ஐஸ்வர்யம் தேடிவரும் அக்க்ஷய திருதியை நன்னாளில்..
வரும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதிகளில் உங்களுக்காக..
ஸ்ரீ நதியா நகை மாளிகையில் மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..
அக்க்ஷய திருதியைக்கான விளம்பரம் நாற்பதாவது செக்கனில் தொடங்குகிறது.
இதன் சிந்தனை உருவாக்கம் மட்டுமன்றி set-properties ஒழுங்கு செய்ததிலிருந்து மீன்களை நடிக்கவைத்தது வரை இந்த விளம்பரத்தின் முற்று முழுதான creditsம் எமது Creative Director பிருந்தாவனையே சாரும். தனது முதலாவது படைப்பை வெகுசிரத்தையெடுத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்குள் திருப்திகரமாய் கொடுத்திருக்கிறார்.
தங்கக் கழுத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, தங்க மீன்கள் மத்தியில் ஜொலிக்கும் தங்கம் அழகாயிருக்கிறது. யார் கண்டார்? இதைப் பார்த்துவிட்டு இனி பணக்கார வீட்டு மீன்தொட்டிகளில் கற்களுக்குப் பதில் தங்கத்தைப் போட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.
அக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை.
2006 சித்திரைக் கடைசி.
"ஒன்பது பவுணிலை தாலியொண்டு செய்யவேணும். எவ்வளவு ஆகும்?"
"இண்டைக்கு அக்ஷய திருதியை. நல்ல நாள். எடுங்க குறைச்சுப் போடுறம்."
2012 சித்திரைக் கடைசி.
"இண்டைக்கு அக்சய திருதியை. நல்ல நாளிலைதான் முதல் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறீங்க. நல்லா வருவீங்க."
இவ்வாறாக எனது வாழ்க்கையில் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் எனக்குத் தெரியாமலேயே இந்த அக்ஷய திருதியை நாளில் நடைபெற்றிருக்கு.
இந்த சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதொருபுறம் இருக்க அதிர்ஷ்டம் என்றால் என்ன? நாம் எதிர்பாராத / நினைத்துப் பார்த்திராத / அதிகளவு முயற்சி இல்லாமலேயே நடக்கும் நமக்கு நன்மை பயக்கும் ஒரு நிகழ்வு. நாம் விரும்பும் ஒரு நிகழ்வு / சாதனை நடப்பதற்கான அத்தனை பொறிமுறைகளையும் அறிந்துகொண்டு அதன்படி நடக்கும் போது கிடைக்கும் பலன் அதிர்ஷ்டம் அல்ல. அது கடின உழைப்பின் பிரதிபலன் அவ்வளவே.
இவ்வாறாக 2012 ஏப்ரல் இல் நாம் நிறுவனம் தொடங்கி சில வாரங்களாக எத்தனை நகைக்கடைகள் ஏறி இறங்கியும் யாருமே விளம்பரம் செய்யும் நோக்கில் இல்லை. அப்பிடியே எமக்காக சரி என்று சொன்னவர்கள் கூட "ஒரு பத்தாயிரம் தாறம். கடைய சுத்திக் காட்டுங்க தம்பி" என்றார்கள். யாழின் பிரபல பணம் கொழிக்கும் வியாபாரம் என்று சொல்லப்படுவது நகைக்கடைகள் தான். அங்கேயே இந்த நிலைமை என்றால் வேறு எங்கே போய்க் கேட்பது?
தவிர அவர்களுக்கு நாம் எவ்வாறு விளங்கப் படுத்துவது என்று முதலில் புரியவில்லை. எனவே ஒரு சாம்பிள் வீடியோ செய்து கொண்டு சென்று காட்டுவோம் என முடிவுசெய்தோம். ப்ளானிங், ஸ்கிரிப்ட் எல்லாம் பக்காவாக இருந்தது ஆனால் மாடல்க்கு எங்கே போவது? நாமளே நடிக்கலாமேன்றால் 1.வயசு போய்ட்டுது. 2.CEO நடிக்கப்படாதெண்டு கண்டிப்பான உத்தரவு. ஏற்கனவே ஒரு மாடல்ஐக் கூட்டியாந்து CEO எண்டு சொல்லிட்டிருக்கிறாங்க என்று அரசால் புரசலாய் கதைகள் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. (பாருங்க.. ஏழு வருசமா AC ரூமிலை காஞ்சு கருவாடாகி வேலை செய்து ஒண்டும் கிழிக்கேல்லை. ஒரு ஆறுமாசம் மாடல் ஆக இருந்து பயங்கர பப்ளிசிட்டி வந்திடுச்சு. சில தினங்களுக்கு முன்புகூட ஒரு அக்கா "உங்க போட்டோ எங்க காலேஜ் shuttle பஸ்ல இருந்துச்சு" எண்டாங்க.)
இவ்வாறாக மாடல்க்கான தீவிர தேடலில் இருந்தபோது தான் ஒஷின்(Oshin) என்கிற சகமொழி நண்பி, 'இந்த வீடியோவானது clients இடம் காட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர வேறெந்த ஊடகங்களிலும் வெளிவராது' என்ற உறுதிமொழியுடன் நட்புக்காக நடித்துக்கொடுக்கச் சம்மதித்தார்.
முதல் கட்டமாக தனி பிங்க் கலரில் அழகாக இருந்த நம்ம அறையை ஒருபக்கம் வெள்ளையாக மாற்றினார்கள். ஷூட்டிங் லைட்ஸ் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மூன்று வேறுபட்ட காட்சியமைப்புகளில் ஒன்று மேடையிலிருந்து இறங்கி வருவது போல் அமைக்க வேண்டும். அந்த குட்டி அறையில் மேடை எப்படிப் போடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மூன்று படிகளுடன் கூடிய சிறிய மேடையமைப்பதற்க்கான அளவுத்திட்டத்துடன் கூடிய drawing உடன் வந்து நின்றது வேறையாருமில்லை நம்ம இயக்குனர் திருவாளர் நிஷாகரன். எனது ஆச்சரியம் அடங்குமுன் கூடவே trolly, crane செய்வதற்கான வரைபடங்களையுமே காட்டி அவற்றை உள்ளூரிலேயே எப்படி வடிவமைக்கலாம் என்று விபரித்தபோது 'மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு நமக்கான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை நமக்கு முன்பான தலைமுறையுடன் அழிந்து போய்விடவில்லை.' என்பதை கண்கூடு காண்கையில் கண்கள் பனித்தன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடனான உரையாடலின் போது எனது
அடர்காட்டில் தானே என்ற பதிவில் '
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி' என்று நான் கூறியிருந்ததைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். உண்மைதான். ஆனால் நாங்கள் அதனை ஒருபோது எமது இயலாமையின் குறியீடாக / குறையாக நினைத்ததில்லை. மாறாக அதற்க்கு மாற்றீடாக எம்மிடம் உள்ளவற்றை வைத்து இன்னுமின்னும் என்னவெல்லாம் உருவாக்க முடியும் / உருவாக்கியவற்றை மெருகூட்ட முடியும் என்ற தேடலில் இப்படியாக பல சவால்கள் தோன்றும். அவற்றை நமது திறமைகளால் சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். இதில் கிடைக்கும் திருப்தி, சந்தோசம் எந்தொவொரு குளிர் அறையிலும் நாள் முழுவதும் இருந்து மண்டையைப் போட்டுடைத்து பெறும் தீர்வில் (என்னைப் பொறுத்தவரை) நிச்சயமாகக் கிடைக்காது.
நிற்க, நம்ம ஆபீசும் அடுத்த மாதமே அதிகரித்த கணனிகள் மற்றும் நண்பர்கள் முக்கியமாய் நம்ம எடிட்டர் நலன் கருதி குளிரூட்டப்பட்ட அறையாக மாறவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தான் கடைசியாகக் கொடுத்த படைப்பை மிஞ்சும் படியான output வரவேண்டும் என்பதிலேயே அதீத கவனம் எடுத்து வேலை செய்யும் எடிட்டர் துசிகரனின் வளர்ச்சியை
blind love இல் பார்த்துவிட்டு கொழும்பின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தானே இறங்கிவந்து வேலைக்கு கேட்க்குமளவுக்கு இந்த ஒருவருடத்தினுள் அவரைக் கொண்டுவந்திருக்கிறது.
அடுத்து எம்முடனிருந்தவர்கள் பலருக்கு இசையமைக்கும் திறமை இருந்தாலுமே ஒரு விளம்பரத்துக்கு இசையமைப்பதென்பது ஒரு தனிக்கலை. முப்பது செக்கனில் பல்லவி, அனுபல்லவி சரணம் எல்லாம் முடிச்சிடனும். சில சமயம் ஆலாபனை வேறு. இப்படித்தான் ஒரு திறமையான மரபுவழி (?) இசையமைப்பாளர் ஒருவரை ஒரு சமயம் அணுகியபோது இதுக்கு எப்படிப்பாத்தாலும் முப்பத்து ரெண்டு செக்கன் வருது இல்லாட்டி தாளக்கட்டு /பீட்ஸ்/லேண்டிங் நோட் பிழைக்கும் என்றார்.
இவ்வாறாக நாம் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் எமக்கு அறிமுகமானவர் தான் எமது கம்பனியின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுகன்யன். சாதாரண சாம்பிள் தானே என்று நினைத்துவிடாமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை இவர் பல படிகளைக் கடந்து தனது லட்சியப் பாதையில் பலதூரம் முன்னேறியிருந்தாலும், எமது எந்தவொரு படைப்புக்குமே தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தவறியதில்லை.
ஒருவாறு சாம்பிள்ஐ முடித்து அதைவைத்து திரும்பவும் கடை கடையாக அலைந்தது வேறு விடையம். ஆனால் இதில் முக்கியமாய் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவென்றால் அப்போது இதனை வேண்டாம் என்று கூறியது மட்டுமல்லாமல் எமக்கு நிறைய உபதேசமும் வழங்கி அனுப்பிய ஒரு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் (ஸ்ரீ நதியா இல்லை) சமீபத்தில் யாழின் பிரபல கேபிள் நிறுவனம் ஒன்றிடம் தனக்கு ஒரு விளம்பரம் போடவேண்டும் என்று அணுகிய போது அவர்கள் எம்மை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவரும் யாரெண்டு தெரியாமல் நமக்கு கால் பண்ணி.. ஹிஹி.. ஒரே காமெடியாப்போச்சுது.
இப்படியாக உள்ளே என்ன வெட்டுக்குத்து நடக்குதெண்டே தெரியாமல் / பாக்காமல் "எல்லாம் உண்டை அதிர்ஷ்டம் தான்." எண்டு ரொம்ப சிம்பிள் ஆக சொல்லிட்டுப் போறாங்க. அவங்களைப் பொறுத்தவரை அது உண்மைதான். ஏன் என்னைப் பொருத்தவரை கூட.. அது இப்பேர்ப்பட்ட ஒரு டீமை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு.
கருத்துகள்