கடலும் குட்டையும்

by - 1/01/2012 06:37:00 பிற்பகல்

சில நேரம் எழுதுவதற்கு எதுவுமே தோன்றாது. ஏன் எழுதுகிறோம் என்றும் தெரியாது. ஆனால் எதையோ எழுதுகிறோம். அது எங்கிருந்து வருகின்றது, எதற்காய் வருகின்றது, யாரிடம் போய்ச் சேரப் போகிறது என்பதெல்லாம் தெரிவதில்லை. இன்றும் அப்படித்தான், நான் ரசித்த ஒருவருடன்..

புத்தக வாசிப்பு எனும்போது பலருக்கு பல ரசனையிருக்கும். எனக்கு அப்படி எந்த ரசனை என்று இன்னும் என்னால் வகைப்படுத்த முடிவதில்லை. கையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தியுமே அதன் பூர்வீகம் பாராமல் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். ஆனால் ஒன்றிப்போய் வசித்து முடித்த புத்தகங்கள் வெகுசிலவே. பலவற்றை என்னால் முழுவதும் படிக்க முடிந்ததில்லை. விருப்பமின்மை என்று சொல்ல முடியாது. ஒருவேளை Steve Jobs சொல்லியதுபோல் "Focusing is saying 'NO' to all other things" ஆக இருக்கலாம். ஆனால் பலரைப்போலவே எனது தேடல் எதுவென்று பலநேரங்களில் புரிந்ததில்லை. 

வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தது. அதற்காய் கண்ணில் பட்ட சமய சித்தாந்த, வேதாந்த நூல்களையெல்லாம் புரிந்தோ புரியாமலோ படித்துத் தொலைத்தபோது, இன்னும் குழப்பம் தான் எஞ்சியது. அத்தகைய குழப்பமிக்க நாட்களிலோருநாள், என் வாசல்வந்து  தனது காந்தக் கண்களால் வசீகரித்துச் சென்றவர் தான் ரஜனீஷ் என்கிற ஓஷோ அவர்கள். 

வழமையாய் எனக்கு புத்தகம் பரிசளிப்பதேன்றால் அது அப்பாவாகத்தானிருக்கும். ஆனால் என்ன ஒன்று எப்போதுமே சமயப் புத்தகங்களை மாத்திரமே தருவார். கதைப் புத்தகங்கள் அவருக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது. அப்படித்தான் கிட்டத்தட்ட பத்து வருடங்களின் முன்பு ஒருநாள், அவர் தந்த  புத்தகத்திலிருந்த அந்த மனிதரைப் பார்த்ததும் முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை. எதோ ஒரு சாமியாராக்கும் என்றுவிட்டு வைத்துவிட்டேன். எனக்கு அன்றுவரை துறவறம் என்பதில் ஒரு குழப்பமான நிலைப்பாடே இருந்து வந்தது. எல்லாவற்றையும் துறந்துவிட்டுப் போவது என்பதை ஒரு Challenge என்ற ரீதியில் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. Challenge என்று சொல்லும்போதே அதில் வெல்லவேண்டும் என்ற நியதியும் வந்துவிடுகிறது. ஒருவேளை தோற்றுப்போனால் அதுவே காலம் காலமாய் வைத்திருந்த நம்பிக்கைகளை, கொள்கைகளை அசைத்துப் பார்த்துவிடுமோ என்ற பயமும் கூடவேயிருந்தது. 

வாழ்க்கை எதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிரதென்று புரிந்துவிட்டால் தேடலை நிறுத்திவிடலாம், ஆனால் இயக்கம் இருந்துகொண்டுதானிருக்கும். அதை நிறுத்துவதற்கு இறப்பென்பது வழியாகாதென்று புரிந்துகொண்ட நிமிடம், ஓஷோவின் கண்கள் என்னை முழுவதுமாய் தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. அன்றிலிருந்து கையில் கிடைத்த அவரின் புத்தகங்கள் அத்தனையையுமே படித்தேன், ஆனால் எதுவுமே சரிவரப் புரியவில்லை. ஒருசமயம் எல்லாமே விளங்கியது போலிருக்கும், மறுகணமே எதுவுமே விளங்கவில்லை என்பது போலிருக்கும். ஆனால் என்னமோ அந்த இரண்டு extreem மத்தியில் புலப்பட்ட ஒருவெறுமையை என்னால் சற்றே உணரமுடிந்தது. அதுவே என்னையும் ஓஷோவை ரசிக்கும்படி செய்துவிட்டது.

தியானமெண்டால் சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஒளிவட்டம் தெரியுமாம் தாமரை பூக்குமாம் என்றெல்லாம் கனவுகண்டுகொண்டிருந்த எனக்கு, ஓஷோவின் 108 வகை தியான முறைகளை வாசித்தபோது கொஞ்சமில்லை நிறையவே மலைப்பாயிருந்தது. இன்னும் கோவில்கள், சம்பிரதாயங்கலென்று இந்து தர்மத்தின் தொன்மையும், அதனுள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள் இவற்றின் ஆதாரபூர்வமான விளக்கங்களுடன் மறைந்திருக்கும் உண்மைகளில் சற்றே வித்தியாசமான கோணத்தில் சொன்னது பிடித்துக்கொண்டது. 

பைபிள் வாசித்தபோது மனதிலெழுந்த பல கேள்விகளுக்கு ஓஷோவின் "அற்புதத்தில் அற்புதம்" என்ற நூல் விடைதந்தது. இன்று பலருக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்ததே ஏழாம் அறிவுக்குப் பிறகுதான். ஆனால் அதில் அவரின் மருத்துவம், தற்காப்புக் கலை பற்றி விலாவரியாகச் சொன்னவர்கள் Zen பற்றி நன்றாகவே இருட்டடிப்புச் செய்திருந்தனர். அது அவர்களது வியாபாரத்துக்கு உதவாது என்று நினைத்திருப்பார்கள் போலும். ஆனால் Zenஐ  அழகாக, அமைதியாக ஆனால் ஆழமாக ஓஷோ ரசிக்கச் செய்தார். இப்படி அவர் சொல்லியது, ரசிக்கவைத்தது இன்னும் எத்தனையோ.. 

நிற்க, என்ன இண்டைக்கு திடீர் ஞானோதையம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதேன்னண்டால் இன்று 2012 பிறக்கிறதாம். அதாலை முகப்புத்தகத்தை திறந்தால் ஒரே புத்தாண்டு சபதங்களால் நிறைஞ்சிருக்குது. எனக்கு உந்த சபதமெல்லாம் சரிப்பட்டு வராது. அதாலை வேறைஎதாவது புத்தகத்தைப் படிப்பம் எண்டு தேடினா தற்ச்செயலாக எனது பார்வையில் பட்டது ஓஷோவின் "The Art of Dying".
WHEN RABBI BIRNHAM LAY DYING, HIS WIFE BURST INTO TEARS.
HE SAID, 'WHAT ARE YOU CRYING FOR?
MY WHOLE LIFE WAS ONLY THAT I MIGHT LEARN HOW TO DIE.'
மாயர் கணக்குப்படி இந்தவருடம் உலகம் அழிந்துவிடும் என்பதெல்லாம் உண்மையோ இல்லையோ, என்றோ ஒருநாள் வரப்போகும் சாவை அமைதியான முறையில் ஏற்கும் பக்குவத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் இல்லையா?  "When a man lives with thousands of shoulds and should-nots he cannot be creative." - Osho 


பிற்குறிப்பு: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பலருக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஓஷோ தான் மீன்பிடிக்க வேணுமெண்டால் முதல்லை குட்டைய குழப்ப வேணுமெண்டு சொல்லித்தந்தார். (ரொம்ப சின்னப் பிள்ளையாவே இருந்திருக்கிரமோ??)

You May Also Like

3 comments