துரோகிகளும் தூங்கிப்போனோரும்

by - 12/23/2011 09:54:00 முற்பகல்

ஆளாளுக்கு என்னமோ காகிதக்கப்பல் விடுறதுபோல ஒவ்வொரு கதை (சத்தியமா கப்டனைச் சொல்லவில்லை) சொல்லுறாங்கள். அதால நானும் இண்டைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேணும். நித்திரை வருமாப்போல இருப்பவர்கள் தயவுசெய்து இப்பவே உங்கடை கனவுதேசத்துக்கு ஓடிடுங்கோ. நம்ம கனவுதேசம் கொஞ்சம் Terrorஆ இருக்கப் போகுது.

யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஏசுநாதரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். வெளியே அவரின் பரமசீடன் ஒருவன் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அபோது அருகிலிருந்தவன் கேட்கிறான்,
"உனக்கு அவரைத் தெரியுமா?"
"இல்லை."
சிறிது நேரம் செல்கிறது.
"உன்னைப் பார்த்தால் அவர்களிலொருவன் போலவே இருக்கிறது."
"சத்தியமா, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது."
விடிவதற்கு இன்னும் சிலநிமிடங்களே இருக்கிறது.
"இல்லை. இவன் பொய் சொல்கிறான். பிடித்து விசாரியுங்கள்." இப்போது அவனுக்கு பயம் தொறிக்கொண்டது.
"ஐயோ. என்னை விட்டிடுங்கோ. நான் ஒரு அப்பாவி." எழுந்து விரைகிறான். சேவல் கூவுகிறது.

"நாளை விடிவதற்குள் மூன்றுமுறை என்னைத் தெரியாதென்றுரைப்பாய்" அவனின் கடவுள் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அழுகிறான். அரட்டுகிறான். ஆனால் பாவம் அவனால் என்ன செய்ய முடியும்.

இப்போது எமது காலத்துக்கு வாருங்கள். பதினைந்து வயதே நிரம்பிய பாலகனொருவன், தனது சுதந்திர தேசத்தினின்று பிரிந்துவந்து பலநாட்கள் தடுப்புமுகாமில் வாடி நிற்கிறான். ஒருநாள் கூட்டிச் சென்றவர்கள்  'உன்னை விடுகிறோம், ஆனால் உண்மையைச்ச் சொல்' என்று விசாரணை செய்கிறார்கள்.
"உனக்கு அவரைத் தெரியுமா?" அதிர்ந்தான். லட்சோபலட்சம் பேர் கடவுளாய் பூஜிக்கும் ஒருவரை, ஒரு நிமிடமாவது நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்காத என்று எத்தனைநாள் ஏங்கியிருக்கிறான். இவன் என்னமோ வெகுசாதாரணமாய் பக்கத்திலிருந்து சாப்பிட்டவனைக் கூட்டிவந்து கேட்பதைப் போல கேட்கிறானே? 
"இல்லை"

மூன்று வருடங்களின் பின் ஒருநாள். உயர்தர வகுப்புக்கு போக்கொண்டிருந்தான். கை நிறைய பாடப்புத்தகங்கள். சந்தியில் நின்ற சிப்பாய்கள் மறித்து,
"IC ..?" கொடுத்தான்.
"யாப்னே.. ஓயா கொட்டிதே?" (யாழ்ப்பாணம்.. நீ புலியா?) திடுக்கிட்டான். நோஞ்சான் போலிருக்கும் அவனைப் பார்த்து, இவர்கள் என்ன நக்கல் செய்கிறார்களா?
"நா(ய்).." அவர்கள் முறைத்தார்கள்.

நாலைந்து வருடங்களில் ஒருவாறு நல்லாப்படித்து(?) பல்கலைக்கழகத்திலேயே ஒரு நல்ல வேலைக்கு சேர்ந்திருந்தான். தக்க நேரத்தில் உதவிசெய்தது என்பதாலோ அல்லது அந்த நேரத்திலையே CCNA முடித்த ஒரே காரணத்துக்காகவோ சற்றே பொறுப்பான பதவி அங்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு தமிழனாயிருந்துகொண்டு இவனென்ன எங்களிடம் வேலை வாங்குவதென்ற மனோநிலையை, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலேல்லாம் அவர்கள் வெளிப்படுத்த தவறியதில்லை. காலி துறைமுகத்தில் பிரச்சினை.
"We need to change one of the Arts Faculty switch today. This is the new one. I configured it. call me if you need any help."
"I know you are one of their spy." 
"It's none of your business. do what I said"
"This is our place. we can do anything to you here. nobody will question us. you know that?"
அவனால் எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை.  கோபமாய் வெளியேறினான். வெளியே காத்திருந்த அவன் நண்பன் "எனக்கு அங்கை இருக்கவே பயமாயிருக்குதடா.. எதோ வெட்டுவன் குத்துவன் எண்ணுங்களடா.. நானும் கோவத்திலை என்னென்னமோ கதைச்சிட்டன். என்ன நடக்கப் போகுதோ தெரியேல்லை."
கடைசிநாட்கள் நெருங்கிவிட்டன 
உங்களுக்காய் பிராத்திக்கப் போகிறேன் 
விழித்திருங்கள் என்றவர் திரும்பியபோது 
தூங்கிக்கொண்டிருந்தனர் எல்லோருமே


பன்னிருபேரில் ஒருவன் தான் துரோகி, மற்றவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடவுள் தமது விடுதலைக்குத்தான் போராடினார் என்பதை உணர்ந்திருந்தும் கூட, ஆளுக்கொருவராய் வேறுதிசையில் பிரிந்து சென்றனர். பின்னின்று கடவுள் புகழ்/வசை பாடுகின்றனர். இன்னும் சிலரோ அதுக்கும் மேலே போய் தானே கடவுள் என்கின்றனர். துரோகியின் கயமையைக் கூட அவர் மன்னித்துவிட்டார். ஆனால் இவர்களை..?


You May Also Like

3 comments