கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XF1YQD4
எங்கேயாவது போய்விடவேண்டும் என்று முடிவெடுத்து புகையிரதநிலையம் வரை வந்துவிட்டவளுக்கு எங்கு போவது என்றுதான் தெரியவில்லை. பிளாட்பாரத்தில் டிக்கெட் எடுக்க பெரிய வரிசை நின்றது. எந்த வரிசையில் நிற்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது ஒரு போர்ட்டர் வந்து காசு தந்தா டிக்கெட் எடுத்துத் தருவதாய் சொன்னபோது சரியெண்டு தலையாட்டினாள்.
"எங்கே போரீங்கம்மா?"
"வவுனியா.." அவளுக்கே தெரியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
"சரி. ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு வாங்கோ, டிக்கெட் கொண்டுவந்து தாறன்" என்றுவிட்டு காசைவாங்கிக்கொண்டு போனவனை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள். இவன் எமாத்திக்கொண்டுதான் போகப்போகிறான்.. எதுவோ நடக்கிறது நடக்கட்டும் என்றுவிட்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றால் அவன் போய்விட்டிருந்தான். திரும்பிவந்து ஸ்டேஷன்ல் உட்கார்ந்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழிந்திருக்கும். எத்தினை மணிக்கு train வெளிக்கிடுது எண்டு கூடப் பார்க்காமல் இருந்துவிட்டாள்.
"இந்தாங்கோ உங்கடை டிக்கெட். train ஓம்பதரைக்குத்தான் இங்கிருந்து வெளிக்கிடுது. அதுவரைக்கும் ரெஸ்ட் ரூமில ஓய்வேடுக்கிரதேண்டா போய் இருங்கோ." சாவிகொடுத்த பொம்மையாட்டம் தலையை ஆட்டிவிட்டு உள்ளே போய் ரெஸ்ட்ரூம்ஐ பார்த்தாள் ஒரே சனமாய் இருந்தது. ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்தாள்.
அவளுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? சுதாவைக் காதலித்தது அவளின் தப்பா? என்னதான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணைப் பார்த்து "உனக்கு அப்பிடி அவசராமாய் ஏதும் தேவை எண்டால் உலகத்திலை எத்தினை ஆம்பிளைகள் இருக்கினம், அவையளைப் போய்ப் பிடிக்கிறதுதானே" என்று அவன் கேட்டபோது சுக்குநூறாய் உடைந்துபோனாள். ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு "ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்.. ஐ லவ் யு.." அவளின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்தே போனது. அவனோ சற்றும் கவனியாது திரும்பிய வேகத்தில் கையிலிருந்து விழப்போன புத்தகங்களை சரிசெய்துகொண்டு வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தான்.
இதுவரைக்கும் அவனைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறெந்தத் தேவைகளுமே இருக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் இப்போது எதற்கோ அலைவதாய் பொருள்படக் கூறியது அவளைக் கண்டம் துண்டமாய் வெட்டிக் கடலில் வீசியது போலிருந்தது. அவனைப் பொறுத்தவரை அவை கோபத்தில் வந்த சாதாரண வார்த்தைகள். ஆனால் அவைதான் அவளின் வாழ்க்கையையே மாற்றி எழுதிய இன்னொரு பிரம்மனின் தலைஎழுத்து.
"பிள்ளை.. உன்னைத்தான் அவர் கூப்பிடுறார்." என்று அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்தியின் குரல்கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.
"உங்கடை train வெளிக்கிடப்போகுதே ஏறையில்லையா?" என்று கேட்ட போதுதான் மணி ஒன்பதரையாயிருந்ததைக் கவனித்தாள்.
எதுவும் பேசாமல் சென்று உட்கார்ந்தாள். கரையோர சீட். அவன் சொல்லி எடுத்திருப்பான் போல.
"பக்கத்து சீட்ல யாரும் வரமாட்டினம் எண்டு நினைக்கிரன். இரவில நீட்டி நிமிந்து படுக்க வசதியாய் இருக்கும். பத்திரமா போய்ட்டுவாங்கோ." சரி என்று தலையாட்டினாள்.
கொஞ்சத்தூரம் போனவன் திரும்பிவந்து பின்னால் இருந்தவனிடம் எதோ சிங்களத்தில் பேசியபோது தான் அவளுக்கு திக் என்றிருந்தது. இவன் எதோ பிளான் பண்ணித்தான் என்னை இதில எத்தியிருக்கிறான். உஷாராகி பின்னாலிருந்தவனை உற்றுப் பார்த்தாள். அதற்கிடையில் அவளது மனஓட்டத்தைக் கணித்தவன் போல்,
"பயப்படாதீங்கம்மா. அவர் ஆர்மி தான், அனுராதபுரம் போறாராம். நீங்கள் தனியாப் போறிங்கள் எண்டு கொஞ்சம் பார்த்துக்கொள்ளச் சொன்னன்". நம்பிக்கையில்லாமல் அந்தப் புதியவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். அவளை விட ஓரிரு வயசு கூட இருக்கலாம், ஆனால் பார்க்க சின்னப் பெடியனாக இருந்தது. பரவாயில்லை ஏதாவது பிரச்சனை எண்டாலும் சமாளிக்கலாம் என்று தோன்றியது.
"ஓயா, சிங்கள தன்னத்த?" (உங்களுக்கு சிங்களம் தெரியாதா?)
இல்லையென்று தலையாட்டினாள். அவன் புன்னகைத்துவிட்டு போர்டேருக்கு எதோ சொல்லவும் train வெளிக்கிடவும் சரியாக இருந்தது.
அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் பீறிட்டுக் கிளம்பியது. அவளது தேவைகள் பூர்த்தியாகியிருந்தனவோ இல்லையோ ஆசைகள், கனவுகள் அத்தனையுமே சுக்குநூறாகி சிதைந்துவிட்டிருந்தன. அவனைப் பழிவாங்குவதாய் நினைத்துக்கொண்டு எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிவிட்டோம் என்று புரிந்தது. அழுதாள்.. அழுதாள்.. இரவு முழுவதும் அழுதுகொண்டேயிருந்தாள் சத்தமில்லாமல். எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்று தெரியாது, யாரோ தட்டுவது போலிருந்ததால் திடுக்கிட்டு எழுந்தாள். அவன்தான்,
"நங்கி, ஓயா.. " சற்று யோசித்துவிட்டு, "சாப்ட.. சாப்ட..?" கையையும் தலையையும் ஆட்டி ஆட்டி அவன் கேட்ட தோரணை பார்க்க சிரிப்பாய் இருந்தது. ஆங்கிலம் தெரியாது போலும்.
"எப்பா.." (வேண்டாம்) என்றுவிட்டு மீண்டும் படுக்கச் சென்றால், சிறிது நேரத்திலே அடுத்தே ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டி அங்கு சிறிது நேரம் நிற்கும் என்று அறிவித்தார்கள். பெரும்பாலுமே வண்டி நிற்கும் போதுதான் கள்ளர் ஏறி கத்திமுனையில் களவுஎடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதால், தூக்கம் போய்விட்டிருந்தது. அவன் வேறை இறங்கி எதுவோ வாங்குவதற்க்காய்ப் போயிருந்தான். அப்போதுதான் சிறிது பயம் தலைதூக்கியது. அம்மா வேற வீட்டிலை அழுதுகொண்டிருப்பா. ஆனாலுமே அவர்களுக்கு இப்படி ஒருபிள்ளை இருந்து தினம்தினம் சாகடிப்பதை விட இல்லாமல் போய்விடுவதே மேல் என்றுதோன்றியது.
வண்டி புறப்படும் வேளையில் அவன் ஓடிவந்து ஏறினான். மூச்சிரைக்க,
"நங்கி, வத்துறு ஒன்னத?" (தங்கச்சி, தண்ணீர் வேண்டுமா?) இவன் விட மாட்டான் போலிருந்தது. மினறேல் வாட்டர் தான் ஆனால் மூடி திறந்திருந்தது. சந்தேகமாய்ப் பார்த்தால், அவள் மனவோட்டத்தை அறிந்து கொண்டவன் போல் சிரித்துவிட்டு, அவள் கண்முன்னே கொஞ்சம் குடித்துவிட்டு நீட்டினான்.
"ஹரித?" (சரியா..?) சிரித்துக்கொண்டே கேட்டபோது அவளால் தட்ட முடியவில்லை. வாங்கினாள்.. ஆனால் குடிக்காமல் பையில் வைத்துவிட்டாள்.
"நங்கி, கொய்த யன்னே?" (தங்கச்சி, எங்க போறீங்க?) வார்த்தைக்கு முன்னூறுதரம் தங்கச்சி போட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலில் பாசம் இருந்ததா தெரியவில்லை, ஆனால் உண்மை இருந்தது.
அதன் பிறகு அவன் கேட்டதெல்லாத்துக்கும் கொஞ்சம் சிங்களம் கொஞ்சம் சைகை கொஞ்சம் இங்கிலீஷ் எண்டு பாதி புரிந்தும் புரியாமலும் ஏதேதோ கதைத்தார்கள். அவன் லீவு முடிந்து போகிறானாம். களத்தில முன்னரங்கிலை நிக்கிற பணியாம். எந்தநிமிசமும் உயிர் போகலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னபோது, இதே மாதிரி முன்னரங்கில நின்ற ஒரு போராளி அக்காவுடன் கதைத்தது ஞாபகம் வந்தது.
அவாகூட இப்படித்தான் எந்த நிமிஷம் சாவருமெண்டே தெரியாது என்று சிரித்தபடியே சொன்னபோது ஆச்சரியமாயிருந்தது அவளுக்கு. மடுவில் ஒருநாள், அவளும் தோழியும் பாடசாலையிலிருந்து வரும்போது மறித்துப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். இது அவளுக்கொன்றும் முதல் தடவை இல்லை என்பதால் பேசாமல் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தான் வீட்டுக்கொரு பிள்ளை என்பதால் எல்லாம் முடிந்து கடைசியில விட்டுட்டுத்தான் போகிறவர்கள். ஆனால் அவளின் தோழிதான் நிறையவே பயந்துவிட்டிருந்தாள். அவளை சமாதானப் படுத்தவே போதும் போதுமேன்றாகியிருன்தது.
அப்போது கூச்சலிட்டு நையாண்டி செய்துகொண்டு அந்தவழியே போன சில பெடியன்களைக் காட்டி ஏன் அவங்களைக் கேட்கவில்லை என்று அவள் கேட்டதுக்கு, "தலைவர் ஒழுக்கமானவர்களைத்தான் போராட்டத்தில் இணக்கச் சொல்லியிருக்கிறார். இப்படித் தறுதலைகளை இணைத்தால் எங்களது புனிதமான போராட்டத்துக்குத் தான் இழுக்கு" என்று அவர் சொன்னதற்கு "அப்போ ஒழுக்கமானவர்கள் எல்லாம் போய் நின்று இந்த தறுதலைகளை காக்கவா போராடிச் சாகிறோம்" என்று அவள் கேட்கையிலேயே, கூட்டிப் போக அவளது அப்பா யாரோ சொல்லி அங்கு வந்துவிட்டிருந்தார்.
அனுராதபுரம் வந்துவிட்டது. அவன் இறங்கிக் கையசத்துவிட்டுப் போகையில், அதுவரை ஆர்மி என்றாலே கொல்லுவான் இல்லை rape பண்ணுவான் என்றிருந்த ஒரு தோற்றப்பாடு அவளிடம் அடியோடு மாறியிருந்தது. நம்மில் சில கூழாங்கற்கள் போல் அவர்களிலும் சில மாணிக்கங்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
கருத்துகள்