பாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்!

by - 12/11/2011 12:07:00 முற்பகல்

அந்திமாலைப் பொழுது
அவனருகிருக்கும் பொழுது 
மனதினிக்கும் பொழுது 
மகிழ்ந்திருக்கும் பொழுது

கரம் பற்றி விரல் நீவி 
தோழ் சாய தலை கோத
கண் பார்க்க இதழ் சேர்க்க 
மடி சாய உடல் மூட 

ஆதவன் மெதுவாய் மறைய 
நீதான் என் ஒளிவிளக்கு.. 
அவன் உதடுகள் மொழிய 
அது ஒரு பொன்.. மாலைப்.. பொழுது.. 

எழுதிமுடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள். மயக்க ஊசியில்லாமலே நிம்மதியாத் தூங்கிக்கொண்டிருந்தான். அணையப் போகிற விளக்கு இறுதி நேரத்தில் பிரகாசமாய் எரியுமே.. அதுபோலிருந்தது அவன் முகம். எழுந்து சென்று காலை போடவேண்டிய மருந்துகளை எடுத்து  அடுக்கினாள். நேற்று அவள்பாட்டுக்கு மருந்தை எடுத்துக் குடுத்ததுக்கு nurse திட்டியிருந்தார். அதனால் அவனை எழுப்பாமல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி எத்தனை சந்தோசமான தருணங்களைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்க நினைக்க வலித்தது.

இனி அவன் இருக்கப் போற ஒவ்வொரு நிமிடங்களுமே சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என நேற்றே முடிவு செய்திருந்தாள். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் குடுக்கத் தயாராகவிருந்தாள். மருத்துவம் முட்டாள் என்று சொல்லவதைப் பற்றியோ ஊரார் பழிப்பதைப் பற்றியோ அவளுக்குக் கவலையில்லை. இது அவளது வாழ்க்கை. இதுவரை மற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்து கெட்டது போதும். இனி எனக்காக வாழவேண்டும். அவனுக்காக வாழவேண்டும். அவனது அந்தச் சின்னச் சின்னச் சந்தோசங்கள் தான் அவளது முழு வாழ்க்கையுமே. யன்னல் வழியே தெரிந்த சூர்யோதையத்தை இன்று அவளால் நன்கு ரசிக்க முடிந்தது. ACயிலிருந்து சில்லென்ற காற்று முகத்திலடிக்க கண்களை மூடி நன்றாக மூச்சை எடுத்து விட்டாள்.

"good morning" திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது, அவன்தான் இதழோரம் முறுவலுடன் எந்த உதவியுமில்லாமல் தானாகவே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவன் கண்களில் தெரிந்த குறும்பு அவளை சித்திரவதை செய்ய, "என்ன சார், இண்டைக்கு நல்லாவே நித்திரை கொண்டுடீங்க போல..?" என்றபடியே  கிட்ட வந்தாள்.

"அப்பிடியே.. சொர்க்கத்திலை நேரம் போறதே தெரியாதேண்டேல்லே சொல்றவை..." என்றவன் அவள் கைகளைப் பிடித்திழுத்து மடிமீது சாய்த்து உதடுகளில் அழுந்த முத்தமிட்டு அவள் காதோரம் "உன்கூட இருந்த இந்த மணித்துளிகள் மரணப் படுக்கையிலும் மறவாதெடி கண்ணம்மா." என்று மெதுவாய் கிசுகிசுக்க, "இது இருவர் படத்திலை வந்ததில்ல?" அவள் கேட்க இருவரும் தங்களை மறந்து சிரித்தார்கள்.
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;
"Excuse me. may I come in?" சத்தியாதான். அவசர அவசரமாக அவன் பிடியிலிருந்து விலகி உடையை சரி செய்தாள்.

"என்னடா.. ரெண்டு நாளைக்கு முதல் இருந்த பாரதியா நீ?  உன்னை இப்படிப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு.. " அவர் சொல்லி முடிக்கவில்லை.

"Hello good morning.. we want to do patient check-up. please go out." ஒரு படையே வந்திருந்தது பரிசோதனைக்கு.  அவனை விட்டுப்போக மனமில்லாமலே சென்றாள். மனதுக்குள் இருந்த ஆனந்தப்படபடப்பு இன்னும் குறைந்த மாதிரியில்லை. தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

"நேற்று போனவேலை முடியாததால இரவு வர முடியேல்லை. உனக்குச் சொல்ல போன் பண்ணினான், ஆப் எண்டு வந்துது." என்றவர் தயங்கி "உன்னை இங்கை இப்படி தனிய விட்டிடுப்போறது எனக்கு சரியாப்படேல்லை." அவர் குரலில் அழுத்தமிருந்தது.

"இல்லை மாமா. நான் அவரை நல்லாப் பாத்துக்கொள்ளுவன். நீங்க கவலைப் படாதேங்கோ." எங்கே தான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவளை போகச் சொல்லிவிடுவாரோ என்று பயமாகவிருந்தது.

"நீ பாக்கிற லட்சனத்தைத்தானே நேர்ல பார்த்தன்." அவர் குரல் கடுகடுவேன்றிருன்தது.

"அது இல்லை.. அவர் சும்மாதான்.." அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் அவனை விட்டுப் போகமுடியாதென்பதில் மட்டும் தீர்மானமாயிருந்தாள்.

"இதபார், உனக்கெண்டும் ஒரு வாழ்க்கையிருக்குது. பிறகு நாளைக்கு இதுவே ஒரு பிரச்சினையாய் வந்திடக்கூடாது. நான் என்ன சொல்லவாறன் எண்டு உனக்கு விளங்குமெண்டு நினைக்கிறன்." அதற்கு மேல் எதுவும் பேச இல்லை என்பதுபோல் சென்றுவிட்டார்.

அவள் உடைந்தே போனாள். அவள் வாழ்க்கையில் சந்தொசமேன்பதே நிலைத்திருக்காதோ? அவன் இருக்கப் போறதே இன்னும் சிலநாள் தான். அதுவரைக்கும் கூட அவளால் அவன் கூட இருக்க முடியாது போலிருக்குதே.
நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்

போன் அடித்தது. வீட்டிலிருந்துதான். இதுவரை ஆப் பண்ணியே வைத்திருந்தாள். இப்பதான் சத்தியா சொல்லி ஒன் பண்ணியிருந்தாள். அதுக்கிடையில் வந்திட்டுது.
"ஹலோ.. பிள்ளையே.." அம்மாதான்.
"ஹ்ம்ம்.. சொல்லுங்கோ."
"என்னடி போய் இவ்வளவுநாள் ஒரு போன் பன்னவேனுமேண்டு நினைக்கேல்ல. என்ன செய்யுறே. ஸ்கூல் எல்லாம் எப்படிப் போகுது. நேரத்துக்கு சாப்பிடுறியே?" அப்போதுதான் உறைத்தது வந்ததிலிருந்து இன்னும் சாப்பிடவேயில்லை என்பது. வெறும் டீயையும் தண்ணியயுமே குடித்துக்கொண்டிருக்கிறாள். கடைசியாய் பிளேன்ல சாப்பிட்ட ஞாபகம்.

"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கிறன். நீங்கள் ஒண்டுக்கும் கவலைப் படாதேங்கோ." சொல்லிக்கொண்டிருக்கும் போதே nurse வந்து அவனை ICUக்கு கூட்டிடு போவதாகவும் சத்தியாவிடம் சொல்லிவிடுமாறும் சொன்னார். அவளுக்குப் புரியவில்லை. இவ்வளவுநேரமும் நல்லாத்தானே இருந்தான்? மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் போல அடித்துப் போட்டதுபோல் கிடந்தான்."இண்டைக்கு அப்பாண்டை பர்த்டே அதுகூட ஞாபகமில்லையே உனக்கு..? ஹலோ.. ஹலோ.. அவள் வைச்சிட்டாள் போல கிடக்குது.."
'கண்ணம்மா.. இண்டைக்கு பண்டாரவன்னியன் நினைவுதினம்* தெரியுமே உனக்கு..?'
"ஹலோ.. என்ன லைன்ல இருக்கிறியே? நான் கதைக்கிறது கேக்குதே?" அப்பா.
"ஹ்ம்ம்.. சொல்லுங்கோ." அவளால் மேலே பேசமுடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது.
"நான் இங்கை வெளியால வந்து கதைக்கிறன். அம்மா இல்லை. நீ என்ன சத்தியாவோட போய்ட்டாய் எண்டு ஹோச்டெல்லா போன் பண்ணிச் சொன்னினம். அங்கை போய் என்ன செய்யிறாய்?"
"......"

"எனக்குத் தெரியும் நீ உதுக்குத்தான் இப்ப அடம்பிடிச்சு சிங்கப்பூர் போகப்போறனெண்டு நின்டநீ. அம்மா தான் எதோ நீ படிச்சுக் கிழிக்கப் போறே எண்டு கனவு கண்டு கொண்டிருக்குது. பாவம், அவவிண்டை நம்பிக்கையை கெடுத்திடாதே."
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
அவள் மௌனமாயிருக்கவும், "சரி. இப்ப பாரதிக்கு எப்படி இருக்குது. இண்டைக்குத்தான் கடைசி நாளேண்டுதானே சத்தியா சொன்னவன்." எரிச்சலாய் வந்தது. கட் பண்ண போனவளை "உன்னட்டை நான் ஒண்டு சொல்லவேணும்." என்ற அவரின் குரல் தடுத்து நிறுத்தியது.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று 
"நீ அவன் மேல் எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறே எண்டு எனக்குத் தெரியும். ஆனா இதெல்லாம் சரிப்படாதேண்டும் உனக்குத் தெரியவேணும். விளங்குதே..?" அவள் எதுவும் சொல்லவில்லை.
"பிறகு.. பாரதி மடுவுக்கு வந்திருந்தவனெண்டு சொன்னனில்ல? அண்டைக்கு உன்னைப் பார்க்கத்தான் வந்திருந்தவன்." தெரிந்தது தானே.
"நான் தான் உனக்கு வருத்தம் இப்ப பாக்கேலாதேண்டு சொன்னனான். பிறகு கலியாணம்.. அது.." அவளுக்கு அதற்குமேல் கேட்க சக்தியிருக்கவில்லை.

"போதுமப்பா. நீங்கள் இதுவரைக்கும் பண்ணினதே போதும். எனக்கு எதுவும் தெரியவேண்டாம்." சொல்லி ஆவேசமாய் கட் பண்ணினவளுக்கு மயக்கம் வருமாப்போல் இருந்தது. கான்டீன் போனாள். எதுவும் சாப்பிடுற மாதிரியில்லை. சாண்ட்விட்ச்ம், டீயும் வாங்கிக்கொண்டுவந்து இருந்தாள்.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்  
எல்லோருமே சேர்ந்து அவளுக்கு எதிராகவே செயல்படுவதுபோல் தோன்றியது. ஏன் பாரதிகூட உண்மையாகவே அவளைப் பிடிச்சிருந்துதெண்டால் எங்கையிருந்தாலும் வந்து தூக்கிக்கொண்டு போயிருப்பானே. ஒருவேளை அவன் சொன்னதுபோல் வெறும் உணர்ச்சிகள் தானோ? தொண்டையில் சிக்கிய பாண்துண்டை வாஸ்ரூம் போய் கஷ்டப்பட்டு வாந்தியெடுத்து வரவைத்தாள். முகம் கழுவிக்கொண்டு திரும்ப கான்டீன் வந்திருந்தவளுக்கு மேலே சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒருவாய் மட்டும் கடித்தபடியிருந்த சாண்ட்விட்ச்சைத் தூக்கிக்கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டாள்.

"என்ன சாப்ட்டியே?" என்றபடி வந்த சத்தியாவிடம்
"பாரதியை.. ICUக்கு கொண்டு போகினம்.. உங்களிட்டைச் சொல்லச் சொன்னவை." அவள் குரல் தளுதளுத்தது.
"தெரியும். உனக்கு போன் பண்ண ட்ரை பண்ணினான். engageல இருந்துது. இங்கதான் இருப்பாய் எண்டு வந்தனான்." அவள் மௌனமாயிருக்கவும் "என்ன அத்தானே கதைத்தது? நேற்று எனக்கு போன் பண்ணினவர். சொன்னனான். எனக்கென்னமோ நீ இண்டைக்கே திரும்ப ஹோச்டேல் போறதுதான் நல்லதெண்டு படுகுது."

"இல்லை.. மாட்டன். நான் பாரதியை விட்டு எங்கயும் போகமாட்டன்." அவள் கொஞ்சம் பிலத்துச் சொல்லியிருக்க வேண்டும். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அவளைத் தரதர எண்டு வெளிய இழுத்துக்கொண்டு வந்தவர்,
"என்ன விசர்க்கதை கதைக்கிறே. அவன் இண்டைக்கோ நாளைக்கோ என்டிருக்கிறான். அப்ப என்ன அவனோடயே செத்துப் போகப் போறியே?" அதிர்ந்தாள்.
"இதபார். அவனுக்கெண்டு ஒரு நல்லபேர் இருக்கு. நீ ஏதாவது முட்டாள்தனம் பண்ணி அதைக் கெடுத்திடாதே. வாழும்போது அவனை யாருக்கும் தெரியாது. ஆனா செத்தப்பிறகு அவனை எல்லாரும் தலையிலை தூக்கிவைத்துக் கொண்டாடப்போகினம்." சொன்னவரின் குரல் தளுதளுத்தது.
"இண்டைக்குத் தான் கடைசி நாள் எண்டு நான் முதலே சொல்லிட்டதால, அவங்கள்ளையிருந்து ரெண்டு பேர் வாறாங்கள். அந்த நேரம் நீ கூட இருக்கிறது எனக்கு அவ்வளவு நல்லதாப் படேல்லை." அவளுக்குப் புரிந்தது.

அவன் பண்ணின தியாகங்களுக்கு அந்தக் கடைசி மரியாதையிலாவது ஊரறிய உலகறிய அவன் புகழ் சொல்லவேண்டும். அதற்கு இடைஞ்சலாக அவள் ஒருபோதும் வரமாட்டாள். அவன் தியாகத்தின் மேல் ஒரு கறுப்புப் புள்ளியாய் அவள் ஒருபோதும் இருக்க மாட்டாள்.
துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
"நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப் படாதீங்கோ. நான் இப்படியே போய்டறேன். ஆனா அவர் எழும்பி என்னைக் கேட்டால்..?" என்றவளை இடைமறித்து,
"அப்பிடி எதேனுமேண்டால் நான் போன் பண்ணி உன்னட்டைக் கதைக்க வைக்கிறன். சரியே?" என்றவர் நேரத்தைப் பார்த்துவிட்டு "சரி அவங்கள் வார நேரமாயிட்டுது நீ கெதியா வெளிக்கிடு. உண்டை உடுப்புகளை பிறகு குடுத்து அனுப்புறன்." என்றுவிட்டு அவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் போய்க்கொண்டிருந்தவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!      

* 25 August - பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாள்.

***** 
முற்றும்.


௧௧ மார்கழி ௨௦௧௧
இன்று பாரதியின் நூற்று இருபத்தொன்பதாவது பிறந்தநாள். 
இத்தொடர் காலத்தை வென்ற அந்த மாபெரும் புரட்சிக் கவிக்கு  சமர்ப்பணம்.

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

*****
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் ...
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே

ஓஹ வீரா
*****

You May Also Like

4 comments