முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : தாய்

பாகம் ஆறு : தாய்

மருத்துவக் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும் என்ற அவனது பதினெட்டு வருடகாலக் கனவை நனவாக்கப் போகும் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சி இருந்தன. இரவுபகல் பாராது கடுமையாகப் படித்துக்கொண்டிருந்தான்.

"ரிங்.. ரிங்.." அவள் தான். சிறிது நேரத்தில் எடுப்பதாய்ச் சொல்லியிருந்தாள். எடுப்பதா வேண்டாமா எண்டு யோசித்துக் கொண்டிருக்கையிலே நின்றுவிட்டது. 
சே.. இவளுக்குக் கொஞ்சநாளாவே என்ன ஆச்சுண்டே தெரியேல்ல. இந்த தேர்வு எவ்வளவு முக்கியம் எண்டு தெரிந்திருந்தும், ஏன் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறாள். தானும் படிக்காமல் என்னையும் குழப்பிக்கொண்டு. இப்ப அம்மாவோடை எதோ முக்கியமாய்க் கதைக்க வேணுமாம். ஏன்டா சந்தித்தோம் எண்டிருந்தது அவனுக்கு.

"ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்.."
"யாரப்பா இந்தநேரத்திலை? எப்பபாத்தாலும் போன் அடிச்சுக்கொண்டு இருக்கு. வீட்ல படிக்கிற பிள்ளையளையும் குழப்பிக்கொண்டு." அப்பதான் வீட்டுக்குள் நுழைந்த அம்மா போனை எடுத்து,
"ஹலோ!"
"ஹலோ ஆன்ட்டி, நான்.. " குரல் விக்கித்தது.
"சொல்லு பிள்ளை என்ன விஷயம்?"
"அது வந்து.. நீங்கள்.. நான் அடிக்கடி போன் பண்ணி சுதாவைக் குழப்பிக்கொண்டிருக்கிறதா சொன்னீங்களாமே. அது தான்.."
"இல்லையே.. யார் அப்பிடிச் சொன்னது?"
"இல்லை நீங்க சொன்னீங்க எண்டுதான்.." அனுதான் சொன்னாள் எண்டு சொல்லிவிடலாமா? ஆனால் இவளுக்குப் போட்டுக்குடுத்துப் பழக்கமில்லாததால் தடுமாறினாள்.
"இஞ்ச பாரு பிள்ளை. நீயாரெண்டே எனக்குத் தெரியாது. பிறகெப்படி நான் சொல்லியிருக்க முடியும்?" ஆ..? இந்தக் கோணத்தில் ஏன் அவள் யோசிக்கவில்லை? அப்பாவித்தனமாய் யார் என்ன சொன்னாலும் அதை அப்பிடியே நம்பிக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகவே இன்னும் எத்தினை நாளைக்குத்தான் இருக்கப் போறாளோ..

"இல்லை உங்களுக்கு நல்லத் தெரிஞ்ச ஒராள் தான் எனக்குச் சொல்லி, என்னை இனி சுதாவுக்கு போன் பண்ணி தொந்தரவு செய்ய வேண்டாம் எண்டு சொன்னவா. அதுதான் நீங்க என்னை யாருன்னே தெரியாம எப்படி தப்பா சொல்லலாம்?" பொரிந்து தள்ளிவிட்டாள்.

உண்மைதான். இந்த இரண்டு வருடங்களில் அவனுக்கு போன் பண்ணின நாட்களை விரல் விட்டு  எண்ணிவிடலாம். அப்பிடியிருக்க, எதோ நான் தான் படிக்கவிடாமல்.. அவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.

"இல்லைபிள்ளை. நீரும் படிக்கவேனும்தானே. அதுதான் உம்மடை நல்லதுக்கும்தான் சொன்னனான்." 

இப்படித்தான் அப்பாவும், அவளுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து மூச்சுக்கு முன்னூறுதரம் "படிபடி.." எண்டு அதுக்கான அவர் தரப்பு வாதங்களை சொல்லச் சொல்லக் கேட்டுக் மனப்பாடமே ஆகியிருந்தது.
"உனக்கு இப்ப நாங்க சொல்லுறது விளங்காது. பிறகுதான், உன்னோடை படிச்சவை எல்லாம் நல்லா முன்னுக்கு வரேக்க தான், நான் அப்ப படிக்காம விட்டுட்டமே எண்டு வருத்தப் படுவாய்.. உனக்கு நாங்க செஞ்சது போல எனக்கும் எங்க அப்பா அம்மா வசதி செய்து தந்திருந்தா நான் எவ்வளவு சந்தோசமா பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பன்.. நாங்க விட்டதை நீதான் நல்லாப் படிச்சு எங்கட குடும்பத்துக்கே பெருமை சேர்க்க வேணும். எங்களுக்கு வேற யார் இருக்கினம்? உன்னைத்தான் நம்பியிருக்கிறம்."  கேட்ட பல்லவியாய் இருந்தாலும், கடைசில அவர் தளுதளுத்த குரல்ல முடிக்கேக்க.. எப்படியாச்சும் படிச்சு பெரியாளா வந்து நாம யார்ன்னு காட்டவேணும் எண்டு ஒரு வேகம் வரும்.  அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும். "என்னப்பா.. படிச்சு என்னத்தைக் காணப் போறம். எல்லாரும் கடைசில சாகத்தானே போறம்." அவளது வயதுக்கு மீறின பேச்சு விரக்தியின் வெளிப்பாடா அல்லது உண்மையின் தேடல்களுக்கான அறிகுறியா என்று இதுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என்ன இருக்கிரீர்தானே லைன்ல.." ஆன்ட்டியின் குரல் அவளை இந்தவுலகத்துக்கு திரும்ப அழைத்து வந்தது. ஆனால் என்ன கதைத்துக்கொண்டிருந்தோம் என்பது மறந்துவிட்டது.
"ஓம் ஆன்ட்டி.. ஆனா நீங்க அப்பிடிச்சொன்னதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. ஏனென்டா நான் அவருக்கு போன் பண்ணுவதேயில்லை. அனு மூலமாத்தான்.." நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவனின் சம்மதத்தை கேட்டு தோழி மூலமாய் தூது விட்டதை போய் அவன் அம்மாவிடமே யாராவது சொல்லுவார்களா?
"ஒ.. அவள் தான் சொன்னதா.. நான் கேட்குறன் என்னண்டு." சே.. என்ன சொல்லப் போய் என்ன ஆகிவிட்டது.
"ஐயோ ஆன்ட்டி வேண்டாம். நான் தப்பா சொல்லிட்டன். ப்ளீஸ் இதோட விட்டிடுங்க. அவளுக்கு எதுவுமே தெரியாது." கெஞ்சினாள்.
"சரிபிள்ளை. நீர் போய் நல்லா படியும். எதெண்டாலும் பிறகு பாப்பம் என்ன?"
அவரின் வாஞ்சையான பேச்சு அவளது குற்றவுணர்வை இன்னும் அதிகரித்தது. எதுவும் பேசாமல் போனை  வைத்துவிட்டாள். அந்தத்தாயின் பாசத்துக்கு முன்னால் தனது காதல் தோற்றுவிட்டதாய் உணர்ந்தாள். இப்படிப்பட்ட ஒரு தாய்க்காக தனது காதலைக்கூட அவன் தியாகம் செய்யத் தயங்கமாட்டான் என்று தோன்றியது. 


போனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். இது எடுத்து என்ன ஒரு ரெண்டு வருஷம் இருக்குமா? அப்பெல்லாம் போன் எடுப்பதேண்டால் பெயரைப் பதிந்துவிட்டு நீண்டநாள் காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஆறுமாதம்.. காத்திருந்து காத்திருந்து ஒருநாள் வந்தேவிட்டது. வந்ததும் முதல் வேலையாய் அவள் புரட்டியது Phone Directory தான். 

"T.. T.. T.." ஆ இங்க இருக்கு.. Alexandra tr. கண்டுபிடித்து விட்டாள். சந்தோசத்தில் இலக்கங்களை அழுத்தும் போது விரல்கள் நடுங்கின. 

"ரிங் போகுது" இதயம் படக் படக் என்றது.. எடுத்தது அவனது அப்பா..
"ஹலோ.."
"May I Speak to Sudha, Please?" முன்னமே ஒரு பத்துத் தரம் ஒத்திகை பார்த்திருந்தாள்.
"Hold on the line, please" மூச்சு முட்டியது. அம்மாவை முதலே பிளான் பண்ணி கீழ் வீட்டுக்கு அனுப்பியிருந்தாள். அதால இப்போதைக்கு வரமாட்டா.

"ஹலோ.." என்ன ராகமாய் இருக்கும்?  "Hello.. Who is on the line?"
"நான் வந்து.. "
"oh my god.. நீங்களா.. கனநாளைக்குப் பிறகு.. என்ன செய்து கொண்டிருக்கிறீங்க?"
"நான் maths படிக்கிறான் நீங்க?"
"நான் bio.. குஹனாதன் sirட தான்."
எல்லாம் ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முதலே கதைத்தவை தான். அப்போதுதான் சாதரணதரம் முடித்துவிட்டு resultsஇட்காகக் காத்திருந்தனர். அவன் பயோ படிக்கப் போறதா முதலில் சொன்னபோது. ஒ.. அப்ப டாக்டர் தானே.. என்று நக்கலாய்க் கேட்டது ஞாபகம் வந்தது. பிறகு எனக்கு வீட்டிலை வந்து maths  சொல்லித்தந்த கருணா sir ஐ அவனுக்குத் தெரியும் என்றபோதுதான் அவன் வீடு எங்கே இருக்கு என்று கேட்டிருந்தாள். முன்னாலுள்ள வீதி என்றபோது, அட, இத்தனை நாளா sir சொல்லிக்கொண்டிருந்த அந்தக் 'கெட்டிக்காரப் பெடியன்' அவன்தான் என்று விளங்கியது. அதனால் கொஞ்சம் மரியாதையும் வந்திருந்தது.

"உங்கட பாட்டு அரங்கேற்றம் நடந்தது எண்டு கேள்விப்பட்டன் அதுதான் விஷ் பண்ணலாமெண்டு.."
"ஒ. அதுவா தேங்க்ஸ்."
"எங்களையெல்லாம் மறந்திட்டீங்கதானே. invite பண்ணேல்லை."
"அப்பிடியெல்லாம் இல்லை. சும்மா ஒரு சின்ன நிகழ்ச்சிதான்."
..........
.........
"ஒ.. இங்க நேற்று ஒரே மழை, ரோட்ல நல்ல வெள்ளம். உங்கை எப்படி?" முன்தெரு.. ஒரு முப்பதுநிமிச நடை தான் இருக்கும்.
"ஒ.. இங்கயும் சரியான மழை தான்.."
............
............
பிறகென்ன..? "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னமோ மயக்கம்" என்ற ரேஞ்ச்சுக்கு அவள் டூயட் பாடத் தொடங்கி விட்டிருக்க " பொறுங்க. அம்மா கூப்பிடுறா, நான் பிறகு கதைக்கிறன்" என்று வைத்துவிட்டான்.



*****
தொடரும்..





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்