"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை
சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதையை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை.
இதுதான் நம்ம முடிக்கதை.
சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை.
முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது.
அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து கடைசியில் அம்மாவிடம் அபயம் புகும்போது பட்டை தீட்டிய கிளுவை பல திசையிலும் பறக்கும். போர் தொடங்கு முன்னமே ஊரக் கூட்டி ஒப்பாரி வைத்துவிட்டதனால் இப்போ ஏனெண்டு கேட்க நாதியிருக்காது. அழுகையழுகையாய் வரும், ஆனா அழப் பிடிக்காது. அப்பிடியே அழத் தொடங்கினா அந்த ஆண்டவனே வந்தாலும் நிப்பாட்ட முடியாது.
சீயாக்காயும் வெந்தயமும் கொதிக்க வைத்து, சூடு பார்த்து தலையிலை தேய்த்து, தோய வாத்து தலை துவட்டி, ஓடிக்கலோன் போட்டு பவுடர் பூசி, தணல் போட்டு சாம்பிராணி காட்டி, சட்டை உடுத்திவிடும் வரைக்கும் உம்மெண்டு இருந்தா பிடிச்ச பிள்ளையார் தோத்திடுவார். பிறகென்ன முட்டைச் சொதியும் இடியப்பமும் எண்டு ராஜோபசாரம் நடக்கும். சமயத்தில் இதெல்லாம் இந்த முடிக்கா இல்லை நமக்கா எண்டொரு சந்தேகமும் வரும்.
ஒருநாள் சைக்கிளில் பாடசாலை போகையில் "ஆறடிக் கூந்தலாம். ஆனா உள்ளே இருப்பது ஈரும் பேனாம்." எண்டு சிலதுகள் பாட, இதை சாட்டியே கத்தரிக்கலாம் எண்டால் அப்பா இந்த முறை பயங்கர உஷார். அம்மா எதோ ஒரு ஷாம்பூ வாங்கி தந்து "இதைப் போட்டு ஊறவைச்சு குளிச்சா பேன் போயிடுமாம்" எண்டு சொல்ல அதைப் போட்டு ஊறவைச்சு ஊறவைச்சு பேன் போனதோ இல்லையோ முடி கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகத்தொடங்கியது. முதலில் கவலையாக இருந்தாலும் இதைச் சாட்டியே வெட்டிவிடலாமே எண்டொரு கள்ளப்பிளான் உள்ளே உருவாகிவிட்டிருந்ததால் முடி கொட்டுவதைப்பற்றி அப்போது அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை. கடைசியில் நாம ஆசைப்பட்டது போலவே எலிவால் ரேஞ்சுக்கு பின்னல் வந்ததும் / சாமத்தியவீடு முடிந்ததும், இடைவரையான கூந்தலை அரைவாசியாக வெட்டுவதற்கு சம்மதம் தந்தார்.
அப்பாவுக்கு என்னதான் கூந்தல் மேல ஆசையிருந்தாலும் படிப்புக்கு முன்னாடி வெறும் முடியால் ஒண்டும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், அடுத்த வருடமே இரவிலை சரியா வேர்க்குது படிக்க கஷ்டமாய் இருக்கெண்டு தோள்வரை ஆக்கியாச்சு.
உயர்தரம் படித்துக்கொண்டிருந்த சமயம், கெமிஸ்ட்ரி படிப்பித்த எங்கடை தில்லைசாரிடம் அடிக்கடி ஒரு பெடியன் "ஏன் சார் உங்களுக்கு தலையில முடியில்லை" என்று அடிக்கடி கிளாஸ்ல வம்புக்கிளுப்பான். அதுக்கு அவர் சொல்லுவார், "அறிவாளிகளுக்கு உள்ளை நிறைய இருக்கும். அதால வெளிய கொட்டிடும்" எண்டு. அவனும் விடமாட்டான்.
"அப்போ எங்களுக்கெல்லாம் இருக்குதே".
"டேய்! உனக்கு உள்ளை பூரா களிமண் தான். அதான் வெளிய நல்லா வளருது."
"போங்க சார் உங்களுக்கு என்ர முடிமேல பொறாமைல சொல்லுறீங்க."
இப்படியாக நீண்டு கடைசியில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சொல்லாமலே தப்பித்துவிடுவான்.
இப்படியாக ஒருவாறு தட்டுத் தடுமாறி கம்பஸ் போனா அங்க அப்பா போய் அனந்தன் வந்தாச்சு. ஆனாலும் பின்னாளில் தன் முடியை தக்க வைப்பதிலேயே அதிக அக்கறை எடுக்கவேண்டி இருந்ததால் அந்த தடையுத்தரவும் அதிக நாள் நீடிக்கவில்லை.
பிறகு வயித்தில் பிள்ளை இருக்கும்போது தலைமுடிவெட்டக்கூடாது எண்டு யாரோ சொல்லி மீண்டும் வளர்த்து, பிள்ளை பிறந்ததும் மீதியிருந்த ஓரிரு முடியை முப்பது டாலர் கொடுத்து வெட்டியபோது கூட தோன்றவில்லை திரும்பவும் வளர்க்கவேண்டும் என்று.
இவ்வாறு படிப்படியாக மேலே மேலே போன முடி கொஞ்சம் நீளமாயிருந்திருக்கலாமோ என்று வருத்தப்பட்டது ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான். அதுகூட முடிக்குத்தான் முடி என்றால் அந்த முடியே நமக்கு வேண்டாம் என்று விட்டாச்சு. ஆனானப்பட்ட முடியே வேணாம் என்டவனுக்கு பிறகென்ன கவலை இருக்க முடியும், இல்லையா?
*ஹிப்பி : பெண் பிள்ளைகள் தோளுக்கு மேல முடி வெட்டியிருந்தால் ஹிப்பித் தலை என்று சொல்லுவது நம்மூர் வழக்கம்.
நிற்க, 'பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா? இல்லையா.' என்ற பாண்டிய மன்னனின் சங்ககால ஆராய்ச்சி முதல், '
அடர்காட்டில் தானே தொலைந்தேனே உந்தன் கூந்தல் இருட்டிலே' என்று இன்றைய கணணி யுகத்திலும் கூட இந்த ஆம்பிளைகளுக்கு முடிமேலுள்ள இந்த தீராத காதல் எதனால் என்பது தான் இன்னும் புரியாத புதிராகவேயுள்ளது.
கருத்துகள்
என்றாலும் 30 களில் இருக்கும் அனந்தன், ஜேகே போன்றவர்களைக் காணும்போது 'அட நமக்கு அந்த வயதில் இதைவிட அடர்த்தியாக இருந்ததே' என ஒரு திருப்தி. Just kidding :-)