ஏய் பொண்ணு!

by - 10/30/2013 09:57:00 முற்பகல்தமிழ்ப் படங்களில் கட்டபஞ்சாயத்து காட்சிகளில் வரும் பண்ணையார்கள் போன்ற உருவத்தில் இரண்டுபேர். முழுவதுமாய் நரைத்த தலையுடனும், வெள்ளை வேட்டி சட்டையிலுமாக  சற்றுத் தொலைவில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர்.

"ஏய் பொண்ணு, இங்கை வா"

நர்சரியின் முன்பு நான்கு வயது குழந்தை ஒன்று, சற்றே தூரத்தில் நின்றிருந்த மற்றைய குழந்தையை அழைத்துக் கொண்டிருந்தது. மற்றையது பாதி புரிந்தும் புரியாமலும் தாயை பரிதாபமாகப் பார்த்தது.

+++++++++++++++

அது சற்று முன்புதான் மரணச்சடங்கு நடந்துமுடிந்த வீடு. ஆண்கள் பலரும் சுடலைக்குப் போயிருந்தனர். வயதுபோன சிலர் மட்டும் வெளியே இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பெண்கள் வீடு கழுவுவதிலும் வந்தவர்களுக்கு டீ குடுப்பதிலும் மும்முரமாயிருந்தனர்.

"ஏய் அக்கா இஞ்சை வா.."

சற்றே வளர்ந்த குழந்தையொன்று கிணத்தடியில் நின்ற தனது அக்காவை அழைத்துக்கொண்டிருந்தது.

"கோபி, இங்கை வா." முழு நீள காற்சட்டையும் வெள்ளை ஷர்டின் மேலே பெல்ட் அணிந்தபடி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தவர் அந்தக் குழந்தையை அழைத்தார்.

"என்ன மாமி?" விளையாட்டின் சுவாரசியம் மாறாமல்.. ஓடி வந்ததினால் சற்றே மூச்சு வாங்கியபடி.

"யாரையும் 'ஏய்' போட்டுக் கூப்பிடக்கூடாது. சரியா?"

"ஏன் மாமி? அம்மா அப்பிடித்தானே கூப்பிடுறவா?" என்றது அந்த வாயாடிக் குழந்தை.

"அது முந்தி வேலையாட்களை கூப்பிடுறவை. பிறகு அதுவே பழகிட்டுது. இப்ப எங்கடை இடத்திலை எல்லாரும் சமம். அதால யாரையுமே அப்பிடி இழிவுபடுத்துவதுபோல கூப்பிடக் கூடாது. விளங்குதே?" சற்றே கண்டிப்பான குரலில் கூறிவிட்டு மீண்டும் முற்றம் கூட்டப் போய்விட்டார் அந்தப் போராளி அக்கா.

+++++++++++++++

"'ஏய்' எண்டா என்னம்மா?" அப்பாவித்தனமாய் தாயைப் பார்த்துக் கேட்டது அந்தக் குழந்தை.

"அதும்மா முந்தி.. " நாலு வயதுக் குழந்தைக்கு பரம்பரை மிடுக்கு, சாதித் திமிர் என்பவற்றை எப்படி சொல்லி விளங்கப் படுத்துவதென்று புரியாமல் விழித்த அந்தத் தாய், சுதாகரித்துக்கொண்டு "அது மரியாதை இல்லாத சொல். இனிமே அப்பிடிக் கூப்பிடக் கூடாது எண்டு சொல்லுங்கோ" என்று ஒருவாறு, சங்கடத்துடன் கூறி முடித்தாள்.

நெறிப்படுத்தியவர்கள் இன்று உயிருடன் இல்லை. தாம் இருப்போம் என நினைத்து நெறிப்படுத்தவுமில்லை.


You May Also Like

0 comments