திரிசங்கு சொர்க்கம்

by - 1/03/2012 01:59:00 முற்பகல்

கண்ணீர்த் தேசம் நரகமாகி   
கங்காருதேசம் சொர்க்கமாக  
அக்கரைப்பச்சைநாடி
சிங்கபுரியிலின்று 
சிக்கித் தவிக்கையில் 

இதுவொரு திரிசங்கு சொர்க்கம் 

அழுதழுது காதலிக்க 
அடுத்தவர்தான் பெரிதென்று  
பேசாதே கொன்றுவிட்டு   
போதுமென்று விலக நினைக்க 
செல்லாதே நீயென்று 
வருடமொரு வரம் கேட்க்க

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

தனக்கான அவளதுணர்வுகள்   
தெளிவற்றவை என்றவன்   
அவளுக்கான தனதுணர்வுகளை
ஆங்காரமாய் வார்த்தைகளின் நடுவில்  
மூடி மறைத்து மழுப்பி நிற்கையில் 

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

மலைமேல் பனியாகி
நதியாகி கடல்சேருமுன் 
நடுவே அணைகட்டி வழிமறித்தால் 
கதவுகள் வழியே கசிந்திடும் 
நீர்தான் நீ பார்ப்பது - அது   
செயற்கையாய்த் தேங்கிட   

இதுவொரு திரிசங்கு சொர்க்கம்

சபிக்கப்பட்டபின்  
எந்தக் கடவுளும் மனமுவந்து  
வரம் தருவதில்லை  
பிச்சை வேண்டாம் 
நாயைப்பிடி 
நரகமொன்றும் இத்தனை 
கொடிதல்ல..!You May Also Like

0 comments