கெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து...
- பாலு மணிமாறன், பதிப்பாளர் தங்கமீன் பதிப்பகம்.
உங்கள் முன் வைக்கப்படும் புதிர்களை அவிழ்ப்பதற்கு, சதா அலைந்தாடும் மனம் உங்களுக்கு உண்டென்பதை ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருக்கிறீர்களா? உணர்ந்திருப்பீர்கள். நானும் உணர்ந்திருக்கிறேன்.
ஆறாம் வகுப்பு. கணிதப்பாடம். என் ஆசிரியர் ஒரு கணக்கைப் போடுகிறார். இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல, வீட்டில் போய் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த கணக்கிற்குப் போய் விடுகிறார். நான் விடை தேடுவதில் மூழ்கிவிட்டேன். மிகச் சவாலான கணக்கு. 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடமென நேரம் ஓடுகிறது. ஒரு தருணத்தில் விடையைக் கண்டடைந்துவிட்டேன். "டீச்சர் இதுதான் விடை" என்ற என் உற்சாகக் கத்தலில் சக மாணவர்கள் அதிர்கிறார்கள். நடத்திக்கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு ஆசிரியை குழப்பமாகிப் பார்க்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். அவர் முகத்தில் சின்னதாக ஒரு புன்முறுவல். 'வெரி குட்' என்ற வார்த்தைகளால் பாராட்டிவிட்டு, 'எல்லோரும் சேர்ந்து கை தட்டுங்க' என்றதும், நண்பர்களும் புரிந்து கொண்டு கை தட்டுகிறார்கள். எப்போதாவது, முடியாதென சோர்ந்து போகும் தருணங்களில் எல்லாம், அந்தக் கைதட்டல் என் காதில் ஒலித்து, நம்பிக்கைகளை உயிர்பிக்கும். நாற்பது வருடங்களுக்கு முந்திய அந்தக் கைதட்டல்களை இன்னும் என் ஞாபகக்கிடங்கில் மீதம் வைத்திருக்கிறேன்.
இப்படி நீங்களும் வாழ்க்கையில் வெவ்வேறு வகையில் புதிர் அவிழ்த்திருப்பீர்கள். முடியாதென்று மற்றவர்கள் சவால்விடும் வேளைகளில், அந்த வேலையைச் செய்து முடித்துச் சிரிப்பதும் புதிர் அவிழ்க்கும் செயல்தான். அப்படி வாழ்க்கையில் புதிர் அவிழ்க்கும் மனநிலைகளை, மனிதர்களை, சூழல்களைக் கொண்டு தன்னுடைய 'பெயரிலி' நாவலைக் கட்டமைத்திருக்கிறார் இலங்கையில் பிறந்து வளர்ந்த கெளரி அனந்தன்.
தாயைப் பிரிந்துவிட்ட தந்தை வாழும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து, தன் கணவன் வருணுடன், இலங்கை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் ஜானுவின் பயண நோக்கம் என்ன, அவளுக்கும், அவளுடைய உறவுகளுக்கும் என்ன நேர்கிறது என்பதைச் சொல்கிறது நாவல். நெடுக, புதிர் முடிச்சுகளைத் தானே போட்டு, தானே அவிழ்க்கும் ஆர்மூட்டும் அழகாக விளையாட்டை எளிமையான விதிகளோடு விளையாடி இருக்கிறது கதை.
தான் இலங்கைக்குப் பயணிப்பது எதற்கெனவென்று கணவனிடம்கூடச் சொல்லாமல் அவசரமாகும் ஜானு முதல் முடிச்சைப் போடுகிறாள். தன் தந்தையைப் பிரிந்து, இலங்கையில் 'ஐயா' என்றழைக்கப்படும் ஒருவரின் அரவணைப்பில் வாழும் தாய் விந்தியாவின் 'கவிதைகள்' அடங்கிய பிரதி, அடுத்த முடிச்சைப் போடுகிறது. அந்தக் கவிதைகளுக்குள், பின்னால் நடக்கும் சம்பவங்கள் முன்னமே சொல்லப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சி, இன்னொரு முடிச்சைப் போடுகிறது.... இப்படி, நாவல் நெடுக, சின்னதும் பெரியதுமாகப் புதிர் முடிச்சுகள். அவற்றைச் சரியான நேரத்தில் முடிச்சவிழ்ப்பதன் வழியாக நாவல் இலக்கியத்தின் நுட்பமிகு பாதையில் பயணிக்கும் தன் திறனை இலகுவாக, நேர்த்தியான முறையில் வெளிக்காட்டி இருக்கிறார் கெளரி.
சில விடைகளைத் தேடி, ஓடி ஓடி, விடை கிடைக்காமல் ஓய்ந்து விடுவோம். இந்த நாவலின் இருள் பக்கங்கள் எல்லாவற்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்சி, எல்லாவற்றுக்குமான விடைகளைச் சொல்வதில் கதாசிரியருக்குப் பெரிதும் பிரியமிருக்கவில்லை. ஒரு கதாசிரியர் தான் தேடிக் கண்டடைந்த விடைகளை மட்டுமே வாசகருக்குச் சொல்லுதல் சாத்தியம். தெரியாதவற்றுக்கு வலிந்து முடிவு கட்டும் பொய் புனைவுத்தன்மை இல்லாத நாவலாக இது இருக்கிறது. உதாரணத்திற்கு, இந்த நாவலின் கதாநாயகன் வருண், அம்பாளை, அர்ச்சகர் என்ற மனித வடிவில் சந்திக்கிறான். 'இதை நான் வெளியில் சொன்னால், உலகம் நம்புமா?' என்ற அவனது வார்த்தைகளின் வழியே அந்த முடிச்சவிழ்க்காமல் நகர்ந்து விடுகிறார் கெளரி. இது தப்பித்தலில்லை. நாம் ஓர் அனுபவத்தைச் சந்திக்காதவரை அந்த அனுபவம் சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்லவும் வாய்ப்பில்லைதானே?
'பெயரிலி' ஒரு நேர்கோட்டில் பயணிக்கிறது. தான் பயணம் செல்லும் பாதையின் இருபுறமும் உள்ள உலகை அதன் அத்தனை அழகுகளுடனும் விவரிப்பதே அதன் பணியென நம்புகிறது. ஒரு பெரும்போருக்குப்பின் இயல்பிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலவெளியின் சலனங்கள் இந்தக் கதைக்குக் தேவையில்லை என்பதால், அதை ஒரு வாசகர் இந்நாவலில் தேடுதல் இயலாது. ஆனால், வானத்து மின்னலென ஓரிரு வரிகளில் சில துயரங்களைப் பதிவு செய்யவும் தவறவில்லை.
வருண், ஜானு, விந்தியா, ஐயா, லோயர், பாண்டி, மோனா என்று சில சில பாத்திரங்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் முன் வைத்து கட்டிப்பட்டிருக்கும் இக் கதைச்சித்திரம், மேடு பள்ளங்களற்ற ஹைவேயில் பயணம் செய்வது போன்ற உணர்வை வாசகனுக்குத் தரக்கூடும். அதிக சிக்கலற்ற கதாபாத்திரங்கள், நாவலில் நெடுந்தூரம் பயணம் செய்து இறங்கிய பின்னும், சளிப்படையா உணர்வைத் தருகின்றன.
இது கெளரிக்கு இரண்டாவது நாவல். ஒன்றுக்கு மேற்பட்ட நாவலை எழுதும் திறனுள்ளவர்களுக்கு இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, முதலாவது நாவலை விடச் சிறந்த நாவலைத் தந்துவிட வேண்டுமென்ற உத்வேகம் அல்லது ஏற்கனவே நாம் நாவல் எழுதிய எழுத்தாளர்தானே என்ற மெல்லிழை போன்ற அலட்சியம். கெளரி கவனமெடுத்து எழுதி இருக்கிறார். அமானுஷ்ய உணர்வுகள், நவீன விவசாயம், சமகால விஞ்ஞானம், ஊடகம் என ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத களங்களைக் கையாண்டாலும் அவை கோரும் உழைப்பைக் கதாசிரியர் போட்டிருக்கிறார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது 'பெயரிலி'
நாவல் ஜானுவின் போக்குகளை விவரித்துத் தொடங்குகிறது. தொடர்கிறது. இலங்கையில் போய் இறங்கும்வரை அவளையே பிரதானப்படுத்தி நகர்கிறது. அதன்பின், வருண் அதன் மேலேறி சவாரி செய்யத் தொடங்கிறான். கர்ப்பிணியான ஜானுவுக்கு மருத்துவமனையில் இருப்பதன்றி வேறெதுவும் வேலையில்லாமல் போகிறது. ஒருவர் கதையை நகர்ந்துகையில், மற்றவர் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பின்நகர்ந்தமரும் கதை சொல்லல் முறை வாசகருக்குச் சற்று நெருடலாம். முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள் ஜானு. தன் முதல் பிள்ளையை கதையின் எவ்விடத்திலும் தந்தை வருண் கொண்டாடவில்லை. எடைகுறைந்த அப்பிள்ளையின் அருகிலமர்ந்து அதன் உதட்டசைவைக்கூட ரசிக்கவில்லை. படிக்கும் வாசகர் குழந்தையைக் கையிலெடுத்து வருணின் கையில் கொடுப்பதுகூட நேர்ந்து விடலாம்.
இறுதி அத்தியாயங்கள் முடிக்கும் அவசரத்தோடு நகர்கின்றன. சட்டென இயற்கை விவசாயம் செய்து, சட்டென தொழில் அமைத்து, சட்டென கம்பேனியின் முதன்மை ஆளாகி... சட்டென்று நாவலின் முடிவு நேர்ந்து விடுகிறது. இப்படிப்பட்ட விபத்துகளிலிருந்து நாவலாசிரியர்கள் தப்பிப் பிழைப்பது கடினம். கெளரி மட்டும் தப்பி விடுவாரா என்ன? இயற்கை விவசாயம் உள்ளிட்ட தன் நம்பிக்கைகளை பிரச்சாரத் தொனியில் சொல்லும் விபத்திலிருந்து இவர் தப்பியதையும் பார்க்கிறோம். இவையெல்லாம் பெரும் சுமைகள் அல்ல; அடுத்த நாவலில் இறக்கி வைத்துவிடத் தக்க சிறுசுமைகளே!
'ஐயா'வைப் போன்றவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள் என்பதே அடுத்த நூற்றாண்டுக்காரர்களுக்கு நம்பிக்கையில்லாத செய்தியாகிப் போகலாம். ஆனால், இப்படிப்பட்ட ஐயாக்கள் வாழ்வதும் கதைகளாவதும் நம் பிள்ளைகளில் எதிர்காலத்திற்கு முக்கியம். என்றாவது ஒரு நாள் இலங்கை சென்றால், விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும்வேளையில், எதிர்படுபவர் முகங்களில் நான் ஐயாவைத் தேட நேரலாம் என்பதையே இந்நாவலின் வெற்றியெனக் கொள்வேன்!
கருத்துகள்