முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

இரண்டாமவரே முதன்மை பெறுவர்இரண்டாமவரே முதன்மை பெறுவர்
கெளரி அனந்தனின் - பெயரிலி
                                             முனைவர் சு. செல்வகுமாரன்
                                             உதவிப்பேராசரியர்
                                             அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
                                             கைபேசி – 9442365680
                                             E.mail: mugadu.kumaran@gmail.com

    ஒரு கலைப் படைப்பு உருவாவதற்கான காரணங்களாக வாசிப்பின் புறத்தே நாம் பல காரணங்களைச் சொல்லமுடியும். ஆனால் குறிப்பிட்ட படைப்பை படைத்த படைப்பாளியின் மனதில் அப்படைப்பை உருவாக்கம் செய்தமைக்கு அத்தகைய பல காரணங்கள் இருக்க முடியுமா என்பது கேள்வியே. ஆயினும் படைப்பாளியை அதிர வைத்த ஒரு நிகழ்வோ, மனிதச்செயல்பாடோ அல்லது அவரின் கனவோ, கற்பனையோ, ஆசையோ அவரை அந்த படைப்பை படைக்கத் தூண்டியிருக்கலாம். லக்கான் போன்றோர் படைப்பு – படைப்பாளி பற்றி கூறுகின்றபோது தொலைத்து விட்ட ஒன்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக குறிப்பிடுவர்” இத்தகையதான நிலையில் உருவாக்கப்படும் கவிதை, புனைகதை போன்ற படைப்பானது சிலருக்கு மொழி வளமை மிக்க கலையாகவும், சிலருக்கு பயிற்சித் தளமாகவும் அமைந்து விடுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை யாருக்காக எழுதுகிறார்? எந்த தளத்திலிருந்து எழுதுகிறார்? எதை எழுதுகிறார்? என்பதான எல்லாவற்றையும் அந்த படைப்பாளியும் வாசகனும் விமர்சகனும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. ப்போதே நல்ல படைப்பும் விமர்சனச் சூழலும் உருவாக முடியும்.
    இலக்கிய படைப்பாக்கங்களை விமர்சகர்கள் இன்று வெகுஜன படைப்பு என்றும் தீவிர இலக்கிய வகை (தரம்மிகு) படைப்பு என்றும் வேறுபடுத்தி பார்ப்பதை பார்க்க முடிகின்றது. கலைத்துவம், கருத்தியல் அடிப்படையில்  தீவிர இலக்கியங்களை இனங்கண்டாலும், அதேநேரம் வெகுஜன படைப்புகளையும், படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின் தொடக்க நிலை படைப்புகளையும் நாம் நிராகரித்து விட முடியாது. பெரும் மக்கள் திரளுக்காக எழுதப்பட்ட ஒரு இலக்கியத்தை கலைத்துவம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி அதை இலக்கியமே இல்லை என மறுத்துரைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆக இந்த வேறுபாடுகளை சமத்துவப்படுத்தியே ரு படைப்பிலக்கியத்தை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டியுள்ளது. நான் ஏன் இதை பதிவு செய்கிறேன் என்றால் முக்கிய ஆளுமைகளின் அல்லது தீவிர இலக்கியப் படைப்பாக கருதப்படக் கூடிய படைப்புகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சில நேரங்களில் வெகுஜன நோக்கிலான இலக்கியங்களுக்குள் நுழைவதற்கு அதன் மொழி தடையை ஏற்படுத்துவதாய் அமையும். வெகுஜன இலக்கிய வாசகனுக்கு எப்படி ஒரு தீவிர அல்லது கோட்பாட்டு தளம் சார் இலக்கியங்கள் தடையே ஏற்படுத்துமோ அத்தகையதான ஒரு தடையை அது ஏற்படுத்துகின்றது. ஒரு நிலையில் இது வாசகனின் பிரச்சனையும் கூட. இதனை படைப்பின் பிரச்சனையாக கருதமுடியாது. படைப்பை ம் பக்கம் திருப்பாமல் அதன் போக்கிலே சென்று வாசிக்கிறபோதே ஒரு படைப்பின் வாசனையை முழுமையாக நுகர முடிகிறது.
    கெளரி அனந்தனின் பெயரிலி புதினம் இத்தகையதா சில முரண்களுக்கு இடையிலிருந்தே கிளைத்தெழுகிறது. வாழ்வு என்பது பணங்களால், பொருட்களால் மட்டும் இட்டு நிரப்பக் கூடிய ஒன்றல்ல. அது உணர்வுகளால் உறவுகளால் அன்பின் திளைப்பினால் உயர எழுவது.  அன்பினால் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொள்வதிலும், புரிந்துகொண்டு  செயல்டுவதிலும் எத்தகைய சிறப்பு இருக்கின்றன என்பதனையும், அது தடைபட்டு இடைவெளி உருவாகிறபோது வாழ்வானது எப்படி மீட்டப்படாத நிலையிலேயே கைதவறி உடைந்து போகிற இசைக்கருவியாய் சிதைந்து பயனற்றதாய் போய்விடுகின்றது என்பதையும் வித்தியாம்மா, ஐயா, ஜானு, வருண், ஜானுவின் அப்பா  உள்ளிட்ட பாத்திரங்களின் மூலம் கெளரி புதினத்தில் பதிவு செய்ய விளைகின்றார்.
    புதினத்திற்கு “பெயரிலி எனும் பெயர் வழங்கப்பட்டிருப்பது வாழ்வில் ங்கள் பெயரினை எந்த நிலையிலும் முன்மொழியாது பிறருக்காகவே வாழ்ந்து மடிந்து போ ஐயா, போன்ற மனிதர்களை மையப்படுத்துகின்றது. இங்கு ஐயாவிற்கான சிறப்புகள் பல நிலைகளிலிருந்தாலும், அவரின் வாழ்வில் பெண் துணைமை குறித்து பார்க்கிற போது அவை தமிழ் பண்பாட்டுக்கும், சமூக அமைப்புக்கும் மாறாக ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாகவே இருக்கின்றன. இந்நிலையில் ஐயாவை மையப்படுத்துவதாக தலைப்பினை இடம்பெறச் செய்திருப்பது புதின ஆசிரியர் கௌரியின் முற்போக்கு அல்லது எஸ்.பொ சொல்வது போல நற்போக்குத்தனத்தையே காட்டுவதாக உள்ளது.
   ஆஸ்திரேலியா, இலங்கை, எனும் இருவேறு தளங்களை மையமிட்டு புதினம் நகர்கின்றது. சிங்கப்பூர் குறித்த பதிவு புதினத்தில் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான தளச்செயல்பாடுகள் எதுவுமே நிகழவில்லை என்றே சொல்ல வேண்டும். கதைமாந்தர்ளும் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பெரியய்யாவின் இறப்பும் அவர்களின் காணி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டமையும் போரின் வெளிப்பாடக பார்க்கமுடிகிறது. மாறாக இதனை ஒரு போர் சார்ந்த ஓரு இலக்கியமாகவோ, புலம்பெயர் இலக்கியமாகவோ கௌரி இதனை படைக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஆஸ்திரேலியா ர்ளின் பிழைப்புக்கான ஒரு இடமாகவே காட்டப்படுவதாயினும் காலச்சூழலில் அவர்கள் எல்லோருமே இலங்கையை வந்தடைவதும் இலங்கையிலேயே இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுத்தல்,.டி பார்க்கை உருவாக்குதல் உள்ளிட்ட பலவற்றையும் தொடங்கி இலங்கையை வளமைப்படுத்துவதனையும் காணமுடிகிறது. மட்டுமல்லாது பெரியய்யாவின் மனைவி வள்ளியம்மை போருக்கு பின்பாக ஊரில் வந்து பல்வேறு துயரங்களுக்கு  இடையிலும் அவருடைய இடத்தை கைப்பற்றி காணியினை திருத்தி அதில் குடில் அமைத்துக் கொண்டு வாழ முற்படும் நிகழ்வும் தமிழ் மக்கள் விரைவாக போரை மறந்து அல்லது ஒதுக்கி தம் தாய் மண்ணில் வந்து வாழ முற்படுதல் வேண்டும் என்பதன் ஆசையாக அடையாளமாக பார்க்க முடிகின்றது. மேலும் புதினத்தில் பல இடங்களில் இலங்கை பற்றியதான பதிவில் முன்பு இல்லாத கட்டிட அமைப்பும், வளமும், சாலை மேம்பாடும் இருப்பது போன்றதான விவரணைகளும் போர்சார்ந்த கருகல் வாடைக்கு மாறான வரும் நதட்கள் சார்ந்து நம்பிக்கையை ஏற்படுத்துபவையாக உள்ளன.
    பெயரிலி ஒரு வெகுஜன இலக்கியத்திற்கான தன்மையினையும், பல்வேறு புதிய உத்திமுறை மற்றும் முற்போக்கான கருத்தியலைக் கொண்ட தீவிர இலக்கிய வகைமை எனும் இருவேறுத் தன்மையினையும் உள்ளடக்கியதாக அமையப் பெற்றுள்ளது. மேலும் வாழ்வியல் குறித்த மதிப்பீடுகளும் நிகழ்வுகளும், பாத்திரச் செயல்பாடுகளும் அடுத்து இன்னவாக இருக்கும் என்று வாசகனால் தீர்மானிக்க முடியாதபடியான புதிர்தன்மையை கொண்டிருப்பதும் புனைவாக்கத்தின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது. மட்டுமல்லாது வாழ்வில் நடப்பவற்றை ஏற்கனவே நடந்தவை அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகள்,  பேசப்பட்ட வார்த்தைகள் மூலமாக நிதர்சனப்படுத்த முயல்வதும், அவைகளை தீர்க்கதரிசனங்களாக முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகிறது.
   இவற்றை இன்னும் விளங்கப்படுத்துவதாக இருந்தால் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தடைந்த ஒரு பார்சலில் இருந்த சில விரங்களை (Documents) வைத்து அலுவலகத்திற்கு சென்றிருந்த வருணிடம் மனைவி ஜானு என்ன காரணம் என்று கூட சொல்லாமல் தொலைபேசியில் அழைத்து உடனடியாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல டிக்கட் புக் பண்ணச் சொல்கிறாள். காரணங்களை அறியாதும் கூட வருண் அவளை உடனடியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வகிறான். தனது திருமணத்திற்கு கூட அழைக்கப்படாத தாய் வித்தியம்மாவையும், தன் தாய்  திருமணம் செய்து கொள்ளாத ஆனால் ஒரு கணவனைப் போல சேர்ந்து வாழ்கின்ற ஐயாவையும் ஜானுவும் வருணும்  சந்திக்கிறார்கள். உறவின் நெருக்கத்திற்கு இடையில் ஒரு கட்டத்தில் ஐயா குறித்த ஒரு விமர்சனத்தை ஜானு முன்வைக்க தாங்கிக் கொள்ளாத வித்தியம்மா ஜானுவை அடித்துவிடுகிறார். இதில் எட்டுமாதமே நிரம்பாகர்ப்பிணியாக இருந்த ஜானு மருத்துவமனையில் குறைமாதத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். வருணின் தாய் தந்தை மற்றும் ஜானுவின் தந்தைக்கு செய்தி சொல்லப்பட்டு அவர்ளும் அவசரமாக ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்தடைகின்றனர்.
   ஒரு சூழலில் வித்தியம்மாவும், ஐயாவும் ஒரு விபத்தில் இறந்து போக அவர்களுக்கு வருண் கொள்ளிவைப்பதுமான பல நிகழ்வுகள் புதினத்தில் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு மாய ஜால மாந்திரீகத் தன்மையோடு ஒரு சங்கிலித் தொடராக முடிந்து போகின்றதை பார்க்கலாம். இத்தகைய சிக்கலான அல்லது முரண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதைப்பின்னலானது கெளரியின் படைப்பாக்க வெற்றியாக பார்க்கப்பட வேண்டியது. எனினும் அடுக்கடுக்காக திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கின்ற திரைகளை விலக்கி வாசகன் ஒருவன் புதினத்தை விளங்கிக்கொள்ள வேண்டியிருப்பது படைப்பில் நெகிழ்ச்சி குறைவினை ஏற்படுத்துவதையும் உணர முடிகின்றது. அதுபோலவே சரளமாக அடிக்கடி குறுக்கிடும் ஆங்கில உரையாடல்களும் ஒரு சாதாரண தமிழ் வாசகனை கதையோடு ஒத்துப் போக முடியாதபடி தடை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
    மேற்சுட்டிய நிலையில் புதிர்களும் முரண்களும் அதிகமாகவே புனைவில் இடம்பெற்றிருந்தாலும் அவைகளை வெவ்வேறு நிலைகளில் உடனுக்குடன் சமப்படுத்தி கதையினை நகர்வுக்கு கொண்டுவருவதும் கவனத்திற்குரியதாகும். மேலும் முதன்மைப் பாத்திரங்களான வருண், ஜானுவை முரண்பட்ட குடும்பச்சூழலில் இருந்து தேர்வு செய்திருக்கும் கௌரி, ன் பெற்றோரையே தனது ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளக் கூடிய அம்மா அப்பாவின் பிள்ளையாக வருணையும், மாறாக எதிர்கொள்ள முடியாத சிக்கல்கள் மிகுந்த பெற்றோர்களின் பிள்ளையாக ஜானுவையும் நம்மிடையே நிறுத்துகின்றார். புதினத்தின் இறுதிப் பகுதியில் வருணையும் ஒரு ஆதரவற்ற குழந்தையாக இருந்து எடுத்து வளர்க்கப்பட்டதற்கான சூழலையும் புலப்படுத்துவது முக்கியமானது. எனினும் நெருக்கடியான நிலைகளில் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு காட்டுவதும், விட்டுக் கொடுப்பதும், உரையாடல்கள் மூலம் சரிப்படுத்திக் கொள்வதும் நவீன அல்லது கல்வி கற்ற நகரிய வாழ்வு சார்ந்த மனிதர்ளின் செயல்பாடாக காணமுடிகிறது. இன்னும் பல நிகழ்வுகளும் புதினம் மத்தியதர அல்லது அதற்கும் மேல்நிலையில் வாழ்கின்ற மக்களை மனதில் கொண்டே படைக்கப்பட்டுள்ளதை உணர்த்தி நிற்கின்றது.
    புதினத்தில் ஜானுவின் தந்தை வித்தியம்மா பற்றி குறிப்பிடுகின்ற போது கல்யாணம்ங்கிறது பெண்களை அடிமைப்படுத்த ஆண்களால் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று வித்தியம்மா நம்புவதாக தந்தை பெரியாரின் கருத்தை ஆசிரிர் கெளரி முன்வைப்பதை பார்க்க முடிகிறது. அது போலவே இன்னொரு இடத்தில் தன் கணவனை விட்டு வெளியேறி வந்து ஐயாவுடன் நெருக்கமான ஒரு உறவு கொண்டு வாழும் நிலையில் வித்தியாம்மா தன் மன உணர்வினை எழுதி வைத்திருப்பதும், அதனை வித்தியம்மாவின் இறப்புக்கு பின்னாக வருணின் வாசிப்பின் மூலம் வெளிப்படுத்துகின்றபோது ஒரு ஆணின் எத்தகைய அன்புக்குரியவளாக ஒரு பெண் இருப்பினும் அவளது ஆசைகள், எண்ணங்கள் நிறைவேற்றப் படுவதிலிருக்கின்ற இடைவெளி புலப்படுத்தப்படுகின்றது. மட்டுமல்லாமல் அவளின் உழைப்பிற்கான விலை இந்த ஆணாதிக்க சமூகத்தில் மறுக்கப்படுவதும் அடையாளப்படுத்தப் படுகின்றது.
   “பெப்ரவரி 29. என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று தனக்குப் பிடித்த ஆணிடம் கேட்கும் நாளாம் இன்று. அவனிடம் எதையும் கேட்கத் தோன்றவில்லை. அவன் தன்னையே தந்து விட்ட பிறகு. எங்காவது கூட்டிச் செல்லலாம் தான்.. இருந்தும் அவனது மார்பில் உறங்கிவிடும் சுகத்தை விட அதிக சந்தோசத்தையா அவை தந்து விட முடியும்? ஏதாவது வாங்கித்தரலாம் என்றாலும் 'எவனோ ஒருவனின் பணத்தில் எனக்கு முந்தாணை விரிக்காதே' என்பான். இதைவிட மோசமாக ஒரு பெண்ணை எவரும் திட்டியிருக்க முடியாது அதுவும் அவளை. இருந்தும் அவள் அதனையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. அவள் மனதில் இப்போது இருக்கும் ஒரே கேள்வி 'என் பணத்துக்கு நான் எங்கே போவது?' திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தெரிந்த அவளால் அதனை விலை பேசத் தெரியவில்லை.
    நீ உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்களே? எனது பெயர் பொறிக்கப்பட்ட அரிசி எங்கே என்று கொஞ்சம் எனக்குக் காட்டுங்கள் (பெயரிலி, ப - 79)
     புதினத்தில் முதன்மை கதாபாத்திரங்களை மறைத்து நிற்கும் புதிர்ளை அவிழ்க்க முயலும் போது அவர்களுக்கு அதனால் பின் விளைவு வராதவாறு  துணைமைப் பாத்திரங்களின் மூலமான நிகழ்த்தப்படுகின்ற உரையாடல் அல்லது எழுத்துக்களின் மூலமாக சூழல் அறிந்து அவிழ்ப்பதும், சில நிகழ்வுகளை அல்லது தகவல்களை பாத்திரங்களின் மறைவிற்கு பின்பாக வெளிக்கொணர்வதும் சமூக உளவியல் நோக்கில் குறிப்பிடத்தக்கனவாகும்.
    புதினத்தில் முன்வைக்கப்படுகின்ற கவிதை வரிகள் வாழ்வியலை புரிந்து கொண்ட தத்துவார்த்த வரிகளாக அமைத்திருப்பது ஆசிரிர் கெளரியின் வாழ்வியல் குறித்த நுண்பார்வையாகவும் புரிந்துகொள்ள முடிகின்றது.
    “ஈருயிர் பறித்தே
     ஓருயிர் ஜனிக்கும்
     உயிர் தந்தவர்களின்
     வாரிசாய் அது வளரும்    (பெயரிலி, ப - 41)
    “நீ உயிர் கொடுத்ததா
     உனக்கு உயிர் கொடுத்ததா
     என்று வருகையில்
     இரண்டாமவரே முதன்மை பெறுவர் (பெயரிலி, ப - 45)       
அது போலவே ஜானுவும் வருணும் ஒரு சூழலில் வாழ்வில் எது பிழை? எது சரியென்று அறிய முடியாமல் பெருத்த குழப்பத்திலிருப்பதான பதிவும்  எல்லோருடைய வாழ்விலும் எல்லா நேரங்களிலும் வாழ்வு ஒரு குழப்பமுடையதாகவும் ஒரு புதிராகவும் விளங்குவதையே கெளரி இங்கு கவனப்படுத்த முயற்சிக்கிறார். மட்டுமின்றி விதி, ஜாதகத்தின் மீது  நம்பிக்கையினை ஏற்படுத்துவதும், முனி குறித்த பதிவும், இறைக்காட்சி, இறைச்செயல் குறித்த பதிவுகளும் பல கேள்விகளை எழுப்புவதாகவே உள்ளன.
    மேலும் வருணை கேமரா - டெலஸ்கோப்பி லென்ஸ், ஐ பேட், லேப்டாப் உள்ளிட்ட நவீன கருவிகளின் தொடர் இயக்கமாக பார்க்க முடிகிறது. அத்துடன் ஐயா, வித்தியாம்மாவின் இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவராக வருணை காட்டிக் கொள்ளினும் அவர்கள் இறந்து எட்டு நாளைக்குள்ளாகவே தனது சுயவேலையில் கவனமாக இருந்து ஒரு புராஜக்ட் முடித்தல் உள்ளிட்ட வருணின் பல நிகழ்வுகள் ஒரு நவீன மனிதச் செயல்பாடாக பார்க்கமுடிகின்றது. அதே வேளை பல இடங்களில் அவனது கருணை சார் மன உணர்வினையும் பார்க்க முடிகின்றது. குறிப்பாக ஐயாவின் இறப்புக்கு பின்னராக திரை மறைவில் சொத்து தொடர்பாக நடந்த பல நிகழ்வுகளில் வித்தியம்மாவால் நடத்தப்பெற்ற அனாதை குழந்தைகள் உள்ளிட்ட பல குழந்தைகள் கல்வி கற்ற அந்த பள்ளி எல்லாம் மூடிவிடுவதற்கான சாத்தியங்கள் நிரம்ப உருவாகிற போது வருண் தனது பெற்றோருடன் நிகழ்த்தும் உரையாடல் குறிப்பிடத்தக்கது. அதில் வருண் அவங்க எல்லோரோட வாழ்க்கையையும் என் கண் முன்னால் அழிந்து போக விடமாட்டேன் என்று உறுதி பூண்வதை  காண முடிகிறது. வருணின் பேச்சில் செயல்பாட்டில் பிறக்கின்ற நவீன வாழ்வியல் கூறுகளின் தொடர் ஓட்டத்தையும் அதே வேளை அவர் சிறுபிள்ளையில் ஒரு ஆதரவற்றவராக வாழ்ந்திருந்ததின் அடையாளங்களையும் ஒருங்கே கண்டடைய முடிகிறது. இவை ஒரு மனிதனின் எண்ணங்களில் செயல்பாட்டில் அவன் வாழ்ந்த வாழ்வு எப்படி பிரதிபலிக்கிறது என்பதை வருணிடம் நதம் இனங்காணமுடிகிறது.
    புதினத்தின் முற்பகுதியில் ஐயாவை வருண் சந்திக்கும் பொழுதினில் அவரை வருண் எப்படி அழைக்க வேண்டும் என்று உரையாடுகிற போது “ஐயா” என குறிப்பிடுவதை முதலாளித்துவத்தின் எச்சமாக அடையாளப்படுத்துவதைக் காணலாம். ஐயா எனும் சொல் தமிழ்ச் சூழலில் மரியாதைக்குரிய சொல்லாக பார்க்கப்படும் அதே வேளை அதன் பின் ஒழிந்திருக்கும் அதிகாரத்தையும் கௌரி அடையாளப் படுத்த தவறவில்ல என்பதும் முக்கியமானது.
   ஆக புதினம் பலரின் தனித்த எண்ணங்களாகவும் ஏக்கங்களாகவும் கருத்துருவாகவும் திகழ்வதோடு சமூக, அரசியல் விமர்சனங்களையும் கொண்டிருந்தாலும் யதார்த்த வாழ்வில் பெயரிலிகளின் ஊடாய் இரண்டாமவரே முதன்மை பெறுவர் என்பதை உறுதிப்படுத்தும் வாழ்வியல் சிந்தாந்தத்தின் வெளிப்பாடாய் கௌரியின் பெயரிலியை பார்க்கமுடிகிறது.  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்