"அப்பா எனக்கு Drink Bottle ஒண்டு வாங்க வேணும்"
"ஹ்ம்ம்.." ஆறு மாதங்களின் பின்பு நேற்று தான் வந்திருந்தார். கொஞ்சநேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமேண்டால் அதற்குள் அவள் தன் நச்சரிப்பைத் தொடங்கி விட்டிருந்தாள்.
"ஒரு இருநூறு ரூபா வருமெண்டு நினைக்கிறன்.." முடிக்கவில்லை.. "இருநூறா.. அதெல்லாம் வேண்டாம். இப்ப கொண்டு போறதுக்கு என்ன வந்தது..? " அம்மா குசினியிளிருந்தவாறே தன் பல்லவியைத் தொடங்கி விட்டிருந்தார்.
"அது பாரமம்மா.. அதோடை திறந்து குடிக்கிரதேல்லாம் கரைச்சலா இருக்கு. இதிலைஎண்டா ஸ்ட்ரா மாதிரி இருக்கும். அப்பிடியே வைச்சு குடிக்கலாம்.." அவள் விடுவதாயில்லை.
"உப்பிடித்தானே எத்தினை வாங்கி பழுதாக்கி வைச்சிருக்கிறே? உதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பிறகு பளுதாப்போடும்.." அவள் அம்மாவும் விடுவதாயில்லை.
"இது வேறை மாதிரி.. கெதியிலை உடையாது. எண்டை friends எல்லாம் வங்கியிருக்குதுகள்.. எனக்கும் வேணும்.." சற்று அழுத்தமாகவே முடித்தாள்.
"சரி. சரி சண்டை பிடிக்காதேங்கோ. நாளைக்கு சுன்னாகத்துக்கு போறன். பாத்து வங்கி வாறன். சரியே?" friends எல்லாம் வைச்சிருக்கினம் எண்டு சொன்னதாலேயோ இல்லை நித்திரை தூக்கத்திலேயோ என்னமோ அப்பா உடனேயே சம்மதித்து விட்டார்.
"இல்லை.. எனக்கு இண்டைக்கு வேணும்.. அதுவும் நான் பாத்து வாங்க வேணும். நீங்க மாறி வேற ஏதாவது வாங்கிக்கொண்டு வந்திடுவீங்க." வேதாளம் முருங்கை மரத்திலை ஏறிவிட்டது தெளிவாக புரிந்தது. இனி நித்திரை கொள்ள முடியாது.
"சரி purseல காசிருக்கு எடுத்திட்டு போய் நீயே வாங்கிட்டு வா.." சற்று திகைத்தவள், சுதாகரித்துக்கொண்டு "இல்லை நீங்க வந்து வாங்கி தாங்க.. நான் தனிய போக மாட்டன்."
அவள் தனியே சைக்கிளில் பல இடங்களுக்கு போயிருந்தாலும், இப்படி டவுன் கடைக்கு போய் சாமான் வாங்குமளவுக்கு தைரியம் இருந்ததில்லை. பலசரக்கு கடை எண்டால் மட்டும் அம்மா எழுதி தந்த லிஸ்டை கொண்டுபோய் குடுத்து அவங்கள் தார பில் பாத்து காசை எண்ணிக் கொடுப்பாள். அதில்வேறை அவங்கள் சின்னப்பிள்ளை தானே எண்டு விலை கூட்டியும் சொல்லுவாங்கள். அவளுக்கு பேரம் பேசவெல்லாம் வராது.
"அப்ப நாளைக்கு போவம்.. அப்பா இப்பதானே வந்தது கொஞ்சம் களைப்பா இருக்கும்மா.."
"எனக்கு இண்டைக்கு வாங்கி தாறதெண்டா தாங்க.. இல்லாடி வேண்டாம்.." கோபமாய் வந்தது.
"என்னடி நீ.. இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சைக்கிள் மிழக்கி வந்த மனுசனை கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்க விடாமல், உண்டை பிடிவாதத்தை இப்பவே தொடங்கிட்டியே" அம்மா முணுமுணுத்தார்.
"எனக்கு வேண்டாம் எண்டு தானே சொல்லுறன். உங்கடை காசை நீங்களே வைச்சுக் கொள்ளுங்கோ. எனக்கு ஒண்டுமே வாங்கி தர வேண்டாம்." கண்களில் நீர்முட்ட கோபத்துடன் எழுந்து சென்று விட்டாள்.
இருபது வருடங்களின் பின்பு..
"உனக்கென்ன விசரே..? ஏன் ஒவ்வொருக்காலும் இத்தினை drink பாட்டில் வாங்கிட்டு வாறே? அவள் இதிலைஎல்லாம் குடிக்க மாட்டாள்." எரிச்சலுடன் கூறிய தாயை பொருட்படுத்தாது,
"இங்கை பாரேன்.. அம்மா குட்டிக்கு புது ட்ரின்க் பாட்டில் வாங்கிட்டு வந்திருக்கா.."
"நோ ஐ வான்ட் தட்.." என்றபடி iPad உம் கையுமாக வந்து தனது பழைய பாட்டில்ஐ தூக்கிக்கொண்டு போகும் தனது மகளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
கருத்துகள்