முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : கோபம்

பாகம் மூன்று : கோபம் 

"நீ அவனைக் காதலிக்கிறியா?" விரிவுரை முடித்து வந்துகொண்டிருந்தவளைக் கூட்டிச்சென்று கேட்டபோது முதலில் எதுவுமே புரியவில்ல அவளுக்கு. அருகில் நின்ற உஷாவைப் பார்த்தாள். 
"நீ தானே சொன்னாய் கேள் எண்டு.." இப்போது புரிந்துவிட்டது. 
"அதுக்கு இப்படித்தான் சொல்லி வைச்சிருக்கிறியா? நான் இதையா கேக்கச் சொன்னான்?"
"அதுக்கு இதுதானே அர்த்தம்." ரஞ்சன் இடைமறித்தான்.

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காய் மீண்டும் தப்பு மேல தப்பு செய்கிறாய் என்று உள்மனம் எச்சரித்தது. தூரத்தில் அவன் வழக்கம் போல தமிழ் மரத்தின்கீழே இருந்துகொண்டு எதுவுமே நடவாதது போல கடலை போட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலேயே இவனுக்கு சம்பந்தம் இல்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறானா?

"Thamil Maram"
The memories root all the way to the trunk and the bottom layed benches...
Giving every thing all it can.
Shades to all who have been under the mighty tree.
All the stories are written inside the core and the branches are every where may be visible only to the campus eyes...

Copyright © http://groups.yahoo.com/group/thamil_maram/


"அவர் என்ன சொன்னார்..?" எச்சிலை விழுங்கிக்கொண்டு கேட்டாள்.
"இஞ்சபார்.. அவர்.. மரியாதை.. ஆ..?" என்ற ரஞ்சனின் நக்கலை ரசிக்கும் நிலையில் அவள் இப்போது இல்லை.
"இல்லை அதுவந்து.. என்னால இது முடியாது.. ஆனா எனக்கு அது யார் எண்டு தெரியணும். அவ்வளவுதான். " ஒருமாதிரி சொல்லி முடித்துவிட்டாள்.
"தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்? கட்டிவைத்து உதைக்கப் போகிறாயா?", திடுக்கிட்டாள்.

சில தினங்களுக்கு முன்புதான் அவர்கள் கல்லூரியில் முதலாவது batch trip கூட்டிக்கொண்டு போயிருந்தனர். கந்தானை மலை, வெறும் காடு. கல்லு முள்ளெல்லாம் தாண்டிப் போனா கடைசில ஒரு குட்டி மலை.. அங்கால dead-end .   இதுக்குப் போய் இவ்ளோதூரம் மாங்கு மாங்குன்னு நடந்து வந்ததை நினைக்க எரிச்சலாய் வந்தது அவளுக்கு. நேரம் வேறை இருட்டிப் போயிருந்தது. காடு என்பதால் சீக்கிரமே இருட்டிவிடும். முந்தி மடுவுல இருக்கேக்க கூட இப்படித்தான். பள்ளிக்கூடம் பண்டிவிரிச்சானில இருந்தது. இடையில இப்படியொரு அடர்ந்த காடு, அதைத் தாண்டித்தான் தினமும் போய் வாறது. அங்கை யானைகள் நிறைய இருந்ததால இருட்டிறதுக்கு முதலே வீடு போய்ச் சேர்ந்திடவேண்டும் எண்ட பதற்றத்தில வேகமா சைக்கிளை மிதிப்பம். 

அப்படித்தான் ஒருநாள், பள்ளிக்கூடம் முடிச்சு பக்கத்திலேயே ஒரு டீச்சர் வீட்டை டியூஷன்ம் முடிச்சுக் கொண்டுவர மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. கூட வந்த தோழி வேற, வழியிலிருந்த யானை லத்தியக் காட்டிப் பயமுறுத்திக்கொண்டு வந்தாள். வேகமாய் மிதிக்கலாம் எண்டு சீட்ல இருந்து எழுந்தபோது, சடாரென ஒரு மோட்டர்சைக்கிள்  குறுக்கால் வந்து வழிமறித்தது. திடீரென பிரேக் போட்டதால் சமநிலை தவறி விழப் போனவளைத் தாவி, சைக்கிள் handleஐ இறுகப் பிடித்து காப்பாற்றியது ஒரு ஆணின் கரம்.  மனதுக்குள் எழுந்த பயத்தை மறைத்தபடி யாரென்று பார்த்தாள். இவனா? மாநிறம், அப்பாவித்தனமான முகம். ஒரே பள்ளிக்கூடம் தான். அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவன் உயர்தரமோ சாதாரணதரமோ தெரியாது. நல்லவன் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தோமே? எதுக்காக இந்த நேரத்தில் வந்து வில்லன் போல் வழி மறிக்கிறான்?

"உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டும்" யாரைப் பார்த்துக் கேட்கிறான். திரும்பி தோழியைப் பார்த்தாள். தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வேகமாய்த் தலையை ஆட்டினாள்.
"இந்த நேரத்திலையா? இருட்டிடுத்து வீட்டை கெதியாப் போகவேணும். அம்மா தேடுவா." பெண்களுக்கேயுரிய எச்சரிக்கை உணர்வு கை கொடுத்தது. வேகமாய் சைக்கிளைத் திருப்பி மிதிக்கத் தொடங்கினால் அவன் கூடவே வந்தான். கண்ணுக்கெட்டின தூரம்வரைக்கும் யாரையுமே காணவில்லை. பயம் கவ்விக்கொண்டது. சமாளித்துக்கொண்டு,

"இப்படிப் பின்னாலேயே வந்தீங்கண்டா நாளைக்கு ப்ரின்சிபல்ட சொல்லிடுவன்." முடிந்தவரை வேகமாய் சைக்கிளை மிதித்தபடி. 
"நான் சொல்றத தயவுசெய்து ஒருநிமிஷம் நிண்டு கேளுங்கோ". அவனின் தொடர் கெஞ்சல்கள் இன்னும் பீதியைக் கிளப்பியது. தோழியின் முகத்தைப் பார்த்தாள். எந்த சஞ்சலமுமில்லாமல் வந்துகொண்டிருந்தாள்.

இவளுக்கு ஏற்கனவே தெரியுமோ? இருக்காது, என்கூடத்தானே வந்து போகிறாள், பிறகு எப்படி? நாளைக்குப் போய் முதல் வேலையாய் ப்ரின்சிபல்ட சொல்லிடனும். அவா நல்லவா. சிஸ்டர் தானே, நிச்சயம் எனக்கு சப்போர்ட் பண்ணுவா. ஆனால் பாவம், அவரும் அவனுக்குத்தான் வக்காலத்து வங்கப் போகிறார் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும் சொல்லியதுபோல அவன் நல்லவனாகவே இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்ன, இருந்தான்.. ஆனால் அவள்? 

"இங்க பாருங்க உங்க கூடக் கதைக்க எனக்கு ஒண்டுமில்லை. எதெண்டாலும் நாளைக்கு பள்ளிக்கூடத்தில கதையுங்கோ." சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒருவாறு மடு எல்லையை அண்மித்திருந்தனர். அங்கு ஒரு வாகனத் தடை இருக்கும் சைக்கிளைத் தூக்கித்தான் ஏத்த வேண்டும். பதட்டத்தில் அவளால் இன்று ஒழுங்காய் ஏத்த முடியவில்லை. 

"தாங்க, நான் எத்தி விடுறன்." மோட்டார்சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு வெகு அருகாமையில் வந்துவிட்டிருந்தான். 
எங்கிருந்து அந்த திடீர் பலம் வந்ததோ 'பளார்' என்று அறைந்து விட்டு  இரண்டு கையாலையும் அப்பிடியே சைக்கிளை அலாக்காய்த் தூக்கி மறுபுறம் வைத்து ஓட்டம் எடுத்தபோது,
"ஐ லவ் யு" அவனின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்து போனது. அவள் கைகளைப் பார்த்தாள். சிவந்துபோய் இருந்தது.

சே.. இனி இவ்வளவு தூரமும் இந்த இருட்டில திரும்பி நடக்கணுமே என்று நினைத்த போது அசதியாய் இருந்தது. இதில் வேறை, தோழி ஒருத்திக்கு கால் முடியாமல் போய் எல்லோரும் கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு வந்தனர். இவ்வளவு சிரமப்பட்டு இப்படி ஒரு பயணம் தேவையா எண்டு தனக்குத் தானே முனுமுனுத்துக்கொண்டிருந்தபோது, ரகசியமாய் ஒருவிரல் வந்து அவள் விரல்களை மெதுவாய்
 வருடிச் சென்றது. திடுக்கிட்டு  திரும்பிப் பார்த்தாள். அவளைவிட உயரமாய் இரண்டு உருவம் அருகில் வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்மிருட்டிலும் ஒருவனை அவளால் ஓரளவு தெளிவாய் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவனா? இதுதான் அவளது கேள்வி. இதுக்குப் போய் இந்த ரஞ்சன் காதல் கத்தரிக்காய் எண்டு..

"நீயே சொல்லு.. நான் போய் அவனிட்டை, நீ அவளின்டை கையைத் தொட்டியா எண்டு கேட்டால் என்ன நினைப்பான்?" ரஞ்சனது கேள்வியிலையும் நியாயம் இருந்தது. அதைவிட அந்தக் கும்மிருட்டில் அவனை அறியாமல்கூடத் தொட்டிருக்கலாம். ஆனால் அப்பிடி என்றால் ஒரு ' sorry '  சொல்லியிருப்பானே. 

"உன்னால முடியாதெண்டா சொல்லு. நானே கேட்டிடுறன்". ஏற்கனவே ஆண்கள் மீதிருந்த வெறுப்பு இப்போது ஈகோவாக மாறி சினத்தின் உச்சியிலிருந்தாள்.
சிலகணம்  தயங்கிவிட்டு, "எதுக்கும் நல்லா யோசி" என்றுவிட்டுப் போய்விட்டான்.


*****

தொடரும்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்