முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

உயிரற்ற ஜீவன்கள்

அக்டோபர் 1990ல் ஒரு நாள். விடுமுறையில் வந்த அப்பா, அப்போது நான்காவது படித்துக்கொண்டிருந்த அவளையும், அம்மாவையும் ஏற்றிக்கொண்டு ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் மடுவுக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் மூவர் இருப்பதற்கே இடமில்லை, அதற்குள் பின்னல் ஒரு மூட்டை வேறு. அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு. அதனால் வாகனங்களின் எஞ்சினில் என்னமோ தில்லுமுல்லு பண்ணி மணெண்ணெயில் ஓடப் பண்ணியிருந்தார்கள். ஸ்டார்ட் பண்ணுவதற்கு மட்டும் சிறிது பெட்ரோல் விட்டால் போதும். முதலில் கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் போகப் போக சரியாயிடும் என்று அவர் சொன்னதை நம்பி அவர்களும் புறப்பட்டு விட்டனர். வழியில் இரண்டொரு தடவை நின்றபோதே வேண்டாம் திரும்பி போவம் என்று சொன்னாள். யார் கேட்டார்கள்?

விடியக் காலமை வெளிக்கிட்டால் பின்னேரதிற்கு முன்பு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் மதியம் தாண்டிய போதே காடுகள் தெரியத் தொடங்கிவிட்டன. மடுவை அண்மித்துவிட்டோம் என்று சந்தோசப்படுகையில் தான் அந்த முற்றிலும் எதிர்பார்த்த சம்பவம் நடந்தே விட்டது. எத்தனை காடுமேடெல்லாம் தட்டுத் தடுமாறி அப்பாவுடன் கூடவே திரிந்த அந்த உயிரற்ட ஜீவன், தனது ஓட்டத்தை கடைசியில் முழுவதுமாக நிறுத்திக்கொண்டது. அப்பாவும் தனக்குத் தெரிந்த வித்தையெல்லாம்  செய்து பார்த்தார், ஆனால் அதுவோ சற்றும் நகர மறுத்தது.

சுற்றிவர ஆளரவமற்ற காடு. அவளுக்குப் பிடித்த இடம்தான். அதன் அழகை ரசித்துக்கொண்டே பேசாமல் நடந்தே போயிடலாமே என்று தோன்றியது. "அப்பா, காடெண்டால் நிறைய மானெல்லாம் இருக்குமாமே? எனக்கு மான்களோட விளையாட ஆசையாயிருக்குப்பா" என்றொரு தடவை சொன்னபோது "அங்கை நிறைய யானை, புலி எல்லாம் இருக்கும். அதால சும்மா இங்கை போல சொல்லாமல்கொள்ளாமல் உண்டை பாட்டுக்கு தனிய சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடக்கூடாது என்ன?" என்று தீர்மானமாகச் சொல்லியிருந்தார்.

கூப்பிடு தூரத்தில் அம்மா அப்பாவிடம்,
"என்னப்பா, இன்னும் கன தூரம் போகவேணுமே?"
"இப்பதானே பூநகரி தாண்டினது. இன்னும் அரைவாசித் தூரம் போக வேணும்."
"அப்ப.. காடு வந்திட்டுதே?"
"இனி வழி முழுக்க காடுதான்"

குதூகலத்துடன் நடந்தே சென்றுவிடத் தயாரானவள் 'இன்னும் அரைவாசித் தூரமா?' என்றபடி திகைப்புடன் நின்றுவிட்டாள். திடீரென்று இருட்டி விட்டதைப் போலிருந்தது. மழை வரப்போகிறதோ என்று மேலே பார்த்தால் அதற்க்கான சாத்தியக் கூறுகள் தெரியவில்லை. சற்றுமுன்பு இதமாய் வருடிச் சென்ற காற்று இப்போது சில்லென்று குளிர்வதுபோல இருந்தது. தூரத்தில் சில மரங்கள் முறியும் சத்தம் கேட்டது. அவளுக்கு இப்போது காட்டைப் பார்த்த சந்தோசம் போய் பயம் பிடித்துக்கொண்டது.

"அப்பா அப்பா. மழை வரப்போகுது போல இருக்கு. அங்கை மரம் முறிஞ்சு சத்தம் கேக்குது. யானை வருது போல. கெதியா ஸ்டார்ட் பண்ணுங்கோ." ஓடிவந்து பயத்தில் நாக்குளற எதையோ உளறினாள்.

அவர் அண்ணாந்து மேலே பார்த்துவிட்டு, பின்னர் சுற்றுமுற்றும் பார்த்தார். "இங்கை ஒண்டுமில்லை. நீ பயப்படாதை." என்றுவிட்டு டாங்கை ஒருதடவை திறந்து இடம் வலமாக ஆட்டிப்பார்த்துவிட்டு மூடியபடி கிக்கரை நாலைந்து  தடவை விடாமல்  உதைத்த விதம் அவரும் பதட்டமாயிருக்கிறார் என்று தோன்றியது. ஆனால் அவர்களின் பயம், பதட்டம் எதனையுமே உணராதவாறு அத்தனை உதைகளையும் தாங்கிக்கொண்டு அந்த மோட்டார் சைக்கிள் வெறுமனே நின்றுகொண்டிருந்தது.

நிமிடங்கள் ஒவ்வொன்றும் நரகமாய்க் கழிந்தன. வழமைக்கு மாறாக நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. காட்டில் சீக்கிரமாய் இருட்டிவிடும் என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் மூன்று மணிக்குள்ளாகவா? அம்மா சற்றுத் தொலைவில் இருந்த முடக்கில் சென்று யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா இன்னும் அந்த உயிரற்ற ஜீவனை உதைத்துக் கொண்டிருந்தார். அவள் இருவரையும் பார்த்துவிட்டு பேசாமல் தாயை நோக்கி நடக்கத் தொடங்குகையில் அவர் அவளை நோக்கி கையசைப்பது தெரிந்தது. ஓடிச் சென்று பார்த்தால் தூரத்தில் ஒரே புழுதி மண்டலம்.

"அப்பா இங்கை யானை கூட்டமா வருகுது. ஓடியாங்கோ." அவளது அலறலைக் கேட்டு அப்பா ஓடிவந்து பார்த்தார். தூரத்தில் இப்போது புள்ளியாய் எதுவோ அசைகிறது. மெதுவாய் தான் என்றாலும் நிச்சயமாக யானை போல் தெரியாததால் ஓரளவு அமைதியானாள். சற்று நேரத்துக்கெல்லாம் அது ஒரு லாரி என்று தெரிகிறது. சந்தோசத்தில் துள்ளிக் குதித்து கைகளை அவர்களை நோக்கி அங்குமிங்குமாக அசைக்கிறாள். கிட்டே வர வர அதன் மேலே சில மனிதர்கள் உடகார்ந்து இருப்பது தெரிகிறது. அவர்கள் நன்றாக நெருங்கிவிட்டனர். லாரி இப்போது சற்று வேகத்தைக் குறைக்கிறது. நிற்கப் போகிறது என்று எண்ணிய கணத்தில், முடக்கில் திருப்பி சடுதியாக வேகத்தைக் கூட்டியதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். கடைசியாக இருந்த ஒரே நம்பிக்கையும் அற்றுப் போகையில், சற்றுத் தூரம் சென்ற அந்த லாரி சடுதியாக பிரேக் போட்டு நிற்கிறது. மூவரும் ஓட்டமும் நடையுமாக அதனருகே சென்றபோது, முன்னாலிருந்து ஒருவர் இறங்கி வருகிறார்.

"அது உங்கடை மோட்டார் சைக்கிளா?" எரிச்சலுடன் கேட்கிறார்.
"ஓமோம். இடையிலை நிண்டிடுது. அதுதான்.. யாராச்சும் வாரங்களா எண்டு பாத்திட்டு இருக்கிறம்."
"அதுக்கு இப்பிடி நடு ரோட்டிலை போட்டிட்டு நின்டா மற்ற வாகனங்கள் எப்பிடி போறது?" எட்டிப் பார்த்தால் அந்த உயிரற்ற ஜீவன் இப்போது நடுவீதியில் குப்புற விழுந்து கிடந்தது.
"இல்லை.. அது ஸ்டார்ட் ஆகுதில்லை. மனுசி பிள்ளையோட தனிய காட்டிலை கன  நேரமாக நிக்கிறம். ஒருத்தரும் வார மாதிரித் தெரியேல்லை. நீங்க புத்தளமா போறியள்? இவையளை வழியிலை மடுவிலை இறக்கி விடுறீங்களா?" அப்பா இப்படிக் கெஞ்சி முதல் தடவையாகப் பார்க்கிறாள். தவிர அவர்கள் யார்? எங்கே போகிறார்கள் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது? வியப்பாக இருந்தது.

இப்போது மேலேஇருந்து சிலர் இறங்கி வந்தனர். உள்ளேயிருந்து சில தலைகள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. யாரினது முகத்திலும் சந்தோசம் கடுகளவும் இல்லை. 'கடு கடு' என்றிருந்தது. அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டு அவரது கையைப் பிடித்து இழுத்தாள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான சமிக்ஞை. அவரோ அதைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் "மனுசியையும் பிள்ளையையும் மட்டுமாவது கூட்டிக்கொண்டு போங்கோ." இன்னும் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவளுக்கு  வெறுப்பாக இருந்தது.

நீண்ட யோசனை, கலந்தாலோசனைகளின் பின்பு ஒருவாறாக அவர்கள் அந்த உயிரற்ற ஜீவன் உட்பட அனைவரையும் ஏற்றிச் செல்ல ஒத்துக்கொண்டனர். மோட்டார் சைக்கிளை ஏற்ற பாதி மூடியிருந்த பின் கதவைத் திறந்தபோது தான், அதனுள் ஏற்கனவே பெண்கள் குழந்தைகள் என்று ஒரு பதினைந்து இருபது பேர்  மூட்டை முடிச்சுடன் அடைந்து கிடப்பது தெரிந்தது. வேண்டாத விருந்தாளிகள் நுழைந்துவிட்டதுபோல அவர்களது பார்வை சுட்டெரித்தது. ஆண்கள் எல்லோரும் மேலே ஏறிக்கொள்ள மீண்டும் அந்த லாரி மெதுவாகப் புறப்பட்டது.

யாரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. இதுவரை அவளைப் பார்த்த யாருமே "என்ன பேரும்மா?" அல்லது "இப்ப என்ன படிக்கிறே?" என்று கேட்க்காமல் போனதில்லை. ஆனால் அவர்கள் அனைவருமே இறுகிப்போயிருந்தனர்.  என்ன மனிதர்கள்? இதற்க்கு காடும் யானையும் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

பேசாமல் இறங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் லாரி தானாகவே நின்றது. அப்பா வந்தார். எதுவும் பேசவில்லை. மோட்டார் சைக்கிள் இறக்கப்பட்டது. அவளும் அம்மாவும் எதுவும் பேசாமல் இறங்கிக் கொண்டனர். லாரி புறப்பட்டுவிட்டது.

"ஏன் அப்பா இவை இப்பிடி இருக்கினம்? கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.." எரிச்சலுடன் கேட்டாள்.
"அவைண்ட நிலை அப்பிடி." கூறியவர் மேலே எதுவும் சொல்லவில்லை. நிதானமாய் விபரிக்கும் சூழ்நிலையிலும் அவர் இருக்கவில்லை. மற்றைய தருணங்களில் எனின் அந்தப் பதிலுடன் விட மாட்டாள். துருவித் துருவி கேட்டு முழுவதையுமே அறிந்திருப்பாள். ஆனால் இப்போது, அவர்கள் மீதும் நியாயம் இருக்கு என்று சமாதானமாகி விடுவமோ என்று பயந்தாள்.

அந்த சமயத்தில் அவளுக்கு முதலில் வந்தது கோபமா அல்லது அழுகையா என்று தெரியவில்லை. ஆனால் அவளது கன்னத்தை நனைத்தது நிச்சயமாக கண்ணீர்த் துளிகள் இல்லை. ஈ. காக்கா கூட வராத அந்த வழியில் அந்த லாரியை அனுப்பியது கடவுள் தான் என்று நம்பியிருந்தவளுக்கு கோபம் இப்போது அவர் மேல் திரும்பியது. ஆனால் தமது வீடு வாசல்களை விட்டு வலுக்கட்டாயமாகத் துரத்தப்பட்டு சொந்தபந்தங்களுடன் புத்தளத்தை நோக்கி அதில் போய்க்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்னும் அல்லாவை நம்பிக் கொண்டுதானிருந்தனர்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதை மட்டுமே வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக தமிழர்களை இன்றும் பழிவாங்கும் இந்தியா போல, புலிகளை வென்றுவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ராஜபக்சவை கண்மூடித்தனமாக இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் பல சிங்களவர்கள் போல, அவளும் மேற்கொண்டு அவர்களைப் பற்றி எதையும் கேட்டறியவில்லை. அறிந்துகொள்ளவும் விரும்பவில்லை.


கருத்துகள்

கவிதாஞ்சலி இவ்வாறு கூறியுள்ளார்…
good one
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கவிதாஞ்சலி

பிரபலமான இடுகைகள்