பன்னாடைகள்

by - 12/16/2014 11:53:00 முற்பகல்

நேற்று முழுக்க முகப்புத்தகத்தில பன்னாடை.. பன்னாடை அப்பிடின்னு திட்டிடிருக்கிரன்களே? பன்னாடை அப்பிடின்னா என்ன?

இது பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும். அருகிலுள்ள படத்தினைக் காண்க. அரிதட்டு போலவே இதுவும் கழிவுகளை வடிகட்ட பயன்படக்கூடிய மிகவும் உபயோகமான ஒரு பொருளாகும். என்ன ஒன்று நல்லதை விட்டுவிட்டு கழிவுகளை வடிகட்டி வெளியே வைத்திருப்பதனால், அதன் பயன்பாடுகளை மறந்த நமது நன்றி கெட்ட சமூகம் அதனை முட்டாள் என்கிறது. 

சரி இதெல்லாம் இப்ப எதுக்கு எண்டு கேட்டீங்கன்னா முதல்ல கீழே தரப்பட்டிருக்கும் எனது நேற்றைய பதிவை படிங்க. 
நாங்க தலைவர்ட பர்த்டேய கேக் வெட்டி கொண்டாட இருக்கோம். என்ன சொல்றீங்க?
அது போன கிழமையே முடிஞ்சுதே?
இல்லை பன்னிரெண்டாம் திகதி லிங்கா ரிலீஸ் அன்னிக்கே தியேட்டர்ல கொண்டாட arrange பண்ணியிருக்கிறாங்க..
ஒ அப்பிடியா.. 
தலைவர் என்பதன் அர்த்தம் எவ்வாறு அடுத்த தலைமுறையிடமிருந்து எப்படி படிப்படியாக அகற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதனை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது எமது தலைமுறை. அதற்காக அவர்களை கேவலமாகப் பேசுவதினால் உங்களின் மனவக்கிரங்களுக்கு / இயலாமைக்கு ஒருவேளை ஆறுதல் தேடிக்கொள்ளலாம். ஆனால் அவற்றினால் எந்தப் பலனுமில்லை. நேற்று ஒரு பதிவினை பார்த்தேன். "எமது போராடும் உரிமையை பறித்துவிட்டு மக்களுக்கு நீ கொடுத்தது என்ன? முள்ளிவாய்க்கால் துயரங்களைத் தானே?" என்று EPRLF தடைசெய்யப்பட்ட தினத்தினை நினைவுகூருகிரார்கள். இதற்க்கு விருப்பம் தெரிவித்தவர்களும் பகிர்ந்தவர்களும் அதிகமே தவிர எதிராக எந்த கருத்தினையும் யாரும் கூறியதாக தெரியவில்லை. பல பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர்களுக்கு, அபலைகளாக்கியவர்களுக்குத் துணைபோனவர்களை எம்மால் சற்றும் கூச்சமே இல்லாமல் தூக்கிப் பிடிக்க முடியும்போது, தனக்குப் பிடித்த ஒரு நடிகனின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் வாழ தம்முயிரை தந்த மாவீரர்களின் நினைவுனாளைக்கூட நாலு கதவையும் சாத்திவிட்டு அறைக்குள்ளிருந்து சுட்டிவிளக்கில் விழிநீர் சிந்த நினைவுகூரும் நிலையில் அவர்கள் கனவுகண்ட தேசமிருக்க, வெளிநாட்டில் யார் கொண்டாடுவது என்று கோஸ்டிச் சண்டை. வெறும் பதினைந்து கிலோ கேக்குக்கும் ஒரு பக்கெட் பாலுக்கும் நீலிக்கண்ணீர் விடுபவர்கள் தினசரி அடிக்கும் தண்ணிக்கு செலவு செய்யும் காசை மிச்சப்படுத்தி அடுத்த தலைமுறையின் கல்விக்கு உதவலாமே? அப்படி உதவுபவர்களுக்கு தலைவணங்குகிறேன். இது அவர்களுக்கான பதிவல்ல. ஏனெனில் அடுத்தவர்களுக்கு உதவும் மனதுள்ளவர்கள், பிறர் தவறு செய்தால் எவ்வாறு திருத்தலாம் என்று நினைப்பார்களே ஒழிய இவ்வாறு கீழ்த்தரமாக ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டார்கள்.  
மில்லியன் கணக்கில் செலவுசெய்து ஹெலிகோப்டோரிலும், கப்பலிலும், நேவி ஹோட்டலிலும் என்று நம்மவர் சற்றும் கூச்சமேயில்லாமல் விழாக்கள் கொண்டாடுகையில் வெறும் பத்தாயிரம் கூட முடிந்திராத இந்த ஒரு சாதாரண நிகழ்வினை தமது சுயலாபங்களுக்காக திரித்து வெளியிட்டு சமூக சீர்திருத்தவாதிகள் என்று பெயரெடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். உங்களின் மானசீக தலைவரின் பிறந்தநாளை அடுத்த வருடம் இதே இடத்தில் வைத்து நினைவுகூரும் துணிவு உங்களில் யாருக்காவது இருக்கிறதா? இருந்தால் வாருங்கள். அதுவரை நீங்கள் / நாங்கள் உயிரோடு இருந்தால்.. அதன் பிறகு மேற்கொண்டு பேசலாம்.

இந்தப் பதிவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்ப்புக்கும் ஆதரவுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரை திட்டுவது என்பது இலகுவான விடயம். ஆனால் தூக்கிவிடுவது என்பது மிகவும் சிரமம். ஏனெனில் தூக்கிவிடுவதற்க்கு நீங்கள் மேலே இருக்கவேண்டும். நிலவைப் பார்த்து நாயால் குலைக்கத்தான் முடியும். சூரியனால் தான் ஒளியை கொடுக்க முடியும்.

அப்படி ஒளிகொடுக்கும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கருதினால் வாருங்கள். நாம் ஒன்றிணைவோம். தமிழன் இன்றுவரை தலைநிமிர தடைவிதிக்கும் வசைகள் வேண்டாம். தலைநிமிர உதவிய ஆயுதங்களும் வேண்டாம். அன்பினால் அறிவினால் மாற்றத்தை உண்டாக்க உதவுவோம். 

தகவல் தொழிநுட்பதுறை மாணவர்களுக்கு Yarl IT Hub போன்று ஒவ்வோர் துறைக்கும் அது சார்ந்த வல்லுனர்கள் கொண்டு ஒவ்வோர் அமைப்பினை உருவாக்கி  அதன் மூலமாக அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவோம். கல்வி மறுக்கப்பட்டு வாழ்தலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டபோது வேறுவழியின்றி ஆயுதம் தூக்கினர் அன்று. இன்றும் அதே நிலைதான். ஆனால் அவர்கள் திரும்பவும் ஆயுதம் தூக்கிவிடக்கூடாது என்பதற்காய் திட்டமிடப்பட்டு பல்வேறு வழிகளில் திசைதிருப்பி விடப்படுகின்றனர். உங்களுக்கு உண்மையிலேயே அவர்கள் மீது அன்பிருந்தால்.. கரிசனை இருந்தால்.. மாற்று வழியை முன்வையுங்கள். சம்பந்தப் பட்டவர்களிடம் மற்றும் தகுதியானவர்களிடம் உங்களின் கருத்தினை / திட்டத்தினை கொண்டுசேர்க்கும் பொறுப்பினை நீங்கள் விரும்பினால் நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுங்கள். ஏற்கனவே இத்தகைய செயல்திட்டங்கள் இருப்பின் அவற்றையும் தெரியப்படுத்துங்கள். ஒற்றுமையே பலம். தமிழனின் ஒரே பலவீனமும் அதுவே. புரிந்து இனியாவது ஒன்று சேர்வோம். 

வழியில் தவறு நேரலாம். பன்னாடைகள் என திட்டப்படலாம். இல்லை அதைவிடவும் மோசமாகவும் திட்டப்படலாம். அவற்றையெல்லாம் கடந்து செல்லும் துணிவுள்ளவர்களை இருகரம்கூப்பி வரவேற்கிறோம். ஏற்கனவே தமது ஆர்வத்தினை தெரிவித்தவர்களுக்கு மிக்க நன்றி. மிக விரைவில்  தங்களின் எண்ணத்தினை செயல்வடிவமாக்க்கூடிய பொறிமுறையுடன் தொடர்பு கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: இது எவ்வித பணரீதியான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியாக மட்டுமே செய்யப்படுவதனால் நீங்கள் ஏதாவது பணம் கொடுக்க விரும்பினால் அதற்குரிய சரியான திட்டத்துடன் அணுகுங்கள். அத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்க்கான வரவு செலவு கணக்கு உங்களுக்கு சமர்ப்பிக்கப்படும். தாங்கள் ஒரு திட்டத்தினை முன்வைக்கும் போது, யார் விரும்பியோ விரும்பாமலோ நாம் இங்கே அரசாங்கத்தினை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி.. நாம் நாம் என்று சொல்கிறேனே அந்த நாம் யார் எண்டு கேட்டீங்கன்னா... இந்த திட்டத்துக்கு கைகொடுக்கப் போகும் நீங்க எல்லாருமே தான். வெளிநாட்டு அறிவுஜீவிகளுக்கும் உள்நாட்டு ஆர்வலர்க்கும் அல்லது உள்நாட்டு அறிவுஜீவிகளுக்கும் வெளிநாட்டு ஆர்வலர்களையும் இணைக்கும் பாலமாக எமது பிரதான குழு இயங்கும். பெறப்படும் அல்லது தயாரிக்கப்படும் திட்டங்களைப் பொறுத்து அந்தந்த துறைக்குரிய உபகுழுக்கள் உருவாக்கப்படும். பிரதான குழு வெறும் பாலமாகவும் கண்காணிப்பாளர்களாகவும் மட்டுமே செயல்படும். உபகுழுக்களே தத்தம் துறைக்குரிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தும். இது சம்பந்தமான மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது இணைய விரும்புபவர்கள் uthayamsl@googlegroups.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நன்றி.
You May Also Like

0 comments