முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

தமிழ் இனி.. 2


எனது தமிழ் இனி.. பதிவுக்கு பலர் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தாலும் சில  காரசாரமான பதில்களும் கிடைக்கப் பெற்றிருந்தன. பொதுவாகவே தனிப்பட்ட பாராட்டுதல்களை இங்கே தனித்தனியே போட்டு நன்றி சொல்வது எனது வழக்கமல்ல. அதனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவாகவே நன்றியைக் கூறிக்கொண்டு, மற்றைய கருத்துக்களுக்குச் செல்வோம்.

முதலாவது கருத்து :

கட்டுரையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் ஜெயமோகன் மீது எதிர்வினைகள். ஜெயமோகன் தமிழை அழிக்கும் நோக்குடனோ சிதைக்கும் நோக்குடனோ எதையும் கூறவில்லை. அவர் சொன்னது இதுதான் “ஒரே எழுத்துருவாக ஆக்கினால் அடுத்த தலைமுறை அதை எளிதில் வாசிக்கும்” என்று மட்டும்தான். ஆங்கில எழுத்துருவில் தமிழை வாசிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்றோ, இப்போதே நூல்களை அப்படி வெளியிடமுடியும் என்றோ அவர் சொல்லவில்லை.
ஜெயமோகன் அவருக்கு கிடைத்த எதிர்வினைக்கு சொன்ன விளக்கம் ஒரு பகுதி
//“என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தமிழ்ச்செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். குமுதம் என்ற இதழை ஒரு கல்லூரி வகுப்பறையில் ஒருவர் கூட கேள்விப்பட்டதேயில்லை என்று அறிந்த அதிர்ச்சியை நான் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்களனைவருமே தமிழ்பேசக்கூடியவர்கள்
இதுதான் நம்மைச்சூழ்ந்துள்ள உண்மையான யதார்த்தம். இதை காணாமல் தவிர்ப்பதில் பொருளில்லை. இது ஒரு தேசியப்பொதுப்போக்கு. இந்தியா முழுக்க இதேநிலைதான் உள்ளது. இதற்கு எதிராகச் சட்டம்போடுவதோ பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக ஆனா ஆவன்னா கற்றுத்தருவதோ பயனற்றது. அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பத்துவருடம்முன்னரே செயல்படுத்திப்பார்த்து தோற்றிருப்பார்கள். அதுவே இன்று தமிழகப் பெருநகர்களில் நடக்கிறது. நாளை தமிழகம் முழுக்க இதுவே நிலைமையாக இருக்கும்
ஐம்பதாண்டுக்காலம் கழித்து ஒருவேளை தமிழ் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே வாசித்து-எழுதும் ஒரு மொழியாக நீடிக்கும். பேச்சு மொழி என்றுமிருக்கும். அதில் இலக்கியங்களை வாசிக்க ஆளிருக்கமாட்டார்ள். இன்று பல செவ்வியல் மொழிகளுக்கு இருக்கக்கூடியதுபோன்ற ஆர்வம்கொண்ட மிகச்சிறிய வட்டத்தினர் மட்டுமே தமிழை தீவிரமாக வாசிப்பார்கள். இதுதான் நான் உண்மையிலேயே வருமென அஞ்சக்கூடிய சூழல்.
இதற்கு எதிராகச் செய்யக்கூடுவது என்று தோன்றக்கூடிய ஒரு வழி நான் சொல்வது.சாத்தியமான பல வழிகளில் ஒன்று. நாளைய தொழில்நுட்பம் எதைச் சாதிக்குமென எனக்குத் தெரியாது. ஆனால் உலகமெங்கும் பலமொழிகளுக்கு அடிப்படையான பொது எழுத்துரு ஆங்கிலமாக மாற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். அந்த எழுத்துருவை வேறெந்த எழுத்துருவிலும் மாற்றிவாசிக்க தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கும். தமிழை பிராமியிலோ வட்டெழுத்திலோகூட வாசிக்கமுடியும். ஆகவே எப்படியும் கற்றுக்கொண்டே ஆகபோகிற ஆங்கில எழுத்துருக்கள் வழியாகவே தமிழை வாசிக்க- எழுதக் கற்றுக்கொள்வது சுலபமான வழியாக இருக்கும்.
ஒருவேளை இது வெறும் ஊகமாக இருக்கலாம். மிகையான அச்சமாக இருக்கலாம். இந்த மாற்று வழி நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது என்பது மட்டுமே என் கேள்வி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அத்திசைநோக்கிச் செல்கிறோம்
வழக்கம்போல தொண்ணூறுசதவீதம்பேருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. வரவிருக்கும் உடனடி எதிர்வினை என்பது ‘அப்டீன்னா நீ எதுக்கு தமிழிலே எழுதறே? அப்டியே இங்கிலீஷ் எழுத்துக்களிலே எழுதவேண்டியதுதானே? நீ எழுத ஆரம்பிச்சுப்பாரு…’.
நண்பர்களே, நான் இப்போது ஆங்கில எழுத்துருக்களில் எழுதுவதைப்பற்றிச் சொல்லவில்லை. இப்போதுள்ள வாசகர்கள் ஆங்கில எழுத்துரு வழியாக எளிதாக வாசிப்பார்கள் என்றும் சொல்லவில்ல ... ஆங்கில எழுத்துருக்கள் வழியாக தமிழ் இளமையிலேயே பள்ளிகளில் பயிலப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் தமிழ் வாசிக்க எளிதாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.”// 
ஜெயமோகன் வணிக இலக்கியம் அற்ற முழுமையான இலக்கிய எழுத்தாளர். அவருடைய தீவிர வாசகனான எனக்கு அவரின் எழுத்தின் யாதார்தமும் உண்மையும் புறிகின்றது. அவர் எந்த தாயையும் கொல்லவில்லை, வணிகஇலக்கியத்தை நோக்கி தமிழ் வாசகர்கள் சென்று கொன்டிருக்க அதில் இருந்து மாறுபட்டு நல்ல தமிழ் இலக்கிய எழுத்துகளை படைத்தது ஆரோக்கியமான வாசர்களை உருவாக்கி தமில் தாயை வளர்த்தவர் ஜெயமோகன்.

----

இதற்க்கு பதில் சொல்வதற்கு முன்பு இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு சிறிய சம்பவத்தினை நினைவுகூருவது நலம் என்று கருதுகிறேன்.

இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்லும் ஒரு குழந்தை நாலரை வயதில் திடீரென்று போக மறுத்து அடம் பிடிக்கின்றது. காரணம் கேட்டால்,
"டீச்சர் பேசினவா.."
"ஏன்? நீங்கள் ஏதும் குழப்படி செய்தனீங்களே?"
"இல்லை"
"அப்ப எதுக்கு பேசுறா?"
"எனக்கு சைனீஸ் எழுத வருதில்லை.."

ஒருகணம் திடுக்கிட்டேன். நாலு வயது குழந்தையிலிருந்தே சைனீஸ் சரியாக எழுதப் பழக்க அவர்கள் படும்பாடு ஆச்சரியமாக இருந்தது. நாம் மட்டும் தமிழை சொல்லிக்கொடுக்க எமது குழந்தைகள் வளரட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறோம். ஆனால் எமது ஊரில் அப்படியல்ல. அனந்தனின் அக்காவின் மகள் நாலுவயதிலேயே திருக்குறள் முதலாம் அதிகாரம் மனப் பாடம். தமிழ் எழுத்துகளும் அத்துப்படி.

ஒரு குழந்தை ஒரு மொழியை மட்டும் தான் சரியாகப் புரிந்து படிக்க முடியும் என்பது மிகவும் தவறான கருத்து. அதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்று (நன்றி: திலகன்) இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது எமது தவறு. எமக்கு நேரமில்லை என்று சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில் நேற்று ஜனனி பாடசாலையில் தானே வரைந்து எழுதி கொண்டு வந்த படம் தான் மேலுள்ளது. இங்கு எமது வீட்டில் யாருக்கும் சைனீஸ்  தெரியாது. அதற்காக ஜனனி இருதினங்களுக்கு முன்பு பாடசாலை போக மறுத்தபோது நீ ஆங்கிலம் மட்டும் நன்றாகப் படித்தால் போதும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் சைனீசும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவள் மனதில் விதைத்தேன். அது மட்டும் தான் நான் செய்தது.

அடுத்ததாக, மொழி என்பது வெறுமனே பேச்சுமொழி மட்டுமல்ல. வேறு சில மொழிகள் அப்படியிருக்கலாம். ஆனால் தமிழின் உயிர்நாதமே அதன் எழுத்துக்கள் தான். அதனையே கொன்றுவிட்டு தமிழை வளர்க்கிறோம் என்று சொல்வது முட்டாள்தனமில்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்? அதைவிடுத்து தமிழை ஆரம்ப கல்வியில் கட்டாய பாடமாக்கலாமே?சொல்லிக்கொடுப்பதற்கு எத்தனையோ ஆசிரியர்கள் தாகத்துடன் காத்திருக்கிறார்கள்.
  
இரண்டாவது கருத்து :

இதுவும் எனது முதல் பதிவுக்கு வந்த கருத்துத் தான். இதற்கும் எனது பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் முதலாவது கருத்துக்கு இதனை வைத்து பதில் சொல்லலாம் என்பதால் இங்கு போடுகிறேன். இதில் இரண்டாவது கருத்தைப் பார்த்தீர்களானால் பொய்மைகளை எழுத்திலா / ஈழத்திலா என்று தெரியவில்லை. அடுத்ததென்ன ஆன்மீகமா? அப்படியாயின் ஆன்மீகத்திற்கும் எனது முதல் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?இப்படி தமிழை ஆங்கிலத்தில் எழுதப் போனால் பல மயக்கங்கள் உருவாகும். அவற்றைத் தவிர்க்க ஆங்கிலத்தை தமிழுக்கு ஏற்றால் போல் குற்றுகள் வைத்தோ கோடுகள் வைத்தோ சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும். குறைந்த பட்சம் இன்னென எழுத்துகளுக்கு இன்னென ஆங்கில எழுத்துகளின் கூட்டமைப்பை உபயோகிக்க வேண்டும் என்றாவது மனப்பாடம் செய்யவேண்டும். இத்தனை சிரமப்பட்டு வேற்று மொழியொன்றை தமிழுக்கு ஏற்றவாறு செதுக்குவதற்கு பேசாமல் தமிழ் எழுத்துருக்களைப் படித்துவிட்டுப் போய்விடலாமே? 

கடைசியாக உங்களுக்காக ஒரு விஷப் பரீட்சையில் இறங்குகிறேன். கீழிருப்பதை வாசித்துத்துப் பொருள்கொண்டு பாருங்கள் அப்போது புரியும். (அனந்தன் நேற்றைய தினம் வாசிக்கத் தொடங்கிய  ஒரு தொடரிலிருந்து எடுத்தது. பதிவை எழுதிவிட்டு அனந்தனை தொடர்புகொண்டு கேட்டேன். "பதிவு நன்று. ஆனால் அதென்ன கடைசியில் என்னமோ ஆங்கிலத்தில் கிறுக்கியிருக்கு?" என்றார்.)  
kaasiyil varanaa nathiyum assi nathiyum kalakkum iru thuraikalukku naduve amainthirukkum padiththuraiyil anthiyil ezhuthirikal konda vilakkin mun amarnthu sootharkal kinaiyum yaazhum meeddip paadinar. ethire kaasimannan peemathevanin moondru ilavarasikalum amarnthu athaik keddukkondirunthanar. sennira aadaiyum sevvariyodiya periya vizhikalum kondaval ambai. neelanira aadaiyanintha minnum kariyaniraththil irunthaval ambikai. vennira aadaiyanintha melliya udal kondaval ambaalikai. mukkunangalum kaasimannanidam moondru makalkalaakap piranthirukkindrana endranar nimiththikarkal.

ஜெயமோகனை நான் எதிர்க்கவில்லை. அவரது முட்டாள்தனமான சில கருத்துகளை தான். வேறாராவது இதனைச் சொல்லியிருந்தால் வெறுமனே கடந்து போயிருக்கலாம். அதில் உண்மை கூட இருக்கலாம். ஆனால் தமிழை வளர்க்க நினைக்கும் ஒருவர் இப்படியான கருத்துகளை உதிர்ப்பது வரவேற்கத் தக்கதல்ல. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்