மகளிர் தினம்

by - 3/08/2015 07:59:00 பிற்பகல்

மகளிர் தினமாம் இன்று.
வாழ்த்துக்கள் சொல்கின்றனர்..
ஆமா எதுக்கு..?

பெண்ணியம் பேசும் பெண்களுடனும் சரி
அடக்குமுறை பேசும் ஆண்களுடனும் சரி
அதிகம் பேசுவதில்லை நான்

எனவே அவர்கள் இதனை
படிக்காதீர் தயவுசெய்து


ஒருமுறை மிகவும் பொறுப்பான வேலையில் இருந்தபோது, ஒருவர் என்னிடம் வந்து "அழகான பெண்களிடம் அறிவு குறைவாக இருக்குமாமே உண்மையா?" அப்பிடின்னு கேட்டார். அவர் வயதில் என்னை விட மிகவும் பெரியவர். ஆனால் மிகவும் சாதாரண வேலையிலிருந்தார். அவரின் வயதிற்கு மதிப்புக் கொடுத்து நான் எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து "நீங்க ரொம்பவே அழகாக இருக்கிறீங்க" என்றார். அன்று வந்த கோபத்தில் அவரை துவைத்து எடுத்துவிட்டேன். பிறகு யோசித்தேன், ஒரு பெண்ணின் அறிவை எடைபோடத் தெரியாத அல்லது பொறாமைப்படுகின்ற மற்றும் புற அழகைப் பார்த்து மட்டுமே மயங்குகின்ற ஒரு முட்டாளிடம் போய் இத்தனை நேரம் மினக்கட்டோமே என்று..

இவ்வாறு இத்தனை வருடங்களில் பல சம்பவங்களை சொல்லலாம். அதற்காய் நான் ஒரு பெரிய மாமேதை, அறிவாளி அப்பிடின்லாம் சொல்லவரலை. ஆனால் என்னுடன் பேசுபவர்கள், முக்கியமாக ஆண்கள், புற அழகு என்ற விடயத்தை தாண்டி, அறிவார்ந்த விடையங்களை விவாதிக்கையில் அந்த ஆனந்தமே தனிதான். அது என்னையும் அறிவாளி என்று ஏற்றுக்கொண்டதனால் ஏற்பட்டதல்ல. ஏனெனில் பலசமயம் விவாதங்களில் வெளிப்படும் ஒருவரின் அறிவினைவிட முட்டாள்தனங்களே அதிக சுவாரசியத்தினை கொடுக்கும். நடுநிசி வேளையில் கண்களுக்கெட்டாத தொலைவிலிருக்கும் நட்சத்திரங்கள் பற்றிய கற்பனைகள், விவாதங்களின் முடிவில் அர்த்தமற்றுப்போகும் / வேறோர் அர்த்தத்தினை வெளிப்படுத்தும் தத்துவங்கள், பந்தங்கள் அற்ற உறவுகள் / உறவுகள் அற்ற பந்தங்கள்  என்று நான் காதலிக்கும் விடயங்களை உன்னாலும் காதலிக்க முடிந்தால் அல்லது அதைப்பற்றி பேசமுடிந்தால், உடல் சார்ந்த மனோ வக்கிரங்கங்களிருந்து மீண்டு வர முடிந்தால் நீயும் என் காதலனே..!

சமுதாயத்தில் ஒரு ஆணுக்கான சுதந்திரம் எதுவோ, அது பெண்ணுக்கும் உள்ளது என்பது எனது உறுதியான நிலைப்பாடு. ஒரு பாரதியால் ஒரு கண்ணம்மாவை காதலிக்க முடிந்த போது, ஒரு கண்ணம்மாவால் பாரதியை காதலிக்க முடியாதா என்ன? இதுகாலவரை பெண்களுக்கு போடப்பட்ட வரைமுறைகளில் பெரும்பாலானவை அவர்களை ஆண்களிடமிருந்து பாதுகாக்கவே ஆகும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஆண்களின் மனோ வக்கிரங்களை பெண்களைவிட அவர்களுக்கே அதிகம் தெரியும். அதனால் தான் தன்னைப்போல் ஒருவனிடம் சிக்கி சீரழிந்து விடக்கூடாது என்று வெகு கவனமாக இருந்தனர் இன்றும் சிலர் இருக்கின்றனர். இதனை இன்று ஜோதிக்கு எதிராய் பேசுபவர்கள் பலரின் பேச்சில் காணலாம்.

அடுத்து அவ்வாறான ஒரு சூழ்நிலை (தன்னைப்போல் ஒருவனால்) ஏற்பட்டுவிடின் அது தனக்கே மிகுந்த அவமானம் என ஆண் கருதினான். இத்தகைய மனோபாவம் அதிகமாகி, கடைசியில் பெண்ணடிமைத்தனத்துக்கு வித்திட்டது மட்டுமல்லாது ஒருகட்டத்தில் பெண்களே தம்மைக் காத்துக்கொள்ள இத்தகைய வரைமுறைகள் வேண்டியதே என நம்பத்தொடங்கி விட்டிருந்தனர். மேலும் வருசத்துக்கு ஒன்று என்று வரிசையாய் ஐந்தாறை கொடுத்துக்கொண்டிருந்தால் பாவம் அவர்களுக்கு வேறு சிந்தனைகளுக்கு எங்கே நேரமிருக்கிறது? அனா போன்ற அப்பாவிகளுக்கு, அவர்களை சப்மிசிவ்களாக மாற்றத்துடிக்கும் கிறிஸ்டியன் போன்றவர்களே கிடைக்கின்றனர். அவர்களும் அவன் என்றாவது மாறுவான் தன் காதலை புரிந்து கொள்ளுவான் என்று காத்திருக்கிறார்கள் அல்லது அவன் செய்வது சரிதான் என நம்பத்தொடங்கி விடுகின்றனர்.

எனது படிக்கும் காலங்களில் நான் பார்த்து வியந்த இந்துஜா போன்ற பெண்கள் கூட இன்று தாம் உண்டு தமது குடும்பம் உண்டு என்று இருந்து விடவே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேரின் கணவன்மார் அவர்களின் தியாகத்தினை புரிந்து கொண்டிருக்கின்றனர்? தமது மனைவியின் ரசனைகள் iPhone 6+ ஐயும் தாண்டி இருக்கு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் தமது பள்ளி வயதில் கண்ட கனவுகள் இன்னும் கனவுகளாகவே இருக்கின்றன என்பது புரியும்?

ஆகவே இங்கு பெண்ணடிமைத்தனம் என்பது பெண்கள் தாமாக ஏற்றுக்கொள்ளும் வரை தான்.. இதை அறிவதற்கு படித்து பட்டமெல்லாம் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. சிலநேரம் மெத்தப்படித்தவர்கள் கூட குடும்பம் என்று வருகையில் மடைத்தனமாக நடந்துகொள்வதுண்டு. (கவிஞர் தாமரையை சொல்லவில்லை). சுயத்தினை அழிக்கும் எதனையும் எதிர்க்கும் உள்ளுணர்வு எம் அனைவர்க்கும் இயற்கையாகவே உண்டு.. அதை கேட்கிறோமா இல்லையா என்பதில் தான் எமது சுதந்திரமும் அடிமைத்தனமும் அடங்கியிருக்கு..

You May Also Like

0 comments