"குரல்வளையில் சிக்கிய காற்று
சங்கீதமாவாதா காதல்..?"
என்று நான் நாள் முழுக்க மண்டையைப் போட்டுடைத்து இரண்டு வரி ஒப்பேற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஓர் நாட்குறிப்பேடு முழுவதுமே நிரம்பிய ஆழமான கவிதைகளுடன் என்னை ஆச்சரியப்படுத்திய ஓர் நட்பு.
வெள்ளவத்தை கடற்கரையில் ஓர்நாள்..
உன் கண்கள் என் தோழியைப் பார்க்கையில்
என் கண்கள் திரும்பின கல்லறையை நோக்கி
என்றுரைத்தாய். பாதி புரிந்தது மீதி புரியவில்லை. அன்றே முதல் விலகல் ஆரம்பம்.
ஆங்கிலம் என்பது அந்நிய மொழி அதைப் பேசுவதே பாவம் என்ற மனநிலையிலிருந்து வெளிவர முடியாமல் திணறிய என்னை ஆங்கிலம் பேச ஊக்கப்படுத்தி மாதமிருமுறை பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டிச் சென்ற ஓர் நட்பு.
நடந்து வரும் வழியில் ஓர்நாள் titanic கப்பலின் மேல் கைவிரித்து நின்ற காதலர்களுக்காய் நாமிருவரும் சண்டையிட்டுக்கொண்டோம். உன்மேல் ஒருவித சந்தேகம் எழுகையில் அது இரண்டாவது விலகல்.
ஆண்கள் என்றாலே வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்த்த என்னை அவர்களுடன் சகஜமாகவும் அதே சமயம் அவர்களுக்கு வேறுவித எண்ணங்கள் வராமலும் / வரம்பு மீறும்படி தூண்டாமலும் எப்படிப் பேசுவது / பழகுவது என்பதை கற்றுக்கொடுத்த ஓர் நட்பு.
எனக்குப் பிடித்த ஒருவன் என் முன்னாலேயே என்னைத் தவிர்த்து உன்னிடம் வெகுநேரம் நின்று பேசியதை எண்ணி பொறாமை கொள்கையில் மூன்றாவது விலகல்.
கடைசியில் காதல் எனும் மாயையில் ஊசலாடி இழுபட்டு கருத்து வேறுபட்டு இறுதியில் அறுபட்டு இருவேறு திசையில் பயணிக்க..
உன்னிடம் வெளிச் சொன்ன காரணங்கள் பல. ஆனால் சொல்ல முடியாத காரணங்களும் சிலவுண்டு.
என்கூட இத்தனை நாள் பழகியவர்களே எனது முதலிரு
தொடர்கதைகளுக்கும் ஆயிரத்தெட்டு விளக்கங்கள் கேட்கையில் இரண்டே வார்த்தையில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் புரிந்து கொண்டாய். இத்தனையும் புரிந்துகொண்ட நீ இதனையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாய் என்று எனக்குத் தெரியும்.
பிற்குறிப்பு: என்போன்ற மொக்கை போடுபவர்களே நூறு நூத்தைம்பது பதிவு என்று எழுதிக் குவிக்கும் இன்றைய பதிவுலகத்தில் கருத்தாழத்துடன் எழுதும் நீ சீக்கிரமே வரவேண்டும். மீண்டும் பேனாவைக் கையிலெடுக்கவேண்டும். மனம் திறந்து எழுது. இது உனது முதலாவது ரசிகையின் அன்பான வேண்டுகோள்.
கருத்துகள்