ஏனோ இதுவரை இங்கே நம்மைப்பற்றிய பயோ டேட்டா (நேரடியாக) எழுதவேண்டிய தேவை வரவில்லை. அப்படி வந்த சமயத்தில் 'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul) அப்பிடின்னு ஒற்றை வரியில் அமைதியா சொல்லிட்டுப்போற பக்குவம் / தெளிவு வந்திடிச்சு. இருந்தும் இந்த மாற்றம் வருவதற்குள் பல வருடங்களல்ல, பல பிறவிகள் சென்றிருந்தன.
அதெப்பிடின்னு சின்னதா, அறுதியும் இறுதியுமா.. ஒரு trailer போட்டோம்ன்னா..
பல பிறவிகளின் சாரமாக.. இந்தப் பிறவியில், பதினைந்து வயதுவரை, சைவத் திருமுறைகள், ஆண்டாள் பாயிரங்கள், நாயன்மார் சரிதைகள், சைவ சித்தாந்தங்கள் என்று பக்தி மார்க்கத்தில் கடவுளைக் காதலித்த காலம் முதல் அத்வைதம், துவைதம், சென் தத்துவங்கள், ஓஷோவின் பார்வைகள் என்று பலவற்றை இருபத்தியைந்து வயதுவரை தத்துவார்த்த ரீதியிலும், எண்ண அலைகள், அல்பா, பீட்டா, டெல்டா, தீற்ரா, பிரைன்வேவ்ஸ் என காது கிழிய ஹெட்போனை மாட்டிட்டு முப்பது வயதுவரை விஞ்ஞான/பௌதீக ரீதியிலும் எதையோ கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து செய்து களைத்து போதும்டா சாமி, கடல்லையே இல்லையாம்.. எனும்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, உலகின் இன்று பலரைப் போலவே கடவுள் பற்றிய பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த காலமது. என்னதான் கடவுளைப்பற்றிய தேடல்கள் இருந்தாலும் மனிதனின் இயற்கையான உணர்வுகளை (சந்நியாசிகள் போல்) அடக்கவேண்டும் என்பதினை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அப்படியே அடக்க முடிந்தாலும் அது சம்பந்தமான எண்ணங்கள் வருவதைத் தடுக்க முடியாது என்றே நினைத்திருந்தேன். ஆகவே ஓஷோ (ரஜனீஷாக) இருந்தபோது சொன்னதுபோல், எமது உணர்ச்சிகளை, ஆசைகளை (பார்வையாளனாக இருந்து?) முழுவதுமாக அனுபவித்து முடிக்கும் வரை மனம் ஒரு நிலைப்படாதென்ற மிக மிகத் தவறான கொள்கை இருந்தது. அப்போது தான் தியான வகுப்பெடுத்து சிலகாலங்களிலேயே இறை சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சிநேகிதி ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சொன்னது, "நீ உன் வழியில் போ.. நான் என் வழியில் போகிறேன். ஆனால் கடைசியில் யார் சரியான இடத்திற்கு முதலில் போய் சேர்கிறோம் என்று பார்ப்போம்."
காலங்கள் கடந்தன. பல ஞானிகள் காலம் காலமாக, படித்துப் படித்துக் கூறியது போலவே எமது உணர்வுகளும் ஆசைகளும், நாமாக உணர்ந்து மனதை எமது கட்டுக்குள் வைத்திருந்தாலேயொழிய தாமாக என்றும் தணியப்போவதில்லை / தணிந்தாலும் மீண்டும் விழித்தெழும், என்று புரிந்து கொள்ள இப்பிறவியில் மட்டும் முப்பது வருடங்கள் எடுத்திருக்கிறது. ஞானத்தைத் தெரிந்து, புரிந்து, உணர்ந்து கொள்ள மேலும் மூன்று வருடங்கள். ஆனால் அதனுள் முற்றாய் அமிழ்ந்துவிடும் துணிச்சல் வந்தது, மோகத்தை முற்றாக எண்ணங்களிலிருந்தும் கூட அகற்றிவிட முடிந்த சில மாதங்களின் பின்னரே..
உணவில் கட்டுப்பாட்டைக் கையாள்கையில் தான், எண்ணங்கள் எவ்வளவு மாசுற்றிருக்கின்றன என்பது புரிந்தது. எண்ணங்களில் கட்டுப்பாட்டைக் கையாள்கையில் தான், இன்னும் எத்தனை பழைய மாற்றப்படவேண்டிய சமஸ்காரங்கள் இருக்கின்றன என்பது புரியத் தொடங்குகின்றது.

இதெல்லாம் இப்ப எதற்க்குச் சொல்கிறேன் என்றால் அது கூட ஒரு பழைய சமஸ்காரம் தான். அதாகப்பட்டது.. சில வருடங்களின் முன்னால் ஒரு சகோதரி, "சிங்கப்பூர்ல மொடலாக இருந்த பொண்ணு.. இப்ப இங்க வந்து கம்பெனி நடத்துது." அப்பிட்டின்னு சொல்லியிருந்தாங்க. அப்போ என்னதான் ஞானத்தை அறிந்திருந்தாலுமே, ஈகோ அப்பிடின்னு ஒரு சமாச்சாரம் கொஞ்சம் தலையெடுத்து வருத்தமாயிடுத்து. அப்புறம் நினைச்சேன்.. அதுவும் உண்மைதானே? பிறகென்ன? என்று. டெமோ, சிஸ்டம் அட்மின், வெப் மாஸ்டர், நெட்வொர்க் மேனேஜர், ப்ராஜெக்ட் மேனேஜர் அப்பிட்டின்னு என்னவெல்லாமோ பௌதீக உலகில் குப்பைகொட்டி கடைசியில், ஊரில போய் ஏதாச்சும் உருப்படியாப் பண்ணுவம் எண்டு, சொந்த கம்பனி வைக்கலாம்ன்னா அவங்களுக்குத் தெரிந்தது புற அழகு மட்டும் தான், அப்பிடின்னு கோபமா வேறை வந்தது. நடுவில ஒருத்தர், தான் போட்ட பிச்சையில தான் எல்லாமே எண்டு, கம்பெனில இருந்த ஒவ்வொருத்தருக்கும் இரவிரவா கால் போட்டு புலம்புவது மட்டுமல்லாமல் இணையத்தில் கூட அவ்வப்போது வந்து புலம்பித் தள்ளுவார். அப்படியே தாசீ, ..சின்னு காதுகொடுத்துக் கேட்கமுடியாத பலவார்த்தைகள் வெகு சரளமாக வந்து விழும்.. அவரது அறியாமையைக் கூட மன்னிக்க முடிந்தது.

பதின்ம வயதுகளில் ஒரு சமயம் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில், கண்காட்சி நடத்திக்கொண்டிருந்த சகோதரிகளின் பேச்சை கேட்கவிடாமல் இழுத்துச் சென்ற அம்மாவை நிறுத்தி, இன்னும் ஒரு சில நிமிடம் உன்னிப்பாகக் கேட்டிருந்திக்கலாம். வரவிருந்த சம்பவங்களைத் தடுக்க முடியாது போயிருப்பினும், துன்பத்தை தவிர்க்கும் ஞானமாவது கிடைத்திருக்கும். ஆக, பலர் பல பிறவிகளாய் அனுபவிக்கவேண்டிய/முடிக்கவேண்டிய (கர்மா/துன்பம்) அனைத்தையும் இங்கே இந்தப் பிறவியிலேயே அனைவருடனும் முடித்தாயிற்று என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.
லௌகீக தந்தை கூட, முன்னர் சில சமயம் கேட்பார், உனக்குத்தான் இன்னும் நிறைய வயசிருக்கே
அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கே.. இதெல்லாம் இப்ப தேவையா எண்டு.. அப்ப புரியல.. இப்ப புரியுது.. பலரோட நிறைய கர்மா செட்டில் பண்ண (
அனுபவிக்க..!) வேண்டியிருந்திருக்குக்கு... :)
பிற்குறிப்பு: இன்றிலிருந்து (
http://bkgowri.blogspot.com) என்ற தளத்தில் ஆத்மீகம் சார்ந்த விடையங்களை எழுத இருப்பதால், அனேகமாக இது தான்
ரசிகையாய் எழுதும் கடைசிப் பதிவு என நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாள் முதல், உண்மையான ஆத்மீகத் தேடல் இருந்தும் சரியான புரிதல் இல்லாமல், வழியறியாமல் தடுமாறிய, தடம் மாறிய என்னைப்போல் ஒரு சிலருக்காவது உதவும் என்ற ஒரு சிறிய நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது.
If You have been searching for a love that never lets you down, a truth that is unshakeable and a beauty that goes beyond the superficial, You have indeed been searching for GOD - perhaps without even being aware of it.
ஓம் சாந்தி!
கருத்துகள்