போதையும் போதிமரமும்

by - 8/08/2012 04:23:00 பிற்பகல்

நேரம் : இரவு பதினோரு மணி 
இடம் : கிளார்க் கீ, சிங்கப்பூர்

DJ இன்னும் வரவில்லைப் போலும். இடைவெளியை நிரப்ப Jennifer Lopaz இனது On the Floor பாடல் போய்க்கொண்டிருக்கிறது. உள்ளே ஓரிரண்டு மேஜைகளை பெண்கள் மட்டுமே நிறைத்திருக்கிறார்கள். ரெண்டு ஆண்கள் சற்றுத் தள்ளி கைகளில் house brand viskey உடன் pool விளையாடிக்கொண்டிருந்தனர். அவன் மட்டும் ஒரு மூலையிலிருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டு நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். 

இந்த இடத்துக்கு அவனொன்றும் புதிதல்ல என்றாலும் என்னமோ இன்று எல்லாமே வித்தியாசமாகவே பட்டது. அதிலும் அந்த இடத்துக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் மெல்லிய புன்னகையுடன் கண்களை அரைவாசி மூடியபடி முன்னாலேயிருந்த உருவத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குளும் ஏதோவோர் பரவசம் பரவுவதுபோல இருந்தது. "Sir, can I fill this?" திடுக்கிட்டு நிமிர்ந்தவன் தனது கையிலிருந்த குவளையில் வெறும் ஐஸ் கட்டிகள் மட்டுமே இருப்பதை அப்போது தான் கவனித்தான். அவனுக்கு எப்போதுமே raw அடிப்பது தான் பிடிக்கும். நண்பர்களின் தொந்தரவு தாங்காமல் தான் ஓரிரண்டு ஐஸ் கட்டியே போடுவது. ஆனாலும் அது கரைந்து வருமுன் குடித்து முடித்துவிடுவான். இன்றும் அப்படித்தான். 

பேசாமல் கையிலிருந்த கிளாஸ்ஐ எதிரில் நின்றவனிடம் குடுத்தவனின் பார்வை திரும்பவும் அந்த முகத்தின் மேல் பதிந்தது. எவ்வளவு அழகான அமைதியான முகம்? பேசாமல் இன்று முழுக்கப் பார்த்துக்கொண்டிருக்கலாம் போலக்கிடந்தது. வழமையாகவே ஒருத்தரிடம் அவனைக் கவர்வதென்றால் அவை கண்களாய்த்தானிருக்கும். ஆனால் இந்த முகம் மட்டும் விதிவிலக்காய் சற்றே வித்தியாசமான முறையில் அவனைக் கவர்ந்தது. எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்தாலுமே அதன் கண்கள் முழுவதுமாய்த் திறப்பதாயில்லை. இருந்தும் அவன் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

ரெண்டாவது பெக்கும் முடிந்தது. இனி எடுக்க வேணுமெண்டால் காசு கட்ட வேண்டும். என்ன செய்வது? சுற்று முற்றும் பார்த்தான். அரைவாசிக்கு மேற்பட்ட மேஜைகள் இப்போது நிறைந்துவிட்டன. சிலர் DJ முன்பு ஜோடி போட்டு ஆடிக்கொண்டிருந்தனர். அவன் நண்பர்கள் இன்னும் வருவதாயில்லை. பேசாமல் போவிடலாமேன்றால் அந்த முகம் விடுவதாயில்லை. பட்லரிடம் போய் காசுகட்டி ரெண்டு hoe garden பீர் வங்கி வந்து இருந்தான். 

இப்போது கூட்டம் அதிகமாகிவிட்டிருந்தது. அவன் இடமும் போய்விட்டது. ஒருவன் நாலு பெண்களுடன் கூத்தடிச்சிட்டிருந்தான். அதில் ரெண்டு நேற்று அவனுடன் வந்திருந்தது. அதன் முதல் நாள் வேறொருவனுடன்.. என்ன வாழ்க்கை என்று தோன்றியது. எல்லாமே போலி.. இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஒரேயடியாய் எங்கேயாவது ஓடிவிடவேண்டும் போல இருந்தது. "மயக்கமென்ன" படத்தில் தனுஷ் ஓடுவானே அதுபோல ஓடவேணும். ஆனா எங்கே ஓடுவது? singaporeஇன் எல்லாப் பாதைகளுமே சுத்தி சுத்தி இங்கே தான் வந்து நிக்கும். திரும்பவும் அந்த முகத்தைப் பார்த்தான். இப்போது அதன் கண்கள் மெல்லத் திறந்து அவனைப் பார்த்து சிரிப்பதுபோல இருந்தது. போதை அதிகமாயிட்டுதோ? இப்பதானே ஒரு பீர் முடித்தது? இன்னும் குறைந்தது ரெண்டாவது தாங்குமே? கண்களைக் கசக்கிவிட்டு திரும்பவும் பார்த்தான். இல்லை வெறும் பிரமைதான். 

பேசாமல் ஊருக்கே போய்விடலாமென்றால் அவனுக்குரிய வேலை நிச்சயமாய் அங்கே கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலுமே அவன் இப்போது வாங்கும் சம்பளத்தில் பத்திலொருபங்கு கிடைப்பதுகூட சந்தேகமே. அதில் போய் குடும்பம் குட்டியெல்லாம்.. சாத்தியமே இல்லை.. பெருமூச்சுடன் அடுத்ததைத் திறந்தான். குடிக்க மனமில்லாமல் இருந்தது. இப்போதுதான் ஒருமணி. 

பாத்ரூம் போய்விட்டு வந்து மீண்டும் நிரப்பினான். இனி புல் ஆக இன்னும் எப்படியும் ஒருமணிநேரம் பிடிக்கும். எழுந்து வெளியே வந்தான். படிகளில் இறங்கவே தள்ளாடியது. அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை வயசாயிட்டுதோ? முந்தியெல்லாம் முப்பதுகளில்தானே கல்யாணமே கட்டுறவை? சற்று நேரம் நின்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு வெளியே பார்த்தான். சுற்றிவர வண்ண வண்ண விளக்குகளில் விட்டில் பூச்சிகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. அவர்களுக்குத் தெரியும் நாளை விடியாதென்று.. சம்பந்தமேயில்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவுக்குவந்தது. எதுவோ வலித்தது. கைகள் நடுங்கின.

அவசர அவசரமாய் தள்ளாடியபடியே அடுத்த பாரினுள் நுழைந்தான். நல்லவேளையாக அவனைப் பார்த்துச் சிரிக்க இன்னொரு புத்தன் அங்கு இல்லை.

You May Also Like

0 comments