்மாவைப் பாக்கவேணும். அவாட்டை யாரேன் போய்ச் சொல்லுங்கோ. நான் இங்கைதான் இருக்கிறன் எண்டு. ஐயோ.. அம்மா.. அடிக்கிறாங்கள்.. காப்பாத்துங்கோ.." அழுகையும் அரற்றலுமாய் உள்ளே  ஒருகுரல் கதறித்துடித்து தேய்ந்து அமுங்கிப் போனது.
டிவியில் "ஐயோ அம்மா..  என்னைக் கொல்லுறாங்கள்.. காப்பாத்துங்கோ.." கலைஞரின் கதறல் காதைக்கிழித்தது. எரிச்சலுடன் ரிமோட்டை எடுத்து 'ஆப்' பண்ணினாள்.
இயலாமை முதுகில் சாட்டையடிக்க, கனத்த இதயத்துடன் வெளியேவந்து பார்த்தாள். சுற்றிவர கண்ணுக்கெட்டின தூரம்வரை எந்தக் கட்டிடங்களையுமே காணவில்லை. தூரத்தில் ரெண்டு ஆட்டோ மட்டும் நின்றுகொண்டிருந்தது. தோளில் ஒருசின்னப்பை, கைகளில் வெறும் ஐந்து ருபாய். கொதிக்கும் அக்கினி வெயிலில் யாருமில்லா வீதியில் வெறுங்காலுடன் நடக்கத் தொடங்கியவளுக்கு, ஒரு புதிய உலகத்தை படைப்பதற்கான அறைகூவல் உரத்துக் கேட்டது. மிகத்தெளிவாகவே..
'வெந்து தணிந்தது காடு; -- தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'

***** 
தொடரும்..

செவ்வாய், நவம்பர் 22, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : தேநீர்க் கோப்பை


பாகம் மூன்று : தேநீர்க் கோப்பை 

அன்று அமிர்தலிங்கத்தின் தேநீர்க் கோப்பையில் விழுந்து தெறித்த ரத்தம் துரோகத்தின் பரிசா? இல்லை நயவஞ்சகத்தின் முதலடியா? இதுவரை தெரியவில்லை அவளுக்கு.

அப்பிடி கண்ணிமைக்கும் நொடியில் தமிழருக்கு விடிவு கொண்டுவாறமாதிரி தீர்வுதர ராஜீவ் காந்தி ஒண்டும் மகாபுருசரில்லை என்பது அவளுக்கு நிச்சயமாய்த் தெரியும். அதுவும் இப்ப பிரதமராய் இல்லாமலேயே அவரின் மனுசிக்கு இருக்கிற பவர்லை, தில்லிலை ஒரு கால்ப் பங்காவது அப்ப பிரதமராய் இருந்த அந்த மனுஷனுக்கு இருந்துதோ தெரியாது.

இட்டாலியன் ஹை-டீ குடிச்சுக்கொண்டு கதைக்கிரவன்களிட்டை போய், "தமிழருக்கு ஒரு நல்ல தீர்வு தாங்கோ ஐயா.." என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களும் ஏதோ போனால் போகுதெண்டு போட்ட பிச்சையை அம்பாரியில் தூக்கிக்கொண்டுவந்து, "தமிழனுக்கு விமோச்சனம் தந்த கலைஞர்.. மன்னிக்கவும்.. ராஜீவ்காந்தி வாழ்க..!" எண்டால் யாருக்குத்தான் கடுப்பாயிராது. ஆனால் கொல்லுமளவுக்கா போயிருப்பார்கள்? அதுவும் "கொஞ்சம் தேத்தண்ணி கொண்டாங்கோ" என்று கேட்டு வங்கிக் குடித்துவிட்டு..

அந்த நேரத்தில் இருந்த எந்தவொரு இயக்கங்களுமே பொதுவாகப் பார்த்தால் அடிப்படைக் கொள்கை என்னமோ ஒன்று தான். ஆனால் அதை யார் செயல் படுத்துவது, பெயரெடுப்பது என்பதில் தான் போட்டியிருந்ததாகத் தோன்றுகிறது. அதனால், அதற்கு குறுக்கை வரும் யாரையுமே அழித்தொழிக்க எந்த இயக்கங்களுமே தயங்கவில்லை. அது வளர்த்து விட்டவர்களாய் இருந்தாலென்ன, சொந்த சகோதரனாய் இருந்தாலென்ன; அவர்களது ஓரேபதில் துப்பாக்கி தான்.
தமிழருக்கு தீர்வென்று ஒன்று வந்தால் அது தம்மால் மட்டுமே கொண்டுவர முடியும், சரியாக நடைமுறைப் படுத்த முடியுமென ஒவ்வொருவரும் வலுவாக நம்பினர். ஆனால் புலிகள் மட்டுமே அவ்வாறு மக்களையும் சேர்த்து நம்பவைப்பதில் வெற்றிகண்டிருந்தனர். அவர்கள் கட்டியெழுப்பிய அந்தக்  கனவு தேசம் மக்களை வியப்பிலாழ்த்தியது. அவர்கள் தமது நாட்டின் கலாசாரம், பொருளாதாரம், சட்ட ஒழுங்கை பாதுகாப்போம் என்று எந்த அரசியல் மேடை போட்டும் வாய்கிழியக் கத்தவில்லை. ஆனால் செய்துகாட்டினார்கள். சொல்வீரத்தைவிட செயல் வீரத்தில் அதிக அக்கறை செலுத்தினார்கள். 

"சாப்பிட்டே வந்தனீங்கள்? கொஞ்ச ரொட்டி கிடக்கு தரட்டுமே?" அவள் அம்மாதான் கேட்டது. இண்டைக்கு எப்படியும் வீட்டைவிட்டு எழும்பவேண்டி இருக்கும் எண்டதால, ரெண்டு நாளைக்குரியதா ரொட்டி சுட்டுக் கட்டிக்கொண்டிருந்தா.
"இல்லையம்மா, இன்னும் கொஞ்ச நேரத்திலை கொண்டுவந்து தருவாங்கள். வெறும் தேத்தண்ணி மட்டும் எல்லாருக்கும் போடுங்கோ" என்றபடி முன்னால் நின்ற ஈரப்பலா மரத்தினடியில் நிலைஎடுப்பதுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த அந்த அக்காவைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ வலித்தது. 'பாவம் இவை. எங்களைக் காப்பாத்துறத்துக்காண்டி எவ்வளவு கஷ்டப்படுகினம். தங்கடை உயிரைக்கூட பொருட்படுத்தாது, தாங்கள் செத்து எங்களை வாழ வைக்கினமே' அவள் கண்கள் கலங்கின.

"இந்தாங்கோ அக்கா தேத்தண்ணி.." கொண்டுவந்தபோது எதோ சின்னக் குழல் போல கிடந்தது இப்ப பூட்டி முடிச்சபிறகு பெரிசா.. ஒருவேளை இதுதான் ஆட்லறியோ? திரும்பி ஒருமுறை அவர்களது வீட்டைப் பார்த்தாள். 'இனி கடவுள் தான் காப்பாத்தவேணும்..' மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

"உதிலை கிணத்துக்கட்டில வையும். பிறகு குடிக்கிறன். இது சரியா வேலை செய்யுதோ எண்டு முதலிலை  பார்க்கவேணும். " பேசாமல் வைத்துவிட்டு திரும்பியவளிடம், "நீர் என்ன வகுப்பு படிக்கிறீர்?"
"ஒன்பது.." தயங்கியபடியே.. 'எதுக்கு இப்ப கேக்கிறா?'
"ஓ.. நல்லா வளந்திருக்கிரீர் என்ன..?" அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னபோது தான் கவனித்தாள் அவ கூட கிட்டத்தட்ட அவள் உயரம் தான் இருந்தது. ஆனால் எப்படியும் ஒரு பதினெட்டு இருவது வயசிருக்கும்.
"அப்பிடித்தான் எல்லாரும் சொல்லுறவை.." வெட்கத்துடன் சிரித்தபடியே அவள் சொன்னபோது அவரது இறுக்கம் சற்றே தளர்ந்து மெலிதாய் புன்னகைத்தார்.

"உங்களுக்கு வேறை ஏதும் வேணுமெண்டாலும் கேளுங்கோ. நாங்கள் போறத்துக்கு முதல்லை எடுத்து தந்திட்டு போறம்.." சற்று யோசித்தவள் நிறுத்தி "இல்லாட்டி வீட்டுத்திறப்பை உங்களிட்டை தந்திட்டு போகச்சொல்லி அம்மாட்டை சொல்லட்டே?"
"அதெல்லாம் வேண்டாம்.. கொஞ்சம் பிழிஞ்ச தேங்காய்ப் பூ இருந்தா மட்டும் தந்திட்டுப் போங்கோ. குளிக்கிறத்துக்கு.." தேங்காய்ப் பூவில் குளிப்பதா? என்ன சொல்கிறார்.
"வெளியிலை பாத்ரூமிலை தண்ணிவரும். காலமைதான் அடிச்சது." என்றவள் தயங்கியபடி,  "அம்மாட்டை ரெண்டு புது சோப்பு இருக்கு. எடுத்து தரட்டா..?" கேட்கவும் அற்பமாய்ப் பார்த்தார்.
"நான் கேக்கிறதை மட்டும் குடுத்தால் போதும். இல்லாட்டி வேண்டாம்." அவர் குரல் தீர்மானமாய் இருந்தது.

"இந்தாங்கோ நீங்க கேட்ட தேங்காய்ப் பூ. அம்மா இப்பதான் எல்லாத்தையும் ரொட்டிக்கு போட்டுட்டா . இது இப்ப திருவிக் கொண்டுவந்தது.. போதுமே..?" கேட்டவள் அவரின் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்து, "காணாட்டி வளவிலை தேங்காய் இருக்கு.. அலவாங்கும் வெளியிலை தான் இருக்கு.." அவர் திரும்பி வினோதமாய்ப் பார்க்கவும் நிறுத்தினாள். 'சே.. என்ன இது அதிகப் பிரசங்கித்தனமாய்.. அவர்கள் போராட வந்தார்களா.. இல்லை இங்கயிருந்து சமையல் சாப்பாடு சாப்பிட வந்தார்களா?' இனி வாயே திறப்பதில்லை.

"ஆர்மி உத்தமன் சிலையடிக்கு வந்திட்டானாம். நாங்கள் அடிக்கத் தொடங்கப் போறம். கெதியா வீட்டைவிட்டு வெளிக்கிடுங்கோ" குடித்து முடித்த தேநீர்க்கோப்பையைத் தந்தபடி சொன்னவரிடம், தயங்கித் தயங்கி  "நீங்க அவங்களை திருப்பிக் கலைச்சுப் போடுவீங்கள் தானே..?  எத்தினை நாளேல்லை நாங்க திரும்பி வீட்டை வாறது?"  கேட்டேவிட்டாள்.

யோசனையாய் கைநகங்களைப் பார்த்தவர், "ரெட் ஆர்மி, கேள்விப் பட்டிருக்கிறியே?" கேட்டவாறே  அவள் கண்களை உற்றுநோக்கவும் தடுமாறிப் போனாள். அந்தத் தீர்க்கம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? ஒருவேளை கொள்கைப்பற்று என்பது இதுதானோ? அவரிடம் பயின்றவர்களாயிருக்குமோ? கேட்டுவிடலாமா?

"இல்லை.." அவள் சொல்லி முடிக்கவில்லை. "போராட வேணும்.. எல்லாரும் இறங்கிப் போராடவேணும்.. ஓடி ஓடி ஒளியிறத்தை விட்டிட்டு, வீட்டுக்கு வீடு.. வீதிக்கு வீதி நிண்டு போராடவேணும்.. படிச்சவன், படிக்காதவன்.. ஏழை, பணக்காரன்..  மாணவர்கள், தொழிலாளிகள் எண்டு எல்லாரும் ஒண்டு சேர வேணும்.." மூச்சுவிடாமல் ஆவேசமாகச் சொல்லியவர் சிறிது நிறுத்தி "அதுவரைக்கும் எங்களை யாராவது அடிமைப் படுத்திக்கொண்டு தான் இருப்பாங்கள்..." அவர்குரலில் சற்றே வேதனை தெரிந்தது. அவள் எதுவுமே புரியாமல் பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்,  "உனக்கு இப்ப இதெல்லாம் விளங்காது. விளங்கிறப்போ நாங்களெல்லாம் உயிரோட இருப்பமோ தெரியாது. ஆனால் எங்கடை கனவு இருக்கும். அது நிச்சயமாய் ஒருநாள் நனவாகும். அதுவரைக்கும் போராடுவோம்."

உண்மைதான். அவர் கூறிய எதுவுமே அன்றவளுக்குப் புரிந்திருக்கவில்லைத் தான். ஆனால் அந்த ஆவேசம் அவளுக்குள்ளும்  இறங்கியிருந்தது.
"போய் ரெண்டு ப்ளேன் டீ வாங்கிக் கொண்டு வா."
என்ன பாக்கிறீங்க..? நாளைய தலைமுறையை உருவாக்கப் போகிற அந்தக் campusல தான்.. 'அன்புத்தொல்லை' நடந்துகொண்டிருந்தது. கொண்டுவந்தாள்.
"உதிலை இருந்து குடி. உன்னோட கதைக்க வேணும்." இருந்தாள்.

"என்ன முறைக்கிறே? உனக்கு டீ போடத்தெரியுமே?" மௌனமாயிருந்தாள். 'ஓம்' எண்டால் அந்த ரெண்டு பக்க செய்முறை விளக்கம் சொல்ல வேணும். 'இல்லை' எண்டாலும் தான்.

"நான் கேக்கிறன், சீனியர் எண்டு ஒரு மரியாதையில்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய் என்ன? உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே?"  அவள் பேசாமல் அவன் கைகளிலிருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்தாள். 
'எங்கள் கனவு, மாணவர் கைகளில்..'
"இப்ப நீ வாயைத் திறக்கப் போறியா.. இல்லை..." அவளிடம் எந்தவித சலனமுமில்லை. அவனுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. கோபத்தைப் போய் சிகரட்டில் காட்டினான்.
'தாழம் பூவின் நறுமணம் தவழும் நம் பூமியில் 
நச்சுக்காற்றை சுவாசிக்கின்றனர் நம் பிஞ்சுகள்'
பாதியில் போட்ட சிகரட்டை அணைக்காமலே வேகமாக வந்து "இப்பிடியே இருந்தாய் எண்டா இங்கை ஒரு கொலை விழும்.."
'பாலாறும் தேனாறும் ஓடிய நம் தேசத்தில் 
இரத்த ஆறு ஓடும்படி சபித்தது யார் சொல் ?'
"உனக்கு இங்கை யாரும் சப்போர்ட்க்கு வரமாட்டினம். எங்களுக்கை அவ்வளவு understanding இருக்குது, ஒருத்தர் விசியத்திலை மற்றவர் தலையிடுறேயில்லை எண்டு.." நிறுத்தியவன்,

"என்னை என்ன விசரன் சும்மா அலம்புறான் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறியே..? நான் உந்த பாவம் எல்லாம் பாக்க மாட்டன்.. சொன்னா செய்திடுவன்" கைகளை முறுக்கியபடி நின்ற அவன் கண்கள் சிவந்துபோய் உண்மையாகவே கொலைவெறி தெரிந்தது.
'கள்ளி மேல் பூமலரும் ரோஜாவோ காய்ந்து தொங்கும் 
தேநீர்க் கோப்பையில் ரத்தம் தெறிக்கும் சாராயச் சிரட்டையில் பாசம் வழியும்!'
கண்களில் நீர்பெருக்கெடுக்க, தலைகுனிந்து, தனது கைகளிலிருந்த கோப்பையைப் பார்த்தாள்..  நிறைந்திருந்தது.. ரத்த நிறத்தில்..


***** 
தொடரும்..

வெள்ளி, நவம்பர் 18, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஒரு கொடி

பாகம் இரண்டு : ஒரு கொடி

"எல்லாம் சரி தான். ஆனா  கொடி வாங்கிறத்துக்கு எப்படியும் ஒரு ரெண்டு லட்சம் வரும். கடன் தான் எடுக்க வேணும்." என்றபோதே கடன்தான் வாழ்க்கையாகிவிட்டிருன்தது புரிந்தது. வேறுவழியில்லை.

பேசாமல் முன்வீட்டு அக்கா போட்டுக்கொண்டிருந்ததைப் போல ரெண்டு பவுணிலை ஒருதாலிய வாங்கி  மஞ்சள் கயித்தில கட்டிவிட்டா கலியாணம் எண்டு சொல்ல மாட்டினமே? தினமும் மஞ்சள் பூசிக் குளித்துவரும் அவவின் முகத்தைப் போலவே தாலியும் பார்க்க அழகா இருக்கும். எங்கடை தாலி மாதிரி இல்லாம அவங்கடை இலச்சினை பொறிச்சு, பாயும் புலியின் கண்களைப் போலவே சும்மா தகதகவென்று மின்னும். பத்துப் பவுனில தாலிய செஞ்சு பெட்டில பூட்டி வைக்கிறத்துக்கு, இது எவ்வளவோ மேல் என்று தோன்றியது. 

ஒவ்வொரு முறையும் அவா வயலின் கிளாஸ்சுக்கு வரேக்க அவளுக்கு ஒருக்கா எடுத்து காட்டவேணும். இல்லாட்டி மூஞ்சிய தூக்கி வச்சுக்கொண்டு இருப்பாள்.

"உள்ளை யாரையேன் பாத்து வைச்சிருக்கிறியே என்ன? " கடைசியாய் வந்தபோது அம்மா கேட்டதுக்கு
"அதெல்லாம் இல்லை.." என்று அவர் சொன்னதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியாய்த்தானிருந்தது.
"போய் ஏழு வருசத்துக்கு மேலை தானே. கலியாணம் கட்டலாம் தானே?" அம்மா விட்டபாடில்லை.
"அதுக்கெல்லாம் எனக்கு இப்ப நேரமில்ல சும்மா போங்கோ" சிரித்துக்கொண்டே சொன்னபோது கொஞ்சம் கவலையாய் இருந்தது. 

அடுத்தமுறை வரேக்கை அவரிட்டை சொல்லி இப்படி ஒரு தாலி செய்து கொண்டுவரச் சொல்லவேணும். ஆனா யாரேன் அறிஞ்சா இன்னும் பெரியவளே ஆகேல்லை அதுக்குள்ளை கலியாண ஆசையைப் பார் எண்டு கிண்டல் பண்ணுவினம். அதாலை அதுவரைக்கும் அவவிண்ட தாலியைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

"கொடியெல்லாம் வேண்டாம். பேசாமல் மஞ்சள் கயித்தில தாலியைக் கட்டலாம் தானே?" அவள்தான் கேட்டாள்.
"எங்கடை தகுதிக்கு சரிப்பட்டு வராது. நாலுபேர் நாலுவிதமா நாக்கிலை பல்லைப்போட்டு கதைக்குங்கள். குறைஞ்சது ஒன்பது பவுனிலையாச்சும் கொடி போட வேணும்." அவள் அம்மா சொன்ன தகுதி என்னவென்று புரியவில்லை. ஒரு பத்துப் பவுன் கொடியிலை போற தகுதியைக் காப்பாத்த வாழ்க்கை முழுவதும் போராட வேணுமா என்ன?

ஒரு தொப்புள் கொடி உறவுக்காய்.. சமூகத்தில் அதன் அங்கீகாரத்திற்காய்.. சன்றோனாக்கும் அதன் கல்விக்காய்.. தொலைந்துபோன உரிமைகளுக்காய்.. வாழ்க்கைப் பாதையில் போராடிப் போராடி.. கடைசியில் என்னத்தைக் கண்டோம்?

"ஏற்கனவே போராட்டம் போராட்டம் எண்டு போய் எங்கடை சனம் இருக்கிறதையும் இழந்ததுதான் மிச்சம். வெளிநாட்டிலை போய் யாராருக்கெல்லாமோ கொடிதூக்கிக்கொண்டு அடிமையாய் இருந்து அவங்களுக்கு உழைச்சுக் கொட்டுறதை கொஞ்சம் பொறுமையாய் இருந்து சொந்த நாட்டிலையே செய்திருந்தால் இன்றைக்கு எங்கடை சனம் எவ்வளவு முன்னேறி இருக்கும்." சொன்னது நிச்சயமாய்  அவளில்லை.

அவளுக்கு உந்த அரசியல் தெரியாமலிருக்கலாம், புரியாமலிருக்கலாம். ஆனால் சாதாரண ஒரு பெண்ணாய்  எல்லோர் வாக்குறுதிகளையும் நம்பி ஏமாந்த ஒரு சராசரித் தமிழன் போல அவளுக்குமெண்டு ஒரு பார்வை இருக்கும் தானே. அதைச் சொல்ல நிச்சயமாய் அவளுக்கு உரிமையுண்டுதானே?

"சிங்களவன் எங்களை அடிமைப் படுத்துறான் எண்டு சொல்லிக்கொண்டு தமிழனைத் தமிழனே ஏமாத்தி அடிமையாய்  வைத்திருந்தது தான் மிச்சம். போராடிச் செத்ததைவிட, உரிமையை மீட்டுத் தருவதாய்ச் சொல்லிய அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தமிழர்கள் தானே அதிகம்." என்று அவள் சொல்லப்போனால் முளைச்சு மூணுஇல்லை விடேல்லை நீயெல்லாம் போய் அரசியல் தெரியுமெண்டு கதைக்கிறியா என்று அரசியலைக் கரைச்சுக் குடிச்ச மேதாவிப் பெரியவர்கள் சொல்லுவினம். அதுவேறை அவளின் வீட்டிலை நவக்கிரகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசியல் பார்வைகள். ஒரு வீட்டிலையே இப்படி ஒன்பதுபேர்  எண்டா நாட்டிலை கேட்கவா வேணும்? மக்கள் பாவம்.

"அண்டைக்கு மட்டும் அமிர்தலிங்கத்தை சுடாமல் இருந்திருந்தால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும். எங்கடை உரிமையும் கிடைச்சிருக்கும்." கூடவேயிருந்த பெரியண்னர் சொன்னபோது ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

"அமிர்தலிங்கம் அற்ப சலுகைகளுக்கு  விலைபோன ஒரு துரோகி."
"நாங்கள் தான் முதல்ல போராட்டத்தை தொடக்கினம். அதிலை ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கிறம் தெரியுமே."
"உங்கடை ஆக்கள் கொள்ளையடிச்ச நகையை எல்லாம் அவங்கள் தானே மீட்டது"
"காதலுக்காக துவக்கெடுத்து சுட்டவந்தானே.. இவன் எப்படி மக்களைக் காக்கிறது?"
"தலைவர் ஒழுக்கத்தைத்தான் முன்னிலைப் படுத்துறவர். அதாலைதான் இத்தினை வருஷ போராட்டத்திலயும் அவங்கள் பெண்கள் விசியத்திலை எல்லை மீறினதில்லை. மீறவிட்டதுமில்லை."
"அதுக்கு நடுச் சந்தியில கட்டி வைச்சு அதில சுடுறதே. பாக்கிறதுகளுக்கு மனநிலை பாதிக்குமேல்லே"
"தண்டனை கூடவாயிருந்தால் தான் குற்றங்கள் குறையும். ஆனா அதுக்காண்டி எல்லாரும் நீதியைக் கையிலை எடுக்ககூடாது."
சத்தியமாய் இவை ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நவக்கிரகங்களின்  வாதப் பிரதிவாதங்கள். ஒருவரை ஒருவர் ஆமோதிப்பதுபோல் எதிர்ப்பது, எதிர்ப்பதுபோல் ஆமோதிப்பது. என்ன கன்றாவி அரசியலோ..?

"நாங்கள் எல்லாம் சேர்ந்து மக்களுக்கு நல்லதை நினைச்சுத்தான் தொடங்கினம். ஆனா இவங்கள்  வந்து  எல்லாரையுமே போட்டுத்தள்ளிட்டு தாங்கள் தான் மக்களிண்டை ஏகப் பிரதிநிதி எண்டு சொல்லிக்கொண்டு சனத்தைச் சாகடிச்சது தான் மிச்சம்." என்ற சித்தப்பாவின் முப்பதுவருஷ அரசியல் அனுபவத்தில் வந்த வார்த்தைகளில் உண்மையாகவே ஆதங்கம் இருந்தது.
உண்மைதானே.. இதுவரை தனிநாடு, தனிக்கொடி எண்டுசொல்லிக்கொண்டு, ஏத்தின கொடிகளைவிட போர்த்திய கொடிகள் தானே அதிகம். ஆனால் நீங்களெல்லாம் ஆளுக்கொரு கட்சி எண்டு தொடக்கிவைத்து 'சகோதரயுத்தம்' எண்டு உங்களுக்கையே அடிபட்டுச் சாகாமல் கொஞ்சம் தன்னும்  விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே. அது இயக்கமாகவே இருக்கட்டும்.

தமிழனைத் தமிழனே விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகமுடியவில்லை. ஆயிரத்தெட்டு கொடிகள்.. கொள்கைகள்.. முரண்பாடுகள்.. பிறகெப்படி சிங்களவன் மட்டும் எங்களைப் புரிந்துகொள்வது? சமாதானம் பேசுவது?  ஒருவனுடன் பேசினால் இன்னொருவனுக்கு குமைச்சல். அவர்களும்தான் எத்தனை பேரைப் பார்த்து எத்தனை விதமாய் பேசி எத்தனை கொள்கைகளை விளங்கி எத்தனை தீர்வை வைத்து எத்தனை பேரை சமாதானப் படுத்தி எத்தனை திருத்தங்களைச் செய்து எத்தனை அறிக்கைகளை வாசித்து எத்தனை பேரின் இத்தனை எத்தனை கேள்விகளுக்கு என்று பதிசொல்வது?

உலகமறிய சமாதானக் கொடியுடன் வந்தவர்களையே ஒட்டுமொத்தமாய் சுட்டுப்போட்டுவிட்டு தமக்கு எதுவுமே தெரியாதென்றவர்களுக்கு நாட்டுக்குள்ளயே காதும் காதும் வைத்ததுபோல இத்தனை கொடிகளையும் கொள்கைகளையும் கிழித்துப் புதைக்க எத்தனை நாளாகும்? எல்லாம் வெறும் கண்துடைப்பு. தமக்கு வாலாட்டுபவர்களைத் தடவிக் கொடுத்து சீறிப் பாய்பவர்களை சுட்டுத்தள்ளுவது தானே மேல்த்தட்டு அரசியல். அது தெரிந்திருந்தும் கையில் ஒரேயொரு ஆசனத்தை மட்டும்  வைத்துக்கொண்டு "நாங்கள் தமிழரின் உரிமைகளை மீட்டுத்தருவோம்" என்று சொல்வது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லை?

மக்களுக்கு அரசியலை புரியவிடாமல் அரசியல் செய்ய எங்கடை தமிழனால் மட்டும்தான் முடியும். இல்லையெண்டால் நாப்பத்தெட்டாம் ஆண்டு ஒரேநாட்டில ஒரேகொடியில ஒண்டா சேர்ந்து இருப்பம் எண்டு சொன்னபோது தலையாட்டிய மக்கள், பின்பு இல்லை பிரிவதுதான் சரி என்றபோது அதுக்கும் சரி எண்டுசொல்லி துவக்குத் தூக்கியிருக்க மாட்டினம். ஆரம்பத்தில் நல்லவனாய் முட்டாளாய்த் தெரிந்த சிங்களவன் திடீரென்று அறிவாளியாகி கெட்டவனாய் ஆகிவிட்டிருந்தான்.

பின்பு ஒருவாறு கஷ்டப்பட்டு அரசாங்கத்துடன் சமரசம் செய்து தங்கள் அற்ப சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நேரத்தில வந்து அவர்களின் அரியணைக்குக் காவலாய் இருப்பார்கள் எனநினைத்து வளர்க்கப்பட்டவர்களே எதிராய்த் திரும்பி  தனிக்கொடி, தனித் தமிழீழம் என்று சொல்லி  அவர்களின் நெஞ்சுக்கே குறிவைத்தால் ரத்தம் கொதிக்காதா என்ன?
***** 
தொடரும்..

செவ்வாய், நவம்பர் 15, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : ரெண்டு பவுண்

பாகம் ஒன்று : ரெண்டு பவுண் 

யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்காய் சண்டை மும்முரமாய் நடந்துகொண்டிருந்த சமயம், கடைசி முறையாக அந்த ரெண்டு பவுனுக்கு வந்திருந்தார்கள்.

"வீட்டிலை பெரியவங்கள் யாராச்சும் இருக்கினமே?" கேட்டவரை முன்னம் பார்த்ததில்லை.
"அம்மா மட்டும்தான். ஆட்டுக்கு குழை ஓடிச்சுக்கொண்டு வளவிலை நிக்கிறா." 'திரும்பி வர எத்தினை நாளாகுமெண்டு தெரியாது. அதுவரை ஆடு பசியிலை நிக்ககூடாது. அதால நிறைய குழை ஓடிக்கவேணும்' எண்டு சொல்லி அவளை வாசல்லை காவல் வைச்சிட்டு போயிருந்தா.
"அவவைக் கூப்பிடுறீங்களே ஒருக்கா?"
"நீங்க யார்.. என்ன எண்டு கேட்டா.." தயங்கியவளிடம்
"இயக்கத்திலை இருந்து மண் மீட்பு நிதி வாங்க வந்திருக்கிறம் எண்டு சொல்லுங்கோ.."

முன்னம் கூடப் பலதரம் இவ்வாறு வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்போதெல்லாம் எங்களாலும் கூட போராட்டத்துக்கு ஏதோ ஒருவிதத்திலை பங்களிப்புச் செய்ய முடியுதே என்று பெருமைப் பட்டிருக்கிறாள். ஆனால் இந்தமுறை காசாககூடத் தரலாம் என்ற போதுதான் அவளுக்கு சந்தேகம் முதல் முதலாய் எட்டிப் பார்த்தது. அவர்களின் ஊரில் இப்படித்தான் பலபேர் காசை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி பிறகு வெளிநாடுகளில் காரும் பங்களாவும் எண்டு செட்டில் ஆகியிருக்கினம் எண்டு கேள்விப் பட்டிருக்கிறாள். ஒருவேளை அது உண்மையாகவிருக்குமோ? பெரியமாமா வேறை ரெண்டு கிழமைக்கு முன்னம் தான் "நீ இயக்கத்தை வெறுக்கப் போற நாள் கூடிய சீக்கிரம் வரப்போகுது." என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்.

இப்படித்தான் ஒருமுறை அவர்கள் மீட்புநிதி வாங்குவதற்காய் வந்திருந்தபோது அம்மம்மா வேறுவீட்டில் இருந்ததால் அவர்களும் தனியாய் ரெண்டு பவுன் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வீடுகட்டி முடித்ததாலோ என்னமோ பிறகு மாமாமாரிடம் வங்கித்தருவாதாய்ச் சொல்லி அம்மாவை கொடுக்கச்சொல்லியிருந்தா. அப்போ பலிகொடுக்கப்பட்டது அவள் சின்ன வயசில போட்ட ஒருசோடிக் காப்புத்தான்.  இந்தச் சின்ன வயசிலையே தன்னால போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியுதே எண்டு ஒருவித கர்வம் வந்தது. 'எப்பிடியும் இதுவும்  காணாமத்தான் வரும். அம்மா ஒளிச்சு வைச்சிருக்கிற  என்ரை அறுந்துபோன தூக்கணத்தை எடுத்துக் குடுக்கச் சொல்லலாம்' என்று நினைத்துக்கொண்டிருக்கையில், 

"ரெண்டு பவுனுக்கு ரெண்டு மஞ்சாடி கூட நிக்குது" என்று சொன்ன எடை போட்டுப் பார்த்த அண்ணாவை வினோதமாய்ப் பார்த்தாள். இதுவரை எந்த நகைக்கடையிலும் கேட்காத வார்த்தையிது. எவ்வளவு போட்டாலுமே "பழைய நகை தானேயம்மா.. செய்கூலி, சேதாரம் எண்டு போக ரெண்டு மஞ்சாடி தொக்கிநிக்குது" எண்டுதான் சொல்லுவினம். அதனேலேயே அதுவரை அவர்களின் மேலிருந்த மதிப்பு இன்னும் உயர்ந்துவிட்டிருந்தது.

அப்படிப் பட்டவர்கள் இப்போதுவந்து காசு கேட்கிறார்கள், அதுவும் ரெண்டுநாளில் எங்கடை இடத்துக்கு ஆர்மி வந்துவிடுவான் என்கிற நிலையில் நேற்றுத்தான் மூட்டைமுடிச்செல்லாம் கட்டி ஓடுவதுக்கு தயாராக வைத்திருந்தோம். "ரோட்டிலை யாராச்சும் மூட்டைமுடிச்சோட வெளிக்கிட்டுப் போனா சொல்லு, நாங்களும் வெளிக்கிடவேணும் சரியே?" என்றுசொலித்தான் அம்மா அவளை வாசல்ல காவலுக்கு வைத்திருந்தார்.


வீட்டில் காசுநிலவரம் எதுவும் அவளுக்குத் தெரியாது. எல்லா கணக்கு வழக்கும் அம்மாதான் பாக்கிறது. தோட்டத்தில தேங்காய் மாங்காய் விக்கிற காசு பார்த்திருக்கிறாள். மற்றபடி அப்பா உழைக்கிறது அவளுக்கு சீதனம் சேர்க்கப் போகுது எண்டுதான் சொல்லியிருக்கிறார்.  சைக்கிள் ஒட்டுவதுக்கேண்டு மாசத்திலை ஒருக்கா வாங்கிற அந்த ரெண்டு ரூவாயை விட அவள் கையிலை ஒரு சல்லிக்காசு  கொடுப்பதில்லை. வாழ்க்கை முழுது சந்நியாசியாயிருந்து உழைக்கிற காசிலை அப்பிடி ஒருகலியானம் தேவைதானா என்று பலதடவை யோசித்திருக்கிறாள்.


"அக்காண்ட கலியாணத்துக்கு இருக்கிற நகைநட்டைவிட எப்பிடியும் ஒரு இருவத்தஞ்சு முப்பது லட்சம் தேவைப்படும். நான்தான் உழைச்சுக் கட்டவேணும். வைரத்தோடு வேற வேணுமாம்." என்றவனை வினோதமாய்ப் பார்த்தாள்.

இருவத்தஞ்சு முப்பது வருசமா அப்பா உழைச்சு உழைச்சு ஓடாத்தேஞ்சு அவளுக்கு சீதனமாய்ச் சேர்த்த காசுகூட அவ்வளுவு வருமோ தெரியாது. எதற்காய் இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயம் எல்லாம்? மனிசரை நிம்மதியாய் வாழவிடாமல் கடன் மேல கடன் வாங்கி.. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் தேவைதானா? அவளுக்கு விளங்கவில்லை.

"அப்போ எங்கடை கலியாணம் இப்போதைக்கு இல்லை எண்டு சொல்லவாறியா?" ஒருபக்கம் சந்தோசமாக இருந்தது. அப்பாவின்  நச்சரிப்பு தாங்கமுடியாமல் தான் இந்தப் பேச்சே எடுத்தது.

"இன்னும் எனக்கு வேலை கிடைக்கேல்லை. கிடைச்சபிறகுதான் எதையும் யோசிக்கலாம்." 

'அப்போ அந்த முப்பதுலட்சம்?' நாக்கு நுனிவரை வந்துவிட்ட கேள்வியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். யார் எப்படிப் போனால் அவளுக்கென்ன.

பேசாமல் மேல படிக்க வெளிநாட்டுக்குப் போய்விடலாம் என்றாலும் காசுவேணும். "என்ன எண்டாலும் கலியாணத்தைக் கட்டிட்டு பிறகு செய்." அப்பா தீர்மானமாய் சொல்லிவிட்டிருந்தார். பெண்ணைப் பிறந்தாலே யாராச்சும் ஒருத்தரின் கயிலை பிடிச்சுக்கொடுத்திட வேண்டும் எண்ட தவிப்பில் அவளின் உரிமைகள் மறுக்கப்படுவதை யாருமே உணர்வதில்லை.

அவளது தேவைகள் என்றால் மிகக் குறைவுதான். நிறையவே இல்லாவிட்டாலும் அவளது  அரசாங்க உத்தியோகம், ஒரு பத்துப் பதினஞ்சு வருசத்தில பென்ஷன் வரும். யாருடைய தயவும் வேண்டியிருக்காது. ஆனால் அத்துடன் விட்டார்களா அவளை?

"இத்தினை நாளாய் எனக்கு தாறத்துக்குத்தான் உழைக்கிறன் எண்டு சொல்லிட்டு, இப்படி  தூக்கிக்  கொடுக்கிறத்துக்குத்தான் இத்தினை வருசமா தனிய இருந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சநீன்களா?" அவளின் கடைசிக் கனவும் தகர்ந்ததில் கோபம் கோபமாய் வந்தது.
"எங்கடை கடமையைத்தான் செய்தம். கலியானத்துக்குப்பிறகு நீ கடன் அதிதெண்டு கஷ்டப்படக் கூடாது அதுதான்." இவர் குடுத்தாலுமே, அவர்கள் கடன் வாங்கத்தான் போகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பொம்பிளைபிள்ளையை வைச்சுக்கொண்டே அவளிண்ட அப்பாவுக்கு இவ்வளவு கனவெண்டா, அவர்கள் ரெண்டு பெடியங்களையுமேல்லே பெத்துவைச்சிருக்கினம்.

அவனைப்பிடிக்கும்.. நிறையவே.. இதுவரை கண்ணீரைத் தவிர வேறெதையுமே அறியாத அவளை தினம் தினம் சிரிக்க வைத்தான்.  பேச வைத்தான். மறுபடி எழுதவைத்தான்.  ஆனா அதுக்காக கலியாணம் எண்டபேரில யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. அவனுக்குமெண்டு தன் மனைவியைப் பத்தி ஒரு கனவிருக்கும்தானே.

"அதுக்கு..? எனக்கெண்டு இதுவரைக்கும் பெரிசா எதுவும் கேட்டிருக்கிறனா? இதுவரைக்கும் படிச்சது கூட  scholarshipல தானே.." அவள் அங்கை போய் ஒண்டும் படிச்சுக் கிழிக்கப் போறதில்லை. ஆனாலும் நிம்மதியா கொஞ்சநாளாச்சும் யாரோடை தொனதொனப்புமில்லாமல் இருக்கலாமே எண்டுதான். அவளால் எல்லாரையும் போல சராசரி மனைவியாய் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இதுதான் வாழ்க்கை எண்டு அதுக்குள்ளயே சுத்திச் சுத்தி வரமுடியாது.

ஆயிரம் ஆயிரம் வேங்கைகளைப் போலவே அவளுக்குமொரு கனவிருந்தது. ஒரு தேசமிருந்தது. அது காலத்தின் கட்டாயத்தில்  அழிக்கப்பட்டாலுமே அதன் வலியிருக்கிறதே. அதைப் பதிவு செய்ய வேண்டும். ஆழமாக.. மிக ஆழமாக.. அவளின் கனவுகளை.. அவர்களின் கனவுகளையும் சேர்த்தே..

"இது நீ கேட்காமலே நாங்கள் செய்யவேண்டியது. அது எங்கடை கடமை." கடமையாவது மண்ணாங்கட்டியாவது. அவளது தோழிகள் பத்துப் பதினைஞ்சு பவுணிலை கழுத்தைச் சுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறதை அவளுக்கும் மாட்டி அழகுபாக்கவேனும். அதுதானே?

முந்தி அங்கை எண்டாலும் பரவாயில்லை அவங்கள் இருக்கேக்கை நடுநிசியிலையுமே நகையைப் போட்டுக்கொண்டு தைரியமாப் போகலாம். இங்கை இப்ப பொட்டுத் தங்கத்துக்காக பட்டப்பகல்லையே கொலை நடக்கிற இடத்தில இருந்தும் கூட  'பொம்பிளைப் பிள்ளையள் நகை போடாமல் வெளிய போகக் கூடாது' என்ற அம்மாவின் அரியண்டத்துக்காகவே இப்பகொஞ்சநாளா அவளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருசோடித் தோடு, அந்த முக்கால் பவுண் சிங்கப்பூர் செயின், ஒரு ராசிக் கல்லுவைத்த மோதிரம். எல்லாம் சேர்த்து என்ன ஒரு ரெண்டு பவுன் இருக்குமா..? 


***** 

தொடரும்..

திங்கள், நவம்பர் 14, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : மறுபடியும்!


அனைவருக்கும்  வணக்கம். மீண்டும் உங்களை "அவள்" ஒரு தொடர் கதை ... தொகுதி மூன்று - உரிமைப் போராட்டத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தொடரைத் தொடங்கும்போது பாராட்டிய பலருக்கு முடியும் தருணத்தில் அதற்கு எழுந்த எதிர்ப்புக்கலாலோ என்னமோ மௌனம் சாதிக்கவேண்டிய சூழ்நிலை. ஆனாலும் சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லிய, அனுப்பிய கருத்துக்கள் என்னை மீண்டும் எழுத வைத்திருக்கிறது. அதில் சிலர் தங்களின் வாழ்க்கையில் கூட இதேமாதிரி நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். 

நான் ஒரு படைப்பாளி என்று சொல்லும் தகுதி இருக்கிறதா என்று தெரியாது. இது புனைவற்ற அல்லது  கற்பனைத் திறனற்ற வெறும் சம்பவங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அவற்றைப் பார்ப்பவர்களின், வசிப்பவர்களின் கருத்து நிச்சயமாக ஒன்றாக இருக்கமுடியாது. ஒவ்வொருவர் கற்பனையையும் அதன் வண்ணங்களையும் பொறுத்து இதன் கருத்து மாறுபடும். அந்த மாறுபட்ட தன்மையையை அடிப்படையாகக் கொண்டே இதை எழுததொடங்கினேன். ஆனால் பலரின் எதிர்ப்புகளைப் பார்க்கும் போது, எதோ நான் மட்டும்தான் இந்தக் கோணத்தில் யோசிப்பதுபோல் ஒரு மாயை ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. 

இருந்தாலுமே புத்திசாலிகள் நிறைந்துபோன உலகத்தில், அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் பல புத்திசாலித்தனமான படைப்புகளின் மத்தியில், இதுவுமொரு முட்டள்தனமான படைப்பாக இருந்துவிட்டுப் போகட்டுமே..?

பிற்குறிப்பு : "அவள்" ஒரு தொடர் கதை ... தொகுதி மூன்று, வாரம் இருமுறை மட்டுமே வர இருக்கிறது. 

ஆதரவுக்கு நன்றி!

2833திங்கள், நவம்பர் 07, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : முடிவுரை

பாகம் பத்து : முடிவுரை


கோபமாய் எழுந்து வந்துவிட்டவள், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். ஆத்திரமும் ஏமாற்றமும் மாறிமாறி வந்து அவளை வதம் செய்தன. அன்று மட்டும் எப்படியாவது அடம்பிடித்து அவருடனேயே போயிருந்திருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே என்று தோன்றவும் தன் மீதே அவளுக்கு கோபம்கோபமாக வந்தது. கதவைப் 'படார்' என்று அறைந்து சாத்திவிட்டு கீழே வந்தாள். மேனேஜர் அப்போதுதான் சுவாமிக்கு விளக்குக் கொளுத்திவிட்டு 'மருதமலை மாமணியே முருகையா' பாடுப் போட்டிருந்தான். மெதுவாகத்தான் என்றாலுமே குன்னக்குடியின் வயலினிசை அவளது இதயநரம்பை முறுக்கி என்னமோ செய்தது.

பல்லைக்கடித்துக்கொண்டு வேகமாய் தெருவில் இறங்கி நடந்தாள். சென்றியில் இருந்த ஆமிக்காரன் பக்கத்தில் நின்றவனிடம் இவளைக் காட்டி, 

"லஷ்சன முனு.. நேத?" (அழகான முகம் இல்லையா?) கிண்டலாய்ச் சொல்லிச் சிரித்தான்.

அவளுக்கிருந்த ஆத்திரத்தில் அப்பிடியே அவனது துவக்கைப் பறித்து எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம் போலிருந்தது. அவள் கோபத்தில் இருக்கும்போதுதான் அழகாய்த் தெரிகிறதா எல்லோருக்கும். எல்லோருக்குமெண்டல்..? யோசனையாய் ரெண்டு அடி எடுத்துவைத்தவள், குறுக்கால் ஒரு போலீஸ் வண்டிவந்து மறித்து நிற்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பயத்தை மறைத்தபடி அதைத்தாண்டிச் செல்லமுயல்கையில் தற்செயலாய் உள்ளேபார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றாள். அது.. கடைசியாய் விடைபெறுமுன் அவளைச் சமாதானப்படுத்துவதற்காய், அவள் தொடுவதற்கு அனுமதித்த அவனது 'உயிர்'..

அவசரமாகத் திரும்பி அறைக்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள். கதவு திறந்தேயிருந்தது. ஒரே எட்டில் உள்ளே சென்று பார்த்தால், அறை முழுக்க கிளறிக் கொட்டியிருந்தது. அதைப்பற்றிக் கவலைப்படுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. அவசர அவசரமாய்த் தேடி ஒருவாறு எடுத்துவிட்டாள்.. அந்தப் படத்தை. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டவள், பேர்சின் அடியில் மறைத்து வைத்திருந்த இந்தப் படத்தை மட்டும் ஏனோ விட்டுவைத்திருந்தாள்.

கண்நீர்த்திரையிட, நடுங்கும் கரங்களால் எடுத்துப் பார்த்தாள். அந்தக் கண்கள்.. அன்று எதுவோ சொல்லியதே..? வயலினை வாங்குவதற்காய் நீண்ட அந்தக் கரங்கள்.. அன்று.... நினைக்க நினைக்க தலை சுற்றியது. கடவுளே.. இத்தனை நாளாய் நடந்ததெல்லாம் வெறும் கற்பனையா இல்லை அதன் பிரதிபிம்பங்களா..? கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?


"வீட்டை போன் பண்ணிச் சொல்லிட்டம். இப்ப உடனை train பிடிச்சு இரவைக்குமுந்தி வந்திடுவினம். அதுவரைக்கும் இவ, உன்கூடவே இங்கைதான் இருப்பா.. சரியே?" அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். 

"இந்த T-ஷர்ட்.." இன்னும் விலை பிரிக்கப்படாத அந்தக் கறுப்பு T-Shirtஐ அவர் எடுத்தபோது, பயித்தியம் பிடித்தவள்போல் பாய்ந்து சென்று "அதைத் தொடாதீங்கோ.. அது அவரின்டை.." கதறியபடி பறித்துக் கட்டிலில் போட்டு அதன்மேல் விழுந்து விக்கிவிக்கி அழுதாள். 

முன்னொருதடவை அவன் கருப்புச்சட்டை அணிந்துவந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இது எதற்காய் வாங்கியது என்பது நினைவிலிருந்துவிலகி அவள் எண்ணம், சொல், செயல் முழுவதும் இப்போது அவன் மட்டுமே வியாபித்திருந்தான்.

"என்ன நடந்தது?" கேட்டுக்கொண்டே அருகில்வந்து சமாதானப்படுத்த முயன்றவரை வெறிகொண்டவள் போல் தள்ளிவிட்டு,

"வில் யு ப்ளீஸ் கெட்-அவுட்" வாசலைக் காட்டிக் கர்ச்சித்தாள். அவர்கள் தயங்கி நிற்கவும்,

"எல்லாரும் வெளியே போங்கோ.. இப்பவே.." பத்திரகாளியாகிவிட்டிருந்தாள்.

அவளை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டே அவர்கள் வெளியேறவும் கதவை அறைந்து சாத்தியவள் அப்பிடியே மயங்கிச் சரிந்தாள்.


*****

அவளது உயிரிலே கலந்துவிட்ட அந்தச் சில மணித் துளிகளுக்குள்ளேயான வாழ்க்கை அவளுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். யாரும் அவளைத் தொந்தரவு செய்யாதிருக்கட்டும்.


*****
நன்றி.
வணக்கம்.


ஞாயிறு, நவம்பர் 06, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : மாமன்

பாகம் ஒன்பது : மாமன் 

அவளைக்கேட்டால் அவர் மனிதருள் மாணிக்கம் என்பாள். படிப்பில் புலியாயிருந்த அவரை campus நுழையவிடாது தடுத்தவர்கள் பின்னாளில் அதற்குக் கொடுத்த விலை மிகமிக அதிகம் தான். ஈழத்தில் நடந்தது ஒரு குருஷேஸ்திரம் என்றால், அதில் கிருஷ்ணர் இவராய்த் தான் இருந்திருப்பார். அவர் இருந்தவரை அர்ஜுனனைத் தோற்கவிட்டதில்லை. அர்ஜுனன் தோற்ற போது அவர் உயிரோடு இருந்திருக்கவில்லை. 

அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரைப் பற்றி அவள் சொல்லப்போனால் அது மாபெரும் சமுத்திரத்தை ஒரு சிறுமி அள்ளிவிட முயற்சிப்பது போல்தான் இருக்கும். ஆனாலுமே அவள் அள்ளிய அந்த சிறு துளிகளும் சேர்ந்துதானே ஒரு சமுத்திரமாகிறது? 

"உனக்கு இன்னும் வயசிருக்கு. ஒரு மூண்டுனாலு வருசத்துக்குப் பிறகு வரேக்கை சொல்லு, கூட்டிட்டுப் போறன்..". எங்கே போவதேண்டு தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று முன்னொருநாள் அவர் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.

இத்தனை நாள் எப்படி மறந்தோம் அவரை? பார்த்தது பேசியது என்னமோ ஓரிரு தடவைதான். ஆனால் அந்தச் சிறு சிறு தருணங்களிலேயே அவளை முழுதாய்க் கொள்ளையடித்துச் சென்றிருந்தார். அவளைப் பொறுத்தவரை அவளின் முதலும் கடைசியுமான ஹீரோ..  நிஜ ஹீரோ.. அவர் தான். 

காந்தியையும் நேருவையும் பற்றி கதையளப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோசைப்பற்றிக் கதைக்க தைரியம் இருக்கு? வாய்வீரத்துக்கு மதிப்புக்கொடுப்பவர் யாரும் செயல்வீரர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு மாவீரர்.. செயல் வீரர் தான் அவர்.

அவரை ஒரு போராளியாய் சந்தித்த அந்த முதல் நாள் இன்னும் பசுமையாய் நெஞ்சிலிருக்கு. அப்போது ஒரு சிறு கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார். ஆறு குண்டு போட்டு அடிக்கிறது. விவரம் தெரியாத வயது. அப்பெல்லாம் AK47 எண்டு பெரிய பெரிய துவக்கு தூக்கிக்கொண்டு பலர் போறதைப் பார்த்தவள், இவர் ஏன் இந்தச் சின்னத் துவக்கைத் தூக்கிக்கொண்டு திரியிறார் எண்டு நினைத்திருக்கிறாள். 

"ஒருதரம் சுட்டுப் பார்க்கவேணும்" எண்டு அவள் ஆசைப்பட்டபோது, "துவக்குத்தான் எங்கடை உயிர் அதை யாருக்கும் குடுக்ககூடாது" எண்டு அவர்சொன்னதைப் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை. 

கடைசியாய் அவளது தொந்தரவு தாங்காமல், தூக்கி மடியிலிருத்தி அந்தச் சின்னக் கையை எடுத்து துவக்கின்மேல் வைத்து தன் கையால் மூடி, பிஞ்சு விரல்களின் மேல் அவர் விரல்கள் மெதுவாய் அழுத்தியபோது, அது வெடித்தா என்ன?  ஓடிச்சென்று முற்றத்தில் பார்த்தாள். எதையுமே காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவந்து "நீங்க என்னை நல்லா எமாத்திப்போட்டீங்க" என்று கண்கலங்கி அறைக்குள் சென்று படுத்தவள்தான் அவர் திரும்பிப் போகும்வரை வெளியே வரவேயில்லை. 

பிறகொருதரம் அவரின் அம்மாவின் ஈமைச்சடங்கில் தூரத்தில் நின்று பார்த்தது. துருவித் துருவிப் பார்த்தும் கண்ணில் ஒருசொட்டுக் கண்ணீரை காணோம். இறுகிப் போய் நின்றிருந்தார். "இயக்கத்துக்குப் போனா அழக்கூடாதாம்" பக்கத்தில் நின்ற யாரோ சொன்னார்கள். 'பந்தபாசமெல்லாம் ஒருமாயை' என்று எங்கேயோ புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வர அவர்மேல் மரியாதை இன்னும் கூடிவிட்டிருந்தது.

"அக்கா.. அக்கா.." 
அவள் ஓடிச்சென்று யன்னல்வழியே கேற்றைப் பார்த்தாள். புழுதி மூடிப்போய் ஒரு பிக்-அப் வாசலில் நின்றிருந்தது. அம்மாவின் தம்பிகள் எல்லாருமே வெளியூர்தான், வருவது அபூர்வம். அப்பிடியிருக்க அக்கா என்று சொல்லிக்கொண்டு உரிமையாய் அதுவும் இதிலை வந்து இறங்குவது யாராயிருக்கும்? யோசனையுடன் கதவைத் திறந்தாள்.

"என்னடி.. இப்பிடி நல்லா வளந்திட்டாய்?" என்று சொல்லித் தோளில் தட்டியவரை நிமிர்ந்து பார்த்தபோது, பெரியவளாகு முன்னமே நாணம் எட்டிப்பார்த்தது.
"அம்மா.. அம்மா.. கண்ணன் மாமா வந்திருக்கிறார். ஓடியாங்கோ.." மகிழ்ச்சிபொங்க கத்திக் கொண்டே ஓடிப்போய் அறைக்குள் ஒளித்துக்கொண்டாள். நெஞ்சு படபடவென்றது.

"என்ன நீ..? இப்படிக் கறுத்துப்போய் வந்திருக்கிறாய்?" அம்மாதான் கேட்டது. 'காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு' தானே என்றெண்ணிச் சிரித்துக்கொண்டாள். 
"என்னக்கா செய்யுறது? ஒரே வெய்யிலுக்கை தானே திரியிறது. போராட்டமெண்டு போயிட்டா இதெல்லாம் பாக்க ஏலுமே?" சொல்லிவிட்டு "எங்கையக்கா உவளைக் காணேல்லை. வரேக்க வாசல்ல நிண்டாள். பிறகு ஓடிட்டாள்" என்றபடி திரும்பிப் பார்த்தபோது அதுவரை திரைசீலைக்குள் மறைந்து நின்று அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளைக் கண்டுவிட்டார். 

"இஞ்சை வா. முந்தி வந்தா என்னெண்டா துவக்கைத் தரச்சொல்லி அடம்பிடிப்பாய். இப்ப என்ன புதுசா வெட்கப்படுறாய்? " அவர் இத்தனை நாளாகியும் அந்த நிகழ்ச்சியை ஞாபகம் வைத்துக் கேட்டபோது  அவளின் சந்தோசத்தைக் கேட்கவா வேண்டும். அதுவரை அவர் பக்கத்தில் துப்பாக்கியுடன் 'உர்ர்' எண்டு மூஞ்சியை வைச்சுக் கொண்டு சுற்றும் முற்றும் நோட்டம்விட்டுக்கொண்டிருந்தவன் கூட இப்போது சிறிதாய்ப் புன்னகைத்தான்.

"இருந்து சாப்பிட்டுப் போவன்?"
"இல்லையக்கா. நான் அவசரமாப் போகவேணும்." 
"வீட்டை போட்டே வாறே?"
"இல்லை.. இனித்தான்." எழுந்தவரை,
"இவ்வளவு தூரத்திலிருந்து வந்திட்டு.. ஒரு டீயாச்சும் குடிச்சிட்டுப்போ."
"வேண்டாமக்கா. வெறும் தண்ணி மட்டும் குடுங்கோ.."
"சும்மாயிரு. கனநாளைக்குப் பிறகு வந்திட்டு.. இப்பல்லாம் என்ன குடிக்கிறனீ?  கோப்பியோ.. டீயோ?"
"எதெண்டாலும்.." என்று இழுத்தபடி, அருகிலிருந்தவனை என்ன என்பதுபோல் பார்க்க, அவன் பேசாமல் தலையாட்டினான். எப்படி இவரால் கண்களாலேயே கதைக்க முடிகிறது? வியந்தாள்.
"ரெண்டு போடுங்கோ.." சொல்லிவிட்டு ஷோகேசுக்கு மேலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்க் கதிரையில் அமர்ந்தார். 

"இஞ்சை வா.. வந்து உந்த வயலினில் ஏதோ இயக்கப்பாட்டு வாசிப்பியே அதை அவனுக்கு வாசிச்சுக் காட்டன்.." அவள் மாட்டேன் மாட்டேன் எண்ணவும் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து விட்டுவிட்டு  கையிலை வயலின் பெட்டியை திணித்துவிட்டு   குசினிக்குப் போய் விட்டார் அம்மா.

வெட்கத்தில் காலால் மார்பிள்நிலத்திலேயே கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தவர்  புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, கைகளை நெஞ்சுக்குக் குறுக்கால் கட்டிக்கொண்டு, "என்ன பாட்டு? எங்கை எனக்கு வாசிச்சுக் காட்டு பாப்பம்?" அவருக்கேயுரிய அந்தப் புன்சிரிப்புடன் ஒருபக்கம் லேசாய் தலையைச்சரித்து  கேட்டதை ரசித்தாள்.

அவள் வயலினை எடுத்து ஷோகேசுக்குப் பின்னால் மறைந்திருந்து "குயிலே பாடு.." வாசிச்சு முடிக்கவும்,  "இவள் இப்பெல்லாம் ஒரே இயக்கப் பாட்டுத்தான் வாசிச்சுக் கொண்டிருக்கிறாள். எக்ஸாம்ல கேக்குறதை வாசிச்சுப் பழகு எண்டு சொன்னாலுமே கேக்கிறாளில்லை. அதால எப்பவுமே செக்கன்ட் கிளாஸ்தான் வருகுது." குசினியிலிருந்தவாறே அம்மா வத்திவைக்க, அவள் கோபமாய் வயலினின் சட்ஜ நரம்பை அறுத்துவிடுவது போல் தட்டினாள். வெளியில் நாய் குலைத்தது. கூடவந்தவன் எழுந்து சென்று என்னவென்று பார்க்கப் போய்விட,

அப்போதுதான் கிட்டவந்து, அவள் கைகளிலிருந்து மீளத்துடித்த வயலினுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, கோபத்தில் சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். குனிந்ததலை நிமிராமலிருந்தவளின் நெற்றியில் விழுந்திருந்த முடியை விரல்களால் விலக்கி... "அம்மா சொல்றதைக் கேட்டு, நல்லாப் படிக்க வேணும் என்ன?" என்றபடி கன்னத்தை தட்டிவிட்டார். உடல்சிலிர்த்திட நிமிர்ந்தவள், அந்தக் கண்களை முதன் முதலாய் நேருக்கு நேர் இவ்வளவு அருகில் இப்போது தான் பார்க்கிறாள். எவ்வளவு தீர்க்கம்? காந்தக் கண்கள் என்பது இவைதானா? கண்ணன் என்பதன் காரணப்பெயர் இப்போது புரிந்தது.

ஒரு ஆணின் கண்களுக்கு இவ்வளவு சக்தியிருக்க முடியுமா என்ன?  அவை அவளை ஆழமாய் ஊடுருவிச் செல்லத் தயங்கித் தடுமாறியவள், ஒருவாறு சமாளித்துப் பின் எச்சிலை விழுங்கியபடி,
"நானும் உங்க கூட வரட்டுமா..?" வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள்.
யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தாள். மெலிதான தோற்றம், சற்றே உயரமாயிருந்த  அவனை முன்பின்  பார்த்ததில்லை. "எதுவும் கதைக்காமல் பின்னாலையே வா." மெலிதான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறு எண்டு போய் இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூமிட்க்குள் சென்று மறைந்து விட்டான்.

போவதா வேண்டாமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கையில் போன் அடித்தது.
"அவன் கூடப் போ. வன்னிக்குப் போகிறத்துக்கு ஹெல்ப் பண்ணுவான்." சொன்னது யார்? தெரியவில்லை.
இதுவரைக்கும் வந்தாச்சு. பேசாமல் போய்த்தான் பாப்பமே? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர், ஒரு பெண் உட்பட.

ஒருவிதத் தயக்கத்துடன் உள்ளே சென்றதும் முதலில் வந்தவன் அவசர அவசரமாய்க் கதவைப் பூட்டி விட்டு,
"எங்கை வந்து என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாய் எண்டு தெரியுமே? யாரும் கேள்விப் பட்டால் உன்ட  உடல்ல உயிர் இருக்காது." அவன் குரலில் பதற்றமிருந்தது.

உயிருக்குப் பயந்தவள் எண்டால் இதுவரை வந்திருப்பாளா என்ன? அவர்களும் யோசித்திருப்பார்களோ?
சிறிது நேர அமைதியைக் கலைத்தபடி அந்தப் பெண்தான் கேட்டாள்.
"சரி, உமக்கு உள்ளை யாரையும் தெரியுமே?"
இப்போது அவளுக்குச் சந்தேகம் வந்தது. இவர்கள் உண்மையிலேயே தொடர்பா? இல்லை..?
"உங்களை நான் எப்பிடி நம்புறது?", ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

"நம்பத் தேவையில்லை, நீ போகலாம்.." அதுவரை அமைதியாயிருந்த அந்தப் பெரியவர் சொன்னார்.
அவரைப் பார்த்தால் வயது  ஒரு நாப்பதுக்கு மேலிருக்கும். தலைவரின் முகச்சாயல் இருந்தது. தலைவரை இதுவரை அவள் நேரில் பார்த்ததில்லை. என்ன ஆனாலும் சரி, சாவதுக்குமுன் எப்படியாச்சும் ஒருமுறை பாத்திட வேணும், அவரையும் தான்!

"கண்ணன் மாமாவைத் தெரியும்.. பிறகு.. அவரின்டை.." எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..
"இயக்கத்திலை எத்தனை கண்ணன்கள் இருக்கினம். நீ ஆரைச் சொல்றே?"
"இயக்கத்திலை எத்தினை கண்ணன்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் என்ட கண்ணன் மாமாவை இயக்கத்திலை இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அவர்தான் ........." ஆக்ரோஷமாய்  அவரின்  பெயரை அவள் சொல்லி முடித்தபோது எல்லோர் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டிருந்தது.

***** 

தொடரும்..

சனி, நவம்பர் 05, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : சகோதரன்

பாகம் எட்டு : சகோதரன்

எங்கேயாவது போய்விடவேண்டும் என்று முடிவெடுத்து புகையிரதநிலையம் வரை வந்துவிட்டவளுக்கு எங்கு போவது என்றுதான் தெரியவில்லை. பிளாட்பாரத்தில் டிக்கெட் எடுக்க பெரிய வரிசை நின்றது. எந்த வரிசையில் நிற்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது ஒரு போர்ட்டர் வந்து காசு தந்தா டிக்கெட் எடுத்துத் தருவதாய்  சொன்னபோது சரியெண்டு தலையாட்டினாள். 

"எங்கே போரீங்கம்மா?"
"வவுனியா.." அவளுக்கே தெரியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
"சரி. ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு வாங்கோ, டிக்கெட் கொண்டுவந்து தாறன்" என்றுவிட்டு காசைவாங்கிக்கொண்டு போனவனை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள். இவன் எமாத்திக்கொண்டுதான் போகப்போகிறான்.. எதுவோ நடக்கிறது நடக்கட்டும் என்றுவிட்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றால் அவன் போய்விட்டிருந்தான். திரும்பிவந்து ஸ்டேஷன்ல் உட்கார்ந்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழிந்திருக்கும். எத்தினை மணிக்கு train வெளிக்கிடுது எண்டு கூடப் பார்க்காமல் இருந்துவிட்டாள்.

"இந்தாங்கோ உங்கடை டிக்கெட். train ஓம்பதரைக்குத்தான் இங்கிருந்து வெளிக்கிடுது. அதுவரைக்கும் ரெஸ்ட் ரூமில ஓய்வேடுக்கிரதேண்டா போய் இருங்கோ." சாவிகொடுத்த பொம்மையாட்டம் தலையை ஆட்டிவிட்டு உள்ளே போய் ரெஸ்ட்ரூம்ஐ பார்த்தாள் ஒரே சனமாய் இருந்தது. ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்தாள்.

அவளுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? சுதாவைக் காதலித்தது அவளின் தப்பா? என்னதான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணைப் பார்த்து "உனக்கு அப்பிடி அவசராமாய் ஏதும் தேவை எண்டால் உலகத்திலை எத்தினை ஆம்பிளைகள் இருக்கினம், அவையளைப் போய்ப் பிடிக்கிறதுதானே" என்று அவன் கேட்டபோது சுக்குநூறாய் உடைந்துபோனாள். ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு "ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.. ஐ லவ் யு.." அவளின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்தே போனது. அவனோ சற்றும் கவனியாது திரும்பிய வேகத்தில் கையிலிருந்து விழப்போன புத்தகங்களை சரிசெய்துகொண்டு வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தான்.

இதுவரைக்கும் அவனைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறெந்தத் தேவைகளுமே இருக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது எதற்கோ அலைவதாய் பொருள்படக் கூறியது அவளைக் கண்டம் துண்டமாய் வெட்டிக் கடலில் வீசியது போலிருந்தது. அவனைப் பொறுத்தவரை அவை கோபத்தில் வந்த சாதாரண வார்த்தைகள். ஆனால் அவைதான் அவளின் வாழ்க்கையையே மாற்றி எழுதிய இன்னொரு பிரம்மனின் தலைஎழுத்து.

"பிள்ளை.. உன்னைத்தான் அவர் கூப்பிடுறார்." என்று அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்தியின் குரல்கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். 

"உங்கடை train வெளிக்கிடப்போகுதே ஏறையில்லையா?" என்று கேட்ட போதுதான் மணி ஒன்பதரையாயிருந்ததைக் கவனித்தாள்.

எதுவும் பேசாமல் சென்று உட்கார்ந்தாள். கரையோர சீட். அவன் சொல்லி எடுத்திருப்பான் போல.
"பக்கத்து சீட்ல யாரும் வரமாட்டினம் எண்டு நினைக்கிரன். இரவில நீட்டி நிமிந்து படுக்க வசதியாய் இருக்கும். பத்திரமா போய்ட்டுவாங்கோ." சரி என்று தலையாட்டினாள். 

கொஞ்சத்தூரம் போனவன் திரும்பிவந்து பின்னால் இருந்தவனிடம் எதோ சிங்களத்தில் பேசியபோது தான் அவளுக்கு திக் என்றிருந்தது. இவன் எதோ பிளான் பண்ணித்தான் என்னை இதில எத்தியிருக்கிறான். உஷாராகி பின்னாலிருந்தவனை உற்றுப் பார்த்தாள். அதற்கிடையில் அவளது மனஓட்டத்தைக் கணித்தவன் போல்,

"பயப்படாதீங்கம்மா. அவர் ஆர்மி தான், அனுராதபுரம் போறாராம். நீங்கள் தனியாப் போறிங்கள் எண்டு கொஞ்சம் பார்த்துக்கொள்ளச் சொன்னன்". நம்பிக்கையில்லாமல் அந்தப் புதியவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். அவளை விட ஓரிரு வயசு கூட இருக்கலாம், ஆனால் பார்க்க சின்னப் பெடியனாக இருந்தது. பரவாயில்லை ஏதாவது பிரச்சனை எண்டாலும் சமாளிக்கலாம் என்று தோன்றியது.
"ஓயா, சிங்கள தன்னத்த?" (உங்களுக்கு சிங்களம் தெரியாதா?) 
இல்லையென்று தலையாட்டினாள். அவன் புன்னகைத்துவிட்டு போர்டேருக்கு எதோ சொல்லவும் train வெளிக்கிடவும் சரியாக இருந்தது.

அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் பீறிட்டுக் கிளம்பியது. அவளது தேவைகள் பூர்த்தியாகியிருந்தனவோ இல்லையோ ஆசைகள், கனவுகள் அத்தனையுமே சுக்குநூறாகி சிதைந்துவிட்டிருந்தன. அவனைப் பழிவாங்குவதாய் நினைத்துக்கொண்டு எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிவிட்டோம் என்று புரிந்தது. அழுதாள்.. அழுதாள்.. இரவு முழுவதும் அழுதுகொண்டேயிருந்தாள் சத்தமில்லாமல். எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்று தெரியாது, யாரோ தட்டுவது போலிருந்ததால் திடுக்கிட்டு எழுந்தாள். அவன்தான்,

"நங்கி, ஓயா.. " சற்று யோசித்துவிட்டு, "சாப்ட.. சாப்ட..?" கையையும் தலையையும் ஆட்டி ஆட்டி அவன் கேட்ட தோரணை பார்க்க சிரிப்பாய் இருந்தது. ஆங்கிலம் தெரியாது போலும்.
"எப்பா.." (வேண்டாம்) என்றுவிட்டு மீண்டும் படுக்கச் சென்றால், சிறிது நேரத்திலே அடுத்தே ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டி அங்கு சிறிது நேரம் நிற்கும் என்று அறிவித்தார்கள். பெரும்பாலுமே வண்டி நிற்கும் போதுதான் கள்ளர் ஏறி கத்திமுனையில் களவுஎடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதால்,  தூக்கம் போய்விட்டிருந்தது. அவன் வேறை இறங்கி எதுவோ வாங்குவதற்க்காய்ப் போயிருந்தான். அப்போதுதான்  சிறிது பயம் தலைதூக்கியது. அம்மா வேற வீட்டிலை அழுதுகொண்டிருப்பா. ஆனாலுமே அவர்களுக்கு இப்படி ஒருபிள்ளை இருந்து தினம்தினம் சாகடிப்பதை விட  இல்லாமல் போய்விடுவதே மேல் என்றுதோன்றியது.

வண்டி புறப்படும் வேளையில் அவன் ஓடிவந்து ஏறினான். மூச்சிரைக்க,
"நங்கி, வத்துறு ஒன்னத?" (தங்கச்சி, தண்ணீர் வேண்டுமா?) இவன் விட மாட்டான் போலிருந்தது.  மினறேல் வாட்டர் தான் ஆனால் மூடி திறந்திருந்தது. சந்தேகமாய்ப் பார்த்தால், அவள் மனவோட்டத்தை அறிந்து கொண்டவன் போல் சிரித்துவிட்டு, அவள் கண்முன்னே கொஞ்சம் குடித்துவிட்டு நீட்டினான்.
"ஹரித?" (சரியா..?) சிரித்துக்கொண்டே கேட்டபோது அவளால் தட்ட முடியவில்லை. வாங்கினாள்.. ஆனால் குடிக்காமல் பையில் வைத்துவிட்டாள்.
"நங்கி, கொய்த யன்னே?" (தங்கச்சி, எங்க போறீங்க?) வார்த்தைக்கு முன்னூறுதரம் தங்கச்சி போட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலில் பாசம் இருந்ததா தெரியவில்லை, ஆனால் உண்மை இருந்தது.

"வன்... வவுனியா.." வன்னி எண்டு வந்ததை ஒருவாறு விழுங்கி விட்டிருந்தாள். நல்லகாலம்.
அதன் பிறகு அவன் கேட்டதெல்லாத்துக்கும் கொஞ்சம் சிங்களம் கொஞ்சம் சைகை கொஞ்சம் இங்கிலீஷ் எண்டு பாதி புரிந்தும் புரியாமலும் ஏதேதோ கதைத்தார்கள். அவன் லீவு முடிந்து போகிறானாம். களத்தில முன்னரங்கிலை நிக்கிற பணியாம். எந்தநிமிசமும் உயிர் போகலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னபோது, இதே மாதிரி முன்னரங்கில நின்ற ஒரு போராளி அக்காவுடன் கதைத்தது ஞாபகம் வந்தது.

அவாகூட இப்படித்தான் எந்த நிமிஷம் சாவருமெண்டே தெரியாது என்று சிரித்தபடியே சொன்னபோது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மடுவில் ஒருநாள், அவளும் தோழியும் பாடசாலையிலிருந்து வரும்போது மறித்துப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். இது அவளுக்கொன்றும் முதல் தடவை இல்லை என்பதால் பேசாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தான் வீட்டுக்கொரு பிள்ளை என்பதால் எல்லாம் முடிந்து கடைசியில விட்டுட்டுத்தான் போகிறவர்கள். ஆனால் அவளின் தோழிதான் நிறையவே பயந்துவிட்டிருந்தாள். அவளை சமாதானப் படுத்தவே போதும் போதுமேன்றாகியிருன்தது.

அப்போது கூச்சலிட்டு நையாண்டி செய்துகொண்டு அந்தவழியே போன சில பெடியன்களைக் காட்டி ஏன் அவங்களைக் கேட்கவில்லை என்று அவள் கேட்டதுக்கு, "தலைவர் ஒழுக்கமானவர்களைத்தான் போராட்டத்தில் இணக்கச் சொல்லியிருக்கிறார். இப்படித் தறுதலைகளை இணைத்தால் எங்களது புனிதமான போராட்டத்துக்குத் தான் இழுக்கு" என்று அவர் சொன்னதற்கு  "அப்போ ஒழுக்கமானவர்கள் எல்லாம் போய் நின்று இந்த தறுதலைகளை காக்கவா போராடிச் சாகிறோம்" என்று அவள் கேட்கையிலேயே, கூட்டிப் போக அவளது அப்பா யாரோ சொல்லி அங்கு வந்துவிட்டிருந்தார்.

அனுராதபுரம் வந்துவிட்டது. அவன் இறங்கிக் கையசத்துவிட்டுப் போகையில், அதுவரை ஆர்மி என்றாலே  கொல்லுவான் இல்லை rape பண்ணுவான் என்றிருந்த ஒரு தோற்றப்பாடு அவளிடம் அடியோடு மாறியிருந்தது. நம்மில் சில கூழாங்கற்கள் போல் அவர்களிலும் சில மாணிக்கங்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது.*****
தொடரும்..


வெள்ளி, நவம்பர் 04, 2011

"அவள்" ஒரு தொடர் கதை ... : நண்பன்

பாகம் ஏழு : நண்பன் 

"ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.." அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு.

சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை  அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஆண்கள் என்றாலே கதைப்பதற்கு தயங்கும் இவளுக்கு அந்தநேரத்தில் ஒரு ஆண் நண்பன் என்று இருந்திருந்தால் அது இவனாகத்தான் இருந்திருக்கும்.  அவளது வாழ்க்கையின் பல முக்கிய கட்டங்களில் இவனது பிரசன்னமும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறைதான் அவளது வாழ்க்கையே புரட்டிப் போட்ட சில முக்கிய காரணிகளில் ஒருவனாய் வந்தான். 

"இன்று முதியோர் இல்லத்துக்குப் போகிறேன், உனக்கு விருப்பமெண்டால் கூட வரலாம்." என்று அவன் சொன்ன போது, வீட்டில் சும்மாய் இருந்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் போய்ட்டுதான் வருவமே என்று தோன்றியது.  அவளது அப்பா பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாலேயோ என்னமோ, சின்ன வயதிலிருந்தே அவளுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமிருந்தது.

அவன் வரச்சொன்ன இடத்தை பஸ் அடைந்ததும், வெளியே பார்த்தாள். அவன் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். வழமையாய் அவன் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பைக்கை காணவில்லை. அவனது கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

"என்ன இடம் பக்கத்திலையா?"
"இல்லை, கொஞ்சத்தூரம் தான். நடந்தே போய்டலாம்" சரியென்று கூடவே நடக்கத் தொடங்கினாள். சிறுவயதில் ஒரு fantasyயாய்த் தொடங்கி இப்ப ஒரு சில நாட்களாய்த்தான் மனம்விட்டு பகிரக்கூடிய ஒரு நெருங்கிய நண்பனாய் ஆகிவிட்டிருந்தான். 

"அதிசயமாய் பைக்கை விட்டிட்டு வந்திருக்கிறீங்க?"
"சர்வீஸ்க்கு  விட்டிருக்கு. இன்னும் வரேல்லை."
"ஒ.. மற்றவங்களை எத்திட்டுப்போனா உங்கடை லவர் ஏதாச்சும் சொல்லுவாங்கள் எண்டுதான் விட்டிடு வந்தீங்களோ எண்டு நினைச்சன்."
"யார் லிசவா.. She is very broadminded"
அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.
"இன்னும் கனதூரம் நடக்க வேணுமே?" நேற்று  முழுக்க karate பயிற்சி. இன்றுதான் கால் நோகத் தொடங்கி இருந்தது. சும்மா வாழ்க்கைக்குதவாத ஒன்றைப் படிக்கப் போய் வீட்டில வந்து அதுநோவுது இதுநோவுது எண்டு படுத்துக் கிடக்கிறதுதான் மிச்சம். அம்மாவின் திட்டல் நினைவுக்குவந்தது.

"இல்லை கொஞ்சத்தூரம் தான்.." சிறிது தயங்கிவிட்டுப் பின், "ஆனா அதுக்கு முதல்ல வேறை ஒரு இடத்துக்குப் போறம்"
"எங்க?"
"உனக்கு பிடிச்ச இடம் தான். போன பிறகு தெரிந்து கொள்ளுவாய் தானே.."
அதற்குமேல் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சிறுவயதுக் கதைகளின் சுவாரசியத்தில்  மூழ்கிவிட்டிருந்தாள். அதே டீச்சர்தான் இவளது எழுத்தைக் கிண்டல் பண்ணி 'மாட்டுக்கொட்டில்' என்றதும், அதுக்கு அவள் அழுததும், பிறகு அவரே வந்து சமாதனப் படுத்தியதும். எவ்வளவு நல்ல டீச்சர் மாணவர்களுடன் தானுமொருவராய் இருந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார். இதுவரை அவரிடம் படித்த யாருமே அவவை மறந்ததில்லை.

அந்த உச்சி வெயிலிலும் கடற்கரைக் காற்று சில்லென்று உடம்பில் படத்தான் எங்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. ஆனால் ஏன் இங்கு கூட்டிவந்தான் என்று தான் புரியவில்லை. ஒருவேளை சுதாவை வரச்சொல்லியிருப்பானோ? ஒரு நிமிஷம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனால் அடுத்த நிமிசமே, அப்படி வந்தாலுமே.. "இட்ஸ் டூ லேட்".. காரணம் இவனுக்கும் தெரியும்.  கண்ணீர்த்திரை கண்களை மறைத்தது.

யாரோ ஒருபெண் சிங்களத்தில் திட்டும் சத்தம் கேட்டு திரும்பியவளின் நெற்றியில் விழுந்த முடியை ஓரமாய்த் தள்ளிவிடும் அளவுக்கு, அந்த கடற்கரைக் காத்துக்கு வலிமையிருக்கவில்லை. 


"டக்.. டக்.." கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தால் நேரம் நண்பகலைத் தாண்டியிருந்தது. எழுந்துசென்று கதவைத் திறந்தாள்.
"சாப்பாடு கொண்டந்திருக்கிரன். நீங்க மரக்கறிதானே?" ரூம் பாய் தான்.
ஓமெண்டு தலையை ஆட்டினாள்.
"முதலாளிக்கு தெரியேல்லை. அதுதான் போன் பண்ணினவர். ஆனா நீங்கள் எடுக்கேல்ல. அதான் எதுக்கும் இரண்டையும் கொண்டு வந்தனான்." என்று சொல்லிவிட்டு மேசையில் அடுக்கினான். அவளுக்குச் சாப்பிடவே மனமில்லை. ஆனால் திருப்பிக் கொண்டு போகச்சொன்னால் திரும்ப அந்த மேனேஜர் போன் பண்ணி ஏனெண்டு கேப்பான். அவள் இன்றைக்குக் காலமை இங்கை வந்ததிலிருந்து இதுவரைக்குமே ஒரு மூன்று தரம் போன் பண்ணியிருப்பான். 

பின்ன என்ன, விடியக்காலமை எழும்பி அவன் சுவாமிக்கு விளக்கு வைக்க முன்னமே வந்து நிண்டு ரூம் இருக்கா எண்டு கேட்டால் யாருக்குதான் சந்தேகம் வராது? பின்னால் எட்டிப் பார்த்தால், அவள் வந்த ஓட்டோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தனிய வந்திருக்கிறாள், யாரும் கூட வரவில்லை.

"எங்கயிருந்து வாறீங்கள்?"
"கொழும்பிலிருந்து.." திகைத்துப் போய் அவளைப் பார்த்தான். எந்த சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.
பேசாமல் புத்தகத்தை எடுத்து பதியத் தொடங்கினான். வழக்கமான கேள்விகள்.
"வந்ததுக்கான கரணம்?"
"வன்னிக்குப் போகவேணும். அதுவரைக்கும் இங்கைதான் நிப்பன்." அதிர்ந்தான். இன்னும் கொஞ்சம் பிலத்து சொல்லியிருந்தால் இதில ஒரு பிணம் விழுந்திருக்கும். ஓடிப்போய் வெளியே பார்த்தான். நல்லகாலம், சென்றிப் போயன்ட்ல நைட் duty ஆமிக்காரன் போய்விட்டிருந்தான். மற்றவன் இன்னும் வரவில்லை. நிம்மதிப் பெருமூச்செடுத்தவாறு உள்ளேவந்து அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்தான். 

கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்தாள். அதுக்கு மாட்சிங்கா வெள்ளையில் கறுப்புப் புள்ளிவைத்த டாப். தோளில் ஒரு சின்ன கறுத்தப் பை, அவ்வளவுதான். ரெண்டு நாளிலே பாஸ் கிடைத்துவிடும் எண்டு நினைத்துக்கொண்டு வந்திருக்கிறாளா என்ன? அதுக்கெல்லாம் எவ்வளவு நாள் அலையவேணும். ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. எதோ பயங்கரத் திட்டத்தில் வந்தவள் போல இருந்தது. கரும்புலியாய் இருக்குமோ?

"IC  இருக்கா?" ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் குடுத்தாள். வியப்பாக இருந்தது அவனுக்கு. 
IC  என்பது ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் எவ்வளவு முக்கியம் எண்டு எல்லாருக்குமே தெரியும். அதுமட்டும் இல்லை எண்டால் அவன் செத்ததுக்குச் சமன். அதை இப்படிப் பொறுப்பில்லாமல் வெறுமனே பாக்கெட்க்குள்  வைத்துக்கொண்டு வாறாள் எண்டால்..
"எத்தினை நாளைக்கு இப்ப புக் பண்ணுறது?"
"அஞ்சு நாள்."
"ஒருநாளைக்கு சப்பாட்டோடை சேத்து எழுநூத்தைம்பது ஆகும்... ரெண்டுநாள் அட்வான்ஸ்.." முடிக்கவில்லை,  அடுத்த பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் எண்ணாமலேயே.  ஆயிரத்து ஐநூறு சரியாய் இருந்தது. 

பதிந்த துண்டையும், சாவியையும் எடுத்துக் கொடுத்தான். 
"இப்பிடியே மேலை போய் இடதுபக்கம் திரும்பினா ரூம் வரும்.. டே.. இங்கவா.. இவ கூடப் போய் கொஞ்சம்  ரூமைக் காட்டிவிடு. அப்பிடியே என்ன சாப்பாடு எண்டு கேட்டு குடு."
"நான் இப்பதான் சாப்பிட்டு வந்தனான். அதால வேண்டாம்.."
"சரி, அப்ப மத்தியானத்துக்கு கொண்டே குடு."என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் போய் விட்டிருந்தாள்.

இவளில் ஒரு கண் வைக்க வேண்டும் என்று அப்பமுடிவு பண்ணி தான் இப்படி அடிக்கடி போன் பண்ணுறான். பேசாமல் போனை எடுத்து வெளியே வைக்கலாம் எண்டு பாத்தாலும் எங்க ரூமுக்கே வந்துவிடுவானோ எண்ட பயத்திலை பேசாமல் விட்டுவிட்டாள்.

தாகமாயிருந்தது. நேற்றிரவு ட்ரெயினில் அவன் குடித்துவிட்டுத் தந்த தண்ணீர்ப் போத்தல் அப்படியே இருந்தது. எடுத்து அடியில் பார்த்தாள், எதுவுமில்லை. மெலிதாகச் சிரித்துக்கொண்டே கொஞ்சம் குடித்த போது, அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் வந்துவிட்டது  உறைத்தது. என்ன நினைத்திருப்பான்? 


*****

தொடரும் ..


Recent Posts

Labels

விமர்சனம் அனுபவம் Himalaya Creations ஈழம் "அவள்" ஒரு தொடர் கதை கவிதைகள் Jaffna இசை பாரதி கண்ணம்மா Himalaya சிறுகதை Ananthan சிங்கப்பூர் YIT yarl IT Hub JK உங்கள் பார்வைக்கு இளையராஜா campus harikanan printers கொலைவெறி NEP Ramavarma Steve Jobs bk srilanka இயற்கை கவிதை ஜெயமோகன் தேவதாசி யோகநாதன் அனந்தன் 2013 7ஆம் அறிவு Birthday CCIE Chundikkuli Girls College Dhanush Osho Singapore calendar harikanan kamal maayan calendar nishaharan sridevi suganyan thusikaran vijay அறிமுகம் அவள் ஒரு தொடர் கதை காலம் ஜனனி தமிழ் இனி தில்லானா நட்பு நிலவு நீ தானே என் பொன்வசந்தம் புகைப்படம் யுகபாரதி 2012 48HFP 48HFP Jaffna 50 shades of grey AE Manoharan AR Rahman Anu Art of Dying Australia Avon BMICH Barathiyar Blind Love Changing Seasons Chicago David Cameron Deepawali Film HDB Happy New year Homebrew Computer Club India’s Daughter JD JPL Jaffna University Jeyachandran Kaayam Karate Kaun Banega Crorepati Kung Fu Leena Manimekalai MGR Mariah Carey Mayan Mr. Harith Kariapper Naan Varuven National Geographic Nov 27 OGA PT Rajesh vaithiya Rajini Ricky Martin Rosy Senanayake Saraswathi Ranganthan Shaolin Spanish Eyes St. Johns College Sudha raguram The Big Bang Trailer Uduvil Girls college Vigil for Sivayoganathan Vidhiya Vigil for Vidhiya Zen are you in it bk gowri chundikkuli cup of life hsenid incredible india jam just a minute kumki songs lift logo love makeup march 8 meditation moorthy digital color lab moorthy guest house network panchangam poet thamarai pokkiri post office ragunaathaiyar samantha silicon valley simbu sitharth song soorya soul step up stretching room effect swan system thirisha thuppakki veena virtusa vishwaroopam wanted why this kolaiveri women's day wso2 yarl zulustyle அக்க்ஷய திருதியை அங்கவர்ணனை அம்பி குரூப் அற்புதத்தில் அற்புதம் இறுதிப்போர் இலங்கை முஸ்லிம் எம்.ஜி.ஆர் எஸ். ராமகிருஷ்ணன் ஏசுநாதர் கடிதம் கலிங்கத்துப்பரணி சகோதரத்துவம் சிவகுமார் சிவபுராணம் சீமான் சுவாதித்திருநாள் செங்கடல் ஜெயச்சந்திரன் தங்க மீன்கள் தனுஷ் தமிழ் தலை முடி திரிசங்கு சொர்க்கம் திருவாசகம் தீபாவளி நத்தார் நந்தகுமார் நந்திக்கடல் நல்லூர் நாக. இளங்கோவன் பண்டிகை பழைய மாணவர் சங்கம் பாரதி பிடித்தபத்து புன்னகை மன்னன் புரட்சித் தலைவர் மாணிக்கவாசகர் முள்ளிவாய்க்கால் மே 2009 மேதினம் வெண்முரசு வைரமுத்து
 
Copyright © ரசிகை. Design By New Blogger Templates
Support IE 7, On Sales, Best Design