முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

தமிழ் இனி..



சில தினங்களுக்கு முன்னர் நண்பியொருவர் ஜனனி தமிழில் சரளமாக (நம்மளை மாதிரி தத்தக்க பித்தக்க தான்..) உரையாடுவதைப் பார்த்துவிட்டு அவர்களின் மகள் தமிழில் கதைக்கிறாளில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். அவர்களுக்கு நாம் தமிழில் கதைத்தால் விளங்கும். ஆனால் பதில் ஆங்கிலத்தில் தான் வரும். இன்றைய தமிழ் குழந்தைகளின் நிலை இதுதான்.


"இதற்க்கெல்லாம் போய் எதற்க்காய்க் கவலைப்பட வேண்டும்? வளர வளர சரியாயிடும்" என்று பாட்டி சொன்னார். "இல்லை. இப்ப இருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறகு எப்பவுமே  தமிழில் கதைக்க முயற்ச்சிக்க மாட்டாள்" என்றார் தந்தை.


இவையெல்லாமே ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் நாம் எப்படி தமிழில் கதைக்கத் தொடங்கினோம்? எமது பெற்றோர் எந்த மொழியில் நம்முடன் கதைத்தார்களோ அதையே நாமும் பழகிக்கொண்டோம். யாரும் இதுதான் உனது தாய் மொழி, அதில் தான் பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்று எமக்கு மூன்று நான்கு வயதில் சொல்லித்தந்திருப்பார்களா என்றால் இல்லை. அப்போது ஆங்கிலத்தில் அடிப்படைக்கல்வி இல்லை என்பது ஒரு வாதம். ஆங்கிலத்தில் அடிப்படைக்கல்வி இல்லை, ஆனால் ஒவ்வோர் வீட்டிலும் தமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க அப்பாமார் பட்டபாடுகள் அதைவிட அதிகம். சில (உயர் அந்தஸ்து?) பாடசாலைகளில் தமிழில் கதைத்தால் தண்டனை என்று கூட இருந்தது. இன்று இவையெல்லாம் இல்லை. மாறாக பிள்ளைகளை தமிழ் கதைக்க வைக்க பாடுபடவேண்டி இருக்கிறது. இந்த நிலையில் ஜனனியால் / வெளிநாட்டில் இருக்கும் ஒரு குழந்தையால் எப்படி தமிழில் கதைக்க வைக்க முடியும்?

1. தாய் மொழி : முதலாவதாக, நமது தாய்மொழி என்ற எனது புரிதல் என்பது பல இலக்கிய இலக்கண வரைமுறைகளைத் தாண்டி, அது எனது தாயின் மொழி, அவரது தாயின் மொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் கதைத்துவந்த மொழி. அவர்களுடன் நானும் அந்த மொழியிலேயே கதைக்கிறேன் என்பது பெருமை தருகிறது. அதேபோல் ஜனனியை உணரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். தாய் என்றாலே தமிழ் வரவேண்டும். இதுதான் முதல் படி.

2. உரையாடல் : எனக்கும் தமிழ் தெரியும். உனக்கும் தமிழ் தெரியும். பிறகெதுக்கு வேற்று மொழியை கடன் வாங்கவேண்டும்? சில நாடுகளில் வெளியில் போகும் போது தமிழில் கதைக்க வெட்க்கப் படுவார்கள். ஆனால் சிங்கப்பூரில் தமிழ் உரையாடல்களை அதிக இடங்களில் காணலாம். இருந்தும் நம்மவர் சிலர் தமிழில் கதைத்தால் நாகரீகமில்லை / மற்றவர்களின் கவனம் தேவையில்லாமல் தம்பக்கம் திரும்பி விடுமோ என்ற பயத்தில் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைக்கின்றனர். ஆனால் நாம் வெளியில் போகும் போதும் தமிழில் தான் ஜனனியுடன் கதைப்பது. புரியாதவர்கள் விசித்திரமாகப் பார்ப்பார்கள். அதனால் என்ன அவர்கள் சைனீஸ், மலாயில் கதைப்பது நமக்குப் புரிகிறதா என்ன? ஆனால் இதுவரை நாம் தமிழில் கதைப்பதைப் பார்த்துவிட்டு யாரும் முறைத்ததோ (இலங்கையில் கூட முன்புதான் முறைப்பார்கள். இப்போது புன்னகைக்கிறார்கள் / புன்னகைக்க முயற்ச்சிக்கிறார்கள்.) அல்லது இழிவாக பார்த்ததோ இல்லை. மாறாக தாமும் தமக்குத் தெரிந்த தமிழில் ஜனனியுடன் கதைக்க முயற்ச்சிக்கிறார்கள். இதைவிடப் பெருமையையா ஆங்கிலத்தில் கதைப்பது தந்துவிடப் போகிறது?

3. கதை சொல்லல் : பாட்டி வடைசுட்ட கதையை பத்துவிதமா சொல்லலாம் என்று எனக்கு கம்பஸ் போய்த்தான் தெரிஞ்சுது. ஆனா ஜனனி 'சோபியா தி பர்ஸ்ட்' இனை பத்துவிதமா சொல்லும். நாம பங்குக்கு எதையாவது சொல்லவேணுமில்லை? இந்த சமயத்திலைதான் சாண்டில்யனும் கல்கியும் கைகொடுப்பினம். சோபியா சிவகாமியாகவும், குந்தவையாகவும் மாறும். நரசிம்மவர்மனும், வந்தியத்தேவனும் வருவார்கள். ஒருதடவை இப்படித்தான் அரண்மனைக்கு வந்தியத்தேவன் வருகிறான். யாருமேயில்லை. தூரத்தில் கொலுசொலி கேட்கிறது. சிறிது நேரத்தில் ஓர் இனிய கம்பீரமான குரல் ஒன்று "யாரங்கே?" என்கிறது. கொலுசொலி மெதுவாக மெதுவாக அண்மிக்கிறது. வந்தியத்தேவன் பதில் சொல்லிமுன்... "கொலுசெண்டால் என்னம்மா?" இது ஜனனி. "இருங்கோ வாறன்." இப்போது ஜனனியின் கைகளில் இரு கொலுசு. போட்டுவிட்டதும், "இப்ப பிரின்சஸ் ஜனனி தான் வாறா..". நாம ஒரு கதை சொல்ல அவர்கள் மனதில் இன்னொரு கதை உருவாகிறது. அரண்மனை என்று சொன்னால் எமது மனதில் ஆதித்த கரிகாலனின் பொன்மாளிகை வந்தால், அவர்களது மனதில் ஆங்கிலக் கோட்டைகள் தான் வந்து தொலைக்கின்றன. "இளவரசியாரே.." வந்தியத்தேவன் சொல்லி முடிக்கவில்லை. "இளவரசி எண்டால் என்ன..?". "அதாம்மா பிரின்சஸ்". என்னதான் பேபி, டார்லிங் என்று ஆங்கிலத்தில் கொஞ்சினாலும் தமிழில் செல்லம், குட்டி என்று கொஞ்சுவது போல் வருமா என்ன?

4. ஒளிப்பதிவு செய்தல் : என்னதான் பெரியவர்கள் அழகாக கதை சொன்னாலுமே குழந்தைகள் மழலைத் தமிழில் சொல்வது போல் வராது. அவர்கள் தமிழில் கதைப்பதை / கதை சொல்வதை ஒளிப்பதிவு செய்து அவர்களுக்குப் போட்டுக்காட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தலாம். இந்த வகையில் கானரூபனின் கதை ஒளி போன்ற ஒரு முயற்ச்சியை ஏன் ஒவ்வோர் வீட்டிலும் ஆரம்பிக்க கூடாது? குறிப்பாக புலம்பெயர் நாடுகளில்..

இப்படி இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கு. 'இனி எம் பிள்ளைகளுடன் தமிழில் தான் கதைப்போம்' என்று புத்தாண்டு (எந்தப் புத்தாண்டு எண்டு கேக்கப்படாது!) சபதம் கூட எடுக்கலாம். ஆனால் அநேக சபதங்கள் போலவே இதனையும் சாகடித்துவிடாதீர்கள்.  முதலில் நாம் நாமாக இருந்தால் எல்லாம் நலமாக முடியும். அதற்காய் ஆங்கிலம் பேசுவது தவறென்று கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் "ஜனனி ஆங்கிலம், சைனீஸ், தமிழ் என்று மூன்று மொழியையும் ஒரே நேரத்தில் படிப்பதால் எதனையும் முழுமையாக தெரிந்து பேசுவதில் தடை ஏற்படலாம்." என்று அவளின் அப்பப்பாவே கவலைப் பட்டார். என்னைப் பொறுத்தவரை அவள் எத்தனை மொழி படித்தாலும் பேசினாலும் தாய்+மொழி தமிழ் தான். அது அவள் தாயின் மொழி. தாய் மேல் அன்பும் மரியாதையும் இருக்கும் வரைக்கும் தாய் மொழிமேலும் அதே நேசம் இருக்கும்.

சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர்கூட தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதினால் அதிகமானோரிடம் (தனது புத்தகம்) சென்று சேரும் என்று திருவாய் மலர்ந்தருளியிருந்தார்.

என்னுடன் முன்பு வேலை செய்த சில சென்னைத்தமிழ் நண்பிளுக்கு தமிழ் தெரியும். ஆனால் வாசிக்கத் தெரியாது. கனடாவில் சமீபத்தில் வெளிவரும் சில நினைவுமலர் புத்தகங்களில் தேவாரங்களை ஆங்கில எழுத்துருவில் வெளியிடுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு எழுத்தாளருக்கு தாம் எழுதும் மொழியை வளர்க்கும் நோக்கம் இருக்கவேண்டுமே ஒழிய அதன் எழுத்துருவையே சிதைத்துவிடும் எண்ணம் எப்படி உருவானது என்றுதான் தெரியவில்லை.

அவரது கதைகளை பெரிதளவில் ரசித்துப் படிக்காவிடினும், ஒரு எழுத்தாளர் என்ற மரியாதை ஜெயமோகன் மீது இதுவரை இருந்தது. தவிர யாரையுமே நான் மிக மோசமாகத் திட்டுவதுதில்லை. அதனால் குறைந்த பட்சம் 'வடிகட்டிய முட்டாள்' என்று கூடத் திட்டமுடியவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

நீங்கள் சாகடிப்பது மொழியையல்ல. பெற்ற தாயை..

பிற்குறிப்பு: இது யாருக்கும் அறிவுரை கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. எதுவோ நம்மளால முடிஞ்சது..

இரண்டாம் பக்கம்: தமிழ் இனி 2

கருத்துகள்

Kalai இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ம அழகா தெளிவா எடுத்துச் சொன்னீர்கள் ...... நிச்சயம் இந்த தலைமுறையிலே தமிழ் புரிந்து பதில் ஆங்கிலத்தில் வந்தால் அவர்களின் அடுத்த தலைமுறை தமிழை மறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .... நாம் எந்த நாடு சென்றாலும் ... எத்தனை மொழி படித்தாலும் தமிழ் நம் தாய் மொழி என்றால் அதை படிக்கவும் எழுதவும் தெரிந்தால்தான் நாம் தமிழர்கள் ... இல்லை என்றால் நாம் இனம் என்னவென்று என்று நமக்கும் தெரியாது மற்றவருக்கும் தெரியாது
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்
- அன்னோஜன்-
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
அன்னோஜன்,
எனது தாயைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் வேறொருவரைக் கூட்டிவந்து மொழி பெயர்ப்பாளராக வைத்தால் என்ன என்று கேட்கிறீர்கள். அது தாயின் சொற்களைப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் உணர்வுகளையல்ல.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மேல் நான் இட்ட கருத்து ஜெயமோகன் தன் எழுத்துரு கட்டுரைக்கு ஏற்பட்ட எதிர்வினைக்கு சொன்ன பதிலின் ஒரு பகுதி. அவரின் தளத்தில் உள்ளது.
-அன்னோஜன்-

பிரபலமான இடுகைகள்